Tuesday, September 14, 2010

மொழிபெயர்ப்புக்கவிதைகள்




1.

அப்போது அவளது வயது
பதினேழு முடிய நான்கு மாதமிருந்தது.
செந்நிற உடலின் வனப்பை
அவள் கண்ணாடியில் பார்த்து மகிழ்வாள்.
துலிப் பூக்களால் நிரம்பிய
தோட்டத்தில் அவனை சந்தித்தாள்.
அவன்,
அவளது உடலை ஊடுருவும் பார்வையை
கொண்டிருந்தான்.
தேம்ஸ் நதிக்கரையில் அவனது
விரல் பற்றி நீண்ட தூரம் நடப்பதை போன்றொரு
கனவில் ஆழ்ந்தாள்.
இனி
அவள் உடலெங்கும் துலிப்
பூக்கள் மலரும்.
அவள் மலர்வாள்.

2.
ஜன்னல் வழியே
உள்நுழைந்தவன்
தன்னை சாத்தானின் பிள்ளை
என்றபோது இரவு கவியத்துவங்கியிருந்தது.
படுக்கை அறையின்
ஒரு மூலையில் ஒடுங்கியிருந்தேன்.
என் கடவுளின் வெளியில்
கனவுகள் மரித்தன.
தொலைபேசியின் அலறலும்
பூனையின் கதறலும்
எவ்வித மாற்றத்தையும் கொண்டுவரவில்லை.
கால்களில் நடுவிலிருந்து
அறையெங்கும் பரவிய
குருதியின் நிறம் கருமை நிறத்திலிருந்தது.
இப்போது அவன்,
மெல்ல வெளியேறிக்கொண்டிருக்கிறான்.

3.
இந்த வலியை யாரிடம்
பகிர்ந்துகொள்வது?
தினம் மாலை தன் பேரனுடன்
வீட்டைக்கடக்கும் கிழவன்
என் வலியை புரிந்துகொள்ளப்போவதில்லை.
சாலையோரம் நிற்கும்
இந்த மரங்களிடமும்
தொலைவில் பொழியும்
மழையிடமும் நான்
இந்த வலியை பகிர்ந்துகொள்ளக்கூடும்.
பின்னொருநாள்
காலம் தின்ற பின்
மழையாக பொழிந்து
மரமாக என் வலிகள் அனைத்தும்
மீண்டும் துளிர்விடக்கூடும்.
ஜூலி!
அப்பொழுதாவது அந்த மரங்களின்
நிழலில் நின்று நீருற்ற
நீ சம்மதிக்கவேண்டும்!

-நிலாரசிகன்.

பின்குறிப்பு: இந்த மூன்று கவிதைகளின் தலைப்பில் சிறு மாற்றம்... "மொழி பெயர்ப்புக் கவிதைகள்  வடிவிலான கவிதைகள்" என்பதே அது :)

Tuesday, September 07, 2010

நீங்கள் இறந்து போவீர்கள்



1.
நீங்கள் இறந்து போவீர்கள்
என்று சொல்லித்திரிபவனை
சந்தித்தேன்.
தான் காணும் மனிதர்களிடம்
அவன் உதிர்க்கும் மூன்று வார்த்தைகள்
அவை மட்டுமே.
குரூரத்தின் உச்சம் இவனென்றார்கள்.
ஒரு பன்றியை பார்ப்பதுபோல்
அவனை பார்த்து நகர்ந்தார்கள்
எதைப்பற்றிய பிரக்ஞையுமின்றி
நீங்கள் இறந்து போவீர்கள்
என்று முகம் நோக்கி சொல்பவனை
நீங்களும் காணக்கூடும்
வழியிலோ
அல்லது
கண்ணாடியிலோ.


2.மரணித்தல்

நேற்று மரணித்தார்
நண்பர் ஒருவர்.
நான்கு மரணத்தை
ருசித்து வீழ்கிறது அருவி.
கடல் கொண்ட உயிர்கள்
சில.
இறகு உதிர்த்து சாலையோரம்
உயிரற்று கிடக்கிறது
பறவையொன்று
யார் யாருக்கோ
அறியாத காரணங்களுடன்
மரணம் நிகழ்கிறது.
எதற்கிந்த கவிதை எழுதும்
வேலை என்றொரு
கேள்வி எழுப்பப்பட்டது.
இப்போது
காரணமுடன் மரணிக்கிறேன்
நான்.
-நிலாரசிகன்.

குறும்பட போட்டி அறிவிப்பு

இனிய இணைய உறவுகளுக்கு...

குறும்பட போட்டி ஒன்றை அறிவித்திருக்கிறார்கள். விருப்பமுள்ளவர்கள்
இங்கு சென்று பதிவு செய்துகொள்ளலாம்.

வெற்றி பெற வாழ்த்துகள்.

Sunday, September 05, 2010

சிறுமிகள் நடமாடும் வனம்


 

1.சிறுமிகள் நடமாடும் வனம்


பறவைகளின் எச்சம்
மண் தொட இயலா
அடர்வனத்தில்
உலவுகிறார்கள் சிறுமிகள்.
அவர்களது பாதச்சுவடுகளில்
தேங்கி நிற்கும் நீரை
பருகி மகிழ்கின்றன விலங்குகள்.
இருள் நிறைந்த அவ்வனத்தில்
பொழிந்துகொண்டே இருக்கிறது
மழை.
எதற்கிந்த கனவென்றே
புரியாமல் கரைகிறது
இவ்விரவு.

2.எதிர்வினைகளால் நிரம்பியவள்

குளம் கடலாகும்.
கடல் துளியாகும்.
பறவை விலங்கினமாகும்.
விலங்கு பாம்பினமாகும்.
ழ் ல வாகும்.
காதலி தோழியாவாள்.
தோழி குரைக்கும் இனமாவாள்.
நீங்கள் நீயாகிப்போவீர்கள்.
நான் யாரோவாகிப்போவேன்.
அவள்,அவள் உலகம்.
இப்போது,
அவனும் நிரம்பிக்கிடக்கிறான்
மெளனத்தால்.
-நிலாரசிகன்.

Thursday, September 02, 2010

பூச்சரத்தில் கவிதை பூக்களை கோர்க்கும் சிறுவன்



பூச்சரம் தொடுக்க அழைத்த தோழி கீதாவிற்கு நன்றி.

1. வலைப் பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

நிலாரசிகன்.

2. அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை என்றால்
    பதிவில்  தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

உண்மையான பெயர் நிலாரசிகன் அல்ல. 2001ம் ஆண்டு இப்பெயரை தேர்வு செய்தேன். பெயர் வைக்க காரணம் நிலா. வான் நிலா மட்டுமே J


3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்தது பற்றி?
2004ல் நண்பன் ‘யோசிப்பவர்’ அறிமுகப்படுத்தியது வலைப்பதிவு. 2005லிருந்து எழுதிவருகிறேன். எழுத வந்த புதிதில் லக்கிலுக்,பாஸ்டன் பாலா,பினாத்தல் சுரேஷ்,பத்ரி,யோசிப்பவர்,பாலபாரதி,டோண்டு போன்றவர்களது வலைப்பதிவுகளை ஆர்வமுடன் வாசித்திருக்கிறேன்.

4. உங்கள் வலைப் பதிவை பிரபலமடையச் செய்ய என்னவெல்லாம்
   செய்தீர்கள்?
   
 என் வலைப்பதிவின் முதல் வாசகர்கள் என்னுடைய nilaraseegankavithaigal யாகூ குழுமத்தின் உறுப்பினர்கள்தான். இன்றைய விவரப்படி மொத்தம் 5211 உறுப்பினர்கள். இவர்களே வலைப்பதிவு செடியாக இருக்கும் தருணத்தில் நீருற்றியவர்கள். அதன் பிறகு கிடைத்த நட்புச்சொந்தங்கள் ஏராளம். பிரபலமடைய வேறெதுவும் செய்ததாக நினைவில்லை.


5. வலைப் பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து
    கொண்டதுண்டா?   ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன?
    இல்லை என்றால் ஏன்?
இல்லை. விருப்பமில்லை. வலைப்பதிவு என் படைப்புகளுக்கான தளம் மட்டுமே.


6. நீங்கள் பொழுது போக்கிற்காக பதிவுகளை எழுதுகிறீர்களா?
   அல்லது பதிவுகள்  மூலம் சம்பாதிப்பதற்காகவா?

இரண்டும் அல்ல. மனதின் விளிம்புச்சுவரில் மோதும் கவிதை வரிகள் நிரந்தரமாக தங்குமிடம் என் வலைப்பதிவு.

7. நீங்கள் எத்தனை வலைப் பதிவிற்கு சொந்தக்காரர்?
   அதில் எத்தனை தமிழ் வலைப்  பதிவு?

இரண்டு. இரண்டும் தமிழ். ஆங்கிலத்தில் ஒன்று ஆரம்பித்தேன் அதன் கடவுச்சொல் மறந்துவிட்டதால் நின்றுபோனது.


8. மற்ற பதிவர்கள் மேல் கோபம், அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா?
   ஆமாம்  என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

ஆம். அதிக கோபம் கொண்டது ஒரு பதிவர் மீது.மிகச்சிறந்த கவிதைகளை எழுதிய பதிவர் அவர். முட்டாள்த்தனங்கள் ஆட்கொண்டதால் அந்த கவிதை வலைப்பூவை அழித்துப்போனவர்.அவருக்கு புனைப்பெயரும் வைத்து இணைய உலகையும் அறிமுகப்படுத்தியவன் என்கிற வகையில் அவர் மீது கடும் கோபம் இன்றுமுண்டு.
 யாரந்த பதிவர் என்கிற கேள்விக்கு விடையளிக்க இயலாமைக்கு வருந்துகிறேன்.

9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை பாராட்டிய மனிதர் யார்?
   அவரைப் பற்றி, அந்த பாராட்டை பற்றி?

மாதவன். அத்தி பூக்கும் தருணம் மட்டுமே பாராட்டும் குணம் கொண்டவன்.நண்பன்.

10. கடைசியாக- விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய
     வேண்டியது அனைத்தையும் கூறுங்கள்.
கூற ஒன்றுமில்லை என் படைப்புகளை தவிர. அவை என் தளத்திற்கு வரும் அன்பர்களுடன் உரையாடட்டும்.
     பூச்சரத்தில்  மேலும்  வாசம் சேர்க்க நான் அழைப்பது நண்பன் விழியன்.