Wednesday, September 26, 2018

திடீரென்று


திடீரென்று யாருடனாவது
பேசலாம் எனத் தோன்றும்போது
அந்த‌ யாருடன் என்பது
யாரெனத் தெரிவதில்லை.
திடீரென்று எதற்காகவாவது
அழுதுவிடலாம் எனும்போது
கண்ணீர் உறைந்து போகிறது.
திடீரென்று முத்தமிடலாம்
எனத் தோன்றும்போதும்
ஒரு நத்தைக்கூட்டைப் போல‌
இதழ்கள் உள்ளிழுத்துக்கொள்கின்றன.
திடீரென்று பின்னிரவில்
அலைபேசி வழியே
முகநூலுக்குள் நுழைந்து
எதற்கென்றே தெரியாமல் ஸ்வைப்
செய்து சோர்கின்றன‌
விரல்கள்.
திடீரென்று பூத்த‌
ஓர் புன்னகைக்கு
மறுநகை செய்ய முயலும் முன்
காணாமலாகின்றன புன்னகைகள்
திடீரென்று உறக்கம் உதறி
எழுந்து பார்க்கையில்
இவ்வுலகம் யாரோ ஒருவரின்
திடீர்க் கனவு எனத் தோன்றுகிறது.
திடீரென்று இக்கணம்
மனதெங்கும் வந்தமர்கிறது
மலரொன்றின் ஆழ்ந்த அமைதி.
-நிலாரசிகன்.