Tuesday, April 22, 2008

கல்லெறியப்பட்ட கனவுகள்...


கதவிடுக்கில் சிக்கிய விரலென உன் பிரிவில் நசுங்கிய என் காதலில் வழிகிறது ஞாபகரத்தம்..


உனக்குத் தந்த முத்தங்களை மறக்கடித்துவிட்டது காலம். காதோரம் முணுமுணுக்கிறது முத்தமிட்டபோது காற்றில் கலந்த சிணுங்கல்சப்தம்.


கடல்போன்றது நம் காதல் என்று நீ சொன்னபோது புரியவில்லை,நீந்தத்தெரியாதவன் நானென்று.


இந்த பின்னிரவில் ஜன்னலோர தென்னைமர கீற்றில் விழுந்துதெரிக்கும் மழைத்துளிகளின் சப்தங்கள் வருடம் பல கடந்துவிட்ட காதலை நினைவூட்டுகிறது.


ஒரு ஆத்ம நேசிப்புக்காக ஏங்கித் தவித்த பொழுதில் தலைகோதும் மென்விரல் தந்து நெஞ்சோடுஅணைத்து காதல்தீபம் ஏற்றினாய்.

நீ ஏற்றிய தீபத்தில் சாம்பலானது மட்டும் என் கனவுகள்...


நெடுஞ்சாலையில் வேகமாய் பயணிக்கும் உனக்கு, சாலையோரம் வீழ்ந்த பூக்களின் நலம்விசாரிக்கும் என்னை அடையாளம் தெரிய வாய்ப்பில்லை.


கண்ணாடித்தொட்டிக்குள் நீந்துகின்ற தங்கமீனுக்கும் எனக்கும் அதிகம் வித்தியாசமில்லை.


எப்பொழுதும் என் நினைவுகளில் நீ இல்லை என்பது நிஜம். எப்பொழுதெல்லாம் உன் பூமுகம் நினைவில் மலர்கிறதோ அப்பொழுதெல்லாம் வாடிவிடுகிறேன் நான்.


இலையுதிர்காலத்திலும் செழித்து பூக்கள் சொரிந்த மரமாக நின்றிருந்தேன் அருகில் நீ இருந்தபோது.

இன்று வசந்தகாலத்திலும் பட்டமரமாய் வேர்களின்றி விழுந்து புலம்புகிறேன்.


நினைக்க மறக்காதே,மறக்க நினைக்காதே என்று நீ எழுதிய கடிதங்களை நினைத்து அவ்வப்போது சிரிக்கவும் செய்கிறேன்.உனக்கென் நன்றிகள்.


சாதியும்,மதமும் எதிரியாக வந்திருந்தால்கூட வென்றிருப்பேன். உன்னை தோற்கடித்து காதலில் ஜெயிக்க சொன்னாய் நீ.


யுத்தமிட்டு ஜெயிக்க இது தேசமல்ல. நேசம் என்று சொல்லிவிட்டு திரும்பிவந்தேன்.வீதியெங்கும் இறைந்து கிடக்கின்றன காயப்பட்ட என் கனவுகளின் மிச்சங்கள்...

Thursday, April 17, 2008

பேச்சிலர் கவிதைகள்...




1.கொடுக்கல் வாங்கலின்
திருப்தியின்மையை
மெளனத்தால் பேசுகிறான்
அறைத்தோழன்.

2.கலைத்துப்போட்ட அறையிலும்
கலையாமலிருப்பது நிறைய
கனவுகளும் ஒருத்தியின்
நினைவுகளும்.

3.சலவைக்கு போய்வந்த
சட்டைக்குள் ஒளிந்திருக்கும்
மறந்த ரூபாய் நோட்டில்
வெண்மையாகிறது ஒரு
கறுப்பு விடியல்.

4.நேர்முகத்தேர்வில்
தோற்று திரும்பும்பொழுதெல்லாம்
மனசுக்குள் சத்தமிடுகிறது
அம்மாவின் பிராத்தனையும்
அப்பாவின் மெளனக்கண்ணீரும்.

Monday, April 14, 2008

பட்டம்

பக்கத்து தெரு
கோவிலுக்கு போனதில்லை
பாட்டி.

அடுத்த ஊர்
மாதச்சந்தையை கனவில்
மட்டுமே கண்டுமகிழ்ந்தாள்
அம்மா.

சினிமாவில் மட்டுமே
சென்னை ரசித்தாள்
அக்கா.

குடும்பத்தில் முதன்முதலாய்
படித்தவன் என்கிற
பட்டத்துடன்,
கடல்கடந்து பறக்க எத்தனிக்கிறேன்
பெண்ணடிமை விலங்குகளை
உடைக்க முயற்சிக்காத
ஆணாக.

Thursday, April 10, 2008

புலம்பெயர்ந்தவனின் விதி!




காற்றில் அடித்த
சன்னல்க்கதவுகளின் பேரோசையில்
திடுக்கிட்டு விழித்தழுகிறது
தொட்டில்குழந்தை...

அடைமழை நாட்களில்
தூரத்து இடியோசைகேட்டு
நாற்காலியின் அடியில்
ஓடி ஒளிகின்றாள்
நான்குவயது மகள்...

கதவு தட்டப்படும்
போதெல்லாம்
நடுங்க ஆரம்பிக்கிறது
பாட்டியின் தேகம்..

ஆயிரம் மைல்களுக்கு
அப்பால் புலம்பெயர்ந்த
பின்னும்
தொடர்ந்துகொண்டே இருக்கிறது
ஈழத்தின் அதிர்வலைகள்.

Wednesday, April 09, 2008

உன் திருமண அழைப்பிதழ்

ஒரு சிற்றெறும்பென‌
உன் ஞாபகங்களை
சேமித்துவைத்திருந்தேன்.
மழையாய் வந்து
நீ அழித்துச்செல்லும்வரை!

Sunday, April 06, 2008

சலசலப்பற்ற நதியை
உணர்வுகளின்றி நகரும்
உச்சிவெயில்பொழுதுகள்
நினைவூட்டுகின்றன...

இரவின் நீட்சியை
காற்றில் கையசைத்து
குறைத்திட முயன்று
தோற்கிறது தென்னைமரக்கீற்று..

குழந்தைமை மாறா சிரிப்புக்குள்
மறைந்துகொள்கிறது
மூளைவளர்ச்சியற்ற கன்னியொருத்தியின்
ஆடைவிலகிய அங்கங்கள்...

எழுத்தில் வடிக்காவிட்டாலும்
எங்காவது எழுதப்பட்டுக்கொண்டே
இருக்கின்றன கவிதைகள்...

Wednesday, April 02, 2008

மனித உருவில் ஒரு மிருகம்!

ஆண் என்கிற ஒரே காரணத்திற்காக தன் மனைவியை,தன் உயிரின் மறுபாதியை தன் இஷ்டப்படி 25 ஆண்டுகளாய் கொடுமைப்படுத்திய ஒரு கொடூரனைப் பற்றிய கட்டுரை இன்று படிக்க நேர்ந்தது.

இவர்களுக்கெல்லாம் என்ன தண்டனை கொடுப்பது!!! இறைவனின் படைப்புப்பிழை இந்த மனித மிருகங்கள்...

கட்டுரை:
(நன்றி : ஜீனியர் விகடன்)




''ரத்தம் கொட்டினாலும் அவரோட 'பசி'யை தீர்த்தாகணும்...'' ''தலைக்காயத்துக்கு சர்க்கரையும் டீத்தூளும்...''
இந்திராணியின் இல்லற வாக்குமூலம்

'பின்னால இருந்து தலையில மல்லிகைப் பூ வச்சிவிட்டு தாடை யில விரல்பதிச்சு செல்லமாய் முகத்தைத் திருப்பி புருஷன் புன்னகை பூப்பான். அப்ப வெக்கத்துல, 'நான் மொதல்ல சிவக்குறேனா... நீ முதல்ல செவக்குறியா'னு ரெண்டு கன்னத்துக்கும் போட்டியே நடக்கும்!''- சக பெண்களுக்கு கிடைக்கும் இந்த சுகம் தனக்கும் கிடைக்கும் என்று நம்பித்தான் கும்பகோணத்தில் வாக்கப்பட்டாள் இந்தி ராணி. அந்த பதினேழு வயசில் அவளுக்குள் பதினேழாயிரம் ஆசைகள்.

முதல் ராத்திரியில்...

பால் சொம்புடன் மல்லிகை மணம் கமழ இந்திராணி கணவன் காலில் விழப் போகிறாள்... அவளைப் பார்த்து கணவன்,

'என்னடீ... பெரிய இவளாட்டம் பாலைத் தூக்கிட்டு வந்துட்டே? எங்கடீ கல்யாணத்துல வசூலான மொய்ப் பணம்? உன்னோட குடும்பத்துக்காரனுகளே

தூக்கிட்டுப் போயிட்டானுங்களா? சொல்றீ... சொல்லித்தொலை...' - திட்டிக்கொண்டே இந்திராணியின் தலையைப் பிடித்து சுவரில் அவன் இழுத்துமோத... புருஷன் தன்னை இப்படித்தான் மயக்கப் போகிறான் எனத் தெரியாமல் தலையில் ரத்தம் வடிய பொத்தென விழுந்து மயங்கினாள் இந்திராணி.

இப்படித் துவங்கிய முதலிரவுக்குப் பின் இருபத்தைந்து வருடங்கள் உருண்டோடி விட்டன. இப்போது இந்திராணி மொட்டை போட்டிருக்கிறார். தலை முழுக்க, 'கஜினி' படத்தில் சூர்யாவின் தலையில் கிடக்குமே ஒரு தழும்பு, அதுபோல் பதினாறுக்கும் அதிகமான தழும்புகள். எல்லாமே கணவன் என்ற மிருகத்தின் காணிக்கை. கால் நூற்றாண்டுகால மணவாழ்க்கையில் தலையில் எத்தனை தழும்புகளைத்தான் தாங்குவது? வெடித்துவிடும் அளவுக்குத் தலை வலித்ததால் சாமியிடம் வேண்டிக்கொண்டு மொட்டை அடித்துக்கொண்டார் இந்திராணி.

இந்திராணியின் மொட்டைத் தலையைப் பார்த்து அதிர்ந்து போனார் அவருடைய தோழியும் கன்னியாஸ்திரியுமான லீமாரோஸ். 'என்னம்மா இது?' என கேட்க, அப்போதுதான் கணவனின் கொடுமைகளை இறக்கி வைத்திருக்கிறார் இந்திரா. லீமாரோஸ் மூலம் நம் கவனத்துக்கு வந்தவர் தன் துயரக் கதையை நேரடியாக நம்மிடம் சொன்னார்.

''முதல் ராத்திரிலருந்தே கொடுமைதாங்க. இவ்வளவுக்கும் இடையில மூணு பொண்ணு, மூணு பையன் மொத்தம் ஆறு பிள்ளைங்க. சின்ன வயசிலேயே கல்யாணம் ஆனதால எந்த நல்லது கெட்டதும் தெரியலை. கட்டின புருஷனை எதுத்து ஏதும் செய்யக் கூடாதுங்கிறதால கம்முன்னு இருந்திட்டேன். இதை அவரு பயன்படுத்திக்கிட்டு தன் இஷ்டப்படி எல்லாம் என்னை ஆட்டிப் படைச்சாரு. காட்டுமிராண்டி மாதிரி அடிப்பாரு. ரத்தம் கொட்டோ கொட்டுன்னு கொட்டினாலும் அதை சட்டையே பண்ணாம அவரோட 'பசி'யை தீர்த்துக்குவாரு. அவரு உக்காரச் சொன்னா உக்காரணும். படுக்கச் சொன்னா படுக்கணும். அவர் தூங்குற வரைக்கும் சத்தம் போட்டுக்கூட அழக் கூடாது. அவர் அடிச்சு தலையில காயம் வர்றப்ப எல்லாம் டீத்தூளையும் சர்க்கரையையும் கலந்து மருந்தா போட்டுக்குவேன்'' என இந்திராணி சொல்லச் சொல்ல அதிர்ந்து போனோம்.

''தலையில அடிச்சாதான் நல்லா உறைக்கும்னு சொல்லிச் சொல்லி தலையிலேயே அடிச்சதால தலை முழுக்க தழும்பாப் போச்சு. சமயத்துல காயம் ஆறாம சீழ் வச்சிடுச்சு. என்னோட பெரிய பையன் கூலி வேலைப் பார்த்து எனக்கு வைத்தியம் பார்ப்பான்.

என் பிள்ளைகளுக்கு அப்பான்னு இவர் வேணும். புருஷன் இல்லாம வாழ்றது ஊரு உலகத்துக்கு சரியா வராதேனு எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு இருந்தேன். மூத்தப் பொண்ணுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. ஒரு பையனை அங்க இங்க கடன் வாங்கி வெளிநாட்டுக்கு அனுப்பிட்டேன். மத்த இரண்டு பசங்களும் கூலி வேலைக்குப் போறாங்க. பொண்ணுங்க படிக்கிறாங்க. பெரிய பையன் 'இனிமேயும் இந்த அப்பா நமக்கு வேணாம்மா! நீ மட்டும் நல்லாயிருந்தா போதும். அவருக்கு சோறு போட்டு கவனிக்காதே. எங்களோட தனியா வந்துடு'ன்னு திட்டுறான். என் மனசுதான் கேட்க மாட்டேங்குது.

கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி இவரு குடிச்சு குடிச்சே குடலு வெந்து கிடந்தப்ப, அவன்தான் காசு செலவு பண்ணி தன் ரத்தத்தையும் கொடுத்துக் காப்பாத்தினான். கொஞ்சம் குணமானதும் மறுபடியும் குடிக்கிறதும் என்னையும் பிள்ளைகளையும் போட்டு அடிக்கிறதுன்னு பழைய வேலையை ஆரம்பிச்சுட்டாரு. இப்போ எனக்கு அடிக்கடி தலைவலி வருது. கொஞ்ச நேரம் வேலை பார்த்தாலே தலை சுத்துது. தலைவலி தீரணும்னுதான் கோயில்ல வேண்டிக்கிட்டு மொட்டை போட்டுக்கிட்டேன். மிச்சமிருக்கிற காலத்துக்கு தலையில பெரிசா ஏதும் பாதிப்பு வந்திருக்கக் கூடாதுன்னு வேண்டிக்கிட்டு இருக்கேன். நான் வேறென்ன பண்ண முடியும்?'' - வெடித்துக் கிளம்பிய அழுகையோடு சொல்லி முடித்தார் இந்திராணி.

கன்னிகாஸ்திரி லீமாரோஸ் நம்மிடம், ''ஒவ்வொரு தழும்பும் 3 இன்ச்-சிலிருந்து 4 இன்ச் நீளத்துக்கு இருக்கு. எப்படித்தான் இந்திராணி இந்த சித்ரவதையை தாங்கிக்கிட்டு இவ்வளவு நாள் இருந்தாங்களோ தெரியலை. ஸ்கேன் எடுத்துப் பார்த்தாத்தான் தலையில என்னென்ன பாதிப்பு இருக்குன்னு தெளிவா சொல்ல முடியும். இந்திராணிக்கு மேலும் கொடுமை நடக்காதபடி நாங்க பார்த்துக்கிறோம். இவரை மாதிரிதான் அநேகம் கிராமத்துப் பொண்ணுங்க அறியாமையாலும், அடிமைத்தனத்தாலும் பல கொடுமைகளுக்கு ஆளாகுறாங்க. சமூக நலத்துறையும் பொதுநல அமைப்புகளும் கைகோத்து செயல்பட்டால்தான் இந்தக் கொடுமைக்கெல்லாம் தீர்வு கிடைக்கும்'' என்றார்.

'உங்க கொடுமைக்கார கணவர் ஊர் - பேரைச் சொல்லவே இல்லியே... அவர் இப்போ எங்க இருக்காரு?'- இந்திராவிடம் கேட்டோம்.

'வீட்டுக்காரர் பேரை சொல்றதா...? எங்காச்சும் விழுந்து கெடப்பாரு. அவர் பேரு... வேணாமே! ' யோசித்து யோசித்து கடைசியில் சொன்னார் இந்திராணி - ''கிருஷ்ணமூர்த்திங்க...''

அதன்பிறகு கிருஷ்ணமூர்த்தி எங்கிருப்பார் என்று இந்திராணி யூகித்துச் சொன்ன சில இடங்களிலும் கிருஷ்ணமூர்த்தியைத் தேடினோம். கிடைக்கவில்லை. ஒருவேளை, கட்டுரை வெளியான பிறகு கிருஷ்ணமூர்த்தி தன் தரப்பாக எதையும் சொல்ல விரும்பி தெரிவித்தால் அதனையும் பிரசுரிக்கத் தயாராகவே இருக்கிறோம்.

வெளிச்சத்துக்கு வராமல் இன்னும் எத்தனையெத்தனை இந்திராணிகள் இப்படி துன்பக் கேணியில் உழன்று கொண்டிருக்கிறார்களோ?
-சி. சுரேஷ்
படங்கள்: எ.பிரேம்குமார்

Tuesday, April 01, 2008

குறைப்பிறவி


உயிர்த்தெழுதல் சாத்தியமற்று
தூசிக்குள் புதைந்துகிடக்கிறது
அரங்கேறா கவிதைகள் சில..

கவிதைகளின் மெல்லிய
விசும்பல்சப்தம்
செவிக்கருகில் ஒலித்து
ஓய்கிறது தினமும்...

ஓடித்திரியும் பிள்ளையைவிட
ஊனப்பிள்ளைமீதே
தாய்பாசம் அதிகமென்று
உணர்த்த இயலாமல்
தோற்கிறேன் நான்.