Saturday, July 29, 2006

"குங்குமம்" வார இதழில் என் கவிதை!

கவிதை நேசிக்கும் நெஞ்சங்களுக்கு...

ஒரு நற்செய்தி...

நிலாச்சாரலில் வெளியான என் கவிதையொன்று 30,7.2006 தேதியிட்ட "குங்குமம்"வார இதழில் வெளியாகி உள்ளது. (பக்கம் 89) என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் கவிப்பயணத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும்
எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்..

Saturday, July 15, 2006

அது ஒரு காலம்...

தோட்டகார பய
ஒருத்தன்கல்லால அடிக்க,
ஒத்தக்காலு ஊனமான
ஆட்டுக்குட்டிய தோளுல சொமந்து
ஆட்டம் போட்டகாலம்
நினவுக்கு வந்துருச்சே
நண்பனே!

மீனு புடிக்க ஆத்துக்கு
போயி கெண்ட மீனபுடிச்சுப்புட்டு,
பாவப்பட்டு ஆத்தோட அனுப்பிவச்சு
துள்ளியோடி வீடு வந்தகாலம்
நினவுக்கு வந்துருச்சே
நண்பனே!

பள்ளிக்கூடம் விட்டு
திரும்பையில தெருவோரம்
தனியா தவிச்ச நாய்க்குட்டிய
தூக்கி வந்து "ஹார்லிக்ஸ்"
குடுத்து ஒண்ணா வௌயாடுன
காலம் நினவுக்கு வந்துருச்சே
நண்பனே!

தக்காளி செடி ஒண்ணுகொண்டு
வந்து நாமவளர்க்க,இல விட்டசெடிமேல
ஒரு நாளு அடைமழை பெய்ய
குடகொண்டு செடிக்கு காவலா நின்ன
காலம் நினவுக்கு வந்துருச்சே
நண்பனே!

அஞ்சறிவு விலங்குக்கும்,
அஃறினை செடிக்கும்,
காட்டின அன்பெல்லாம்
காலத்தோட மறந்து போச்சுதே..

அப்பனாத்தாவ அனாதயா
முதியோர் இல்லத்துல விட்டு வரும்போது
ஆறறிவுல ஒண்ணுகொறஞ்சு
போனதா நினவுசொல்லுதே
நண்பனே!

Thursday, July 13, 2006

டியர் தீவிரவாதி அங்கிள்...

மும்பையில் 11-07-2006 அன்று நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் பல அப்பாவி உயிர்களின் இரத்தம் குடித்து சிரித்தது தீவிரவாதம்.

தீவிரவாதிஎன்கிற பெயரில் அப்பாவி மக்களை கொல்கின்ற கோழைகளின் செயல்களைக் காணும்போது ...நடுத்தெருவில் நிற்க வைத்து செருப்பால் அடிக்க வேண்டும்என்கிற அளவிற்கு வன்மம் தலைதூக்குகிறது...

என் உள்ளக் குமறல்களை கவிதையாக எழுதி என்ன பயன்?

மாட்டுச் சந்தையில் மயில் இறகிற்கு என்ன வேலை?

மனம் கனக்கிறது...

தீவிரவாதி ஒருவனுக்கு அவனதுசெயலை கண்டித்து எழுதுவதை விட பாசத்துடன் எழுதினாலாவது திருந்துவான் என்கிற ஒரு சிறு நம்பிக்கையில் இதை எழுதுகிறேன்...


டியர் தீவிரவாதி அங்கிள்..


என் பெயர் சத்யா.. 5த் ஸ்டாண்டர்ட் படிக்கிறேன்...

அங்கிள் நேத்து இராத்திரியில இருந்து எங்க அப்பா

வீட்டுக்கே வரலை...அம்மா அழறா. அக்கா அழறா..

பாட்டி மயக்கம் போட்டு கீழே விழுந்துட்டா.

எதுக்கு அழறம்மான்னு கேட்டேன்.... அப்பா வீட்டுக்கு

வரும் போது ட்ரெயின்ல குண்டு வெடிச்சதுல செத்து போயிட்டாராம்..

யாரும்மா குண்டு வச்சதுன்னு கேட்டேன்... "தீவிரவாதி"ன்னு மட்டும்

அம்மா சொல்றா.

தீவிரவாதி அங்கிள் நீங்க எங்க இருக்கீங்க.... ஏன் அங்கிள் குண்டு வச்சீங்க?

எங்க அப்பா எனக்கு வேணும் இப்போ...

நாளைக்கு என்னையும் அக்காவையும் பீச்க்கு கடல்ல விளையாட

கூட்டிட்டு போறேன்னு சொன்னார்....

எங்க அப்பா எனக்கு வேணும் இப்போ...

அங்கிள் நீங்க ஸ்கூல்ல படிச்சதே இல்லையா?

"உயிர்களை கொல்வது பாவம்"ன்னு எங்க டீச்சர் சொல்லி தந்திருக்காங்க அங்கிள்..

உங்களுக்கு யாருமே சொல்லித் தரலையா அங்கிள்?

உங்களுக்கு இதயமே கிடையாதா அங்கிள்?

எங்க அம்மா அழறத பார்க்க பாவமா இருக்கு அங்கிள்...எங்க அப்பா திரும்பி
வரவே மாட்டாரா அங்கிள்?

ஏன் இப்படி செஞ்சீங்க?

போன வாரம் நான் ஒரு நாய்குட்டிய கல்லால அடிச்சதுக்கு எங்க
அம்மா என்னை திட்டினாங்க அங்கிள்...

நீங்க வெடிச்ச வெடிகுண்டால நிறைய பேர் செத்துட்டாங்களாம்...
உங்க அம்மா உங்கள ஒண்ணுமே சொல்ல மாட்டாங்களா அங்கிள்?

நான் இரண்டு நாளா தூங்கவே இல்ல அங்கிள்...

எங்க அப்பா என் கைய புடிச்சுக்கிட்டே சிங்கம், புலி கதை நிறைய
சொல்வாரு...கதை கேட்டாதான் நான் தூங்குவேன்..

இனி யாரு எனக்கு கதை சொல்வா?


அழுகை அழுகையா வருது அங்கிள்...

எனக்காக இனிமே உயிர்களை கொல்ல மாட்டேன்னு சத்தியம் பண்ணுங்க
அங்கிள்....ப்ளீஸ்...


பாசமுடன்,
சத்யா.

கவலையுடன்,
நிலாரசிகன்.