Thursday, January 26, 2023

கவிதைகள் ஏழு



1.

ஒத்தையடிப் பாதையின்

முதல் தடத்தில் 

மரித்துப் போன புற்கள்

அதனைக் காலம் காலமாய்

தேடித் தேடி 

உடல் தேயும் 

ஒத்தையடிப்பாதை.


2.

தவற விட்ட தேநீர் கோப்பை

சப்தமின்றி உடைகிறது

அதன்

நிசப்தத்தின் கணத்திற்குள்

ஆயிரமாயிரம் கனத்த சப்தங்கள்.


3.

பழுத்த இலையிடம்

எவ்வளவு நேரம் 

பேசிக்கொண்டிருப்பாய்?

பழுத்தல் என்னிலிருந்து

உதிரும் வரை.


4.

விபத்தொன்றில் கரம் இழந்தவள்

வெகு நேரம் துள்ளலாக

பேசிக்கொண்டிருந்தாள்

கரமிருந்த இடத்திற்கு 

பார்வை நகரும் வரை.


5.

பறவைகள் இரண்டு வகை

ஒன்று

உள்ளுக்குள் பறப்பது

மற்றொன்று

எச்சிலிட்டு படபடப்பது 

தெரியுமா என்கிறாள்

முடிவிலிப் பறவையை

ஒளித்துவைத்துவிட்டு

ம்

என்றேன்.




6.

ஆந்தை போல் 

அலறு அல்லது

மிருதுவான சிறிய மிருகம்போல

நாவைச் சுழற்று

இரண்டும் இல்லாவிடில்

வாழை மரத்தில் சிக்கிய

மரங்கொத்தியின் அலகு போல்

அசையாதிரு என்பவனை

ஓநாய் என்றே விளித்தாள்.


7.

தொட்டிச்செடியை மட்டுமே

காண முடியும்

அந்த வளர்ப்பு மீனுக்கு.

அதுவே அதனுலகு

அதுவே அதன் இணை மீன்

அதுவே அதன் துயரங்களின் 

உயிர் வடிவம்

செடியில் மலர்ந்த 

முதல் மலரொன்றை 

கவ்வி இழுத்து நீருக்குள் 

ஆழ்த்திக் கொன்றது

வளர்ப்பு மீனை மட்டுமே

காண முடியும்

தொட்டிச் செடிக்கு. 

குடுவை மீது

சாய்ந்தெழுந்து இரண்டாம் முறை

மலர்ந்தது.


-ராஜேஷ் வைரபாண்டியன்

26-01-2023