Wednesday, September 26, 2007

ஜீவநதி

சாய்வு நாற்காலியில்
மருகிக்கிடக்கிறது
உடல்.

அசைகின்ற தென்னங்கீற்றின்
சங்கீதத்தில் சங்கமிக்கிறது
மனம்.

வாசற்கதவு திறக்கும் சத்தம்கேட்டு
எழ எத்தனித்து முடியாமல்
தளர்கிறது உடல்.

யாராக இருக்கக்கூடும் என்கிற
எண்ணம் வளர்ந்து பெருகி
யாரென்று அறியும்வரை
அடங்காமல் தவிக்கிறது
மனம்.

உடலுக்கும் மனதிற்குமான
இடைவெளி அதிகமானதை
செவிகளில்
உணர்த்துகிறது இதயத்துடிப்பின்
சத்தம்.

முதுமையிலும் தளராமல்
ஓடிக்கொண்டே இருக்கிறது
உள்ளுக்குள் ஒரு ஜீவநதி.

Tuesday, September 25, 2007

"ஒரு தேசத்தின் எதிர்காலம் உருவாகுமிடம் - பள்ளிக்கூடம்"





குழந்தையும் தெய்வமும்
ஒன்று என்பார்கள்.



தெய்வத்திற்கு தங்கத்தில்

கோவில் அமைத்த

நாடு நம் பாரத நாடு.



ஆனால்,



ஏழை குழந்தைகளுக்கு

படிக்க முழுமையான

வசதிகள் இன்னும்

இல்லாத நாடும் நம்

பாரத நாடே!



குழந்தைகள் பட்டாம்பூச்சிகள் போன்றவர்கள்.
கவலையின்றி வானில் அவர்கள் பறக்க வேண்டும்.

நம்நாட்டில் சிறகுகள் முளைக்கும் முன்பே
உதிர்ந்து போன பட்டாம்பூச்சிகள் ஏராளம்.

இந்நிலை மாறிடல் வேண்டும்.

நாளைய நம்பிக்கை
விருட்சங்கள் குழந்தைகள்.


படிக்க வசதி இல்லாமல்

எத்தனையோ மொட்டுக்கள்

இன்றும் செங்கல் சுமக்கவும்

சாலைகளில் செய்தித்தாள்

விற்கவும்,

உணவுவிடுதிகளில் எடுபிடிகளாகவும்

வாழ்ந்துகொண்டிருப்பதை வேதனையுடன்

பார்க்கிறோம்..


இதற்கு இளைஞர்களாகிய(குறிப்பாக அதிகமாய் சம்பாதிக்கும் நம் போன்ற கணிப்பொறி மென்பொருளாளர்கள்)

என்ன செய்தோம் என்கிற கேள்வி
என்னுள் பலநாட்களாக எழுந்தது.

அதற்கு விடைகொடுத்தது www.helptolive.org என்கிற இணையதளம்.

முழுக்க முழுக்க ஒரு தனிமனிதரின்(இவர் ஒரு கணிப்பொறி மென்பொருளாளர்) முயற்சியால்
உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு இன்று 400க்கும் அதிகமான தன்னார்வ உறுப்பினர்களை கொண்டு இயங்குகிறது.

கூரையின்றி வாழ
வாழ்க்கை அனுமதிக்கிறது
கூரையின்றி படிக்க
குழந்தைகளை அனுமதிக்கலாமா?


சரியான பள்ளிக்கட்டிடங்கள் இல்லாமல்
தவித்து நிற்கின்றன 260 பிஞ்சுக்குழந்தைகள்.

நாளைய நம்பிக்கைகளுக்கு வாழ்க்கையின்
ஏணிப்படியில் ஏற கைகொடுப்பது நம்போன்ற
இளைஞர்களின் கடமை அல்லவா?

உதவ விருப்பமிருக்கிறது....ஆனால் எப்படி
உதவ என்று தெரியாமல் உதவிச்சிறகுகளை
சுருக்கிக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கே
இந்த மடல்.

உதவ வேண்டிய திசையை நான் காண்பித்திருக்கிறேன்
உதவிட முன்வருவீர்களா?

இதைப்பற்றி நண்பர்களுக்கு/தெரிந்தவர்களுக்கு தெரிவியுங்கள்
அதன் மூலமாகவும் உதவிகள் வரலாம்.

இத்தளம்(www.helptolive.org) பற்றி அல்லது பணம் அனுப்புவது பற்றி ஏதேனும் சந்தேகமிருந்தால் எனக்கு
மடலிடுங்கள்.
நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.
நிலாரசிகன்.

Monday, September 24, 2007

காலமாற்றம்


அண்ணாந்து பார்த்தேன்
பற்றி எரிந்துகொண்டிருந்தது
பூமி.

Thursday, September 20, 2007

தில்லி To ஆக்ரா

"என்னங்க நாம எப்போ தாஜ்மஹால பார்க்க போறோம்?" ஆர்வமுடன் கணவனிடம் கேட்டாள் கனகம்.
"அடச்சே உன்னோட இதே வம்பா போச்சு ரெண்டு நாளா எப்ப வாய திறந்தாலும் தாஜ்மஹால் தாஜ்மஹால் ....மனுசன நிம்மதியா இருக்க விடமாட்டியா?" கோபத்துடன் கத்தினான் வாசுதேவன்.

"நம்ம பக்கத்துவீட்டு பஞ்சாப்காரி போய் பார்த்துட்டு வந்து என்னமா பேசுறா,என்னால சகிக்க முடியலிங்க "

"அவ புருசன் சர்கார்ல வேல பாக்குறான் டீ, என்னை மாதிரி குதிரைவண்டியா ஓட்டுறான் ?"
"

என்னைக்குத்தான் நீங்க நான் கேட்டு சரின்னு சொல்லியிருக்கீங்க" அழ ஆரம்பித்துவிட்டாள் கனகம். ""சரி சரி உடனே கண்ணுல தண்ணி வந்துருமே? நாளைக்கு காலைல போலாம்" சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டான்.
மறுநாள் அதிகாலை உற்சாகமாய் எழுந்து உணவு தயார்செய்தாள் கனகம்.

தாஜ்மஹாலை நோக்கி ஆரம்பித்தது அவர்களது பயணம்

"எம்மாம் பெருசுங்க...என்னால நம்பவே முடியலை ... சாமி எப்படித்தான் கட்டினாங்களோ?" ஆச்சர்யத்துடன் தாஜ்மஹாலைக் கண்டு வாய்பிளந்தாள் கனகம்.

தாஜ்மஹால் அருகே திடீரென்று பரபரப்பு ஏற்பட்டது

"வழிவிடுங்கள்...ஓரம்போங்கள்" என்று எல்லோரையும் அதட்டிக்கொண்டே சென்றனர் குதிரையில் சென்ற இருவர்.

வெண்நிற குதிரையொன்றில் பரிவாரங்கள் சூழ தாஜ்மஹால் நோக்கி சென்றுகொண்டிருந்தார் ஷாஜஹான்.

வருடம் 1940

ஹிட்லரை அறைந்துவிட்டு

திரும்பினேன் கால இயந்திரத்தை

காணவில்லை!

Wednesday, September 19, 2007

"ஐந்து வார்த்தைகளில் கதை- பிறப்பு"

ஐந்து வார்த்தைக் கதையை படிக்க இங்கே சொடுக்குங்கள்.
www.nilaraseegansirukathaigal.blogspot.com

"ஐந்து வார்த்தைகளில் கதை"

ஐந்து வார்த்தைக் கதையை படிக்க இங்கே சொடுக்குங்கள்.
www.nilaraseegansirukathaigal.blogspot.com

நட்பும் காதலும்

Monday, September 17, 2007

இருநிமிடக் கதைகள் - என்னுரை

கவிதை வானில் சிறகடித்துப் பறப்பது எனக்கு எப்போதும் பிடித்த ஒன்று. ரசனைகளையும் கற்பனைகளையும் கவிதையாய் வடிக்கையில் ஏற்படும் ஒரு உணர்வு வார்த்தைகளால் விவரிக்க இயலாதது.
கவிதைகளை விட்டு முதல்முறையாக சிறுகதை உலகிற்குள் அடியெடுத்து வைக்கிறேன். கதை என்று வரும்பொழுது முகத்திலடிக்கும் நிஜங்களும், நிகழ்வதை பதிவு செய்கின்ற விதமும் கதைக்கும் கவிதைக்கும் பல வேறுபாட்டினை எனக்கு உணர்த்தியது.
எழுதுகின்ற களம் வேறுபடும் பொழுது, எழுதுகின்ற வார்த்தைகளும்,வரிகளும் எனக்கே வித்தியாசமாகபட்டது.
இதை எழுதியது நானா என்கிற கேள்வியும் என்னுள் எழுந்தது.
அதற்கு பதிலாக நான் உணர்ந்து என்னவெனில், படைப்பாளி என்பவன்
பலதரபட்ட முகம்கொண்டவனாக இருத்தல் வேண்டும். அதுவே அவனுக்கும் அவன் மொழிக்கும் வளம் சேர்க்கும்.
இக்கதைகளில் நான் எழுதியிருக்கும் சில வார்த்தைகள் உங்களுக்கு அதை உணர்த்தலாம்.
என் கவிதைகளையும், கதைகளையும் ஒப்பீடு செய்யாமல் படிக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.
இங்கே என் சிறுகதைகளை படிக்கலாம் --> http://nilaraseegansirukathaigal.blogspot.com/ உங்களது மேலான விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்.

Friday, September 14, 2007

நிதர்சனங்கள்..



1.நடு வீதியில்
திருஷ்டிக்கென்று உடைக்கப்படும்
பூசணிக்குள் ஒளிந்திருக்கிறது
கடந்து செல்பவனின்
விதி.

2. மனம் சார்ந்த நட்பை
எதிர்ப்பார்த்து ஏமாறும்
வேசியின் கண்களை
ஒத்தது உன்மேல் காதலுற்று
ஏமாந்த என் இதயம்.

3. வீடு திரும்பும்வரையில்
வீதியில் காத்திருந்தது
குடும்பம்.
வீடு திரும்பியவுடன்
வீதியே காத்திருக்கிறது
குடிகாரனின் கடுஞ்சொற்களுக்காக!


4. வேலியோர முட்புதரில்
எலியொன்று இறந்த
செய்தியை இருநாட்களாய்
சொல்லிக்கொண்டே
இருக்கிறது துர்நாற்றத்தால்.

Monday, September 10, 2007

நிராகரிப்பின் வலி....



1. கண்ணுக்குள் விழுந்துவிட்ட
தூசி நீ.
உன் உறுத்தலும் கூட
உரிமை என்றே எண்ணித்தவிக்கிறது
என் இதயம்.

2.பூக்கள் பறிக்கும்
சிறுமி என்ற மகிழ்வுடன்
உன் கைகளில் விழுந்து
துடிக்கிறது
என் இதயப்பூ.

3.தவிர்த்தலுக்கென்றே ஒரு
பார்வை வைத்திருக்கிறாய்
நீ.
தவிப்பதற்கென்றே ஒரு
இதயம் வைத்திருக்கிறேன்
நான்.

4. நிராகரிப்பின் வலி
உணரவேண்டுமா?
என்னைக் காதலிக்கிறேன்
என்று சொல்.
பதிலேதும் பேசாத மெளனத்தால்
உணர்த்துகிறேன்.

Sunday, September 09, 2007

கைகொடுங்கள் தோழர்களே....

Thursday, September 06, 2007

காதலின்றி வேறில்லை


1.இலையில் தங்கிய
மழைத்துளியில்
முகம்பார்த்துக்கொள்ளும்
பூக்கள்போல்
வெட்கத்தில் உள்ளங்கையில்
முகம்புதைக்கிறாய்
நீ.

2.ஓடி வந்து கால்கள்
கட்டிக்கொள்ளும் குழந்தை
போல் கட்டிக்கொள்வாயா
உனக்காக நான் சுமந்து
திரியும் காதலை?


3. உன்முகம்போல் ஜொலிக்க
முடியவில்லையே என்கிற
ஏக்கத்தில்,
ஒளித்துளிகளை கண்ணீராய்
சிந்திக்கொண்டிருக்கிறது
நீ
பற்றியிருக்கும் கம்பி மத்தாப்பு!

4. உன்னை கொஞ்சுவதுதான்
நான் செய்யும் மிகப்பெரிய
வேலை என்று
என்னிடம் கெஞ்சிக்கொண்டிருக்கிறது
நம் காதல்.

Monday, September 03, 2007

கொடிநாள் நியாபகங்கள்...

காஷ்மீர்
பாகிஸ்தான்
மதக் கலவரம்
ஜாதிக்கலவரம்
சுனாமி
அனைத்திற்கும் வேலியாய்
உன் வீரம்.

உனக்காக என்னசெய்தோம்...
வானம்நோக்கி சுட்டு
மரியாதைசெலுத்தி பின்
மறந்துபோனதை
தவிர!

உன் குரல்கேட்பேனா?

துப்பாக்கியின் கடைசி
தோட்டா எப்போது
தீருமோ என்று ஒருபோதும்
கலங்கியதில்லை.....

குண்டடிபட்டு விழுந்த
தோழனை தோளில்
சுமந்து சென்றபோது
எதிர்தாக்குதலில் மடிவேனோ
என்று ஒருபொழுதும
எண்ணியதில்லை...

வெற்றி ஒன்றே குறியாய்,
குறிக்கோளாய் முன்னேறுகையில்
தோல்வி குறித்த செய்தி
செவிகளில் விழுந்தபோதும்
மீண்டெழுவோமா என்று
ஒரு பொழுதும்
நினைத்ததில்லை...

முட்களுக்கு நடுவே
வாழ்கின்ற இவ்வாழ்க்கையில்
"உன் குரல்கேட்பேனா" என்று
உயிர்தொட்டு நீ எழுதிய கடிதம் களத்தில்
தொலைந்துவிட்டதை எண்ணித்தான்
கலங்கிநிற்கிறேன் கண்மணி!

கல்லூரித்தாயின் மடியில் சிலபொழுதுகள்...

(நான்கு பாலைவன வருடங்களுக்குப் பிறகு நான் படித்த கல்லூரிக்குச் ஒருநாள் சென்றேன்....அன்று என்னுள் ஏற்பட்ட சில இனிமையான நிகழ்வுகளின் மொத்த தொகுப்பு இது.)

பல வருடங்கள் கழித்து தன் தாயைச் சந்திக்க சொந்த ஊருக்கு வருகின்ற ஒரு பாசமுள்ள மகனைப்போல்

நான் படித்த கல்லூரியின் வாசலை நெருங்க நெருங்க துடிக்கின்ற என் இதயம் விசும்ப ஆரம்பித்தது...

எத்தனை எத்தனை மாணவர்களின் கனவுகளை மொத்தமாய் சுமந்த கல்லூரி இது!

எத்தனை எத்தனை பாதச்சுவடுகளைத் தன் நெஞ்சில் தாங்கிய கல்லூரி இது!

எத்தனை எத்தனை நண்பர்களை உயிருக்குயிராக உருவாக்கிய கல்லூரி இது!

கல்லூரித்தாயே!

உன் பிள்ளைகளில் ஒருவன் வந்திருக்கிறேன்.

உனக்கு என்னை அடையாளம் தெரிகிறதா? என்று மெதுவாய் முணுமுணுத்தேன்.

அப்போது எங்கிருந்தோ பறந்து வந்த இலையொன்று என் நெஞ்சில் மோதிவிட்டு
காற்றில் பறந்து போனது..


கையில் புத்தகங்களும்,நெஞ்சில் கனவுகளும் சுமந்து பட்டாம்பூச்சியாய் பறந்து
திரிந்த அந்த வசந்தகாலம் என் நினைவுமொட்டவிழ்ந்து பூவாய் மலரத் துவங்கியது...அந்த நாள் நினைவுகளில் மூழ்கியபடியே மெதுவாய் நாங்கள்
படித்த வகுப்பை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்....

இதோ.....எனக்கு கல்வியோடு நட்பையும் அள்ளி வழங்கிய என் வகுப்பறை!

அதோ...நான் தூரத்துவான் ரசிக்கும் ஜன்னல்!....மழை வந்தால் சாரலில் நனைய
நான் ஓடுகின்ற ஜன்னல் அல்லவா அது!

என் ஜன்னல்த்தோழனே!

நலமா நீ?

எங்கே என் மரத்தோழன்?

கல்லூரியின் கடைசி நாளில் எல்லோரிடமும்
விடைபெறும் தருணத்தில் என் பிரிவு எண்ணி
இலைக்கண்ணீர் உதிர்த்தானே எங்கே அவனை?

தன்னிடம் யாரும் பேசுவதில்லை என்கிற ஏக்கத்தில்
பட்டுப்போனானோ என் பட்டு நண்பன்?

நான் அமர்ந்து படித்த அந்த ஜன்னலோர பெஞ்சில்
அமர்ந்தேன்.

சில வருடங்களுக்கு முன்பு வரை வாழ்க்கையின் கனம் தெரியாத
என்னைச் சுமந்த இடம் இது.

இங்கே நான் படித்திருக்கிறேன்,நட்பாகியிருக்கிறேன்,
கவிதை எழுதியிருக்கிறேன்,உறங்கியிருக்கிறேன்.நிலாரசித்திருக்கிறேன்...


இன்று உணர்வுகளால் பின்னப்பட்டு மெளனித்திருக்கிறேன்.
அதோ அமைதியாய் என்னைப் பார்த்துக்கொண்டிருக்கும் கரும்பலகை!

பல முறை உன்னை
உடைத்திருக்கிறேன்.

இன்று உன் முன்
உடைந்து நிற்கிறேன்.

உன்மேல் எழுதப்பட்ட எழுத்துக்களே இன்று
என் பெயருக்குப் பின் நான் எழுதுகின்ற எழுத்துக்கள்.

இது என்ன அஃறிணைகளுடன் பேச்சுவார்த்தையா
என்று அறிவு கேட்கிறது.

இந்த அஃறிணைகள்தான் உயர்திணைகளை உருவாக்கும் திண்ணைகள் என்கிறது மனம்.

பட்டாம்பூச்சியாய் பறந்து திரிந்த காலங்களை
நினைத்தாலே மனம் பட்டாம்பூச்சியாய்
படபடக்க ஆரம்பித்துவிடுகிறதே!


இது என்ன மனோநிலை? இதற்கென்ன பெயர்?

பழகிய பால்ய நண்பனை பார்த்தவுடன் வார்த்தைகள் உறைந்துபோகுமே
அப்படி ஒரு அபூர்வ அழகிய மனோநிலையில் இருக்கிறேன் இப்போது.

-தொடரும்....