Sunday, January 31, 2010

படித்ததில் பிடித்தது:

இருந்து என்ன 
ஆகப் போகிறது 
செத்துத் தொலைக்கலாம் 
செத்து என்ன ஆகப் போகிறது
இருந்து தொலைக்கலாம். 

- கல்யாண்ஜி

Thursday, January 28, 2010

யுத்தத்தில் கரைந்த கடைசி முத்தம்






1.
நிழல் விழுகின்ற மதியப்பொழுதுகளில்
உயிர்க்கூடு உடைகிற சப்தத்துடன்
துவங்குகிறது யுத்தம்.
நதியென பெருக்கெடுத்து ஓடுகின்ற
குருதியை நாவால் தீண்டி மகிழ்கின்றன
கருமை நிற பூனைகள்.
சுழலும் காற்றில் கலக்கிறது
மரணத்தின் வாசம்
யாரும் அறியாமல் மெல்ல
சிரித்துக்கொள்கிறாய்
வீழ்ந்துகிடக்கும் என்னை
கடந்தபடி.

2.
எங்கிருந்து துவங்கியதென்பதும்
எதற்காக இந்த யுத்தமென்பதும்
நாம் அறிந்துகொள்ளும்
முன்பே
நிறைவடைந்துவிட்டது.
காயங்களுடன் நம்
பழைய பாதையில் பயணிக்கிறோம்.
அன்று
நாம் இணைந்திருந்த புள்ளியில்
மரணித்து கிடக்கிறது
பன்னீர்ப்பூவொன்று.

3.
தீராப்பசியுடன் வலம் வருகின்ற
பறவை அல்லது விலங்கு
முழுமை பெறாத ஓவியத்தை
அழித்து திரியும் விசித்திரன்.
வெப்பம் உதிர்க்கும் வார்த்தைகள்
சுமந்து அலைபவன்.
விதவிதமான குற்றங்களை
யுத்தம்  சுமத்தியபோதும்
கரையாமலிருந்தேன்.
உன்
தணல் மெளனத்தால்
என் கனவுகளை எரிக்கிறாய்.
இந்த இருண்ட பகலை
வெளிச்சமாக்குகின்றன எரியூட்டப்படும்
கனவுகளின் சுவாலைகள்.
தொலைவில்,
வீறிட்டழும் குழந்தைக்கு மார்பை
பொருத்த மறந்து உறங்குகிறாள்
ஒருத்தி.

-நிலாரசிகன்.


நன்றி: உயிரோசை

Wednesday, January 27, 2010

நீராலானது (இரண்டு கவிதைகள்)




1.
அருவியில் தவறி விழுந்தவனை
பற்றிய அறிவிப்புகளில் உடன்
தேடுகிறோம் அவரவர் நண்பர்களை
யாருக்கும் எதுவும் ஆகிவிடவில்லை
பெரும் ஆசுவாசத்துடன்
உடல் உலர்த்த வெயில் நோக்கி
நகர்கிறோம்.
யாரோ ஒருவனின் மரணத்தை பற்றிய
குறிப்புகளற்று விழுந்துகொண்டிருக்கிறது
அருவி.
பாபநாசத்திற்கு போகலாம் என்கிறான்
சரியாக குளிக்காத நண்பனொருவன்.

2.
நிழலை எப்படி நீரில்
நனைப்பது?
உடலை துறப்பதை போல்
கடினமானதில்லை நிழலை
துறப்பது என்றபோதும்
நிழலை சுமந்துகொண்டே குளிக்கிறேன்.
இப்போது என்னுருவம்
மீனாக மாறியிருக்கிறது.

-நிலாரசிகன்.

Monday, January 25, 2010

தெரு நாயின் சாயல் கொண்டவன் பற்றிய குறிப்புகள்



சாம்பல் நிற பறவைகள் இரண்டு கவிதைநோட்டின் அட்டையில் பறந்துகொண்டிருந்தன. குழந்தையொன்றை ஒப்படைப்பது போல் மிகுந்த கவனத்துடன் அவரிடம் அந்த நோட்டை இவன் ஒப்படைத்தபோது இருள் கவிய துவங்கியிருந்தது. திருவல்லிக்கேணியின் மிகப் பிரபலமான அந்த தெருவில் ஆள் நடமாட்டம் அதிகமில்லாத அந்தியில் எங்கோ ஒலிக்கும் பாடலின் வரிகள் காற்றில் மிதந்து வந்தன. பரிட்சைக்காக காத்திருக்கும் மாணவனின் படபடப்புடன் இவன் அமர்ந்திருந்தான் . சுற்றிலுமிருந்த புத்தகங்களை கண்கள் துழாவியபோதும் எதிலும் லயிக்கவில்லை மனம். மின்விசிறியின் சத்தம் பெருகி பெருகி இவனை விழுங்கிக்கொண்டிருந்தது. கவிதைத்தாள்களை வாங்கியவர் முதல் பக்கத்தை பார்த்துவிட்டு கேட்டார்
“கிருஷ்ணமூர்த்தி ஏதோ கதை புஸ்தகம்னு சொன்னான்..”
“இல்ல சார் கவிதைகள்.புதுக்கவிதைகள் “  இவன் பதிலிட்ட மறுகணம் அவரது தொலைபேசி அலறியது. இவனது இருத்தல் பற்றிய பிரக்ஞையின்றி அழைப்பில் மூழ்கிப்போனார் அவர். தெருவை வெறித்துக்கொண்டிருந்தவன் பூ விற்கும் பெண்ணொருத்தி கூடை நிறைய மஞ்சள் ரோஜாக்கள் சுமந்து செல்வதை கண்டு மெல்லியதாய் புன்னகைத்தான்.லேசான தூறலில் அழகாகிக்கொண்டிருந்தது அந்தி. மழைத்துளியில் நனைந்த ரோஜா இதழ்களின் செளந்தர்யத்தில் தொலைய ஆரம்பித்தபோது தர்ஷிணியின் ஞாபகம் வந்தது.
-----o0o------
ஆழ் மனதின் வெடிப்பில் சிதறிய துகள்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு பெயரிட்டு ஏதேதோ கனவுகளில் வசித்துக்கொண்டு மிகத்தீவரமாக கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த போது முதுகலை படிப்பதற்கு சென்னைக்கு வந்து ஒரு மாதம் முடிந்திருந்தது. கல்லூரி விடுதியில் கிடைத்த நேரம் முழுவதும் கவிதைக்குள் மூழ்கிக்கிடந்தான். கேலியும் கிண்டலும் கலந்திருக்கும் கல்லூரி வாழ்வை தவிர்த்துவிட்டு எப்போதும் கவிதை நூல்கள் வாசிப்பதிலும் எழுதுவதிலுமே விருப்பமுற்று கிடந்ததால் சக மாணவர்கள் மத்தியில் ஒன்றுக்கும் லாயக்கற்றவனாக அறியப்பட்டான். பேண்ட் சட்டை போட்ட புலவன் வருகிறான் என்கிற பரிகாசத்தின் நடுவிலும் கவிதையும் அவளும் மட்டுமே வாழ்க்கை மீதான நம்பிக்கையை அர்த்தப்படுத்திபடி இருந்தார்கள். அவள் தர்ஷிணி.  வகுப்புத்தோழி. ஒவ்வொரு கவிதையின் பிரசவத்தின் போதும் குழந்தையாக மாறி குதூகலத்துடன் கவிதைகளின் கரம் பிடித்து நடப்பவள்.
கவிதை என்றால் காததூரம் ஓடும் நண்பர்கள் கூட காதல்கடிதமெழுத இவன் அறைக்கு வரும்போதெல்லாம் மனதெங்கும் உற்சாகமும் பெருமையும் ஒன்றுசேர்ந்து ஆனந்த தாண்டவமாடும். யாரோ ஒருத்திக்கென எழுதப்படும் காதல்கடிதங்களாக இருப்பினும் எழுதும்போதே தனக்குள் இழுத்துக்கொள்ளும் கவிதைக்காதலியின் மடியில் முகம்புதைப்பது பேரானந்த அனுபவமாக தோன்றும்.
நண்பர்களுக்காக எழுதுகின்ற காதல்கடிதங்களையும் அதை எழுதுகின்றபோது அருகில் பயபக்தியுடன் காத்திருக்கும் நண்பர்களின் முகபாவங்களை பற்றியும் தர்ஷிணி ரசித்துக் கேட்பாள். தனக்கு வந்த காதல் கடிதங்கள் எதுவும் இதைப்போலில்லை என்றும் எழுத்துப்பிழைகள் தாங்கி வருகின்ற அபத்தக் கடிதங்களே அதிகம் என்றும் அவள் சொல்லும்போது சிரித்துக்கொள்வான். தர்ஷிணி போன்ற எட்டாவது அதிசயங்களுக்கெல்லாம் கடிதமெதற்கு? கண்களை உற்று நோக்கி எப்போதும் உன்னுடன் வாழவிரும்புகிறேன் என்ற ஒற்றை வரி போதாதா? காதல் கடிதங்கள் வெறும் உணர்ச்சிக்குப்பைகள்.போலித்தனங்களும் பொய்களும் கொட்டிக்கிடக்கும் கடிதங்களைவிட தீர்க்கமான பார்வை மட்டுமே நேசத்தை பகிர்ந்துகொள்ள உன்னத வழி. யதார்த்தங்களை மீறுபவர்களே பக்கம் பக்கமாக கடிதமெழுதி காத்திருக்கிறார்கள். தன் காதலிக்கு கடிதம் எழுத மற்றொருவனை தேடும் காதலனை சிரச்சேதம் செய்துவிடும் சட்டம் ஏதுமில்லையா? இந்தக் கேள்விகளையெல்லாம்  தர்ஷிணியிடம் இவன் சொன்னபோது “ உனக்கு முத்திப்போச்சு ரொம்ப அதிகமா யோசிக்கிறடா” சிரித்துக்கொண்டே சொன்னாள்.
-----o0o------

சில நூறு கவிதைகள் சேர்ந்தவுடன் தர்ஷிணிதான் முதலில் அந்த யோசனையை இவனிடம் பகிர்ந்தாள். வகுப்புக்கு வெளியே சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தபடி  “நீ ஏன் ஒரு கவிதை புத்தகம் வெளியிடக்கூடாது?” அவள் கேட்டபோது மனதெங்கும் பரவசநிலை படர்வது போலிருந்தது. அந்தக் கேள்வியே இவனுக்கு அதிகம் பிடித்திருந்தது. சட்டென்று மலர்ந்த மொட்டுபோல் உடன் மலர்ந்து புன்னகைத்தான்.
“என் கவிதைகளை யாரு வெளியிடுவா?”
“நீ ட்ரை பண்ணி பாரேன் டா. கண்டிப்பா வெளியிடுவாங்க” அவள் நம்பிக்கையை கலைக்க விரும்பாமல் சரியென்று தலையாட்டிவிட்டு விடுதிக்கு வந்து மொட்டை மாடியில் வானம் பார்த்து கிடந்தான். நட்சத்திரங்களின் காதுகளில் கவிதை நூலை தான் வெளியிடப்போகும் செய்தியை  சொன்னபோது இவனுடல் சிலிர்த்தடங்கியது. சத்தமிட்டு கத்தவேண்டும் போலிருந்தது.பொங்கி வழிகின்ற சந்தோஷத்துடன் அறைக்கு திரும்பியவன் எழுதியதில் சிறந்த ஐம்பது கவிதைகளை தேர்ந்தெடுக்கும் வேலையில் இறங்கினான். பின்னிரவில் சிறந்த கவிதைகளை தேர்ந்தெடுத்த நிம்மதியில் கவிதை நோட்டை நெஞ்சில் கவிழ்த்தபடி உறங்கிப்  போனான்.
-----o0o------
தொலைபேசி அழைப்பிலிருந்து மீண்டவர் இவனது கவிதை நோட்டை புரட்டினார்.நான்கு நிமிட இடைவெளியில் கவிதை நோட்டிலிருந்து நிமிர்ந்தவரின் கண்களை உற்றுப் பார்த்தபடி இருந்தவனுக்கு மிச்சமிருந்த நம்பிக்கையும் அறுந்து விழுந்தது. உதடு பிதுக்கலுடன் கவிதை நோட்டை திருப்பித் தந்தவர் கேட்டு கேட்டுப் புளித்துப்போன அதே வார்த்தைகளை உச்சரித்தார்
“யாரு தம்பி கவிதை புக் வாங்குறா.. ஐம்பது பிரதி வித்தாலே பெரிய விசயம்..ஏதாவது நாவல் கீவல் இருந்தா கொண்டாப்பா” இவனது பதிலை எதிர்பாராமல் மீண்டும் தொலைபேச ஆரம்பித்துவிட்டார்.  
வலித்தது.சத்தமிட்டு அழவேண்டும் போலிருந்தது.முட்டிக்கொண்டு வந்த கண்ணீரை அடக்கிக்கொண்டு நியோன் விளக்கின் வெளிச்சம் விழுந்துகொண்டிருந்த அத்தெருவில் திரும்பி நடக்க ஆரம்பித்தான். நான்கு நிமிடத்தில் எப்படி நாற்பது பக்க கவிதைகளை இவர் வாசித்திருக்க முடியும்? கொடும் இரவுகளில் கசிகின்ற மெளனத்தின் துணையுடன் தானெழுதிய உயிர்க்கவிதைகள் நான்கு நிமிடத்தில் மறுதலிக்கப்பட்டது தீயென சுட்டது. பச்சை நிற குப்பைத்தொட்டியொன்றின் அருகில் சென்று சிறுநீர் கழித்துவிட்டு வேகமாக வீடு திரும்பினான்.

 -----o0o------
தர்ஷிணி எம்.எஸ் படிப்பதற்கு அமெரிக்கா போய் விட்டிருந்தாள். வேலை தேடுதல் ஒன்றே இலக்காக இவன் திரிந்தபோதும் எந்தவொரு வேலையும் கிடைத்துவிடவில்லை. வேலையின்மையின் வலியிலும் நண்பர்களற்ற தனிமையிலும் கவிதை மட்டுமே வலிமிகுந்த பொழுதுகளில் உடனிருந்தது.
துயரத்தின் கரங்கள் இவனை இறுக்கிய ஓர் இரவில் உக்கிரத்துடன் கவிதை எழுதிக்கொண்டிருந்தபோதுதான் அச்சம்பவம் நிகழ்ந்தது. அறைக்குள் நுழைந்த அப்பா இவன் கவிதை எழுதிக்கொண்டிருப்பதை பார்த்துவிட்டு அம்மாவிடம் கத்த ஆரம்பித்தார் “எப்ப பாரு கவிதை கிறுக்கிட்டு கிடக்கானே உம் பையன் இத வெச்சு நாக்கு வழிக்க கூட முடியாதுன்னு அவன் கிட்ட சொல்லுடி. ஒரு வேலை வாங்க துப்பில்ல இவனெல்லாம் கவிதை எழுதி என்னத்த கிழிக்க போறான்?” முதன் முதலாய் இதயம் கிழிபட்டது அன்றுதான். நாக்கு வழிக்கக்கூட லாயக்கற்ற கவிதைநோட்டை சுவற்றில் எறிந்துவிட்டு விடுவிடுவென்று வீட்டை விட்டு வெளியேறினான். அதென்ன கவிதை எழுதுபவன் என்றால் இத்தனை கேவலம்? ஏனிந்த அவலம்? கோபத்தில் எங்கு போவதென்று தெரியவில்லை. வீட்டிற்கு அருகிலிருந்த தியேட்டருக்குள் நுழைய எத்தனித்தபோது அலைபேசி சிணுங்கியது. அமெரிக்காவிலிருந்து தர்ஷிணி அழைத்திருந்தாள். கோபத்தை மறைத்துக்கொண்டு போலியாய் தான் சந்தோஷமாக இருப்பதாகவும் விரைவில் வேலை கிடைத்துவிடுமென்றும் சொல்லிக்கொண்டிருந்தான். பேசிமுடிந்தவுடன் மனம் லேசாக ஆனது போலிருந்தது.என் நிரந்தர தோழிகள் கவிதையும்,தர்ஷிணியும் மட்டும்தானென்று முணுமுணுத்தன  உதடுகள். வீட்டிற்கு வந்து அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக்கொண்டான். காலை அம்மா கதவை திறந்தபோது மேசை மீது தலைகவிழ்ந்த நிலையில் படுத்திருந்தான். மேசையில் கிடந்த கவிதைநோட்டின் தாள்கள் ஜன்னல் காற்றில் படபடத்துக்கொண்டிருந்தன. அருகில் சென்ற அம்மா கவிதை நோட்டில் சிகப்பு எழுத்தில் எழுதப்பட்டிருந்த வரிகளை வாசித்தாள். தெரு நாயின் சாயல் கொண்டவன் பற்றிய குறிப்புகள் என்றிருந்தது. இரத்தம் தோய்ந்த அவனது விரல்களை கண்டு அலற ஆரம்பித்தாள் அம்மா.
-நிலாரசிகன்.

நன்றி: நவீன விருட்சம்

Sunday, January 24, 2010

ரசித்த கவிதைகள் மூன்று


எல்லை வேலிகள்
எங்களுக்கிடையில்
இந்துமகா சமுத்திரம் இருந்தது
வழிநடையில் முகில் குவியல்கள்
வண்ணங்களின் குகைகள்…
அடுக்குகளாய் தீயெரியும் ஒளிக்காடு…
சூரியன் ஆட்சி முற்றிய வானம்
சந்திரன் ஆக்கிரமித்த சுரங்கப்பாதைகள்
வல்லரசுகளின் படையணிகள்
எல்லாம் இருந்தன
மலைகளை எல்லை வேலிகளாக
நாட்டியுள்ளனர்
காடுகள் நகர்ந்தபடி
எங்களைச் சுற்றி வளைத்து வழிமறிக்கின்றன
ஆனபோதிலும்
நான் அன்றவனை மூன்று முறை முத்தமிட்டேன்
-    அனார். “உடல் பச்சை வானம்” தொகுப்பு – காலச்சுவடு வெளியீடு

------------o0o-------------

மஞ்சள் மலைகள்

பழுப்புநிற புல்வெளியின் பரப்பில்
ஆட்டுமந்தையின்
ஒழுங்குமாறாது நடத்திச்செல்லும் சிறுவன்
சாலையோரம் குவித்த தானியங்களை
கோணிகளில் நிரப்பியபடி
புழுதியப்பிய பெண்கள்
மெதுவாய் இயங்கும்
அருகாமை ஊர்தியினுள்ளிருந்து
பின் நகரும்
கையசைத்தபடி நகைக்கும் சிறுமி
அடர் மற்றும் வெளிர்நீல இறக்கைகளோடு
காற்றைப் பின் தள்ளி
பறைவையின் பயணிப்பு
பேருந்தில் அமர்ந்த இருக்கையின்
ஜன்னல்வெளியில்
கடந்தும் தொடர்ந்தும்
மஞ்சள் மலைகள்
-ஸ்ரீஷங்கர் – தொலைவற்ற கடலின் குரல் – அனன்யா வெளியீடு
 ------------o0o-------------
பார்வை
என்னை
எதுவாகவோ இருக்கச் சொல்லி
எல்லோரும் வற்புறுத்துகிறார்கள்,
நான் என்னை
நட்சத்திரங்களில் காணாது போக
முயன்றுகொண்டிருக்கையில்
-சே.பிருந்தா – வீடு முழுக்க வானம் தொகுப்பு – காலச்சுவடு வெளியீடு


------------o0o-------------
நேற்றிரவு வாசித்த இந்த மூன்று தொகுப்புகளிலும் என்னை அதிகம் கவர்ந்த கவிதையை இங்கே பகிர்ந்திருக்கிறேன். மூன்று கவிதைகளின் கடைசி இருவரிகள் தருகின்ற அனுபவம் அலாதியானது. இத்தொகுப்புகள் கிடைத்தால் வாசித்து பாருங்கள் நல்லதொரு வாசிப்பனுவம் கிடைக்கும். 
- நிலாரசிகன்.



Saturday, January 23, 2010

வெண்பா இரண்டு





1.

கண்ணால்   மடலெழுதிக்  காதல்  கவிதையைச்
சொன்னாளே பெண்மை இலக்கணத்தை - மண்ணாகப்
போகும் உடலுக்கு போர்வையாய்த் தானிருக்க
ஆகுமோ?  ஏந்திழையால் தான்!
2.

மல்லிகையாய் வீசும்  மணம்பூசிக் கொண்டவளோ
புல்லில் மணந்தாள் புதுமலராய்  -  வெல்லுகின்ற

பூக்கொண்டேன்!  பொன்னுடம்பில்  ஓடுகின்ற செந்நீரை
நாக்கொண்டால்  நற்றேன்  இனிப்பு.

Friday, January 22, 2010

500 குறும்படம்

பணத்தின் மீதான வெவ்வேறு மனிதர்களின் பார்வை எவ்வளவு மாறுதல்களுடன் இருக்கிறது என்பதை அழகாய் கோர்த்திருக்கிறார்கள். இந்தியா ஏழையின் தேசமல்ல என்பதும் நெஞ்சை நெருடுகிறது.

Friday, January 15, 2010

தற்கொலைக் கவிதைகள்




1.
தற்கொலைக்கு
விஷம் வாங்கிவர பயணிக்கின்றன
என் கால்கள்.
முட்டாள்தனமென்று புத்திசாலிகள்
தூற்றலாம்;
மக்கள்தொகையிலொன்று குறைந்ததென்று
எதிரிகள் மகிழலாம்.
ஒன்றிரண்டு கண்ணீர்த்துளிகள்
நான்கைந்து அழுகைகள்
சில உதடு பிதுக்கல்கள்
கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள்
கொஞ்சம் பிரிவுக் கவிதைகள்
இவை எதைப் பற்றிய பிரக்ஞையுமின்றி
நிகழலாம் இவனது
மரணம்.
விஷம் வாங்கிகொடுத்த
வேலைக்காரனென்று நசுக்கப்படலாம்
நானும்.

2.
தனிமை புணர்
பொறுமை எரி
உலகை புசி
இரவை மிதி
புன்னகை கொல்
மழை துற
நம்பிக்கை உதறு
முற்றும்.

3.
தோல்விகளால் நிரம்பியவன்
வெற்றிகளால் நிரம்பியவனை
சந்தித்தான்
கொஞ்சம் மெளனம்
கொஞ்சம் வன்மம்
கொஞ்சம் பரிகாசம்
கொஞ்சம் நஞ்சு
இருவருக்கும் இடையே
மிதந்து கொண்டிருந்தது. 

கடைசியாக,
அறிவுரைகளுடன் நகர்ந்தான்
வென்றவன்
தோல்வியுடன்.




வெயிலாள்..




எப்போதும் வெயிலை சுமந்துகொண்டே
என்னிடம் வருகிறாய்
உன் மேல் படர்ந்திருக்கும் வெயில்

நீண்டு என்னுடலை தழுவ முயல்கிறது.
தொட நீண்ட
வெயிலின் கரங்கள் தடுமாற்றத்துடன்
சுருங்கிக் கொள்கிறது.
குளிர் நிறைந்த அவ்வெயிலின் கனம்
அதிகரித்தபோதும் உதறாமல் உன்னுடனே
வைத்திருக்கிறாய்.
பூவின் உருவிலிருந்து புழுவாகிறது
நம்மிடையேயான உறவு.

Wednesday, January 13, 2010

காட்டின் பெருங்கனவு




நடந்து முடிந்த புத்தக கண்காட்சியில் முதலாவதாக வாங்கிய புத்தகம் சந்திராவின் "காட்டின் பெருங்கனவு" சிறுகதை தொகுதி. இவரது முதல் தொகுப்பு "பூனைகள் இல்லாத வீடு" தந்த வாசிப்பனுவமும் அதன் உணர்வுநிலை நீட்சியும் மனதை விட்டு இன்னும் அகலவில்லை. அதனாலேயே இப்புத்தகத்தை உடனே வாங்கிவிட தீர்மானித்திருந்தேன். காட்டின் பெருங்கனவு தலைப்பை கேள்வியுற்ற மறுகணமே வனமொன்றின் நடுவில் சுதந்திரமாக சுற்றித்திரியும் சிறுமுயலென மாறிப்போனது மனம். வாசகனை தன்னுள் இழுக்கும் மிகப்பெரும் பொறுப்பாக நானுணர்வது படைப்பின் தலைப்பு. வண்ணதாசனின் "தோட்டத்திற்கு வெளியிலும் பூக்கள்" தலைப்பிற்காகவே அந்த சிறுகதையை தேடிப் படித்திருக்கிறேன். மேலும் இத்தொகுப்பின் அட்டைப்படம்(இலைகளுக்கு நடுவே ஒளிரும் யுவதி (அ) வனதேவதையின் புகைப்படம்) தந்த வசீகரத்தை ரசித்தபடியே தொகுப்பினுள் நுழைந்தேன்.

மொத்தம் ஒன்பதே கதைகள். ஆனால் ஒவ்வொரு கதைக்குள்ளும் பயணிக்கையில் பல்வேறு கிளைக்கதைகளை நோக்கி வாசகனை நகர்த்திவிடுகிற வித்தையில் வெற்றி பெற்றிருக்கிறார் கதாசிரியர் சந்திரா. இங்கும் கதைகளின் தலைப்பில் சொக்கித்தான்போகிறது மனம். "நதியில் மிதக்கும் கானல்","தரை தேடிப் பறத்தல்" "பன்னீர்மரத் தெரு" "காட்டின் பெருங்கனவு" கவித்துவம் நிறைத்த இத்தலைப்புகளில் சற்று  நேரம் பார்வையை பதியவிட்டு கதைக்குள் நுழையும்போது இத்தொகுப்பின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க தொடங்கி இருந்தது.

இத்தொகுப்பின் மிகச்சிறந்த கதையாக,கதை முடிந்த பின் வேறெதுவும் செய்ய இயலாத பாதிப்பை உருவாக்கிய கதையென்று 'பன்னீர்மரத் தெரு" கதையை சொல்லலாம். பன்னீர் மரத்தெருவிலிருக்கும் அகிலாவின் வீட்டு முற்றத்தில் அத்தெரு சிறார்கள் கூடுகிறார்கள். அவர்களுக்கு அகிலா தன் கற்பனை சிறகுகளை விரித்து கதைகளை சொல்லி மகிழ்கிறாள்.கதைகள் மட்டுமே திருமணமாத தனிமையின் வலியை ஆற்றுகின்றன.அவள் வசிக்கும் தெருவில் புதிதாய் குடிவரும் லாவண்யாவின் வீட்டில் தொலைக்காட்சி பெட்டி வாங்குகிறார்கள்.அகிலாவிடம் கதைகள் கேட்ட சிறுமிகளும் சிறுவர்களும் தொலைக்காட்சி பெட்டியினால் ஈர்க்கப்பட்டு இவளிடமிருந்து நீங்குகிறார்கள். அதனால் ஏற்படும் தனிமை மீண்டும் இவளை வாட்டத்துவங்குகிறது. இவளது அண்ணன் தன் ஐம்பதாவது வயதில் இவள் வயதொத்த பெண்ணை திருமணம் செய்துகொள்ளும்போது தான் தனித்துவிடப்பட்டவளாகவும் உறவு அறுபட்டதாகவும் உணர்ந்து தன் அறைக்குள் இருப்பை சுருக்கி கொள்கிறாள். அவள் அண்ணன் தன் இளம் மனைவிக்காக வாங்கி வருகின்ற தொலைக்காட்சிபெட்டியின் சத்தம் அகிலாவின் உயிரை அறுக்கிறது.

இந்தக் கதையின் முடிவும் அது தரும் பாதிப்பும் மனதெங்கும் வியாபித்துக்கொள்கிறது. அகிலாவின் வலி வார்த்தைகளின் வழியே நம்மையும் சூழ்ந்துகொள்வது கதையின் மிகப்பெரிய பலம். சில இடங்களில் காட்சிப்படுத்துதல் மனதை அள்ளிப்போகிறது

"டிசம்பர் பூக்களைக் கட்டியபடி அகிலா கதை சொல்லிக் கொண்டிருப்பாள். சிறுமிகளுக்கும் அவளைப் போலப் பூக்கட்டத் தோன்றும். ஆனால் அவர்களுக்கு அகிலாவைப் போலக் கைவிரல்களில் நூலைக் கோத்துப் பூக்கட்டத் தெரியாது.அவர்கள் பன்னீர்ப்பூக்களைப் பொறுக்கிக் கால் பெருவிரலில் நூல் கோத்துச் சரமாகத் தொடுத்தபடி கதை கேட்டுக்கொண்டிருப்பார்கள்"

காட்டின் பெருங்கனவு சிறுகதை ஒரு மலைகிராமத்தில் வசிக்கும் இரு சகோதரிகளை பற்றியது. இந்தக் கதையின் மூலம் ஒரு மலைகிராமத்தையும் அதன் வாழ்வியலையும் கண்முன் கொண்டுவந்திருக்கிறார் சந்திரா.

கழிவறைக் காதல் பிரதி என்றொரு சிறுகதை கட்டண கழிப்பிடத்தில் வேலை பார்க்கும் பெண்ணொருத்தியின் காதலை மையமாக கொண்டது.அற்புதமான எழுத்தாற்றலால் வித்தியாசமான கருவை சிறப்பாக கையாண்டிருக்கிறார்.

தரைதேடி பறத்தல் சிறுகதை கவித்துவமான நடையில் எழுதப்பட்டிருக்கிறது. பறவையை குறியீடாக கொண்டு பெண்ணின் பார்வையில் எழுதப்பட்ட கவிதைக்கதை எனலாம்.

மொத்தத்தில்  "காட்டின் பெருங்கனவு"  சிறந்த மொழிநடையில்,வித்தியாசமான கருக்களை மையப்படுத்தி,வசீகரிக்கும் விவரிப்புகளால் வாசனை தனக்குள் இழுத்துக்கொண்ட ஆக சிற படைப்பு என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. (உமா மகேஸ்வரியின் "மரப்பாச்சி" தொகுப்பிற்கு பின் என்னை அதிகம் கவர்ந்த தொகுப்பாக இதைச் சொல்வேன்).

சிறுகதையாசிரியர் சந்திரா இப்பொழுது இயக்குனாரக அவதாரமெடுத்திருக்கிறார்.உயிர்ப்புள்ள சிறுகதைகளை போலவே ஜீவனுள்ள பல திரைப்படங்களை அவர் தர வேண்டும். வாழ்த்துகள் பல.

வெளியீடு: உயிர் எழுத்து
விலை: ரூ. 50
பக்கங்கள்: 94
ஆசிரியர்: சந்திரா. 


- நிலாரசிகன்

Monday, January 11, 2010

வெற்றிவேலுக்கு...

தெருவெங்கும் சிதறிய
செந்நீரின் கறை
உங்கள் "கறை" வேட்டியில்
பட்டுவிடாமல் ஒதுங்கி நின்றீர்கள்.
காரிலிருந்து இறங்கி
மிகுந்த அக்கறையுடன்
ஆம்புலன்ஸுக்கு காத்திருந்தீர்கள்.
கதறிய காவலன்
எந்த நிலையத்தை சேர்ந்தவனென்று
பட்டிமன்றம் ஆரம்பித்தீர்கள்.
மானம் கெட்ட உங்களிடம்
மனிதாபிமானம் எதிர்பார்த்தது
தவறென்று நிரூபித்தீர்கள்.
தமிழினம் அழிக்கப்பட்டபோது
ரசித்தது போலவே
வெற்றிவேலையும் ரசித்தீர்கள்.
இந்தக் கவிதைக்கு
கருவாகி தமிழின் மேல்
எச்சில் உமிழ்ந்து போனீர்கள்
மனித உருவில் திரியும் சாத்தான்களே!

-நிலாரசிகன்.

Friday, January 08, 2010

இரு விமர்சனங்கள்:



என்னுடைய சிறுகதை தொகுப்பிற்கு பதிவ  நண்பர்கள் கிருஷ்ணபிரபுவும்,அடலேறுவும் விமர்சனம் எழுதி இருக்கிறார்கள். அதற்கான சுட்டி கீழே:

http://online-tamil-books.blogspot.com/2009/12/blog-post_29.html

http://adaleru.wordpress.com/2010/01/05/book-review-yaaroo-oruthiin-diary-kuripugal/

Tuesday, January 05, 2010

சென்னை புத்தக கண்காட்சி




நண்பர்களுக்கு,

தற்போது நடந்துவரும் சென்னை புத்தக கண்காட்சியில் என்னுடைய நூல்கள் கீழ்கண்ட கடைகளில் கிடைக்கும்.

[ஒரு பட்டாம் பூச்சியின் கனவுகள் - கவிதைகள்]


பரிசல் புத்தக நிலையம் அரங்கு எண்:386

இருவாட்சி பதிப்பகம் அரங்கு எண்:121
 
[யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள் - சிறுகதைகள்]

திரிசக்தி பதிப்பகம் அரங்கு எண்: 223,224

கிரிகுஜா பதிப்பகம் அரங்கு எண்: 207,208


Sunday, January 03, 2010

துயரத்தின் முதல் பாடல்





அறைக்குள் நுழைந்த
இருளின் கீற்றுகளில்
பயணப்பட்டு வந்தது
நீ விட்டுச்சென்ற
கடைசி பார்வை.
மணலாய் கிடந்த
என்னுருவம்  உயிர்பெற்று
ப்ரியங்களுடன் அப்பார்வையை
தொட முயன்றபோது,
காலடியில் முகம் மறைத்து
கிடந்த வெளிச்சம்
இரண்டாக பிளந்து
என்னை
உள்ளிழுத்துக்கொண்டது.
நிரந்தர இருளில்
இசைக்க துவங்குகிறேன் 

உனக்கான துயரத்தின்
முதல் பாடலை..

Friday, January 01, 2010

நின்னைச் சில வரங்கள் கேட்பேன்




நின்னைச் சில வரங்கள் கேட்பேன் -
அவைநேரே இன்றெனக்குத் தருவாய் -
என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் -
இன்னும்மூளாதழிந்திடுதல் வேண்டும் -
இனி என்னைப் புதிய உயிராக்கி -
எனக்கேதுங் கவலையறச் செய்து -
மதிதன்னை மிகத் தெளிவு செய்து -
என்றும்சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!

-மகாகவிஞன்.