Wednesday, May 30, 2007

கருத்தப்புள்ள செவத்தரயிலு!

ரோசாப்பூ மனசுக்காரி
ரோசமுள்ள கோவக்காரி

ஆசவச்சேன் அவமேல
மீசவச்சேன் ஒதட்டுமேல

குளத்தங்கரை படிக்கட்டுல
குளிக்கவருவா வெடலப்புள்ள

கண்ணாலம் பண்ணவான்னு
கண்ணால கேட்டுப்புட்டேன்

முட்டக்கண்ணு சிவந்திருச்சு
கெட்டக்கோவம் வந்திருச்சு

தப்புக்கணக்கு போட்டுப்புட்டா
மைனருன்னு நினைச்சுப்புட்டா

பஞ்சாயத்த கூட்டிப்புட்டா
பருத்திபோல வெடிச்சுப்புட்டா

ஊர்கூடி திட்டினாக
உறவெல்லாம் சிரிச்சாக

மானமருவாதி கப்பலேறிச்சு
ரெண்டாயிரம் கப்பங்கட்டியாச்சு

அவமேல ஆசப்பட்டகதைய
எவகிட்ட சொல்லிஅழுவ?

மண்ணுக்குள்ள வயிரம்போல
மனசுக்குள்ள காதல்கெடக்கே!

ரெண்டுநாளு பட்டினிகெடந்தேன்
பட்டணம்போக மூட்டகட்டுனேன்

கருத்தப்புள்ளய காதலிச்சகதய
கடுதாசியில இறக்கிவெச்சேன்

வெடுவெடுன்னு நடந்துபோயி
வீசிப்புட்டேன் அவமேல

திரும்பிக்கூட பார்க்காம
பதிலேதும் கேட்காம

வீறாப்பா கெளம்பி
விரசா ரயிலப்புடிச்சுப்புட்டேன்

வெறப்பா வந்தாலும்
முறப்பா நின்னாலும்

உள்ளுக்குள்ள துடிதுடிக்குது
உசிருக்குள்ள அவநினப்பு!

புகைய கக்கிப்புட்டு
கெளம்புது சிகப்புரயிலு

ரயிலுக்கும் எரியுமோ
என்னப்போல உள்மனசு?

கண்ணமூடி ஒக்காந்தா
கனவுல அவமுகம்

கண்ணுமுழிச்சு பார்த்தா
எதிர்சீட்டுல அவமுகம்!

கனவா நனவான்னு
தெரியாம நா(ன்) குழம்ப

முத்துப்பல்லு காட்டி
முல்லப்பூ அவசிரிக்கா!

கண்ணால புரியாதகாதல
கடுதாசியால புரிஞ்சிருக்கா

ஓன்னு அழுது
ஓடோடி வந்திருக்கா

தாலிகட்ட போறேன்
தாரமாக்க போறேன்

பட்டணம்போயி பத்தாயிரம்
சம்பாதிக்க போறேன்

கண்ணாலம் பண்ணப்போறேன்
கருத்தபுள்ளகூட வாழப்போறேன்

ஏலேய் ட்ரைவரு!

விரசாஓட்டு இதுரயிலுவண்டியா
இல்ல கட்டவண்டியா?

Monday, May 28, 2007

முத்த தமிழ்..

முத்தமிழ் மட்டும்தானே
உனக்குத் தெரியும்
எனக்கு இன்னொரு தமிழும்
தெரியுமே என்று
சிரித்தாய்...

என்னவென்று விழிகளால்
வினவிய மறுநொடி
என் புறங்கையில்
முத்தமிட்டு இதுதான்
"முத்த தமிழ்" என்றுகூறி
ஓடிப்போனாய்...

பிள்ளைத்தமிழ் மனசுக்காரி
இவள் என்று சிலிர்க்கிறது
என் கவித்தமிழ்!

Saturday, May 26, 2007

பள்ளிக்கூட கவிதைகள்..

எல்.கே.ஜி.

அடிவாங்கி அடம்பிடித்து
அழுது புரண்டு
அம்மாவின் கால்களைக்
கட்டிக்கொண்டு
கதற கதற பிரிக்கப்பட்டு
கண்டிப்புடன் உட்கார்ந்த
வகுப்பு...

ஒண்ணாம் வகுப்பு...

சிலேட்டு குச்சி தின்று
வேப்பங்கொட்டை சேகரித்து
கால்சட்டைக்குள் கோலிகுண்டு
மறைத்து,
வெள்ளைச்சட்டையை புழுதியில்
புரட்டியெடுத்து
வீட்டுப்பாடம் படிக்க அடம்பிடித்த
வகுப்பு..

இரண்டாம் வகுப்பு...

இரட்டைகோடு நோட்டு,
வாசல்கடை கிழவியிடம்
ஜவ்வு மிட்டாய்,
"தொட்டுபிடித்து" விளையாட்டு,
விளையாட்டோடு பாடம்படித்த
வகுப்பு...

மூன்றாம் வகுப்பு...

சிலேட்டுக்கு டாடா,
நோட்டுக்கு வரவேற்பு,
சேட்டைக்கு உதாரணம்,
அம்புலிமாமாவின் சினேகம்
டீச்சரிடம் டியூசன் படித்த
வகுப்பு..

நான்காம் வகுப்பு...

நண்பனின் டிபன்பாக்ஸ்
உணவு
தோழியின் அழிரப்பர்,
டீச்சரிடம் எதிர்கேள்வி,
வால் இருக்குமோ என்று
பெயர் வாங்கிய வகுப்பு...

ஐந்தாம் வகுப்பு..

பேனாவின் அறிமுகம்,
பி.டி.ஆசிரியரின் செல்லம்,
கொக்கோ விளையாட்டு,
படிப்பில் படுசுட்டியென்று
பெயர் எடுத்த வகுப்பு...

ஆறாம் வகுப்பு...

புதுப்பள்ளி தோழர்கள்,
நான்கடி உயர பிரம்பு,
கண்டிப்பும் கனிவும் கலந்த
ஆசிரியர்கள்,
பயத்துடன் பள்ளிசென்ற
வகுப்பு..

ஏழாம் வகுப்பு...

கபடி,கிரிக்கெட்,கால்பந்து..
சைக்கிள் பயணம்,
கேன்டீன் சமோசா,
புத்தகத்தினுள் பாட்டுப்புத்தகம்
மறைத்து படித்த வகுப்பு...

எட்டாம் வகுப்பு...

வகுப்புத் தலைவன்,
சுற்றுலாவின் பொறுப்பாளன்,
கராத்தே மாணவன்
உலகம் புரியத்துவங்கிய
வகுப்பு..

ஒன்பதாம் வகுப்பு...

மீசை முளைக்கும்
வயது,
ஆசை வளர்க்கும்
மனது,
எதிர்பாலரிடம் புரியாத
ஈர்ப்பு வளர
ஆரம்பித்த வகுப்பு..

பத்தாம் வகுப்பு...

ஸ்பெசல் கிளாஸ்,
வாரம்தோறும் பரிட்சை,
பள்ளிக்கு பெருமை
சேர்க்க படிப்புடன்
போராடிய பவித்திர
வகுப்பு...

பதினொன்றாம் வகுப்பு...

சைக்கிளுக்கு புதிதாய்
இரு கண்ணாடிகள்,
ஏ பிரிவு சிறந்ததா
பி பிரிவு சிறந்த்தா
என்று மரத்தடி பட்டிமன்றங்கள்..
மாநிலத்தேர்வு அடுத்த
வருடம்தானே என
அலட்சியமாய் கழிந்த
வகுப்பு...

பன்னிரென்டாம் வகுப்பு...

தினம்தினம் பரிட்சை
கணிப்பொறி முதல்
ஐன்ஸ்டீன் வரை
அக்கறையாய் படித்து,
கடைசி நாளில் நட்புக்காக
கண்ணில் நீர் ஒழுக
வீடுநோக்கி நெஞ்சில்
கல்லூரிக்கனவுகளுடன் நடந்த
வகுப்பு...

Friday, May 18, 2007

செம்மறியாடுகள்...

சிறுமை
கண்டுபொங்கும் சுட்டிப்பெண்ணாய்
இருந்தன பள்ளிநாட்கள்...

பாரதி
கண்ட புதுமைப்பெண்ணாய்
இருந்தன கல்லூரிநாட்கள்..

கனவுகள்,இலட்சியங்கள்
அனைத்தும் துறந்து
பெற்றவர்களுக்காக முடிந்த
திருமணத்தில்
செம்மறியாடாக மாறி
இருந்தன என்
உணர்வுகளை தின்றுவிட்ட
திருமணநாட்கள்...

Tuesday, May 15, 2007

வலிகொண்ட முத்தம்...

உன் இடுப்பில்
எனைச் சுமந்து நிலாச்சோறு
ஊட்டிய நாட்களில் உன்
பொறுமையின்வ‌லி நான்
உண‌ர‌வில்லை...
தாவ‌ணிப்ப‌ருவ‌த்தில் தோழி
வீடுசென்று தாம‌த‌மாக‌ திரும்பும்
நாட்க‌ளில் உன் அவ‌ஸ்தையின்வ‌லி
நான் உண‌ரவில்லை...

க‌ல்லூரிப்ப‌ருவ‌த்தில் கண்ணாடியுடன்
சினேகித்து பட்டாம்பூச்சியாய்
பறந்த நாட்களில் உன் அறிவுரையின்வலி
நான் உணரவில்லை...

ம‌ண‌ப்ப‌ந்த‌லில் உன் காலில்
விழுந்தெழுந்த‌ போது என்
உச்சி முக‌ர்ந்த‌ உன‌து
முத்த‌த்தில்தான‌ம்மா உண‌ர்ந்தேன்
நம் பிரிவின் வலியை!

Saturday, May 12, 2007

மனவலி...

மின்விசிறியின் சத்தம் பெருகிப்
பெருகி பேரிரைச்சலாக
உணரத்துவங்குகிறது மனது....

காற்றில் மிதந்து வரும்
மருந்துவாசம் சுவாசத்தின்
ஆழம் சென்றதில்
கலவரப்படத்துவங்கிறது மனது...

சோதித்துச்செல்லும் மருத்துவக்கூட்டம்
கண்டு மெல்ல மெல்ல
மருளத்துவங்குகிறது மனது...


விபத்தில் கிழிந்த உடலின்
வலியை விட
எப்போதும் அதிகமாகவே
இருக்கிறது மருத்துவமனையின்
சூழல் தருகின்ற மனவலி!

Friday, May 11, 2007

தொலைந்தவள்...

மீட்டு வரவே உன்
முகம் தேடினேன்
காற்றாய்...

மீண்டும் மீண்டும்
தேடுகிறேன் மீட்டு
வரச் சென்று தொலைந்த
நேற்றை...

நேற்று கனவில் வந்தவள்
இன்று
கவிதையில் வருகிறாய்...

எப்போது நினைவில்
வருவாய் என்கிற
தவிப்பில் உருகத்
துவங்குகிறது என் கண்ணீரும்
உன் மீது நான்
கொண்ட புரியாத நேசமும்.

கனவில் ஒரு முகம்....

தூளியில் எட்டிப்பார்க்கும்

குழந்தையின் முகம்

போல....

கடல்மீது அசைந்தாடும்

பவுர்ணமி நிலாமுகம்

போல...


கற்பூர ஒளியில் கடந்து

செல்லும் தாவணிமுகம்

போல...



தெரிந்தும் தெரியாமலும்

மழையில் நனைந்த

ஓவியம் போலே

உன் முகம் என்

கனவில் பூத்ததடி...

Tuesday, May 01, 2007

ஈழக் கவிதைகள் பாகம் 2

1.நேற்று வரையில்
பொம்மைகளுடன்
விளையாடிய குழந்தைகள்
இன்று பொம்மைபோல்
உயிரற்று வீதியில்...

விழுந்துவெடித்த குண்டுகளுக்குத்தான்
உணர்வில்லை
வீசிச்சென்றவனுக்குமா?



2.வரவேற்ற தமிழகத்தின்
கரை தொட்டவுடன்
முகம் மலர்ந்தோம்.
வரவேற்ற தமிழனின்
அகம் புரிந்தவுடன்
கறை உணர்ந்தோம்.

3. உணவுப்பொட்டலங்கள்
வீசிச் செல்லும்
விமானம் கண்டு ஓடி
ஒளிகின்றன எங்கள்
பிள்ளைகள்.
குண்டுகள் வீசும் விமானங்கள்
பார்த்து பழகிய கண்களாயிற்றே!