Sunday, December 17, 2006

விளையாட்டாய் சில கிறுக்கல்கள்...

சிறுவயதில் விளையாடிய விளையாட்டின் பெயர்களோடு
சில கிறுக்கல்கள்...

1.கண்ணாமூச்சி


உன் நினைவுகள் என்
உயிருடன் தினம் தினம்
விளையாடும் விளையாட்டு.


2.கபடி


ரத்தம் சொட்ட கபடி
விளையாடி வென்றிருக்கிறேன்
சிறுவயதில்.
எத்தனை முறை முயன்றும்
வெல்ல இயலவில்லை
உன் கண்களின் கபடியை.


3.காதுல பூ சொல்லி


காதில் பூக்கள்
பெயர் சொல்லி களித்தது
ஒருகாலம்.
ஒரு பூவையே காதலியாய்
பெற்றது ஒருகாலம்.
பூவை அவள் பூவை
என் காதில் சூடிச்சென்றது
இக்காலம்.


4.ஒரு கொடம் தண்ணியெடுத்து...


குடம் சுமக்கும்
உன்னை சுமக்க
இடம் இருக்கிறது
என் வாழ்வில்...
அடம் பிடிக்கும்
குழந்தையாய் நீ.


5.நொண்டி


வாழ்வென்னும் ஓட்டப்பந்தயத்தில்
உன் நினைவுகளை
சுமந்து நிற்காமல் ஓடும்
நொண்டி நான்.


6.காத்தாடி


ஒரு காப்பியமே
படைக்கும் திறன்
என் பேனாவுக்கு கிடைத்திருக்கும்
நீ என்னோடு வாழ்ந்திருந்தால்..
இப்போது சிறுகவிதை
படைக்கவும் முடியாமல்
அறுந்த காற்றாடியாய் எங்கேயோ
வீழ்ந்து கிடக்கிறது.


7.கள்ளன் போலீஸ்


ஊரெல்லாம் ரவுடிகளை
சுட்டு வீழ்த்துகிறது
காவல்துறை.
பார்வையால் என்னை
தினம் தினம் அடிக்கும்
காதல் ரவுடியே உன்னை
எப்படி வீழ்த்துவது?


8.தொட்டுபுடிச்சி

கண்களால் கூட தொட்டுவிடாமல்
பேசும் உன் கண்ணியத்தில்
கன்னி இவள் மனம்
கண்ணியில் சிக்கிய
மான்குட்டியாய் தவிக்கிறதே...


9.பெயர் எழுதுதல் (வேம்பங்கொட்டை பால் கொண்டு)


ஆயிரம் கவிதைகள்
எழுதிய ஆத்ம திருப்தி
கிடைக்க விரும்பி ஒரே
ஒரு முறை என் இதயத்தில்
எழுதினேன்
உன் பெயரை.

10.கல்லா மண்ணா


கல்லாக மண்ணாக
போகும் இவ்வுடல்...
கல்வெட்டாகி போகலாம்
நம் காதலும் கவிதையும்..

Saturday, December 16, 2006

பூக்களுடன் பேச்சுவார்த்தை...

பூக்களே நலமா?

நீங்கள்
பறிக்காதவரையில்
நலம்தான் மனிதா...

பெண்ணின் கூந்தலுக்கு
பறித்தல் தவறா?

காலை அழகாய்ச்
சிரிக்கும் எங்களை
மாலை அழ அழ
தூர எறிகின்றனரே பெண்கள்?

வாடியபின்னர்
நீங்கள் தேவையில்லைதானே?

உங்கள் பார்வையில்
வாடுகிறோம்
எங்களுக்கு அது
நீண்ட உறக்கம்.

சரி சரி கோபம் வேண்டாம்

உங்கள் வாழ்க்கை பற்றி..

தண்டவாளம் அருகில்
பூத்தாலும் அழுவதில்லை
நாங்கள்.

குப்பைத்தொட்டியில் பூத்தாலும்
கலங்குவதில்லை
நாங்கள், விண்ணோக்கியே
பார்க்கிறோம்..

கவலை ஏதேனும்?

மனிதம் மறந்த
சில மனிதர்களின்
சவ ஊர்வலத்தில் கூட
மணம் வீசும் எங்களை,
சாலைகளில் நீங்கள்
வீசி எறியும் பொழுதுகளில்
கவலைப்பட்டு வாடிப்போகிறோம்.



கேள்விகள் ஏதேனும்?

காதலில் பரிசாகவும்,
திருமணத்தில் மாலையாகவும்,
வாழ்வெல்லாம்
மனிதர்களுக்காக பூத்துச் சிரித்தாலும்
சில பொழுதேனும்
எங்களுடன் நேரம் செலவிட
உங்களுக்கு நேரமிருக்கிறதா?

(தொடரும்...)

Saturday, December 02, 2006

என் தோழனே....

சோகமெனில் உன்தோளில்
சாய்ந்து
அழுது தீர்த்துக்கொள்வேன்...

மகிழ்ச்சியெனில் உன்
விரல்கோர்த்து உயிர் மலர சிரித்துக்கொள்வேன்...

உன்னுடனிருக்கும்
ஒவ்வொருநிமிடங்களும்
தாய்மடியில்நிம்மதியாய்
உறங்கும்குழந்தையாய்
நானிருந்தேன்..

தங்கத்தில் வேலியொன்று
என் கழுத்தில் ஏறியதால்
உன்னைப் பிரிந்து இன்று
வெளியூர் செல்கிறேன்...

வழியனுப்ப வந்த
சொந்தங்களின் நடுவே
தோழி என்னை
பிரியவும்மனமில்லாமல்
வேறுவழியும் தெரியாமல்
தவிப்புடன் கன்னம்நனைக்கும்
கண்ணீரைமறைத்தபடியே
மெளனித்துகையசைக்கிறாய் நீ..

உன்னைவிட்டு
நகரத்துவங்குகிறது
இந்த இரயிலும்
என்வாழ்க்கையும்...