Monday, February 12, 2007

நிழல் தேடும் மரங்கள் -பாகம் 2.

* எப்போதும் ஏதேனும்
மறந்துவிடுகிறது
நேற்று ரசத்தில் உப்பு,
இன்று தேனீரில் சர்க்கரை…
எல்லாம் கண்டுகொண்டு
கண்டிப்பாய் என்னை
எப்போதும் மறந்துவிட்ட
என்மீதான அன்புடன்.



* உன் கவிதைபோன்ற
மனதிற்கு நல்வாழ்க்கை
கிடைக்கும் என்ற
தோழிகளின் வாக்கு பலித்தது
பொய்யான வாழ்வுடன்
நான்.

* பெண்மையின் வலி
உணரும் மூன்று நாட்களில்
உன் மடிக்குழந்தையாய்
நானிருந்தேன்....
வலிகொண்ட வாழ்விலும்
ரசிக்கமுடிகிறது சில
கனவுகளை.


* வேதனைகள் நிறைந்த
என் உலகிலும்
எனக்காக அழுகிறது
ஒரு ஜீவன்.
மழை.



* நெஞ்சில் மிதிக்கிறது
நீ அள்ளி எடுக்கும்
பிஞ்சுக் குழந்தை.
குடித்துவிட்டு என்
கன்னத்தில் நீ அடித்த
அடிகள் கருவறைக்கும்
கேட்டிருக்குமோ?


* என் ஓரவிழி
பார்வைக்காக தவமிருந்தாய்
நாம் காதலித்த
நாட்களில்..
எனை ஈரவிழி
பாவையாக்கி சாபம்தந்தாய்
நம் திருமணவாழ்வில்.

நிழல் தேடும் மரங்கள்- பாகம் 1.

* அடிக்கின்ற அலையின்
சத்தத்தில் என்றுமே வெளியில்
கேட்பதில்லை கரையின் முனகல்
சப்தங்கள்..


* சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகிறது
திருமணம்.
வாழ்க்கை மட்டும்
நரகத்துடன்.

*மழைத்துளிகளை ஒவ்வொன்றாய்
எண்ணினேன்.
சிரித்தாள் அம்மா.
கண்ணீர்த்துளிகளை ஒவ்வொன்றாய்
எண்ணுகிறேன்.
சிரிக்கிறாள் அத்தை.

*பவுர்ணமி நிலா
இரவு மழை
ஜன்னலோர செம்பருத்தி.
எதுவும் ரசிக்கமுடிவதில்லை
தேவை முடிந்தவுடன்
கேட்கின்ற குறட்டை
சத்தத்தில்…

*இதமான அரவணைப்பு
நெற்றிமீது ஒற்றை முத்தம்
கண்பேசும் வார்த்தைகள்
எப்போதும்
திரைப்பட தாம்பத்தியம்
அழகானதாகவே இருக்கிறது.

*கரண்டி பிடிக்கும்
கைகளின் வலி
மறக்கச் செய்கிறது
கடந்த கால கண்ணாடி
வளையல்களின் சிணுங்கல்
சத்தம்.

மழையானவள்...

மழைபோல் நீ.
எப்போதாவது வருகிறாய்.

மண் போல்
நான்
எப்போதும் காத்திருக்கிறேன்.