Monday, July 29, 2013

ஆங்கில இலக்கியச் சிற்றிதழ் - Transfire

நண்பர்களுக்கு,

ஆங்கிலச் சிற்றிதழான Transfireல் வெளியான என் கவிதை. இதன் தமிழாக்கம் இங்கே வாசிக்கலாம்.

அப்புக்குட்டன் துபாய்க்கு போகிறான்
தேரிக்காட்டில் பட்டம் விட்டுக்கொண்டிருந்தார்கள்
பதின்ம வயது சிறுவர்கள்.
பட்டத்திலொன்று அறுந்து காற்றின் வேகத்தில்
மிக வேகமாய் திசைதப்பியது.
அறுந்த பட்டத்தை பிடிக்க நான்கு கால்கள்
ஓடிய கணத்தில் மேலும் இரண்டு கால்கள்
அந்த ஓட்டத்தை முந்திச்சென்றன.
ஆம் அப்புக்குட்டனின் அறிமுகம்
இப்படித்தான் ஆரம்பம்.
பனை மரத்தில் சிக்கிய பட்டத்தை கிழிந்துவிடாமல்
மெதுவாய் எடுத்து வெற்றிச்சிரிப்புடன்
இறங்க துவங்கியபொழுதுதான் முதன்முதலாய்
அந்த விமானத்தை பார்த்தான் அப்புக்குட்டன்.
அன்றிலிருந்து மூன்று நாட்களாய்
திறந்த வாயும் விரிந்த கண்ணுமாய்
அலைந்தவனை அவனது
நாய்க்குட்டிகள் பயத்துடன் பார்த்தன.
தன் பத்தொன்பதாவது வயதின்
இரவொன்றில்
நெல்லை எக்ஸ்பிரஸ்ஸில் டிக்கெட் எடுக்காமல்
பயணித்தவர்களில் இவனும் ஒருவன்.
மீனம்பாக்கத்தில் இரண்டு நாட்கள்
சட்டை கிழிந்த பைத்தியக்காரனுடனும்
மஞ்சள் கறை பற்களுடன் சிரிக்கும்
பிச்சைக்காரனுடனும் சுற்றிக்கொண்டு
தலைமீது கடக்கும் உலோக பறவைகளை
ரசித்து லயித்து திரிந்தான்.
கிழவியின் பாம்படம் முதல் கிழவரின்
வெள்ளி அரைக்கொடி வரை விற்ற பணத்தில்
துபாய்க்கு போகும் டிக்கெட்டை இவன்
கைகளில் திணித்தார்கள்.
மந்திரித்து விட்டவனாய் மின்சார ரயிலில்
சுற்றியவன் கடவுச்சீட்டை
தொலைத்ததும்
திறந்த வாயும் விரிந்த கண்ணுமாய்
புலம்பித்திரிந்ததும் அப்புக்குட்டனின்
கறுப்புச் சரித்திரத்தின் தரித்திரபக்கங்கள்
என்பதால் இத்துடன் அப்புக்குட்டனின்
விமானக்கனவு முற்றுப்பெறுகிறது


நன்றி,
நிலாரசிகன்.