Tuesday, April 28, 2009

காந்திய வழி:

நண்பர்களே,
எனக்கு வந்த மின்னஞ்சலை இணைத்திருக்கிறேன்.

http://votefortruth.in

Desia Paadhukaappu Kazhagam, a political party registered in 1996 is for
the first time contesting in forthcoming parliamentary elections under
the leadership of Mr. V. Kalyanam, Personal Secretary to Mahatma Gandhi
with the objective of resurrecting the Gandhian values in the Indian
Polity.

We are responsible for bringing about several reforms in the Electoral
system, among them being.

1. Frank and full disclosure of assets of contesting candidates 2.
Disclosure of criminal proceedings launched against them and 3. Live
Broadcast of proceedings in the Parliament (both houses) and State
Assemblies.

2 Nominations in total has already been filed with Election Commission
and the candidates are contesting only from South Chennai & Central
Chennai constituency.

For more details about the party, their manifesto and the name of the
contesting candidate in the south chennai constitueny, I would request
you all to visit the officialy launched website http://votefortruth.in
and vote for the party.

Though being late in campaigning, party wing and its contesting
candidate has already found enormous support with south chennai
constituency voters and making every attempt to win this election.

Last but not the least, request you all to cascade this message to all
your known circles who are falling under south chennai & central chennai
constituencies and strongly vouch for vote and support in favour of
Desia Paadhukaappu Kazhagam.

In days to come, you would foresee message being sent in various means
to reach out to people and seek for votes.

Let us ink our hands in favor of Desia Paadhukaappu Kazhagam and support
them in every way we can to win this election.

அவள் அமைதியாக போய்க்கொண்டிருக்கிறாள்..




வெப்ப‌த்தின் மிகுதியில்
ஒவ்வொரு இத‌ழாக‌
உதிர்ந்து
சாம்பல் குவிய‌லான‌து
என்னுட‌ல்.
நீல‌ நிற‌ பூக்க‌ள்
சில‌வ‌ற்றை
குவிய‌ல்மீது வைத்து
திரும்பி செல்கிறாய்
வீழ்ந்த‌ சாம்ப‌ல்
காற்றில் கரைந்து
ம‌றைகிற‌து.
எவ்வித மாற்றங்களுமின்றி
உன்னுல‌கில் இப்போதும்
பெய்துகொண்டிருக்கிறது அதே மழை.

Saturday, April 25, 2009

அறிவியல் புனைவுக்கவிதைகள் - பாகம் 2



1. நாளை பதில்
சொல்கிறேன் என்று
சொல்லிச்சென்றாள்.
நாளைக்குள் நுழைந்து
காயத்தோடு
மீண்டு வந்தேன்
இன்றைக்குள்.

2.பூமி மீண்டும்
மனிதர்களின் கைகளுக்குள்
வந்தது.
பாதாள அறைகளைவிட்டு
வெளியேறினர்
மக்கள்.
எங்கும் நிசப்தம்
நிலவ துவங்கிய
நாளொன்றின் அந்தியில்
இயந்திரக் குப்பைகளை
பொறுக்கிக் கொண்டிருந்தான்
வயிறு ஒட்டிய
சிறுவன்.

Thursday, April 23, 2009

வால் பாண்டி சரித்திரம் - நாவல்

நண்பர்களுக்கு வணக்கம்,

சில மாதங்களுக்கு முன் நானெழுதிய சிறுகதை "வால் பாண்டி சரித்திரம்".
எழுதி முடித்த பின்னும் எழுதாமல் விடுபட்டவை நிறைய என்று தோன்றிக்கொண்டே இருந்தது. அதன் நீட்சி இப்போது நாவலாக உருப்பெற்றிருக்கிறது.

கீற்று இணைய தளத்தில் வாராவாரம் வெளிவரும். படித்து உங்களது பின்னுட்டங்களை
இடுங்கள்.


பாகம் 1 இங்கே படிக்கலாம்:
http://www.keetru.com/literature/serial/vaalpandisarithiram.php

Saturday, April 18, 2009

"வார்த்தை" யில் என் கவிதை:




"வார்த்தை" இலக்கிய இதழில் இம்மாதம்(ஏப்ரல் 09) வெளியான என் இரு கவிதைகள்.

Thursday, April 16, 2009

Chicken a la Carte - குறும்படம்

ஆறு நிமிடம் மட்டுமே ஓடக்கூடிய இந்த குறும்படம் தருகின்ற வலி மிக அதிகம்.

உணவுவிடுதிக்கு இருபெண்கள் வருகிறார்கள்.கோழிக்கறியும் சாதமும் ஆர்டர் செய்கிறார்கள். கொஞ்சமாய் கொறித்துவிட்டு மீதம் வைத்துவிட்டு செல்கிறார்கள்.

அங்கே வருகின்ற ஒருவர் அந்த மீதமான கறியை ஒரு வாளியில் எடுத்து செல்கிறார்.
தன் வீட்டிற்கு செல்கின்ற அவரை, அங்குள்ள குழந்தைகள் சந்தோஷமாய் ஓடிவந்து மொய்த்துக்கொள்கிறார்கள்.

[இந்தக்காட்சியிலிருந்து எழும்புகின்ற இசையும் அதன் வரிகளும் கல்நெஞ்சையும் உருக வைத்துவிடும்.]

அந்த கோழிக்கறிக்காக வரிசையாக உட்கார்ந்திருக்கிறார்கள் குழந்தைகள். இவர் ஒவ்வொருவருக்கும் தட்டில் உணவை எடுத்து வைக்கிறார்.மலர்ந்த முகத்தோடு குழந்தைகள் அதனை தொட எத்தனிக்கும்போது தடுத்துவிட்டு,கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு சாப்பிட சொல்கிறார்.

பசியால் தினம் தினம் ஆயிரக்கணக்கில் உலகெங்கும் மடிகிறார்கள். இது ஒரு நிஜ கதை என்கிற டைட்டிலோடு முடிகிறது படம்.

சமீபத்தில் பார்த்த குறும்படங்களில் என்னை மிகவும் பாதித்த படம் இது.பார்த்துமுடித்து சில மணி நேரங்கள் எதுவும் செய்ய இயலாமல் மனம் கனத்து போனது.
பாரதியின் வரிகள் நினைவுக்கு வந்தன.நமக்கு எச்சிலாக தோன்றுவது வேறொரு வயிற்றுக்கு உணவாக தோன்றுகிறது. வாழ்க்கை விசித்திரமானதுதான்!

குறும்படத்திற்கான சுட்டி:

http://www.cultureunplugged.com/play/1081/Chicken-a-la-Carte

Monday, April 13, 2009

Winged Migration - பறத்தல் அதன் சுதந்திரம்






பருவகாலத்தில் இடம்பெயரும் பறவைகள் குறித்தான ஆவணப்படம் பற்றி எஸ்.ரா எழுதியிருந்தார். அந்த பதிவை படித்தவுடனே இணையத்தில் தேடிப்பிடித்து படத்தை பார்த்துவிட்டேன். படம் பற்றியும் அதன் உருவாக்கம் பற்றியும் எஸ்.ரா அவர்கள் நிறைய எழுதிவிட்டதால் எனக்கு பிடித்த காட்சிகள் மட்டும் இங்கே பட்டியலிடுகிறேன்.

ரம்மியமான காட்சிகள்:

1.மீனொன்றை முழுவதுமாக விழுங்க முயற்சிக்கும் பறவையின் லாவகமும்,நிதானமும் மிக அற்புதமான காட்சி.
2.அமேசான் நதியின் மீது பறக்கின்ற பஞ்சவர்ண கிளிகளும் அதன் பார்வையும்.
3.அலைகளோடு குதித்தோடும் பென்குவின் பறவைக்கூட்டம்
4.தண்ணீர் மீது நடனமாடும் பறவைகள்


ரணமான காட்சிகள்:

1.சந்தோஷமாய் பறந்துகொண்டிருக்கும் பறவைகள் ஒவ்வொன்றாய் வீழ்ந்து மரிக்கின்றன .சில வேடர்களின் குண்டுகளுக்குப் பலியாகிறோம் என்பதை அறியாமல் வீழ்கின்ற பறவைகளைக் கவ்வி எடுத்துவர ஓடுகின்றன வேட்டை நாய்கள்.

2.ஒரு பக்க சிறகை இழந்த பறவையொன்று பறக்க இயலாமல் கடற்கரையில் அங்குமிங்கும் தத்தி தாவுகிறது.சுற்றி வளைக்கின்றன நண்டுகள்.

3.பென்குவின் பறவையின் குஞ்சை மற்றொரு பறவை கொத்தி தின்கிறது,தடுக்க இயலாத தாய்பறவை வானம் பார்த்து கதறி ஓலமிடுகிறது.(இந்தக்காட்சியின் பிண்ணனி இசை மனதை என்னவோ செய்கிறது)

4.அமேசான் ந‌தியில் மித‌க்கிற‌து ஒரு ப‌ட‌கு. அதில் கூண்டுக்குள் அடைப‌ட்ட‌ குர‌ங்கு ஒன்றும் சில‌ ப‌ற‌வைக‌ளும் இருக்கின்ற‌ன‌.ம‌னித‌ன் பிற‌ உயிரின‌ங்க‌ள் மீது காட்டுகின்ற‌ குரூர‌த்தை இந்த‌ ஒரு காட்சி சொல்லிவிடுகிற‌து.

86 நிமிட‌ம் ஓடுகின்ற‌ இந்த‌ ஆவ‌ண‌ப்ப‌ட‌ம் முடிந்த‌வுட‌ன் ம‌ன‌தில் ஏற்ப‌டுகின்ற‌ வெறுமை த‌விர்க்க‌ இய‌லாத‌து. ப‌ற‌வைக‌ளை நாம் ப‌ற‌க்க‌ அனும‌திக்கிறோமா என்கிற‌ கேள்வி ம‌ன‌தில்
தோன்றியபடியே இருக்கிறது..

பிர‌மிளின் க‌விதையோடு இந்த‌ப்ப‌திவை நிறைவு செய்கிறேன்.

"சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிக்கொண்டிருக்கிறது"

Sunday, April 12, 2009

பேசும் பறவை:

http://www.youtube.com/watch?v=OPz2MYp67ic


பழக்கத்தினால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு ஒரு சிறு உதாரணம்.

Thursday, April 09, 2009

சிலையுலகம் & செந்நிற கூந்தல்காரி



1.சிலையுலகம்

உறைந்த மெளனத்தை
உகுத்துக்கொண்டிருக்கும்
அந்தச் சிலையின்
மர்ம அழகிலிருந்து
எழும்பும் இசை
மனதின் ஆழத்தில்
ஒன்றன்மீது ஒன்றாய்
படிந்துகொண்டிருந்தது.
மெளனத்தின்
மென்கரம் பற்றி
சிலையுலகினுள் நுழைந்தேன்.
சப்தங்களால் நிறைந்திருந்த
அவ்வுலகை விட்டு
வெளிக்குதிக்க என்
கரம் பற்றும்
அவசரத்தில் வரிசையில்
நின்றன சிலைகள்.

2.செந்நிற கூந்தல்காரி

அவள் முகத்தில்
பூனையொன்றின் சாயல்
படர்ந்திருந்தது.
காற்றில் அசைகின்ற
செந்நிற கூந்தலும்
உற்று நோக்குகின்ற
நீல நிற கண்களும்
அவளுக்கு வாய்த்திருந்தன.
உதிரிந்துகிடக்கும்
செர்ரிப் பழங்களை
ஒவ்வொன்றாய் தேடிச்சென்று
மிதித்துக்கொண்டிருந்தவள்
சட்டென்று வான்நோக்கி
பார்த்து சிரித்தாள்.
பின்,
ஏதுமறியா சிறுமியாய்
புல்வெளியில் ஓடி விளையாடினாள்.
பாவம் பைத்தியமென்றார்கள்
பூங்காவிலிருந்தவர்கள்.
மெல்ல மெல்ல
தங்களது முகம்
வேட்டைநாயின் முகமென
மாறிக்கொண்டிருப்பதை அறியாமல்.

நன்றி: திண்ணை.காம்
Photo By: CVR

Tuesday, April 07, 2009

இரண்டாம் ஆதாம் [ அறிவியல் புனைவுக்கவிதைகள் ]





1.
வழிந்து ஓடுகின்ற வெப்பத்தின்
அளவு உயர்ந்துகொண்டேயிருந்தது.
சொற்களால் விவரிக்க இயலாத
நிறத்தில் மலையென
குவிந்திருந்தது சாம்பல்.
கரும்புகை சூழ்ந்திருக்க
பற்றி எரிந்தது நீலக்கடல்.
வீசும் காற்றில்
அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தது
நெருப்பின் சுவாலைகள்.
எந்தையும் தாயும் மகிழ்ந்துகுலாவி
வாழ்ந்த புவியது என்றுரைத்தான்
எந்திரப்பெண்ணின் மார்பில்
முகம்புதைத்தழுதபடி


2.
காதோரம் நடனமிடும்
செவ்விதழ்களின் ஸ்பரிசத்தில்
லயித்திருக்கும்போது
வேகமாய் தட்டப்பட்டது
அறைக்கதவு.
உள்நுழைந்த எந்திரன்
தோள்சாய்திருந்தவளைக் கண்டு
புன்னகைத்தான்.
இன்னும் நான்கு நிமிடங்களில்
மரணிக்கப்போகிறேன்
என்பதை உணர்த்தியது
மணிக்கட்டில் கட்டியிருந்த
கடிகாரத்தின் சிவப்பு விளக்கு.

3. மழையென்பது கடந்தகாலத்தில்
புழங்கிய சொற்களிலொன்று.
மனிதனென்பவன் எப்போதோ
வாழ்ந்து மரித்த உயிரினங்களில்
ஒருவன்.
அணுக்களால் உருவான
உலகை அணுகுண்டுகள்
தின்றுமுடித்து சில ஆண்டுகள்
கடந்துவிட்டன.
அழிந்த உலகைபற்றி
எழுதியதற்காக என்னை
விசாரித்த எந்திரம்
பெயர்சொல் என்றது.
இரண்டாம் ஆதாமென்றேன்.

-நிலாரசிகன்

Thursday, April 02, 2009

சுயம் பற்றி மூன்று கவிதைகள்:



1.எல்லோரும் வந்து
செல்லும்
பேருந்து நிலைய
கழிப்பிடமா
என் சுயம்?

2.வந்த நிமிடம் முதல்
பேசிக்கொண்டே இருந்தாள்
அவள்.
பேசவேண்டியதென்று அவள்
பட்டியலிருந்தவற்றை
எல்லாம் பேசி முடித்தாள்.
எல்லாம் முடித்தபின்
ஏனிந்த மெளனமென்று
வினவினாள்.
பார்வையாளனா நண்பனா
என்கிற கேள்வியின்
இடைவெளியில் நின்றுகொண்டிருந்தேன்
நான்.

3.எல்லோருக்கும் பிடித்தவனாய்
அல்லது
பிடித்தவளாய் இருந்துவிட
முடிவதில்லை.
சிலநேரங்களில்
என்னை எனக்கு
பிடிக்காமல் போகிறது
பிடித்தும்போகிறது.
இவை எதைப்பற்றிய
பிரக்ஞையுமின்றி
நகர்ந்துகொண்டிருக்கிறது
வாழ்க்கை.

-நிலாரசிகன்.