Saturday, May 26, 2007

பள்ளிக்கூட கவிதைகள்..

எல்.கே.ஜி.

அடிவாங்கி அடம்பிடித்து
அழுது புரண்டு
அம்மாவின் கால்களைக்
கட்டிக்கொண்டு
கதற கதற பிரிக்கப்பட்டு
கண்டிப்புடன் உட்கார்ந்த
வகுப்பு...

ஒண்ணாம் வகுப்பு...

சிலேட்டு குச்சி தின்று
வேப்பங்கொட்டை சேகரித்து
கால்சட்டைக்குள் கோலிகுண்டு
மறைத்து,
வெள்ளைச்சட்டையை புழுதியில்
புரட்டியெடுத்து
வீட்டுப்பாடம் படிக்க அடம்பிடித்த
வகுப்பு..

இரண்டாம் வகுப்பு...

இரட்டைகோடு நோட்டு,
வாசல்கடை கிழவியிடம்
ஜவ்வு மிட்டாய்,
"தொட்டுபிடித்து" விளையாட்டு,
விளையாட்டோடு பாடம்படித்த
வகுப்பு...

மூன்றாம் வகுப்பு...

சிலேட்டுக்கு டாடா,
நோட்டுக்கு வரவேற்பு,
சேட்டைக்கு உதாரணம்,
அம்புலிமாமாவின் சினேகம்
டீச்சரிடம் டியூசன் படித்த
வகுப்பு..

நான்காம் வகுப்பு...

நண்பனின் டிபன்பாக்ஸ்
உணவு
தோழியின் அழிரப்பர்,
டீச்சரிடம் எதிர்கேள்வி,
வால் இருக்குமோ என்று
பெயர் வாங்கிய வகுப்பு...

ஐந்தாம் வகுப்பு..

பேனாவின் அறிமுகம்,
பி.டி.ஆசிரியரின் செல்லம்,
கொக்கோ விளையாட்டு,
படிப்பில் படுசுட்டியென்று
பெயர் எடுத்த வகுப்பு...

ஆறாம் வகுப்பு...

புதுப்பள்ளி தோழர்கள்,
நான்கடி உயர பிரம்பு,
கண்டிப்பும் கனிவும் கலந்த
ஆசிரியர்கள்,
பயத்துடன் பள்ளிசென்ற
வகுப்பு..

ஏழாம் வகுப்பு...

கபடி,கிரிக்கெட்,கால்பந்து..
சைக்கிள் பயணம்,
கேன்டீன் சமோசா,
புத்தகத்தினுள் பாட்டுப்புத்தகம்
மறைத்து படித்த வகுப்பு...

எட்டாம் வகுப்பு...

வகுப்புத் தலைவன்,
சுற்றுலாவின் பொறுப்பாளன்,
கராத்தே மாணவன்
உலகம் புரியத்துவங்கிய
வகுப்பு..

ஒன்பதாம் வகுப்பு...

மீசை முளைக்கும்
வயது,
ஆசை வளர்க்கும்
மனது,
எதிர்பாலரிடம் புரியாத
ஈர்ப்பு வளர
ஆரம்பித்த வகுப்பு..

பத்தாம் வகுப்பு...

ஸ்பெசல் கிளாஸ்,
வாரம்தோறும் பரிட்சை,
பள்ளிக்கு பெருமை
சேர்க்க படிப்புடன்
போராடிய பவித்திர
வகுப்பு...

பதினொன்றாம் வகுப்பு...

சைக்கிளுக்கு புதிதாய்
இரு கண்ணாடிகள்,
ஏ பிரிவு சிறந்ததா
பி பிரிவு சிறந்த்தா
என்று மரத்தடி பட்டிமன்றங்கள்..
மாநிலத்தேர்வு அடுத்த
வருடம்தானே என
அலட்சியமாய் கழிந்த
வகுப்பு...

பன்னிரென்டாம் வகுப்பு...

தினம்தினம் பரிட்சை
கணிப்பொறி முதல்
ஐன்ஸ்டீன் வரை
அக்கறையாய் படித்து,
கடைசி நாளில் நட்புக்காக
கண்ணில் நீர் ஒழுக
வீடுநோக்கி நெஞ்சில்
கல்லூரிக்கனவுகளுடன் நடந்த
வகுப்பு...

5 comments:

said...

wow...went back to my school days in minutes and returned..cool kavithai!!

said...

Hi nilarasigan,
etho manathukku itham alikkirathu, ungal kavithaikalai padithal!.LKG padikkavittalum ammavin parivai(pasathai) nianthu naan alukiren.

said...

hello man,
unga kavithai romba nalla irukku. keep it up.

said...

பன்னாட்டு நிறுவனதில்
பணியில் அமர்ந்தபோது
பாங்காக கிடைத்த தனியறை
பயணித்துப் பலஊர்களுக்குச்
செல்லும்போது கிடைக்கும்
பளபளக்கும் ஏஸி அறை
மணமானபின் மயக்கிய
பள்ளி அறை என்று
எத்தனை அறைகளைப்
பார்த்து விட்டாலும்
இன்னும் மனதை விட்டு
நீங்காதிருப்பது
ஒன்றுதான் - அது
வகுப்பறை!

said...

Hi ,

Its very nice to read all ur poems...