Monday, December 26, 2005

சுனாமி கவிதை...

(சுனாமி பேரலையில் தன் பேரனை பலி கொடுக்கிறாள் ஏழை
மூதாட்டி ஒருவள்...



அவனை இழந்து ஒரு வருடம் கழித்து அவனது கல்லறையில்
அவள் உதிர்க்கும் கண்ணீர்த்துளிகளை கவிதையாய் மொழிபெயர்த்திருக்கிறேன்.)







பிரசவத்தோடு ஆத்தா போக
கட்டினவ நினப்போடு அப்பன் போக
அறுவது வயசுல எங்கையில்
வந்து விழுந்த மரிக்கொழுந்தே!

மகன் வயித்து பேரன்
உன்ன
மகனப்போல வளர்த்து
வந்தேன்.

கடலக் காமிச்சு
அம்மா இவ கும்பிட்டுக்கன்னு
சொல்லி வந்தேன்.

நர விழுந்த கிழடு
கட்டைகள விழுங்காம
கரயோடு வெளயாண்ட
புள்ள உன்ன
நுரகொண்டு
போயிடுச்சே!

தரயில மீனப்போட்டா
செத்துப்போகுமேன்னு
நா(ன்) யாவாரத்துக்கு
புடிச்சி வந்த மீன
கடல்ல கொண்டு போடுவியே
எந்தங்க மகராசா
இப்ப எந்த மீனு
வயித்துக்குள்ள இருக்கியோ
தெரியலயே!


கடலம்மா..
அரசாங்கம் தந்த காசெல்லாம்
கடல்ல தூக்கி போடுறேனம்மா..
காச எடுத்துக்கிட்டு
எம் பேரன கொடுத்திடம்மா!


நீ வளர்க்கும் மீனெல்லாம்
நா(ன்) புடிச்சிப் போறேன்னு
நா வளர்த்த எம் பேரன
பிடிச்சுப் போயிட்டியா தாயே!


அலையோடு போன
பேரப் புள்ளய நாந்தேடி
திரிஞ்ச நாளுல,

அப்பனாத்தா இல்லாம
அழுத ஒரு ஒத்தப் பிள்ள
இப்போ என் கூரவீட்டு
தொட்டில்ல சத்தமில்லாம
உறங்கி கிடக்கு.

குலமே அழிஞ்ச பின்னால
இந்தக் கிழவி உசுர
அந்தப் பச்சப்புள்ள சிரிப்பு
இழுத்துப் பிடிச்சிருக்கு.

மண்ணுக்குள்ள பேரன
பொதச்சுட்டு,
நெஞ்சுக்குள்ள புதுப்புள்ளய
நினைச்சுக்கிட்டு
தள்ளாடி நான் போறேன்
வீடு நோக்கி.


கலங்கிய இதயத்துடன்,
நிலாரசிகன்.

Thursday, December 01, 2005

என் நினைவோடையில் நீந்துகின்ற மீன்கள்..

2. அண்ணன்.

என் உடன் பிறந்தவன். பிறப்பால் அண்ணன்.
கவிதையால் குரு.

என் பாதையெல்லாம் பூக்கள் மலர, முட்கள் மிதித்துச் சென்றவன்.

தான் விரும்பியதெல்லாம் தன் தம்பி எனக்கு
கிடைக்க வழிசெய்தவன்.

பாசமானவனே! உன்னைப் பற்றி எழுதுவதற்கு
காரணம் என் மீதான உன் பாசம் மட்டுமல்ல.

ஒரு கிராமத்துச் சிறுவன் எந்த ஒரு பந்தங்களின்
ஏணிகளும் இல்லாமல் சிகரம் தொட்ட கதை இந்த உலகிற்கு சொல்லவே உன்னைப் பற்றி அதிகம் எழுத விரும்புகிறேன்.

நம் கிராமத்தில் கணிப்பொறி படித்த முதல் மாணவன் நீ.

இளநிலை முடித்து சென்னையில் முதுகலை படிக்க
வந்த முதல் கிராமத்துப்பறவை நீ.

சென்னை என்றாலே புருவம் உயர்த்தும் நம்மூர் மக்களுக்கு அமெரிக்கா சென்று வந்து
வியப்பில் ஆழ்த்தியவன் நீ.

இவையெல்லாம் ஒரே நாளில் நடந்து விட வில்லை.

இதற்குப்பின் உன் உழைப்பும்,அவமானங்களை மாற்றி
வெகுமானங்கள் வாங்கிய உன் தன்மானமும் உண்டு என்பதை சிறியவன் நான் சத்தமாகச் சொல்லுவேன்.
உனக்குத் தெரியாமலேயே நீ என்னவெல்லாம் மாற்றம் கொண்டு வந்தாய் என்று பட்டியலிடவா?

கோலிகுண்டு விளையாட அழைக்கும் தோழர்களுக்கு
சதுரங்கம் விளையாட கற்றுத் தந்து அவர்களின் சிந்தனைச்சிறகுகள் விரியச்செய்தாய்.

உன் மனதை சாந்தப்படுத்திய தியானத்தை உன்
தோழர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து வெட்டிப்பேச்சினால் வாழ்ந்து கொண்டிருந்தவர்களுக்கு மெளனத்தின் புனிதம் கற்று
அவர்களை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தாய்.

உன் முன்னேற்றம் கண்டு ஒவ்வொருவருக்குள்ளும்
ஒரு தீப்பொறி கிளம்பியதை நானறிவேன்.

முயற்சித்தவன் தோற்றதில்லை என்பதை உன் மூலம்தான் நான் கற்றுக் கொண்டேன்.


எனக்கு வாசிக்கும் பழக்கத்தை கற்றுத் தந்தவனும் நீயே!

கவிதை வாசத்தை காட்டித் தந்தவனும் நீயே!

நீ படித்துப் போட்ட "சிறுவர்மலர்" நான் வாசித்த முதல் பாடபுத்தகமில்லாத புத்தகம்.

அதன் பிறகு சிறுவர்மலர் வந்தால் என் வாசிப்புக்கு பின்பே உன்னை வந்தடையும்...

நாட்கள் நகர நகர சிறுவன் நான் வளர்ந்து
பன்னிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு பொழுது
போகாமல் உன் அனுமதியின்றி உன் பெட்டியில் கிடந்த சில நாட்குறிப்புகளை படிக்க எடுக்கிறேன்.

அந்த நாள் இன்றும் என் நினைவில் பூத்து நிற்கிறது.

நம் வீட்டு மொட்டைமாடியில் கொய்யா மர நிழலில்
யாருக்கும் தெரியாமல் உன் நாட்குறிப்புகள் சிலவற்றை எடுத்து வந்து படிக்கத் துவங்குகிறேன்....

"அடுத்தவர் டைரியை அனுமதியின்றி படிப்பது மனச்சட்டப்படி குற்றம்" என்கிற உன் வாசகத்தையும்
மீறி அன்று உன் நாட்குறிப்புக்குள் என் விழிகளால் நடக்க ஆரம்பிக்கிறேன்.

அன்று என்னுள் ஏற்பட்ட மாற்றம்...

முதல் முதலில் காதலியின் உதடுகளால் "உன்னை நான் நேசிக்கிறேன்" என்று கேட்கையில் உடல் புல்லரித்துப் போகுமே அதை விட ஆயிரம் மடங்கு
ஆனந்த வெள்ளத்தில் தத்தளித்தேன்.

அன்றுதான் உன் கவிதைகளை முதல்முதலில் படித்தேன்.

உனக்கு இவ்வளவு அற்புதமான தமிழாற்றல் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டதும் அன்றுதான்.

அதுவரை எனக்கு அண்ணனாய் இருந்தவன் அன்றுதான் ஆசானாய் உயர்ந்தாய்!



எனக்குள் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கியது ,உனக்குத் தெரியாமலேயே நீ எனக்கு அறிமுகம் செய்து வைத்த என்னுடைய மற்றொரு முகம்-- கவிதை!


அதன்பின்பு நீ சேமித்த வைத்திருந்த கவிதைப் புத்தகங்கள் இன்றி நான் உண்டதில்லை,உறங்கியதில்லை...

இன்று என் பேனாவில் வழிகின்ற வார்த்தைகள் கவிதை நதியாய் மாறுவதற்கு நதிமூலமானவன் நீ.



உன்னிடம் கேட்க நினைத்த சில கேள்விகளை

இன்று கேட்கிறேன்...


ஆழ்கடலில் கிடக்கின்ற விலைமதிப்பில்லாத முத்துக்கள் மாதிரி வெளியில் தெரியாமல் கவிதை
நோட்டில் உன் கவிதைமலர்கள் ஓய்வெடுக்கும் காரணம் என்ன?


வாழ்க்கை உன் மீது சுமத்திய கடமைகளை நீ சுமந்து நடந்ததில் நசுங்கிப்போயினவோ உன்
கவிப்பூக்கள்?

உன் உணர்வுகளை இந்தச் சமூகம் புரிந்து கொள்ளாமல் காயப்படுத்திவிடும் என்கிற தவிப்பினால் நிறுத்திவிட்டாயோ கவிதையுடனான உன் பந்தத்தை?

இந்தக் கேள்விகளுக்கு என்னால் விடையளிக்க ஒரே ஒரு வகையில் முடியும் அண்ணா.

கவிதை நோட்டில் உறங்குகின்ற உன் கவிதைகளை
அச்சில் ஏற்றி உலகிற்கு நான் அறிமுகம் செய்து வைப்பேன்.

அதன்பின்...

இந்தச் சமூகம் பூக்கள் தூவினால் உன் மீது
தூவ செய்வேன். முட்கள் எறிந்தால் உன் கேடயமாக நான் மாறுவேன்.

எனக்கு நிழல் தருகின்ற மரமாய் நீ இருக்கிறாய்.
உனக்கு மழை தருகின்ற மேகமாய் நானிருப்பேன் என்கிற அசைக்கமுடியாத நம்பிக்கையில்....

நன்றியுடன்+பாசமுடன்,
உன் தம்பி.

நிலாரசிகன்.