Saturday, January 11, 2014

My Book Release


Thursday, January 09, 2014

என் புதிய கவிதை நூல்

 
நண்பர்களுக்கு,


என்னுடைய மூன்றாவது கவிதை தொகுப்பு “கடலில் வசிக்கும் பறவை” புதுஎழுத்து வெளியீடாக இன்னும் சில தினங்களில் வெளியாகிறது என்பதை மகிழ்வுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
கடந்த வாரம் வரையில் இந்நூல் வெளியாவது எனக்கே தெரியாது. கவிதைநூல் கொண்டுவருகின்ற
அகநிலையும் புறநிலையிலும் நானில்லை. எதற்கென்றே தெரியாமல்தானே அனைத்தும் நிகழ்கிறது. இந்த பறவையும் கடலுக்குள்ளிருந்து எனை நோக்கி பறந்து வந்தது கடந்த வெள்ளியன்று காலை எட்டு முப்பந்தைந்து மணிக்கு. இவ்வளவு குறுகிய நாட்களில் இந்த அசாத்திய பறவையை வெளிக்கொண்டு வருவதற்கு கடுமையான பணிச்சூழலுக்கும் நடுவில் அசராமல் உழைத்த/உழைக்கும் மனோன்மணி அவர்களுக்கு கடலை விட மிகப்பெரிய நன்றியும் அன்பும்.
மேலும், நண்பர்கள் வெய்யில்(ஓர் இரவில் அட்டைப்படம் வடிவமைத்த மகாகலைஞன்),அனிதா,சுகுணா,விழியன் அனைவருக்கும் நன்றி எனும் ஒற்றைச் சொல் போதாது.பேரன்பும் நட்பும் மட்டுமே மிச்சமிருக்கிறது என்னிடம். என் பிரார்த்தனைகளுக்கு செவிகொடுத்து வழிநடத்தும் அன்பானவருக்கு லட்சம் முத்தங்கள்.
 
நூல் வெளியீட்டின் புலம் மற்றும் நேரம் விரைவில்..
நட்புடன்,
நிலாரசிகன்.

Wednesday, January 01, 2014

கவிதைகள் பத்து

1.
தனியே ஆடிக்கொண்டிருக்கிறது
ஓர் ஊஞ்சல்.
பின் நின்றது சிறிது நேரம்.
தலைகவிழ்ந்து அழுதுமிருக்கலாம் அல்லது
இளைப்பாறியுமிருக்கலாம்.
தூரத்தில் வந்துகொண்டிருக்கின்றன
ஒரு ஜோடி கால்கள்.

2.
அறைநீங்கும் பொழுதில்
கதவை சாத்திவிட்டு செல்.
திறந்திருக்கும் கதவின் வழியே
நேற்றொரு ஓநாய் நுழைந்தது.
இன்று
மறியொன்று ஊளையிட்டபடியே
வெளியே ஒடுகிறது.

3.
நீங்கள் ஏன் பூனைக்குட்டிகளை
ரசிப்பதேயில்லை.
சப்தமிட்டுக்கொண்டிருக்கிறது என்று
நேற்று அதனை வெளியே வீசினீர்கள்.
இன்று
உங்களது இரைச்சலில் அழுகிறது
வாலொன்றை ஆட்டுகின்ற சிறுமிருகம்.

4.
எப்பொழுதும் முத்தமிட்டுக்கொண்டிருத்தல்
சாத்தியமே இல்லை.
முத்தமென்பது முத்தமாக மட்டுமே
நின் மனதுள் வியாபித்திருந்தால்.
5.
ஒரு மரம்.
அதன் கிளைகளெங்கும்
கிளிகள்.
ஒரு கிளி
அதன் கால்களின் கீழெங்கும்
மரங்கள்.
6.
கடலுக்குள் கூடுகட்டியிருக்கும்
பறவையை நானறிவேன்.
அதன் சிறகின் மேற்புறம்
அமர்ந்து இச்சிறு உலகை
காணும்பொழுதெல்லாம்.
7.
அந்த மரத்தை வெட்டிக்கொண்டிருந்தார்கள்.
அதன் கிளைகளிலிருந்து கூடொன்று
விழுந்து சிதறியது.
ஒற்றைக்கால் ஒடிந்த பறவைக்குஞ்சு
தத்தி தத்தி புதருக்குள் ஓடுகிறது.
புதருக்கு வெளியே வருகையில்
காகமொன்றின் அலகில்
அது சிக்கியிருக்கிறது.
இனி,
மரக்கன்றுகள் ஆயிரம் நடும்
விழாவில் மலம் கழித்துச் சிரிக்கும்
அக்காகம்.
8.
இரவில் ஒளிரும் கண்களை
மிருகத்திடம் கடன் வாங்கியவன்
அன்றிரவு மாபெரும் மிருகமாகினான்.
அதிகாலைப் படுக்கையில்
களைத்துக்கிடந்தன
மலைபாம்பும் அதனருகே
குருட்டுப்பூனையும்.

9.
அன்றுதான் தனக்கு கால்கள்
இல்லையே என்று வருந்தியது
குளம்.
குளத்திலிருந்து எழுந்து வீடு
நோக்கி நடப்பவர்களின்
நீர்ச்சுவடுகளை பார்த்தபடி.
10.
வார்த்தைகள் தீர்ந்த குளக்கரையில்
அமர்ந்திருக்கிறேன்.
அதன் மெளனத்தோடு
என் மெளனம் எக்காலத்திலும்
உரையாடும்.
- -நிலாரசிகன்.

Happy 2014 friends.