Wednesday, June 27, 2007

வெட்டியான் மகள்..

சங்கின் ஒலி கேட்டு
சிரிக்கிறாள் மகள்..

மரணித்தது தன்
அப்பா என்பதை
அறியாமல்.

Monday, June 25, 2007

நானே என்னைப் பற்றி . . .

1. தென் மாவ‌ட்ட‌த்தில் இருந்து சென்னை நோக்கி ப‌ற‌ந்து வ‌ந்த சிட்டுக்குருவி நான். இக்கால‌ இளைஞ‌ர்க‌ள் போல‌வே க‌ணிப்பொறிக்குள்
சிக்கிய‌ தேன்சிட்டு :)

2.க‌ல்லூரியில் க‌விதைக‌ள் அறிமுக‌ம்.கல்லூரிநாட்களில் ஒரு ஜ‌ன்ன‌லோர‌ இருக்கையும் கையில் ஒரு க‌விதைபுத்த‌க‌மும் கிடைத்துவிட்டால்,நான் த‌மிழுக்கு அடிமை.க‌விதைக்கே என் முழுமை.கால‌மாற்ற‌த்தில் என‌க்குள் ஏற்ப‌டும் உண‌ர்வுக‌ளை அவ்வ‌ப்போது எழுதுகிறேன்.

3. ஆறாம் வ‌குப்பில் த‌மிழில் இர‌ண்டாவ‌து மாண‌வ‌னாக‌ தேர்ச்சி பெற்றேன். அத‌ற்கு ப‌ரிசாக‌ என் ப‌ள்ளி என‌க்கு வ‌ழ‌ங்கிய‌ புத்த‌க‌ம் "ஒற்றைச் சில‌ம்பு". த‌மிழ் என‌க்குள் ஆர்வ‌ம் ஏற்ப‌டுத்திய‌து அப்போதிலிருந்துதான்.

4.சிறுவ‌ய‌தில் நிறைய‌ வேட்டையாடி இருக்கிறேன்.. சிட்டுக்குருவி,அணில்,குயில்,ப‌ட்டாம்பூச்சி இப்ப‌டியாக‌ என் வில்லுக்கு(க‌வுட்டை,குருவிவார்...என்று ப‌ல‌பெய‌ர் உண்டு ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பெய‌ர்) இரையான‌ உயிர்க‌ளுக்கு அஞ்ச‌லியாக‌ இப்போது என் க‌விதைளை ச‌ம‌ர்ப்பிக்கின்றேன்.

5. நில‌வின் மெள‌ன‌ம் அதிக‌ம் பிடிக்கும். த‌னித்திருக்கும் நில‌விற்கு துணையாக‌ கால‌மெல்லாம் விழித்திருந்து க‌விதைக‌ள் எழுதும் வ‌ர‌மே
நான் தின‌ம் வேண்டுவ‌து.

6. ந‌ட்புக்குள் பொய்க‌ள் கூடாது என்ப‌து என் பிடிவாத‌மான‌ கொள்கை. இத‌னால் இழ‌ந்த‌ ந‌ண்ப‌ர்க‌ள் ஏராள‌ம். இது ச‌ரியா த‌வ‌றா என்ப‌தை கால‌ம்தான் ப‌தில் சொல்ல‌ வேண்டும்.

7. கடவுள் என் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டால்,இரு வரம் கேட்பேன் 1. எத்தனை பிறவி எடுத்தாலும் என் அம்மாவிற்கே நான் பிள்ளையாக பிறக்கவேண்டும் 2. முதல் வரத்தையே மீண்டுமொருமுறை கேட்பேன் :)

8. என்னைப் பற்றி சொல்ல வேறொன்றும் இல்லை. தற்சமயம் பணிநிமித்தமாக இருமாத பயணமாக அமெரிக்கா வந்திருக்கிறேன்.
இரவுக்குளிரை ரசித்தபடி விண்ணில் என் வெண்ணிலாவை தேடியபடி
தொடர்கிறது என் பயணம்.:)

என்னைப் பற்றி எட்டு விசயங்கள் எழுத அழைத்த விழியனுக்கு நன்றி.
நான் அழைக்கும் எட்டு நபர்கள்

1. யோசிப்பவர்
2. மற்றவர்கள் யாரென்று நான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்..:)..வலைப்பதிவில் அவ்வளவாக என்னை ஈடுபடுத்திக்கொள்ளாததின் விளைவு இது :))

அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.

Tuesday, June 05, 2007

தென்றலே தென்றலே....

காதலில் பிரிவு மிகவும் வருத்தம் தருவது.
தன் காதலியை பிரிந்த ஒரு காதலனின் வரிகளாக
என் வரிகள் இதோ...


தென்றலே தென்றலே கொஞ்சம் என்னோடு பேசவா
ரகசியமாய் ரகசியமாய் ஒரு உண்மை சொல்கிறேன் வா
காதலுக்கு பாலமாக நீ வேண்டும் தென்றலே
காலமது ஓடுமுன்னே அவளிடம் செல்வாயா தென்றலே?

காதல் என்னும் பாதையிலே நாங்கள்
ஒன்றாய் பயணித்தோம்

பிரிதல் என்னும் வேதனையிலே
திசைமாறி பிரிந்து விட்டோம்

என் வானில் இப்போது நிலவும் இல்லை
பெண்மான் அவளின்றி உயிரும் இல்லை

தனிமைக்கு துணையாக அவள் நினைவு
பெண்மைக்கு சுகமாகுமா என் பிரிவு?

தென்றலே தென்றலே கொஞ்சம் என்னோடு பேசவா
ரகசியமாய் ரகசியமாய் ஒரு உண்மை சொல்கிறேன் வா
காதலுக்கு பாலமாக நீ வேண்டும் தென்றலே
காலமது ஓடுமுன்னே அவளிடம் செல்வாயா தென்றலே?


துள்ளி ஓடும் வெள்ளை நதியே, எனை
எண்ணி வாடும் கறுப்பு மதியே...

சேர்ந்திடும் நாள் விரைவில் வந்திடும் பெண்ணே!
வாழ்ந்திடும் வாழ்க்கை உனக்காகத்தான் கண்ணே!

காலங்கள் ஓடிவிடும் வருந்தாதே பொன்மணி
காதலோடு காத்திருக்கிறேன் ஓடோடிவா என்கண்மணி..

தோழியே உன்னைத் தேடுகின்றேன்...

கனவுகள் சுமந்து
பறந்த பட்டாம்பூச்சி
ஒன்று தன் சிறகுகளை
இழந்து மெளனமாய்
இன்று
மனசுக்குள் அழுவது
என் செவியில்
விழுகிறதே........

என் உயிரெல்லாம்
பூக்கள் மலர
கவிதைகள் எழுதிய
ஜீவன் இன்று
ஜன்னல் வழியே
தூரத்து வானின்
வெள்ளி நிலவிடம்
பேசி மறுமொழி
பேச ஆளில்லாமல்
தனித்து துடிக்கிறதே...

உன் இதயத்தின்
விசும்பல்கள்
என் இதயம்
அறியும்.

என் இதயத்தின்
தவிப்புகளை
உன் இதயம்
அறியும்.

சீதையின் கண்ணீர்
அது இராமாயணம்.
பாஞ்சாலியின் கண்ணீர்
அது மஹாபாரதம்.
நம் கண்ணீர்
இந்த நட்பு.

என்றாவது என்னை
நீ சந்தித்தால்
அழுதுவிடாதே
உன் பிரிவை சுமக்கின்ற
என் மெல்லிய
இதயம் உன் கண்ணீரின்
கனம் தாங்காமல்
உடைந்துவிடக்கூடும்.