Tuesday, October 30, 2007

தவிப்புடன் ஒரு பாடல்...



முன்பாடல் சுருக்கம்:

காதலனை பிரிந்த ஒரு காதலி தவிப்புடன் பாடுகின்ற பாடலாய்
என் வரிகள்....


(ஒருநாள் பின்னிரவில் நான் விழித்திருந்தேன் உன் பிரிவால்
உள்ளம் தவித்திருந்தேன்..

ஜன்னலோர இரவுமழையில் நான் நனைந்திருந்தேன் உன் நினைவால்
என்னை மறந்திருந்தேன்..)


உன் காதல்பெற்ற மறுநொடி உயரப்பறந்தேன் உன்காதல் இழந்த
மறுநொடி சிறகிழந்து விழுந்தேன்

சிறகிழந்த பறவை நான் வாட, இறகென்றே என் காதலை
உதிர்த்து பறந்தாய் நீ

என்னைத் தேடி நீ வருவாய் என்றே காத்திருந்தேன், மண்ணைத்தேடி
வர மறந்த மழையாய் நீ

உன்னைத் தேடித் தேடி கால்கள் காணாமல் போனதே கண்கள் இரண்டும்
சகாராவானதே..

(ஒருநாள் பின்னிரவில் நான் விழித்திருந்தேன் உன் பிரிவால்
உள்ளம் தவித்திருந்தேன்..

ஜன்னலோர இரவுமழையில் நான் நனைந்திருந்தேன் உன் நினைவால்
என்னை மறந்திருந்தேன்..)


காரணங்கள் இன்றி பிரிவும் இல்லை
ரணங்கள் இன்றி காதலும் இல்லை

சோகங்கள் இன்றி காவியம் இல்லை
மேகங்கள் இன்றி வானமும் இல்லை

வாசல் தேடி நீ வரும் நாள் வாழ்க்கையற்று போவேனோ?
காதல் தேடி நீ வரும் நேரம் கற்சிலையாய் மாறிடுவேனோ?

வரம் கேட்ட என் நெஞ்சுக்கு வரமென்ன பிரிதலா?
புறம் சென்ற உன் நெஞ்சுக்கு ஈரமில்லை ஏனடா?

(ஒருநாள் பின்னிரவில் நான் விழித்திருந்தேன் உன் பிரிவால்
உள்ளம் தவித்திருந்தேன்..

ஜன்னலோர இரவுமழையில் நான் நனைந்திருந்தேன் உன் நினைவால்
என்னை மறந்திருந்தேன்..)

என் மெளனம் தின்றே உயிர்வாழ்கிறாய், உன் மெளனம்
கண்டே உயிர்வேகிறேன்...

கனவில் கூட நீ என்னை பிரிவதேன்? கவிதையில் கண்ணீராய நான்
கரைவதேன்?

ஏதோ ஒரு நம்பிக்கை எனக்குள் எப்போதும் தளிர்த்திருக்கும் மழை
காணும் ஆவலில் இந்தப்பூ எப்போதும் விழித்திருக்கும்..

Saturday, October 27, 2007

சக்களத்தி மக...




பொன்னாத்தாவுக்கு
கிறுக்கு முத்திப்போச்சு..

தெருவுல யாரக்கண்டாலும்
வெத்தலவாயால வையுது...

பொட்டிக்கட கந்தசாமி
சம்சாரம்தான் பொன்னாத்தா.

ரெண்டுநாளா உள்ளுக்குள்ள
பொகஞ்சது இன்னைக்கு
ஊரெல்லாம் பொகையுது..

ஊரெல்லாம் பஞ்சத்துல
தவிச்சப்போ வெளியூருக்கு
வேலைக்கு போனாரு
கந்தசாமி

போன இடத்துல பொன்னாத்தாவுக்கு
தெரியாம சோடிசேர்ந்து
வாழ்ந்துபுட்டாரு

பதினாறு வருசத்துக்கு
முன்னால நடந்த கத அது!

சக்களத்தி வீட்டு நாயிக்கு
இங்கென்ன வேலன்னு
வையுறா பொன்னாத்தா

குடியிருக்க குடுச இல்ல
அரவயித்துக்கு கஞ்சியும் இல்ல

ஆளுசரத்துக்கு வந்து
நிக்கா சக்களத்தி மக.

கால்ல விழுந்து பாத்தாரு
கையப்புடிச்சி கதறி பாத்தாரு

நல்லபாம்ப மிதிச்சே கொல்லற
பொன்னாத்தாவுக்கு
கோழிவந்தாலும் ஒதுங்கி போற
புள்ளபூச்சி கந்தசாமி எம்மாத்திரம்?

நாளைக்கு காலையில
பஞ்சாயத்து;

கால்சட்ட போடாத சிறுசும்
வரும்
கோவணத்தோட பெருசும்
வரும்
சாகப்போற கிழடுகளும்
வரும்

பஞ்சாயத்த நெனச்சுக்கிட்டே
பஞ்சாரத்து கோழிக்குஞ்சு
மாதிரி அடஞ்சு கெடக்கா
சக்களத்தி மக.

ஆயிரந்தான் இருந்தாலும்
அப்பன கேவலபடுறத
பார்க்க பிடிக்கல அவளுக்கு.

விடியக்கால ரெயில
புடிச்சி வடக்க போயிட்டா.

அவ சாயல்ல ஒருத்திய
பம்பாயில
படுக்கையில பார்த்ததா
தெக்குத்தெரு முனியசாமி
சொல்லிட்டு போறான்.

தப்பான பொறப்புன்னா
தப்பாத்தான் போகனும்னு
சாபம் ஏதும் இருக்கா?

Wednesday, October 24, 2007

ரோஜாப்பூக்கள் கவிதைகள்...




1. ரோஜாப்பூக்கள்
உனக்குப் பிடிக்குமென்று
தெரிந்தும் மல்லிகைப்பூக்கள்
மட்டும் வாங்கிவருகிறேன்..

ஆசையுடன் பிரித்துப் பார்த்துவிட்டு
ரோஜாக்கள் எங்கே என்று
பார்வையால் கேட்கிறாய் நீ..

உலகின் மிக அழகிய
ரோஜாக்கள் இவைதான்
என்று சொல்லி
உன் கன்னம் கிள்ளுகிறேன்..

வெட்கத்தில் பூத்து நிற்கிறாய்
ரோஜாவாய்.

2. உன் கண்பொத்தி
பால்கனி அழைத்துச்செல்கிறேன்
மெதுவாய் என் விரல்நகர்த்தி
பார்க்கிறாய்..

நீ வளர்த்த ரோஜாசெடியில்
சின்னதாய் ஒரு மொட்டைக்
கண்டு சிலிர்க்கிறாய்...

மொட்டைக் கண்டு
மலர்கின்ற ரோஜா
நீயென்று உன்னை
அள்ளிக்கொள்கிறேன்
நான்.

3. பனித்துளிகள்
சுமந்து நிற்கும் ஒரு
ரோஜாவை உனக்கென
கொய்து வந்து
பனித்துளிக்குள் உன்
முகம் காண்பிக்கிறேன்...

குழந்தையென அதில்
உன்னைக் காண்கிறாய்

குழந்தையாகிறோம்
நாம்.

4.

அழகிய புடவையொன்றில்
என் முன் நின்று
எப்படி இருக்கிறேன் என்கிறாய்
நீ.

உன் கூந்தலில் ஒரு
ஒற்றை ரோஜாவை சூடி
விட்டு
நம் காதல்செடியில்
ரோஜா மலர்ந்திருக்கிறது
என்கிறேன்
நான்.

பவித்திரமானதொரு புன்னகையை
சிந்துகிறாய் தரையெங்கும்
மல்லிகைபூக்கள் சிதறுகின்றன...

5. நீ ஆசையாய்
வளர்த்த சிறுரோஜாசெடி
வாடிப்போனது..

துடித்துப்போனாய்
நீ.

உனக்கென புதிதாய்
ஒரு செடி வாங்கி வந்தேன்

சட்டென்று பூத்து
சிரிக்கிறாய்
செடி கண்டவுடன்.

உன் மெல்லிய மனம்
கண்டு,

நீ பெண்ணா இல்லை
பூவா
என்று புரியாமல்
தவிக்க ஆரம்பிக்கிறேன்
நான்.

உயிரிலே கலந்தவள்...




அதிகாலை எனை எழுப்ப
எனக்குப் பிடித்த பாடலை
காதோரம் பாடியபடி
என் தலைகோதுவாயே
அதைவிடவும்...

பிறந்தநாள் பரிசு
என்னவென்று ஆர்வமுடன்
நீ என்விழி நோக்க,
உன் நெற்றியில் ஒற்றைமுத்தம்தந்து
நான் உன்விழி நோக்க,
வெட்கத்தில் என் மார்பில்
புதைந்துகொண்டாயே
அதைவிடவும்...

என் உயிரை நீ
சுமந்தபோது இந்தப்பாதங்கள்
நடக்கவேண்டியது மண்மீது
அல்ல மலர்கள் மீது என்று
அறைமுழுவதும் மல்லிகைப்பூக்களை
பரப்பியிருந்ததைக் கண்டு
ஆனந்த அதிர்ச்சியில் அழுது
என் தோள்சேர்ந்தாயே
அதைவிடவும்...

பலநாட்கள் நம்மை
பிரித்த வெளிநாடு
பயணம் முடிந்து
வீடு வந்தவுடன் ஓடிவந்து
அணைத்துக்கொள்ளாமல்
உன்
மடிசாய்த்து தாலாட்டு பாடினாயே
அன்றுதான் உணர்ந்தேன்
என் தாயுமானவள் நீ என்று.

Monday, October 22, 2007

உயிரிலே கலந்தவன்...



அதிகாலை எழ எத்தனிக்கும்
என்னை உனக்குள் இழுத்து
உயிர்மலர செய்வாயே
அதைவிடவும்...

அரைநாள் தொலைபேசியில்
பேசிவிட்டு வைத்த மறுநொடி
மீண்டும் அழைத்து
குரல்ரசிக்கும் அழைப்பிது
என்று செல்லமாய் துண்டிப்பாயே
அதைவிடவும்...

பெண்மையின் வலியுணரும்
நாட்களில் எனக்கு
முன்விழித்து சூடான
தேனீர் தந்து நெற்றிமுத்தமிடுவாயே
அதைவிடவும்...

குழந்தை பிறந்தவுடன்
வெளியூரிலிருந்து ஓடிவந்து
குழந்தை பார்க்காமல்
என் கன்னம்தொட்டு ஒரு
நேசப்பார்வை பார்த்தாயே..
அன்றுதான் உணர்ந்தேன்
தாயுமானவன் நீ என்று.

Friday, October 19, 2007

உதிர்வதில்லை உதிரப்பூ




மெதுவாய் மிக மெதுவாய்
அங்கும் இங்குமாய்
அசைந்தபடி காற்றில் மிதந்து
பூமி நோக்கி வருகிறது காய்ந்த
பூவொன்று....

புழுதிக்காற்று வந்து வாசமென்னும்
கற்பை பறித்தது எண்ணி
வீழ்கிறதா இந்தப் பூ?

மகரந்தம் முழுவதையும்
கந்தகம் மறைத்துக்கொண்ட
சோகம் எண்ணி
வீழ்கிறதா இந்தப் பூ?

மரணத்தை அழைப்பிதழாக
அனுப்பிய இந்த பூமியை
பழித்துக்கொண்டே
வீழ்கிறதா இந்தப் பூ?

விழுந்தாலும் புன்னகை
செய்துகொண்டே வீழ்கின்ற
பூ சொல்லிற்று உலகிற்கு
ஓர் நற்செய்தி..
விழுவது நானாகிலும்
எழுவது ஈழமென்று!

மழைபோல் வந்தவளே

முன்பாடல் சுருக்கம்:

மனசுக்குள் காதல் பூத்திருந்தும், இதழ் திறந்து சொல்ல தைரியமில்லை இருவருக்கும். அவர்களின் மனம்பாடும் பாடல் இது.


ஆண்:

மழைபோல் வந்தவளே என் மனசெல்லாம் பூத்தவளே
அலைபோல் வந்தவளே என் இதயக்கடலில் முத்தானவளே

உந்தன் பூவிழி கண்ட அன்று என் தாய்மொழிகூட தடுமாறியதே
உந்தன் தேன்மொழி கேட்கும் அன்று என் தாய்மொழி காதலாகுமே!

காதலின் வலிக்கு மருந்தாக நீ வேண்டுமடி
காலமெல்லாம் பிள்ளையாக நான் மாற, வேண்டுமே உன் மடி!

பெண்:

பூவை என்னை பூவாக மாற்றிய வசீகரன் நீயடா
தேவை உந்தன் பார்வை என்றே இதயம் துடிக்கிறதடா

உன்னை எண்ணி காதலென்னும் இலக்கியம் எழுதுகிறேன்
உன்னைக் காணும்போதெல்லாம் வெட்கத்தில் ஊமையாக மாறுகின்றேன்

என் இதழ் திறக்கும் முன்னே உன் காதல் சொல்வாயா?
காற்றில் உன் காதல்கலந்து என் இதயம் நுழைவாயா?

ஆண்:

நிலா பார்க்கும் பொழுதெல்லாம் நெஞ்சில் உன் முகம்
உலா போகும் தென்றலும் உன்பெயர் சொல்லிப் போகும்

நீ இல்லாத வாழ்க்கை மழை இல்லாத பூமியடி
இதழ்திறந்து வார்த்தையொன்று சொல் மழையாவேன் நானடி..

பெண்:

இரவுக்கு இரக்கமில்லை இதழுக்கு ஈரமில்லை
கண்ணுக்கு உறக்கமில்லை கவிதைக்கு வார்த்தையில்லை

கனவெல்லாம் உன்னோடு கைகோர்த்து நடக்கின்றேன்
நினவெல்லாம் உன் நினைவோடு தனியுலகில் வசிக்கின்றேன்

சம்யுக்தை நானாகிவிட்டேன் புரவியேறி வருவாயா?
புரவியற்று வந்தாலும் உன் விரல்பற்றி நடப்பேன் ஓடோடிவருவாயா!

Friday, October 12, 2007

திசைகள்


இருள்கவியும் பொழுதொன்றின்
எதிர்பாரா சந்திப்பில் திகைக்கின்றன
நம் கண்கள்...

தனித்திருந்து
நிறமிழந்துவிட்ட
இரவொன்றை உள்ளுக்குள் சுமந்தபடி
எதிரெதிர் திசைகளில்
நடக்கத்துவங்குகிறோம்
நாம்

Wednesday, October 10, 2007

நிலாநேசம்




இரவின் வெளிச்சத்தை
ரசிக்க உன்னை
அழைக்கிறேன்.

இரவல் வெளிச்சமது
என்று விஞ்ஞானம்
பேசுகிறாய்.

ரசனைக்கும் நிதர்சனத்திற்கும்
இடையே பெருவெளியொன்று
உருவாகி மெளனமாய்
நம்மிடையே வந்தமர்கிறது.

மெளனம் கலைக்க
போராடி தோற்கிறேன்
எதிர்பார்ப்புகளற்ற பார்வையொன்றை
பரிசாகத் தருகிறாய்

நமக்கு தூதாக இயலாமல்
போனதற்காக வருந்தி
கரையத் துவங்குகிறது
நிலா.