Wednesday, August 16, 2006

செஞ்சோலை செல்லங்களுக்கு....

என்ன குற்றம் செய்தன
அந்த அறுபத்தி ஒன்று
பச்சிளம் குழந்தைகள்?


தாய்மொழி தமிழென்பது
குற்றமா?

இலங்கையில் பிறந்தது
குற்றமா?

பெற்றவர்களை இழந்தது
குற்றமா?

செஞ்சோலையில் வசித்தது
குற்றமா?

தாலாட்ட அன்னையில்லை
அறிவூட்ட தந்தையில்லை
சொந்தம் என்று எவரும்
இல்லை....
அதனால் கொன்று போட்டாலும்
கேட்பார் யாருமில்லை என்று
இந்த தண்டனையா?


அடே பிரம்மனே..

படைப்பின் இறைவனே
நெஞ்சில் ஈரமில்லாத,
உடலில் முதுகெலும்பில்லாத,
மனிதர்களை ஏனடா
படைத்தாய்?

அடே எமதர்மா!

எங்கள் பிள்ளைச்செடிகளை
வேரோடு சாய்த்த
மனிதக்கோடரிகள் மீது
எப்போது
உன் பாசக்கயிற்றை
வீசப்போகிறாய்?


இறைவா...

பூவியில் நரகத்தை
மட்டுமே கொடுத்த
எங்கள் செஞ்சோலை பிஞ்சுகளுக்கு
விண்ணிலாவது
சொர்க்கத்தைக் கொடு.


இனவெறி கொண்டவனே!

உனக்கு மட்டும்
இதயம் என்ன
கல்லாகவா இருக்கிறது?

உன் போன்றவர்களால்....

மனித இனத்தில்
பிறந்ததற்காக
முதல் முறையாக
வெட்கப்படுகிறேன்.


வேதனையுடன்,
நிலாரசிகன்.

Tuesday, August 15, 2006

சுதந்திரம்....

இரு நூறு
வருடம் ஆட்சி
செய்தவனிடமிருந்து
பெற்றுத் தர
முடிந்தது ஒரு
கிழவனால்...

ஐம்பத்தொன்பது
வருடம் ஆட்சி
செய்பவனிடமிருந்து
பெற முடியவில்லை
நம் இளைஞர்களால்...

-----------------------------------------------

இந்தியாவிற்கு
1947ல்...

தூயத் தமிழ்
பேசும்
தமிழர்களுக்கு?

------------------------------------------------

Monday, August 14, 2006

தேவதைத் தோட்டம்...

அன்பானவர்களே..

எனது கவிதைகளை நிலாச்சாரல்
இணைய தளம் E-bookக்காக வெளியிட்டுள்ளது.
தேவதைத் தோட்டம் என்கிற பெயரில்...

http://www.nilashop.com/product_info.php?cPath=64&products_id=448

இங்கு சென்று 1.99$ செலுத்தி பெற்றுக் கொள்ள விரும்பும்
அன்பர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

நட்புடன்,
நிலாரசிகன்.

Saturday, August 12, 2006

ரிங்கா ரிங்கா ரோசஸ்...



இடது கையில்
ஒரு தோழனையும்
வலது கையில்
ஒரு தோழியையும்
பிடித்துக் கொண்டு
வட்டமடித்து வேகமாய்
சுற்றிவந்து விளையாடி
மகிழ்ந்த நாட்களையெல்லாம்
நினைத்து பார்க்ககூட விடாமல்
செய்கிறது இந்த அவசர
வாழ்க்கை.

Thursday, August 10, 2006

எங்க ஊரு பொழப்பு....

ஏலே முத்துப்பாண்டி!

ஊருக்குள்ள பணக்கார
பெருசு ஒண்ணு உசிர
விட்டுருச்சாம்

நம்ம பயலுகள
கூட்டியாடா!

கறிச்சோறு போடுவாக
காப்பித்தண்ணி ஊத்துவாக

பாடையில போகையில சில்லரை
அள்ளி எறிவாக...

சீக்கிரம் கூட்டியாடா...

இழவு வீட்டுலயாவது
நம்ம அரை வயிறு
முழுசா நிறையட்டும்...

கஞ்சி குடிக்க இழவு
வீடு தேடுற நம்ம
பொழப்பு நம்மோட
போகட்டும்...