Wednesday, March 31, 2010

உடைந்த கனவுகளை பொறுக்கும் சிறுமி



உடைந்த கனவுகளை பொறுக்கும் சிறுமி

உடைந்த கனவுகளை பொறுக்கும்
சிறுமியின் பாவாடையில் தீட்டப்பட்டிருக்கும்
ஓவியத்தில் இரண்டு மான்கள் வசித்தன.
தனிமையின் குரூரத்தை பாடும்பொழுதும்
குளிர் அடர்ந்த இரவில் தனித்தழும்பொழுதும்
அவளுடன் உரையாடுகின்றன
அந்த மான்கள்.
தெருவோரத்தில் உறங்கி எழும் அவள்
கனவுகள் பொறுக்கும்
அதிகாலையொன்றில் விபத்தில் மரணித்தாள்.
குழந்தை இழந்த துக்கத்தில்
கண்ணீர் விட்டன மான்கள்.
அநாதைப் பிணம் என்றபடி
முகம் திருப்பிக்கொண்டது இவ்வுலகம்.




ஏழாவது கோடை

இருண்ட இரவுகளில்
புணர்ந்து திரிந்த அப்பறவைகள்
ஆறு கோடைகள் பிரிந்திருந்தன.
ஏழாவது கோடையில் பெண்பறவை
தன் குஞ்சுகளுக்கு கதைகள் சொல்ல
ஆரம்பித்தது.
தனக்கொரு நண்பன் இருந்தானென்றும்
அவனது சிறகுகளின் கதகதப்பில்
மகிழ்ந்திருந்ததாகவும் நீண்டது அக்கதை.
காதலற்ற காமம் பற்றியும்
உணர்வுகளற்ற முத்தம் பற்றியும்
சொல்லாமல்
கதை முடிந்தபோது
புத்தனை சிலுவையில் அறைந்துவிட்ட
குரூரத்துடன் புன்னகையொன்றை
உதிர்க்கிறது பெண்பறவை.

-நிலாரசிகன்.

Tuesday, March 30, 2010

உயிரோசை விமர்சனம்



[இவ்வார உயிரோசையில் வெளியான விமர்சனம். எழுதியவர் கிரகம்.]

யாரோ ஒருத்தியின் டைரிக் குறிப்புகள் நிலாரசிகனின் முதல் சிறுகதை தொகுப்பு. இந்தப் புத்தகத்தை வாங்கியபோது முதன்முதலில் நிலாரசிகனைச் சந்தித்தேன். நல்ல உயரம், கருப்பு நிறம், கண்ணாடி அணிந்திருந்தார். முதல்முறை பார்ப்பதால் இவரா நிலாரசிகன் என்று என்னால் நம்பமுடியவில்லை. அவர் வலைப்பக்கத்திலிருந்த போட்டோவிற்கும் நேரில் பார்ப்பதற்கும் அதிக வித்தியாசமிருந்தது. மீண்டும் நேரில் சந்தித்தால் புத்தகத்தின் பின் பக்கத்திலிருக்கும் அவர் போட்டோவை மாற்றச் சொல்ல வேண்டும்.
சிறுகதை தொகுப்பானது 17 சிறுகதைகளை கொண்டது. 'ப்ரியாக்குட்டி நான்காம் வகுப்பு பிரிவு' - முதன்முதலாக நகரத்திற்கு வேலை பார்க்கவரும் இளைஞனுக்கும் அவன் வசிக்கும் வீட்டு ஓனரின் மகளுக்கும் நட்பு ஏற்படுகிறது. அவள் நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமி. மோதலில் ஆரம்பித்த இவர்களின் சந்திப்பு நாடகள் செல்லச்செல்ல அண்ணன் தங்கை உறவுபோல் ஆகிறது. அந்த சிறுமியின் குறும்புகளை இளைஞன் ரசிக்கிறான். சில தினங்கள் அவனின் அறையிலே தூங்கிவிடுகிறாள். அவளுக்கு ப்ராக் வாங்கித் தருகிறான். சந்தோசமடைந்தவள் அவனுக்கு முத்தம் தருகிறாள். அவன் புதிதாக வாங்கியிருந்த pulser பைக்கில் அவளை வைத்து ஊர் சுற்றிக் காட்டுகிறான். சிறுமி கேன்சர் நோயாளியென்று தெரியவருகிறது. எல்லா வித உறவுகளும் ஒருவனுக்கு சில சமயங்களில் சந்தோஷத்தையும், சில சமயங்களில் துக்கத்தையும் அளிக்கின்றன. இதையே இச்சிறுகதை சொல்கிறது.
'
வேட்கையின் நிறங்கள்' - ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் இரண்டு பெண்களின் கதை. வேதா படித்துவரும் பள்ளிக்கூடத்தில் நதியா புதிதாய் சேர்கிறாள். நதியாவின் கண்கள் வேதாவை வெகுவாகக் கவர்கின்றன. நதியாவென்ற பேரைக் கேட்டாலே வேதாவின் உடலில் காமம் கிளர்ந்தெழுகிறது. இவர்கள் இருவரைத் தவிர யாரும் வகுப்பறையில் இல்லாத ஒருநாள் இருவரும் சேர்கின்றன்ர். இருவரின் சேர்க்கையானது கல்லூரிவரை தொடர்கிறது. திருமணத்தில் நாட்டமில்லாத வேதா நதியாவுடன் கோயம்புத்தூர் சென்று வாழ்கிறாள். நதியா வேதாவிற்குத் தாலி கட்டிவிடுகிறாள். நதியா வேலைக்குச் செல்கிறாள். வேதா வீட்டில் இருக்கிறாள். இருவரும் கணவன்-மனைவி போல் வாழ்கின்றனர். ஒரு நாள் நதியா ஆணுடன் தோளில் கைபோட்டபடி வீட்டிற்குள் வருகிறாள். இந்தக் கதை எழுதப்பட்ட விதம் என்னை மிகவும் கவர்ந்திருந்தது. பெண்-பெண் காமம் கொள்ளும் தருணங்களை விவரிக்கும் வரிகள் மிகவும் அழகானவை. நிலாரசிகன் கவிஞர் என்பதால் கதையின் வரிகளும் கவிதைபோலவே அமைந்துள்ளன.
'அப்பா சொன்ன நரிக்கதை' – ‘நச்’ சிறுகதைப் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்ற கதை. இதைத் தவிர 'தனலட்சுமி டாக்கிஸ்' - கேபிள் மற்றும் திருட்டு வீடியோவின் வருகையால் அழிந்துவரும் திரையரங்குகளின் கதை. வாலிப வயதை எட்டியிருந்தாலும் சிறுவயதில் ரசித்ததை மனம் அசைபோடும் விதமாக 'சேமியா ஜஸ்', 'வால்பாண்டி சரித்திரம்', 'சைக்கிள்' போன்ற சிறுகதைகள் அமைந்துள்ளன.


வெளியீடு: திரிசக்தி பதிப்பகம்
நூல்: யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்
ஆசிரியர்: நிலாரசிகன்
விலை: 70 ரூபாய் - முற்றும் -
 ******************************************************
பிற விமர்சனங்கள்:


http://online-tamil-books.blogspot.com/2009/12/blog-post_29.html
http://www.nilaraseeganonline.com/2010/03/blog-post_12.html
http://adaleru.wordpress.com/2010/01/05/book-review-yaaroo-oruthiin-diary-kuripugal/

இணையத்தில் நூலை பெற:

http://ezeebookshop.com/eshop/product_info.php?products_id=79


நன்றி,
நிலாரசிகன்.

Monday, March 29, 2010

வசந்தபாலனுக்கு....







தவிர்த்தலின் வலியை வெக்கையும் வியர்வையுமாக தன் முதல் படைப்பில் பதிவு செய்தவர் வசந்தபாலன். வெயில் தந்த உணர்வுகளுடன் அங்காடித்தெருவுக்கான காத்திருப்பு நீண்டது. படம் வெளியான உடனே விமர்சனம் படித்துவிட்டு போகலாம் என்று நினைத்தபோது ஏதோவொன்று தடுத்தது. விமர்சனங்கள் முன்முடிவுகளுக்கு நம்மை ஆழ்த்திவிடும் என்பதால் விமர்சனம் எதுவும் படித்திடாமல் திரையரங்கம் சென்றேன். சென்னையின் ஏசி தியேட்டருக்குள் பாப்கார்னும்,கோலாவும் அருந்தியபடி பார்க்கும் பொழுதுபோக்கு சித்திரம் இதுவல்ல என்பது சுவரொட்டிகளிலேயே உணர்ந்து கொள்ள முடிந்தது.தூத்துக்குடியில் இரவுக்காட்சிக்கு நானும் நண்பர்களும் சென்றபோது வேலை முடிந்த களைப்பிலும் படம் பார்க்க வந்திருந்த கூட்டம் ஆச்சர்யமளித்தது.

படம் ஆரம்பித்து முடியும் வரை எனக்குள் ஏற்பட்ட அதிர்வுகளே இப்பதிவு. ஒவ்வொரு காட்சியிலும் இது படமல்ல வாழ்க்கை என்பதை நம் மனதில் அழுத்தமாக பதியவைத்திருக்கிறார் வசந்தபாலன். அதனால்தான் இட்டமொழி கிராமத்தின் தேரி வாழ்க்கையையும் சென்னையின் குரூர வாழ்க்கையையும் நேர்கோட்டில் அவரால் படைப்பாக்க முடிந்திருக்கிறது.

குத்துப்பாடலால் நிரம்பிய முதல் காட்சியை பார்த்துப் பழகிய கண்களுக்கு இரண்டு இளம் உயிர்கள் கால்களால் விளையாடும் அதிஅற்புதமான காதல்காட்சியும் தி.நகரில் அவர்கள் ஓடித்திரியும் இரவுக்காட்சியும் புதுமை கலந்த விருந்தை முன்வைக்கின்றன. இந்த இடத்தில் காமெடி இந்த இடத்தில் நான்கு சண்டைகள் என்று பார்த்து பார்த்து சலித்த தமிழ்சினிமாவை மற்றொரு தளத்திற்கு நகர்த்திச் செல்வதில் வசந்தபாலன் மிக முக்கியமானவர். இப்படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் நகரத்தின் கொடூர கரங்களில் சிக்கி அழிகின்ற கிராமத்து இளைஞர்களை படமாக்கியிருக்கிறார்.

இப்படத்தின் சிறந்த காட்சிகளாக/வசந்தபாலனின் நுட்பங்களாக எனக்குத் தோன்றியவை:

  1. பிச்சை எடுப்பவன் சாதாரண கழிப்பறையை கட்டண கழிப்பறையாக மாற்றும் காட்சிகள்.
  2. குள்ளன்,அவன் மனைவி,அந்தக் கிழவன்
  3. சோப்பி
  4. தற்கொலை செய்துகொள்ளும் பெண் இறப்பதற்கு முன் வெளிப்படுத்தும் அபார நடிப்பு
  5. கொடுமைக்கார அண்ணாச்சி
  6. கதாநாயக/நாயகியின் தங்கைகள்.
  7. அண்ணாச்சியின் ரிங்டோன்
  8. கதாநாயகி அடிவாங்கிவிட்டு சேலை எடுத்துப்போடும் காட்சி
  9. சாலையோரத்தில் உறங்கும் தாயின் குழந்தை தாயை விட்டு விலகி வரும் காட்சி
  10. இரவு விழித்துக்கொள்ளும் நண்பன் நெஞ்சுவரை ஏற்றி கட்டியிருக்கும் லுங்கி.
  11. உணவுக்கான போட்டியில் அறிமுகமாகும் செளந்தரபாண்டி(பெயர்கூட தெற்கு மாவட்ட பெயர்)
  12. விக்கத்தெரிஞ்சவன் வாழத்தெரிஞ்சவன்(இந்த வசனம் வரும்போது முன்னிருக்கை முதியவர் எழுந்து நின்று கைதட்டினார்) யானை வாழ்ற இடத்துலதான் எறும்பும் வாழுது வசனங்கள்(வாழ்த்துகள் வசனகர்த்தா ஜெயமோகனுக்கு)
  13. குள்ளனுக்கு குழந்தை பிறந்தவுடன் அவனது மனைவி பேசுகின்ற வசனம்.
  14. இட்டமொழி கிராமத்து வீடு. வீட்டின் அருகே குவிந்திருக்கும் விறகுகள்.
  15. பெயிலானதால் பாண்டி அடிவாங்கும் காட்சிகள்.
  16. கவிதை/இறைவாழ்த்து நகைச்சுவை காட்சிகள்.
  17. வயதுக்கு வந்த தங்கையை நாய்க்கூண்டின் அருகே வைத்திருக்கும் காட்சியும் அதற்கு பிறகான கதாநாயகியின் நடிப்பும். 
  18. கதாநாயக தேர்வு.
  19. இன்னும் இன்னும் மனதெங்கும் விரிந்து படர்ந்து விருட்சமாக நிற்கும் காட்சிகளை எழுத முடியவில்லை.வாழ்த்த மட்டுமே தோன்றுகிறது.


இனி கடைகளுக்கு செல்லும்போது சேலைகளுக்கு முன்னால் சிரித்தபடி நிற்கும் இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் பின் கசப்பான வாழ்க்கை ஒளிந்திருக்கிறது என்பதை ஒரு கணமேனும் நாம் உணர்வோம். அதுவே இக்காவியத்தின் அசைக்கமுடியாத வெற்றி. வசந்தபாலனுக்கு நன்றிகள் பல.அங்காடித்தெருவில் தொலைந்த மனதை தேடியபடி…

-நிலாரசிகன்.

Monday, March 22, 2010

நிலாத்துளிகள்




1. கடந்த வாரம் இரு சந்திப்புகள். ஒன்று ஆங்கில வலைப்பதிவர்களின் சந்திப்பு. மற்றொன்று டிவிட்டர் நண்பர்களின் சந்திப்பு. வெகுநாட்கள் கழித்து சந்தித்த பாலபாரதி தன் பேச்சில் தூள் பறத்தினார். மீசையும் குறைவான முடியுமாக ஆளே மாறியிருந்தார். நல்லதொரு சந்திப்பு.

2.ஒரு வாரம் முடிந்துவிட்டது ஐ.பி.ல் மூன்றாவது சீசன் துவங்கி. யூசுப் பதான்,காலீஸ்,திவாரி,பாண்டே அசத்தியிருக்கிறார்கள். பஞ்சாப் Vs சென்னை இதுவரை நடந்த போட்டிகளிலேயே மிகச்சிறந்தது எனலாம்.

3.அகநாழிகையின் மூன்றாவது இதழ் நேற்று கிடைத்தது. மனுஷ்யபுத்திரனின் நேர்காணல்,அட்டைப்பட ஓவியம்,கெளரிப்ரியாவின் மூன்றாவது கவிதை,யாத்ராவின் 'இக்கணம்' கவிதை,தலையங்கம் அனைத்தும் அற்புதம். லாவண்யா தொடர் கட்டுரை எழுதலாம்.

4.அந்தப் பொய் உனக்கு
எதையும் கொண்டு வரப்போவதில்லை.
ஒரு குழந்தையின் மனதையோ
ஒரு வெண்நிற பூவின் வாசத்தையோ
அல்லது
உறக்கத்தில் நெற்றி முத்தமிடும் அன்பையோ
எதையும் அந்தப் பொய்யால்
உன்னிடம் சேர்த்திட முடியாது.
எனினும்
நீ உரைத்த அந்தப் பொய்யின்
துவக்கப்புள்ளியில்தான்
வரைய ஆரம்பித்தேன்
என்னிலிருந்து நீங்கிச்செல்லும்
பெண்ணின் ஓவியத்தை


5. ஹெய்டன் உபயோகிக்கும் மங்கூஸ் மட்டை பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. மற்ற வகை கிரிக்கெட் மட்டைக்கும் இதற்கும் வித்தியாசம் உண்டு. கைப்பிடியின் நீளம் அதிகம். 20% பவர் அதிகம். அதிரடியாக விளையாட மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கீரிப்பிள்ளையின் பெயரை வைத்திருக்கிறார்கள். பாம்பையும் சீண்டும் என்பதாலா? ஹெய்டன் போன்ற குத்துச்சண்டை வீரர்களுக்கு சாதாரண கிரிக்கெட் மட்டையே போதுமானது :)

6. ஒரு குறும்படம்: http://www.youtube.com/watch?v=CJZ_CtNhtAw

7. சொற்கப்பல் மார்ச் 6ம் தேதி தன் பயணத்தை துவங்கியது. அமிர்தம் சூர்யாவின் "கடவுளைக் கண்டுபிடிப்பவன்" மற்றும் சந்திராவின் "காட்டின் பெருங்கனவு" நூல்களின் விமர்சனக்கூட்டம் நடந்தது. நல்லதொரு அனுபவம்.

8.Earth Hour குழுவிலிருந்து சிலரை கடற்கரை சந்திக்க நேரிட்டது 27 மார்ச் இரவு 8.30 முதல் 9.30 வரை மின்சார விளக்குகளையும் மின் சாதனங்களையும் அணைத்து வைக்குமாறு கேட்டுக்கொண்டார்கள். மேலதிக தகவலுக்கு www.earthhour.in  பார்க்கலாம்.

9.நட்பில் நம்பகத்தன்மை என்பது என்ன?

10. மேலுள்ள கேள்விக்கு சரியான பதில் அளிப்பவர்களுக்கு இப்பொழுதே நன்றி சொல்லிக்கொள்கிறேன். நன்றி.

-நிலாரசிகன்.

Wednesday, March 17, 2010

உத்திகளின் வழியே கதையின் பயணம்

மூன்று கவிதை நூல்களின் வழியே தன்னைக் கவிஞனாக நிலை நிறுத்திக் கொண்ட இளம் படைப்பாளி நிலாரசிகன் தன் முதல் சிறுகதைத் தொகுப்பாக “யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்” நமக்குக் கொடுத்திருக்கிறார். பதினேழு கதைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பிற்குள் கதை உத்திகளே மகுடம் சூட்டிக் கொள்கின்றன. சொல்லத் தயங்கும் சம்பவங்களை நழுவிச் செல்லும் வார்த்தைகளால் லாவகமாக அடையாளப்படுத்தியிருக்கும் அழகு சிறப்பு.

வெளிப்படையாக,தட்டையாக சம்பவங்களை உடைத்து சொற்களைச் செலவழிக்காமல்,பல்வேறு சம்பவங்களின் மூலம் கதையின் கடைசி வரிக்கு நகர்த்திச் சென்று,தான் சொல்ல வந்ததை சொல்லிவிடுகிற சிறப்பு இந்தக் கதைகளில் காணக்கிடைக்கின்றன.

பதினேழு கதைகளும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் பயணிக்கிறது.தொகுப்பில் உள்ள கதைகளில் “யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்” தலைப்புக் கதை. குழந்தைத் தொழிலை மட்டுமல்ல,பெண்களை இந்தச் சமூகம் எதிர்கொள்ளும் தன்மையை புதிய உத்திகளைக் கொண்டு நகர்த்திச் செல்கிறார். “வேட்கையின் நிறங்கள்” மென்மையான பிரியத்தின் வெளிப்பாடு பொங்கிப் பிரவகிக்கும் ஒரு பால் காமமாகி விடுகிறபோது, அதில் வெளிப்பட்டுள்ள மையக்கரு,மனிதர்களால் மனிதர் புறக்கணிக்கப்படுகிற பெரும் வலிதான்!

பதினேழு கதைகளில் வருகிற மனிதர்களை வகைப்படுத்தினால் கலவையாக விதவிதமான மனிதர்களை அவர்களின் சுயரூபங்களாக காணமுடியும்.
பெண் குழந்தைகளை ஆட்கொள்கிற வறுமையும்,அந்த வறுமை அவர்களை நகர்த்திச் செல்கிற புள்ளி,பொருளாதாரத்தில் கொழுத்த மனிதர்களின் அதீத ஆசைகளுக்குப் பலியாகிற சாதாரண மனிதர்கள்.காதலில் தன் வாழ்க்கையை தொலைக்கிற பெண்களின் பாச உணர்ச்சி,தன் கணவனிடம் அடிமைப்பட்டுக் கிடக்கிற பெண்,வேறொரு மையத்தில் வன் அதிகாரம் செலுத்தக்கூடியவளாக மாறிவிடுவதும் தொடர்நிகழ்வாக வாழ்க்கையை இழக்கிற பெண்,ஒருபால் உணர்வின் ஆதிக்கப் பெண்கள்,வன்முறைக்கு இரையாகிவிடுகிற குழந்தைப் பருவக்கனவுகள் முதன்முதலில் நகரங்களை எதிர்கொள்கிற மனிதர்கள் சந்திக்கும் பிரச்சினைகள்,உளச்சிக்கல்கள்,மனப்பதற்றம்,குழந்தைகளின் உலகில் நுழைய முயற்சித்து தோல்வியடைகிற மனிதர்கள்,ஐஸ்வண்டியைத் துரத்திக் கொண்டேயிருக்கிற இளம்பிராயத்து நினைவுகள்,சந்தர்ப்ப சூழ்நிலையால் குற்றங்களைச் சுமக்கிற அப்பாவி மனிதர்கள் – இப்படியான தளத்தில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் இந்தக் கதைகள் நம் மனதில் இடம் பிடித்துக் கொள்கின்றன.

தொகுப்பில் ஒன்றிரண்டு ஆசிரியரின் பொறுமையின்மையால் அழுத்தத்திலிருந்து நழுவி சம்பவ விவரிப்பாக மாறிவிடுகின்ற கதைகளும் உண்டு. உண்மையில் அவைகளே மிக நல்ல கதைகளாக வந்திருக்க வேண்டியவை.குறிப்பாக “சைக்கிள்” மற்றும் “சேமியா ஐஸ்” ஆகியவை.
சொல்லப்படுவதற்கும்,கேட்பதற்குமான சம்பவங்கள் நிறைந்துள்ள உலகம் இது. உத்திகளில் கவனம் செலுத்துகிற நிலாரசிகனுக்கு சிறுகதையில் நல்ல வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

தெளிவான அச்சமைப்பும்,அட்டைப்பட தேர்வும் தொகுப்புக்கு கூடுதல் அழகைச் சேர்க்கின்றன என்கிறபோதும் கவித்துவமான தலைப்புகளையும் சொல்லாமல் இருக்கமுடியவில்லை.

- க.அம்சப்ரியா,

[வடக்குவாசல் மார்ச் 2010 இதழில் வெளியான மதிப்புரை]

வெளியீடு: திரிசக்தி பதிப்பகம்
விலை: ரூ.70
ஆசிரியர்: நிலாரசிகன்
இணையத்தில் பெற: http://ezeebookshop.com/

Tuesday, March 16, 2010

கடலை உறிஞ்சிய மழைத்துளி



நவீனள்                

நீண்ட குழலில் அவள்
சூடியிருக்கும் மல்லி நெருப்பின்
நிறத்தை ஒத்திருக்கிறது.
நிலைகுத்திய கண்களுடன்
அடைபட்ட கதவுகளின்
முன் நிற்கிறாள்.
அடர்ந்த மழையின் நடுவே
சத்தமிட்டு சிரிக்கும் அவள்
தன் வலிகளை கையிலிருக்கும்
கொலுசிற்கு இடம்பெயர்த்துக்கொண்டிருக்கிறாள்.
மற்றபடி,
நகரின் மீதோ கணவன் மீதோ
மார்பை பிய்த்து எறியவில்லை.


கவிஞன்

அறையெங்கும்
சொற்களால் ஆன வனம்
வளர்ந்திருக்கிறது மிக அடர்த்தியாய்.
வனத்தினூடே ஓடுகிறது
நினைவின் நதி.
நதியின் மேல் பறக்கின்றன
கவிதைப் பறவைகள்.
பறவையிலிருந்து நீங்கிய
இறகொன்றின் மீதமர்ந்து
அறைக்குள் நுழைந்து
மரணித்தவனின் காலடியில்
மண்டியிடுகிறது நீலவானம்.
அநாதைப் பிணம் என்கிறது
உலகம்.

கடலை உறிஞ்சிய மழைத்துளி

கூரை விழுந்தபொழுதில்
மழைபற்றிய உன் உரையாடல்கள்
ரசிக்கத் தவறினேன்.
தவறிய முதல் கணத்தில்
துவங்கிய யுத்தம்
வெவ்வேறு ரூபங்களில் நடைபெற்றது.
யுத்தத்தில் வென்ற களிப்பில்
தொடுவானத்தின் கீழ்
தனியே நடக்கிறாய்.
உன் காயங்களில் விழுந்து
மரணிக்கின்றன மழைத்துளிகள்.
இனியேனும் உணர்ந்துகொள்
எப்போதும் ரசிப்பதற்கல்ல
மழையென்று.

செந்நிற இரவு

வேட்டைநாயின் சாயல்களை
கொண்டிருந்த இரவொன்றில்
மரத்தடி சருகுகளின் நடனம்
நடந்தேறியது.
மூன்றாம் சாமத்தில் அவ்விடம்
வந்த கிழவன்
சத்தமிட்டு சிரிக்க துவங்கியபோது
இரண்டாக உடைந்து
பிளந்தது இரவு.
இரவுக்குள்ளிருந்து வெளிக்குதித்த
மிருகங்கள் வானம் பார்த்து
ஊளையிட்டன.
கருமை நிறத்திலிருந்து
சிகப்பு நிறத்திற்கு
என்னிரவு மாறிய கணத்தில்,
நம் முதல் சந்திப்பை பற்றிய
கனவிலிருக்கிறாய்
நீ. 
- நிலாரசிகன்

Friday, March 12, 2010

கடித விமர்சனம்



(என்னுடைய சிறுகதை நூலிற்கு வாசகி ஒருவர் நீண்ட விமர்சன மடல் எழுதியிருக்கிறார்.அவரது அனுமதியுடன் அதனை இங்கே பதிவிடுகிறேன்.விமர்சனத்திற்கு நன்றிகள் பல :)

அன்புள்ள நிலாரசிகன்,

உங்கள் "யாரோ ஒருத்தியின் டைரி குறிப்புகள்" நூல் வெளியாகி நீண்ட நாட்களுக்கு பிறகுதான் எனக்கு கிடைத்தது. அனைத்து கதைகளுமே அருமை. உங்கள் கதை நடை எங்குமே சிறு சலிப்பையும் உண்டாக்கவில்லை. வாழ்த்துக்கள் நிலாரசிகன். சில கதைகளுக்கு என் கருத்துக்கள் இங்கே...

யாரோ ஒருத்தியின் டைரி குறிப்புகள்: கதை படிக்கும்போதே மனதை ஒரு பெரும் சுமை அமிழ்த்திவிடுகிறது. அதிலிருந்து இன்னும் மீளமுடியவில்லை. சிறுமியின் வலி நிறைந்த முகம் இன்னும் கண்களில் நிழலாய் இருக்கிறது. புனைவுகளைத் தாண்டி நிஜத்தை கண்முன் நிறுத்தும் மிகச்சிறந்த கதை.

சங்க மித்திரை: உறவுகளால்/ உறவுகளுக்காய் உதித்த கதை. புரிந்துகொள்ள முடியாத சில உறவுகளை மிக அழகாய் கூறியிருக்கிறீர்கள் நிலாரசிகன். கதை படிப்பவரின் எண்ணங்களை புரட்டிப்போடும் கடைசி இரு வரிகளில்தான் கதையின் உயிர் இருக்கிறது.

வேட்கையின் நிறங்கள்: இதுவரை நான் வசித்த உங்களின் படைப்புகளில் சற்று வித்தியாசமான கதை. நெருடலான விஷயங்களை மிக வெளிப்படையாக மனம் ஏற்கும்படி எழுதி இருக்கிறீர்கள். ஆனாலும் எல்லோரும் விரும்புவார்கள் என்று நிச்சயமாக சொல்லமுடியவில்லை. "அவளது கண்களின் நிறம் சிகப்பாக மாறிக்கொண்டிருந்தது" என்று முடித்திருக்கிற விதம் மிக அருமை.

வேலியோர பொம்மை மனம்: அருமையான நடை. சிறுமியின் வாழ்க்கையை உங்கள் வரிகளில் உணர முடிந்தது. உண்மைக் கதை போலவே இருக்கிறது. உண்மைக் கதைதான். ராணுவ வீரனும், வெள்ளை மனதுடைய குழந்தையும் நெஞ்சில் நிற்கிறார்கள்.

கிணற்றில் மிதக்கும் நிலவின் சடலம்: மிக மிக அற்புதமான கதை. இது கதையாக மட்டுமே இருந்தால் சந்தோஷம். கதை படித்தவுடன் ஒரு படம் பார்த்த உணர்வு. உங்கள் கடைசி வரி திருப்பங்களுக்கு பெரிய ரசிகை ஆகிவிட்டேன்.

ப்ரியாகுட்டி நான்காம் வகுப்பு 'ஏ' பிரிவு: அழகாக தொடங்கி அதிர்ச்சியில் முடிந்த கதை. மனதை மிகவும் பாதித்தது. கதையை முடிக்கும்போது கண்கள் கலங்கிவிட்டது. சில நிஜங்களை ஜீரணிக்க முடிவதில்லை. எப்போதும் மனதில் இருக்கும் கதைகளில் இதுவும் ஒன்று நிலாரசிகன்.

சேமியா ஐஸ்: இயல்பான சிறுவனின் ஆசை. சின்னம்மாவிடம் அவன் மாட்டிக்கொண்டு படும்பாடு சில இடங்களில் ரசிக்கும்படி இருக்கிறது. சில சமயம் வேதனையாக இருக்கிறது. படிப்பவர்களை பால்யத்திற்குள் அழைத்துச் செல்லும் கதை.

வால் பாண்டி சரித்திரம்: மற்றுமொரு பால்யம் :). வால் பாண்டியை பக்கத்து வீட்டு சிறுவனாய் கண்முன் நிறுத்துகிறது உங்கள் கதை. நிச்சயமாய் கதை படிப்பவர்கள் தங்கள் பள்ளி வாழ்க்கையை திரும்பிப் பார்த்திருப்பார்கள். மிக ரசித்தேன்.

சைக்கிள்: சைக்கிளுக்கு பெயர் வைப்பதை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். டைகருக்குத் தான் ஏதோ ஆகப்போகிறது என்று நினைத்தால் கதை இப்படி முடிந்துவிட்டது. கதை சொன்ன சிறுவனைவிட அந்த சைக்கிளும் அப்பாவுமே மனதில் இருக்கிறார்கள். கதைக்கான கருவை இன்னும் சிறப்பாக சொல்லி இருக்கலாம்.
தனலட்சுமி டாக்கீஸ்: அன்றாட வாழ்வில் நாம் கடக்கும் எதையும் கதையாக்கும் லாவகம் உங்களுக்கு தெரிந்திருக்கிறது. நவீனமயமாதலின் வலியை எழுத்தில் தந்திருக்கிறீர்கள். தனலட்சுமியோடு தனலட்சுமி டாக்கீஸும் போய்விட்டதை உணர்வுபூரமான் கதையாய் சொல்லி இருக்கிறீர்கள். எங்கள் ஊர் கொட்டகையும் மூன்று ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டுவிட்டது. அந்த வெற்றிடத்தை கடக்கும்போதெல்லாம் இந்த கதை ஞாபகம் வரலாம்.
தாய்மை: மிக மிக அருமையான கதை. தாய்மையை அத்தனை அழகாய் சொல்லி இருக்கிறீர்கள். நெஞ்சம் நெகிழ்ந்தது. இந்த தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதைகளில் இதுவும் ஒன்று.
பட்டாணி: "இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஊருக்குள் திருட்டு நடப்பது குறைந்துபோனது." இந்த ஒரு வரியில் தான் இருக்கிறது கதையின் ஜீவன். மிகச்சிறந்த கதை.
ஆலம்: விதவைத்தாயின் பரிவும்,பாசமும் அழகாக படம்பிடித்து காட்டியிருக்கிறீர்கள். மற்ற கதைகள் போலவே கடைசிவரியில் உள்ளம் நெகிழ்ந்தது.தலைப்பு ரொம்ப பொருந்துகிறது.
தூவல்: பள்ளி, கல்லூரி, வேலை என்று எல்லாமும் சொல்லி இறுதிவரை உடன்வரும் ஒரு பேனாவை பற்றிய கதை. ஒரு சிறு பேனாவைக் கொண்டு மிக அழகாய் கதை சொல்லி இருக்கிறீர்கள். தூவலின் அர்த்தம் எதேச்சையாக கேள்விப்பட்டபோது பேனாவிற்கு இப்படியும் ஒரு பெயர் இருப்பதை அறிந்து ஆச்சரியப்பட்டேன்.
அப்பா சொன்ன நரிக்கதை: இந்தக் கதையை உங்கள் வலைப்பூவில் படித்தபோதே ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைந்தேன். கடைசி வரி முகத்தில் அறைந்தது. இருமுறை படித்தபின்பே புரிந்தது.
சம்யுக்தை: காதலின்/இழப்பின் வலியை வார்த்தைப்படுத்தி இருக்கிறீர்கள்.  ஒரு ஏழை இளைஞனின் வாழ்க்கையை காதல் புரட்டிப்போடுவதை சொல்லி இருக்கிறீர்கள்.
மை லிட்டில் ஏலியன் ப்ரெண்ட்: நல்லவேளை இதை உங்கள் சிறுகதை தொகுப்பில் படித்தேன். இல்லையென்றால் இதை ஒரு கட்டுரை அல்லது நூல் விமர்சனம் என்றே நினைத்திருப்பேன். அருமையான் அறிவியல் கதை. உங்கள் கடைசி வரியின் குறும்பை ரசித்தேன். இதைப்போன்ற ஒரு படைப்பை இப்போதுதான் படிக்கிறேன். மேலும் இதைப்போல் தொடர்ந்து எழுதுங்கள்.

இவை என் எண்ணம் மட்டுமே. தவறாக இருப்பின் மன்னித்துவிடுங்கள்.
நட்புடன்,
XXXXXX


(பெயர் வெளியிட விரும்பவில்லை)

-------------------------------------------------------------------------------------------------------------------


நூலை இணையத்தில் பெற இங்கே செல்லவும்.
தமிழகத்தின் அனைத்து முன்னணி கடைகளிலும் கிடைக்கும். சென்னையில் கிடைக்கும் இடங்கள்:

HIGGINBOTHAMS PVT.LTD
NO.116 ANNA SALAI
CHENNAI 600 002
NEW BOOKLANDS,CHENNAI
No.52C,BASEMENT,NORTH USMAN ROAD,
NEAR PANAGAL PARK, TNAGAR,
CHENNAI 600017
SREE KRISHNA TRADERS,
NO.2 IIND MAIN ROAD,
GANDHI NAGAR,
ADYAR, CHENNAI 600 020
SRI SATHYA SAI EXPORT
#7(3/2) MALAYAPPAN STREET,
SEVENWELLS, CHENNAI 600 001
MOGAPPAIR BOOK WORLD,
NILGIRIS COMPLEX,
MOGAPPAIR EAST,
CHENNAI 600 037
BOOKS CORNER,
AB BLOCK, IIND AVENUE,
ANNA NAGAR,
CHENNAI 600 040
DHANALAKSHMI NEWS MART
ARYAGOWDA ROAD,86 /57
WEST MAMBALAM,
CHENNAI 600033
SANDHYA BOOK PALACE
NO.63 JENNIS ROAD, SAIDAPET,
CHENNAI 600015
EASWAR BOOKS
ARCHANA ARCADE, NEW NO#27(OLD 16),
NATESAN STREET, T.NAGAR,
CHENNAI 600017
SKANDASHRAMAM
NO.1 KAMBAR STREET.
MAHALAKSHMI NAGAR, SELAIYUR,
CHENNAI 600 073
DISCOVERY BOOK PALACE,
6 MAHAVIR COMPLEX,IST FLOOR,
MUNNUSWAMY SALAI, WEST K K NAGAR,
CHENNAI 600078

 -நிலாரசிகன்.

Thursday, March 11, 2010

குறும்படம்: பார்த்ததில் பிடித்தது


மூன்று மணிநேரம் ஓடக்கூடிய திரைப்படங்கள் தருகின்ற அனுபவத்தைவிட மிகச்சிறந்த அனுபவங்களை/உணர்வுகளை மூன்று நிமிட குறும்படங்கள் தந்துவிடும்.குறும்படங்களில் மிக முக்கிய அம்சமாக திகழ்வது இசை(சில படங்கள் விதிவிலக்கு)
சொல்லாத சொல்லையும் உணர்த்திவிடும் இசை.காற்றில் சலசலக்கும் தென்னங்கீற்று மாதிரி.

இன்று பார்த்த குறும்படம் SIGNS.

12 நிமிடம் ஓடக்கூடிய இந்த குறும்படம் தருகின்ற அனுபவம் அலாதியானது.தனித்து வாழும் ஒரு இளைஞன்.
காலை எழுந்து அலுவலகம் செல்கிறான்.உணவு இடைவேளையில் அலுவலகம் அருகே ஒரு யுவதியை காண்கிறான்.தன்னை நோக்கி வருபவள் தன்னிடம் பேசப்போகிறாள் என்கிற மகிழ்ச்சியில் பேச எத்தனிக்கும்போது தன்னை கடந்து சென்று அருகிலிருக்கும் குப்பைதொட்டியில் எதையோ வீசிவிட்டு போய்விடுகிறாள். மனம் குன்றிப்போகிறான்.அவள் நினைவில் வீடு வருகிறவனுக்கு தனிமை சுடுகிறது.
மறுநாள் அலுவலகம் செல்லும்போது ரயிலில் இருவர் முத்தமிடுவதை காண்கிறான்.பரிமாற அன்பில்லாத உலகை எண்ணியபடி அலுவலகம் சென்று தன் இருக்கையில் அமர்கிறான்.

அவனது சன்னல் வழியே அருகிலிருக்கும் அலுவலகம் தெரிகிறது. அங்கே நேற்று அவன் பார்த்த அதே பெண் இருக்கிறாள். வேலையில் மும்முரமாக இருப்பவளை ரசித்துக்கொண்டே இருக்கிறான்.இவன் ரசிப்பதை அவள் கண்டுகொள்கிறாள். ஒரு அட்டையில் "புகைப்படம் எடுத்துக்கொள்" என்று எழுதி காண்பிக்கிறாள்.அவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.உடனே அவள் "சும்மா விளையாடினேன்" என்கிறாள். இவன் முகம் மலர்கிறது. தன் பெயரை எழுதி காண்பிக்கிறாள். இவனும் தன்னுடைய பெயரை எழுதி காண்பிக்கிறான். மெல்ல மெல்ல வளர்கிறது நட்பு. இருவரும் எழுத்தால் பேசிக்கொள்கிறார்கள். இந்த அற்புதமான,விசித்திரமான நேசத்தால் சுழல்கிறது அவனது உலகம். ஒருநாள் "சந்திக்க விரும்புகிறாயா" என்று எழுதி சன்னல் வழியே காண்பிக்கிறான். அவள் இருக்கை காலியாக இருக்கிறது. எங்கு சென்றாள் என்கிற கவலையால் துடிதுடிக்கிறான்.மறுநாள் சோர்வுடன் அலுவலகம் வந்தமர்கிறான். அவனது முகத்தில் திடீரென்று வெயிலடிக்கிறது.என்னவென்று சன்னல்வழியே எட்டிப்பார்க்கிறான். அங்கே அவள் நிற்கிறாள்.
"தான் பதவி உயர்வு பெற்ற செய்தியை எழுதிக்காண்பிக்கிறாள். இதை நாம் கொண்டாட வேண்டுமென்கிறான் இவன். அவளும் சரி என்க,தயக்கத்தோடு "சந்திக்க விரும்புகிறாயா" என்கிறான்.சந்தோஷத்தோடு அவளும் சரி என்கிறாள். இருவரும் சந்திக்கும் ஆவலில் ஓடோடி வருகிறார்கள்.

எதிரெதிரே இருவரும் நிற்கிறார்கள்.அவன் பேச முற்படும்போது,பேசாதே என்று சைகை செய்கிறாள் அவள்.
கண்களில் குழப்பத்தோடு அவன் பரிதவித்து நிற்கும்போது தான் கொண்டு வந்திருக்கும் அட்டையை காண்பிக்கிறாள்,அதில் என்ன எழுதியிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள படத்தை பாருங்கள் :) மனதை வருடும் இசையோடு முடிகிறது படம்.

இந்த குறும்படத்தின் மிக முக்கிய ஜீவனாக திகழ்வது இசை.அவளைக்காணாமல் அவன் தவிக்கின்ற நேரத்தில் சோகமாகும் இசை,அவளுக்காக அவன் ஓடுகின்ற போது வேகமெடுக்கிறது.குறிப்பாக 8ம் நிமிடத்திற்கு பிறகு இசையோடு நாமும் பயணிக்க ஆரம்பித்துவிடுகிறோம்.அடுத்து, கதாநாயகனின் முகபாவங்கள்.ஒவ்வொரு காட்சியிலும் மனதை அள்ளிப்போகிற‌து.க‌ண்க‌ளாலே இருவ‌ரும் பேசிக்கொள்வ‌து க‌விதை.
மொழியில்லா தருணங்களை மிக அற்புதமாக படமாக்கி இருக்கிறார்கள்.

மூன்று ம‌ணிநேர‌ம் செல‌விட்டு நான்கு குத்துபாட‌ல்க‌ள்,நாற்ப‌து ச‌ண்டைக‌ள்,நாலாயிர‌ம் "ப‌ஞ்ச்" ட‌ய‌லாக்குக‌ள் பார்ப்ப‌த‌ற்கு ப‌தில் இதைப்போல் நான்கு ப‌ட‌ங்க‌ள் பார்க்க‌லாம் :)

குறும்படத்திற்கான சுட்டி:

http://www.youtube.com/watch?v=uy0HNWto0UY

முன்பு நானெழுதிய‌ க‌விதையொன்றுட‌ன் இப்ப‌திவை நிறைவு செய்கிறேன்

தளர்ந்த விரல்பிடியை நடுநிசியில்
இறுக்கிக்கொள்ளும் குழந்தையில்..

வெகுநாட்கள் கழித்து வீடுதிரும்புகையில்
கால்சுற்றும் நாய்க்குட்டியின் பார்வையில்..

தேங்கிய மழைநீரில் மிதக்கின்ற
வாடிய மல்லிகைப்பூக்களில்...

தொலைதூர பயணத்தின் வழியனுப்புதலில்
வழிகின்ற கண்ணீர்த்துளியில்...

புணர்ந்த களைப்பில் நெஞ்சிலுறங்கும்
துணையின் மூச்சுக்காற்றில்...

மொழியில்லாத் தருணங்களிலும்
பிறக்கத்தான் செய்கின்றன
கவிதைகள்..



-நிலார‌சிக‌ன். 
குறிப்பு: கடந்த வருடம் இடுகையிட்டதை சமீபத்தில் வைரஸ் தின்றுவிட்டதால் இப்பதிவு.