Thursday, December 31, 2009

2009ன் சிறந்த இணைய எழுத்தாளர்கள்


 


பதிவுலகில் 2009ம் ஆண்டு சிறந்த பொதுச்சேவை செய்தவர்களை கெளரவிக்கும் இடுகையிது.


சிறுகதை போட்டியை மிக நேர்த்தியாக நடத்தியதோடு நின்றுவிடாமல் சிறுகதை பட்டறையின் மூலம் கதைகள் குறித்தான முக்கிய நூல்களையும் பகிர்ந்துகொண்டு பதிவுலக எழுத்தாளர்களை தீவிர இலக்கியம் நோக்கி நகர்த்தினார்கள்.
இப்போது விறுவிறுப்பாக கவிதை போட்டியும் நடந்துகொண்டிருக்கிறது. தங்களது கைக்காசை வெற்றி பெற்றவர்களுக்கு பகிர்ந்து அளிப்பதின் வாயிலாக தனித்து நிற்பவர்கள்.
சிற்றிதழ்களின் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து இயங்கி வரும் தீவிர படைப்பாளி.வலைத்தளம் ஆரம்பித்த பிறகு "அகநாழிகை" என்றொரு சிற்றிதழை உருவாக்கினார்.அகநாழிகை பதிப்பகத்தின் மூலமாக ஐந்து இணைய எழுத்தாளர்களை அடையாளங்காட்டியிருக்கிறார்.
தொடர்ந்து புதிய படைப்பாளிகளுக்கு முக்கியத்துவம் தருபவர்.பல வருடங்களாக எழுதி வந்தாலும்  தன்னுடைய கவிதைகளை தொகுப்பாக்காமல் பிற எழுத்தாளர்களை உருவாக்கியதில் தனித்து நிற்பவர்.
 3.சேரல்/கிருஷ்ணபிரபு

புத்தகம் வலைப்பூவில் தன் நண்பர்களுடன் தங்களது வாசிப்பனுபவத்தை பதிவு செய்கிறார் சேரல்.ஆரம்ப நிலை வாசகனுக்கு பேருதவியாக பல நூல்களை அறிமுக படுத்துவதில் தனித்து நிற்கிறார்.

சேரலை போலவே தான் வாசித்த தமிழ் நூல்களை பிறருக்கு அறிமுகம் செய்து வருகிறார் கிருஷ்ணபிரபு.



கொத்துபரோட்டாவிலும் எண்டர் கவிதைகளிலும் புகழ் பெற்ற போதிலும் இவர் எழுதும் சினிமா வியாபாரம் தொடர் சினிமாத்துறையை A to Z அறிந்துகொள்ள உதவுகிறது. துறை சார்ந்த பதிவுகளை இத்தனை விரிவாகவும் எளிமையாகவும் வாசகனுக்கு ஏற்றார்போல் எழுதுவதில் தனித்து நிற்பவர் கேபிள்சங்கர்.

இணையத்தால் இணைந்த தம்பதிகளின் வலைப்பூ "அணிலாடு முன்றில்". சங்க இலக்கியத்தின் இறுக்கமான சட்டதிட்டங்களை தாண்டி அதனுள் இருக்கும் இன்றும் செல்லுபடியாகக்கூடிய கவித்துவத்தை விரிவாக அலசும் வலைப்பூ. நல்லதொரு முயற்சி.
 இன்னும் பலர் தங்கள் எழுத்தை மட்டும் முன்நிறுத்தாமல் தான் வாசித்த/ரசித்த விஷயங்களை பகிர்ந்துகொள்வதற்காக வலைப்பூக்களை உருவாக்கி எழுதி வருகிறார்கள். என் சிற்றறிவுக்கு எட்டிய ஐந்து இணைய எழுத்தாள அறிமுகம் இது.மேலும் தெரிந்தவர்கள் பின்னூட்டமிடுங்கள் இங்கே பட்டியலில் சேர்த்துவிடுகிறேன்.

6 . மாதவராஜ் - தீராப்பக்கங்கள்


இலக்கிய உலகம் நன்கு அறிந்த எழுத்தாளர். இணைய பக்கம் துவங்கியபின்னர் தனது வலைப்பக்கத்தின் பெயரை போலவே தீர்ந்துபோகாத எழுத்துக்கு சொந்தக்காரர். இணையத்தில் வெளியான சிறந்த படைப்புகளை(கவிதை,சிறுகதை,அனுபவம்) தொகுத்து வம்சி வெளியீடாக இவ்வருடம் வெளியிடுகிறார். இணையத்தில் சிறந்த படைப்புகளை தேர்ந்தெடுப்பது கடலில் ஊசியை தேடுவது போல் என்பதால் இவரது உழைப்புக்கு நன்றி தெரிவிப்போம்.


7.வண்ணத்துப்பூச்சியார் 


உலக திரைப்படங்களை பல இணைய எழுத்தாளர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக அறிமுகம் செய்தாலும் உலக திரைப்படத்திற்காக மட்டுமே வலைப்பூ வைத்திருப்பவர்.
பட்டர்பிளை சூர்யா என்ற செல்லப்பெயரால் அறியப்படுபவர். புரிவதற்கு சிக்கலான படங்களை கூட எளிமையான நடையில் எழுத்துப்படுத்தி இருப்பது இவரது சிறப்பு.



-நிலாரசிகன்.

Monday, December 28, 2009

பதிவர்களின் பேட்டி மற்றும் சில


1.    பதிவர்களின் பேட்டியை நண்பர் ஆதி தொகுத்திருக்கிறார்
இங்கே  படிக்கலாம்.
2.    கவிஞர்.அம்சப்ரியாவின் இந்தக் கவிதை மிகவும் கவர்ந்தது.
"எந்த வகைப் பறவையென்று
தெரியவில்லை.
வழி தெரியாமல் வகுப்பறைக்குள்
வந்துவிட்ட அக்குஞ்சுப் பறவை
சிறகடிக்கத் துவங்கிற்று
ஒவ்வொரு குழந்தையின்
பாடப் புத்தகத்தினுள்ளும்..! '"

 3.    தொண்ணுறுகளின் பிற்பகுதியில் கிரிக்கெட் உலகை ஆட்டிப்படைத்த புயல் ஜெயசூர்யா விளையாட வந்து 20 வருடங்கள் ஆகிவிட்டன. நம் சச்சினை போன்ற கொண்டாட்டங்கள் ஏதுமில்லை. ஒரே வருத்தம் சில போட்டிகளில் அவர் பெஞ்சில் இருந்தது.(சச்சின் பெஞ்சில் இருந்தால் இந்தியாவே கொந்தளிக்கும் ஆனால் இலங்கை….)

4.    கோ.கேசவன் எழுதிய தமிழ்ச்சிறுகதைகளில் உருவம் என்ற நூலில் சிறுகதையின் உள்ளடக்கம் குறித்து பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். சிறுகதை எழுத விரும்பும் இணைய எழுத்தாளர்களுக்கு பயன்படலாம்.

·         அடிப்படையான மூலக்கருத்து என ஒன்று இருத்தல்.இதை விளக்க வாழ்க்கையின் ஒரு சூழல்/சிக்கல்/நிகழ்ச்சி/அனுபவம்/ஆகிய இவற்றுள் ஏதேனும் ஒன்றை மட்டும் விளக்குதல்.

·         குறிப்பிட்ட ஒரு சூழலில்/சிக்கலில்/நிகழ்ச்சியில்/அனுபவத்தில்/ஒரு பாத்திரம் அல்லது சில பாத்திரங்கள் இயங்கும்முறை/அவற்றின் மனநிலை/உணர்வுநிலை.
5.    பதிவுலகம் அடுத்த கட்டம் நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் இவ்வேளையிலும் மிக மோசமான படைப்புகளுக்கு “ஆஹோ ஒஹோ” என்று நட்புக்காக இடப்படும் பின்னூட்டங்களால் பதிவுலகை தேடி வரும் ஆரம்பநிலை வாசகன் ஏமாற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறான். நிஜமான விமர்சனத்தை முன்வைத்தால் அதை படைப்பின் மீதான விமர்சனமாக கொள்ளாமல் படைப்பாளியின் மீதான தாக்குதலாக புரிந்துகொள்கின்றனர். இதனால் நல்லதொரு விமர்சனமும் கிடைக்காமல் போய்விடுகிறது படைப்பாளியும் தன் படைப்பின் தவறுகளை அறிந்துகொள்ளாமல் மீண்டும் அதே தவறுகளை தொடரும் அபாயமும் இருக்கிறது. என்னை பொறுத்தவரை நிஜமான நட்புள்ளவன் முதலில் குறைகளைத்தான் சுட்டிக்காண்பிப்பான்.


Saturday, December 26, 2009

துயரங்களின் நர்த்தனம் - சிறுகதை





ருத்தல் தொலைந்த வெம்மையில் தவித்தபோது ஒற்றை மழைத்துளியென என்னில் விழுந்து கடலென விரிந்தவள் நீ. ரயில் நிலையத்தில் பயம் கவ்விய வெட்கத்துடனும் பதபதைப்புடனும் அலைபேசியில் பேசியபடியே என்னை நோக்கி நீ வந்த கணத்தை உறையச்செய்து என் இதயத்தின் நான்கு அறைகளிலும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். ரயில் நிலைய உணவகத்தில் தேநீர் அருந்தும் இடைவெளியில் உனக்குத் தெரியாமல் உன் விரலை வருடிய போது பிறவிப்பயனை அடைந்த களிப்பில் என்னைக் கண்டு புன்னகைத்தன என் விரல்கள்.

கனவுகளில் என் தலைகோதும் தங்கநிற வனதேவதையின் சாயலை கொண்டிருந்தாய். உள்நெஞ்சில் உனதுருவத்தை உயிர்த்துளிகளால் வரைய ஆரம்பித்தேன். அதிகாலையொன்றில் பிறந்த குழந்தையின் பாதச்சிவப்பாய் சிவந்திருந்த கன்னங்களெங்கும் வெட்கத்தின் ரேகைகள் படர என்னுடன் பயணித்தாய்.உன்னுடலிருந்து எழும்பிய வாசம் கனவுகளில் என்னோடு சுற்றித்திரிந்த அவ்வனதேவதையின் வாசத்தை ஒத்திருந்தது. மெல்ல உன் கரம்பற்றி விரல் வருடியபோது ஜன்னல் வழியே உள்நுழைந்த பனிக்காற்று புதுவித சில்லிப்பை தந்தது.

விரைகின்ற ரயிலின் அதிர்வில் ஊமைக்காட்சிகளாய் மரங்களும் புதர்களும் கடந்துகொண்டிருந்தன. மெளனம் மட்டுமே நம்மிடையே ஒலித்தபடி இருந்தது. ஜன்னல் கதவின் இடுக்கில் நுழைந்த ஒளிக்கீற்று உன்னில் படர்ந்து  ஆடையாக மாறியது. பிரகாசத்துடன் ஒளிர்கின்ற உன்னை பார்த்துக்கொண்டே பயணித்தேன்.
பார்வைகளின் சந்திப்பில் வெடித்துச் சிதறியது நம்மிடையே நிமிர்ந்து நின்ற மெளனச்சுவர்.மெல்ல என் கரங்களுக்குள் உன் விரல்கள் புதைந்தபோது பேரானந்த களிப்பில்  நீ சிந்திய ஒரு துளி கண்ணீரில் என் பால்யத்தின் கறைகள் அனைத்தும் கரைந்து உருகிப்போனது. பாறையின் இடுக்கில் நுழைந்த வேரென எனக்குள் நீ நுழைய ஆரம்பித்த நாள் அதுதான்.

------o0o-------


இப்போது என் நெஞ்சின் மேல் சத்தமின்றி படுத்திருக்கிறது உன் கடிதம். அனல் நிறைந்த அந்தக் கடித ஓடையில் நீராடி சாம்பலென உதிர்ந்துகிடக்கிறேன். துயர் நிறைந்த உன் முகம் நினைவோடையின் மேல்பரப்பில் மிதந்து வர மெல்ல கண்ணயர்கிறேன். முன்பொருநாள் யாருமற்ற முன்னிரவில் என் அறைக் கதவை தட்டுகிறாய் நீ. எதிர்பாராத உன் வருகையில் திகைத்து நிற்கிறேன். எவ்வித சலனமுமின்றி அறைக்குள் நுழைந்தவள்

“ரொம்ப டயர்டா இருக்கு கொஞ்சநேரம் இங்க தூங்குறேன் பிரபு..” என்றவாறு  பதிலை எதிர்பார்க்காமல் படுக்கையில் விழுந்தாய். உன்னருகில் அமர்ந்து கரம் பற்றிக்கொண்டு உற்று நோக்குகிறேன்.
உறங்கும் போது அழகிலிருந்து பேரழகிற்கு உருமாறிவிடுகிறது உன் முகம். அந்த கண்கள் அந்த நாசி,அந்த செவ்விதழ்கள்,அந்த கொன்றை நிலவுகள்.
உன் பொன்முகத்தைஅள்ளியெடுத்து என் மடியில் கிடத்துகிறேன்.சிறியதொரு அசைவிற்கு பிறகு என் கரங்களை இறுக பற்றிக்கொண்டு உறங்குகிறாய்.
உன்னையே பார்த்தபடி அமர்ந்திருக்கிறேன். உன் வருகை அறிந்து உள்நுழைந்த காற்று உன் கூந்தல் கலைக்கிறது. எவ்வித கவலைகளுமின்றி என் கரங்களின் கதகதப்பில் கங்காருவின் மடியில் உறங்கும் குட்டியாய் உறங்கிக்கொண்டிருக்கிறாய்.ஜென்மங்கள் பல கடந்த காற்றின் பக்கங்களில் நம் பெயரை ஒன்றாக எழுதுகிறேன். பிரிந்திருக்கும் நாளைய பொழுதுகளில் எப்போதேனும் என் ஞாபகச்சில்லுகள் உன் இதயம் துளைத்தால்
காற்றில் காதுகளில் ஒரு கோரிக்கையிடு. அது நம் செளந்தர்ய நிமிடங்களின் பாடலை உனக்காக பாடிக் காண்பிக்கும்.


------o0o-------
கறுப்பு நிற புடவையில் நீ வருகின்ற போதெல்லாம் இயல்புதொலைந்து சிறுபிள்ளையாக  ஓடிவந்து உன் நெஞ்சில் முகம் புதைக்கிறேன். இதென்ன பால்யத்தின் நீட்சியா? முலைச்சதையின் ஞாபகம் தீர்ந்துபோவதில்லையா? உன் கண்களுக்குள் இறங்கி உயிருக்குள் நுழைந்து ஓர் உயிரான பொழுதுகள் எப்போது திரும்ப வரும்? எனக்கென படைக்கப்பட்டவள் எப்போதும் என்னுடன் இருப்பதில்லை என்கிற துயர்மிகுந்த நிதர்சனத்தின் அனலில் கருகிச்சரிகிறேன்.
முத்தங்களால் நிரம்பிய என் தோட்டத்தில் பூக்கள் கொய்து சென்றவர்கள் மத்தியில் நீ மட்டுமே பூவாய் உள்வந்து என்னை முழுவதுமாய்ஆட்கொண்டவள். உனக்கென நான் வாங்கிய மல்லிகையின் வாசத்தைவிட அந்த கணத்தில் சட்டென்று என் கன்னம் பதித்து திரும்பிய உன் செவ்விதழ்களின் ஈரம் இன்றும் காயாமல் எனக்குள் இருக்கிறது - மிக பத்திரமாய்.

காமத்தீயில் எறியப்படும் முத்தங்களைவிட நேசத்தில் முகிழும் முத்தத்தின் வலிமையை அன்றுதான் உணர்ந்தேன்.யாருமற்ற என்னுலகில் முதல்முறையாக நுழைந்தவள் நீ. சின்னச் சின்ன சந்தோஷங்கள்,பரிசுகளால் உன்னை எப்போதும் புன்னகைக்க வைத்திருப்பதே என் விருப்பம்.


படபடவென்று நான் உதிர்க்கும் பத்து வார்த்தைகளை பவ்யமாக கேட்டுக்கொண்டிருந்துவிட்டு "ம்" என்கிற ஒற்றை சொல்லால் மறுமொழிவாய்.
நான் உதிர்த்த வார்த்தைகள் அனைத்தும் அந்த "ம்"மின்  அழகில் வெட்கி காற்றில் கரைந்தோடும். என்னெதிரில் அமர்ந்துகொண்டு கண்களுக்குள் உற்று பார்த்தபடி ஏதோ கேட்க எத்தனிப்பாய் பின் "ஒண்ணுமில்ல" என்பாய். இப்போது அந்த "ம்"மை விட இவ்வார்த்தை அழகானதாகிவிடும். அழகுச்சிற்பமென்று உன்னை வர்ணித்தல் தவறு.நீ அழகுக் கடல். ஓராயிரம் உயிர்கள் வசிப்பதால் பெருமையுடன் விரிந்திருந்த கடல் இரு உயிர் வசிக்கும் உன்னைக் கண்டு தலைகவிழ்ந்து சுருங்கிக் கிடக்கிறது.

------o0o-------
நேசம் நிறைந்த உனது நினைவுகளிலிருந்து விழித்தெழுந்து கடிதத்தின் ஒவ்வொரு வார்த்தைகளையும் மீண்டுமொருமுறை வாசித்தேன். பேனா மையுடன் காதலும் கண்ணீரும் கலந்து  அவ்வார்த்தைகளை நீ எழுதிய கணத்தின் வலி என்னை தவிப்பின் ஆழத்தில் தள்ளிவிட்டது கண்மணி.
நீ அழுதிருக்கிறாய். துடித்திருக்கிறாய். யாருமற்ற இக்கொடிய இரவின் பற்களில் சிக்கியிருக்கிறாய். எதற்கென்றே புரியாமல் நகரும் இந்த வாழ்க்கையில் உன்னை சந்திக்க முடியாத வெறுமைச் சூழலில் உதிர்ந்த இலையாய் அறைக்குள் முடங்கிக் கிடக்கிறேன். அறைக்குள் பூனைபோல் நுழையும் வெளிச்சத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கரைகிறது என்னுடல். நிரந்தரமானதொரு அமைதி எங்கும் பரவ உன் மரணத்திற்கு முன் நீ எழுதிய கடைசி கடிதத்தின் மேல் விழுகிறது என் இறுதி நிழல்.

Friday, December 25, 2009

நகரத்திற்கு வெளியே – நூல் விமர்சனம்



கடந்த சில ஆண்டுகளாக கவிதைகளே இலக்கிய இதழ்களில் கோலோச்சி வந்தன. எங்கு பார்த்தாலும் கவிதை என்கிற நிலை இருந்து வந்தது.இந்த நிலை கடந்த இரு ஆண்டுகளில் மாறி இருப்பதாகவே தோன்றுகிறது. புதியதாக இலக்கிய உலகில் தடம்பதித்த சிற்றிதழ்கள்/இடைநிலை இதழ்கள் சிறுகதைக்கு அதிக முக்கியத்துவம் தரத்துவங்கின. இது பல சிறுகதை எழுத்தாளர்களுக்கு தளமாக அமைந்து பல புதிய படைப்புகள் வெளிவர ஆரம்பித்தன. விளிம்பு நிலை மனிதர்களை,சமுதாய அவலத்தை,அக உணர்வுப்போராட்டங்களை,உள்மன பரிதவிப்புகளை என வெவ்வேறு கருக்களை மையமாகக் கொண்டு சிறுகதைகள் வெளியாகிய வண்ணம் இருப்பது வாசகர்களுக்கு நல்லதொரு படையலாக அமைந்திருக்கிறது.

இவ்வகையில், இன்று உயிர்மை வெளியீடாக விஜய் மகேந்திரனின் "நகரத்திற்கு வெளியே" சிறுகதை நூல் வெளியாகி இருக்கிறது.
பத்து சிறுகதைகளை உள்ளடக்கியது இத்தொகுப்பு.  விஜய் மகேந்திரனின் கதைகளில் என்னை அதிகம் கவர்ந்தவை திருகலற்ற மொழிநடையும்,நுணுக்கமான விவரணைகளும்,தன்னை சுற்றிய அனுபவங்களை புனைவாக மாற்றியிருக்கும் லாவகமும்.


இத்தொகுப்பில் என்னைக் கவர்ந்த மூன்று கதைகளை பற்றி பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

1.அடைபடும் காற்று:

இருவருக்கு இடையேயான கடித பரிமாற்றத்தை கதையாக்கி இருக்கிறார்.சென்னையின் மிக முக்கிய அடையாளங்களுள் ஒன்றான உட்லேண்ட்ஸ் ட்ரைவ் இன் உணவு விடுதி மூடப்பட்டதை மையமாக கொண்டு நகர்கிறது கதை. இலக்கிய ஆர்வலர்கள் பலரை கண்ட உணவகம் அது. இப்போது மூடப்பட்டு புதர்கள் படர்ந்து கேட்பாரற்று கிடக்கிறது.  விரைவில் அந்த உணவகம் இருந்த இடத்தில் ரசாயன தொழிற்சாலை அமைய இருப்பதாக ஒரு செய்தியை இக்கதையின் மூலம் தெரிவிக்கிறார் ஆசிரியர். இந்தக் கதையின் ஒவ்வொரு வரியை வாசிக்கும்போதும் ஒரு வித ஏக்கமும் இனம் புரியாத வலியும் மனதை சூழ்ந்து கொள்வது இக்கதையின் வெற்றி.

2.சனிப்பெயர்ச்சி:


ஆசிரியரின் பிற கதைகளிலிருந்து சற்றே மாறுபட்ட கதையாகவே இந்தக்கதையை உணர்ந்துகொள்ள முடிகிறது. கதையின் ஆரம்ப வரிகளில் ஆரம்பமாகும் அங்கதம் கதையெங்கும் விரவிக்கிடக்கிறது.புரிதலற்ற நண்பனை பற்றிய வலியும்,நேரம் சரியில்லாத காரணத்தால் தவறேதும் செய்யாவிட்டாலும் சனியன் முதுகில் ஏறிக்கொண்டு நடனமிடுவதையும் அழகாக எழுதியிருக்கிறார்.மேலோட்டமாக பார்த்தால் சாதாரணமாக தோன்றும் இக்கதையின் பின்னாலிருக்கும் நிதர்சனம் நெஞ்சம் சுடுகிறது.

3.சிரிப்பு:


வேலை இழந்தவனின் வலியை அவனை விட வேறு யார் புரிந்துகொள்ள முடியும்? புரிந்துகொண்டும்தான் என்னவாகி விடப்போகிறது? அவனது காயங்களை ஆறுதல் வார்த்தைகள் மேலும் காயப்படுத்தவே செய்யும். வேலை இல்லாதவனின் ஓவ்வொரு செயலிலும் குற்றம் கண்டுபிடிப்பதே சிலரின் வேலையாக இருக்கும். இந்தக் கதை ஒரு வேலை இல்லாதவனை பற்றியது. நகரத்தின் ஒரு பூங்காவில் நுழைகின்ற அவனை ஒரு அந்நியன் சந்தித்து பேசுகிறான்.கண்டிப்பாக வேலை கிடைக்கும் என்று நம்பிக்கை கூறுகிறான். மறுநாள் இவனது வீட்டின் அருகிலேயே ஒரு அங்காடியில் வேலை கிடைத்துவிடுகிறது. அந்த அந்நியனுக்கு நன்றி சொல்ல அவனைத் தேடுகையில்தான் இவனுக்கு புலப்படுகிறது அவனைப் பற்றிய உண்மை. கணையாழியில் இந்தக் கதையை படித்திருக்கிறேன். அப்போதே என்னுள் சலசலப்பை ஏற்படுத்திய கதை.
நகரப் பூங்கா பற்றிய விவரிப்புகள் முகத்தில் அறைகிறது.

****
மற்ற சிறுகதைகளும் வெவ்வேறு தளங்களை பின்புலமாக கொண்டு எழுதப்பட்டவை என்பதால் வாசிப்பில் சலிப்பேற்படுத்தவில்லை.
நம் முன் நடக்கும் விஷயங்களை, நாம் சந்திக்கும் மனிதர்களை,மனித முகமூடியில் திரியும் விலங்குகளை,அவலத்தை கண்டு குமறி இயலாமையால் மெளனிக்கும் மனங்களை பற்றிய பதிவுகளாகவே விஜய் மகேந்திரனின் தொகுப்பை இனம் காண்கிறேன். அட்டைப்பட புகைப்படம் மிகப்பொருத்தமாக உருவாக்கி இருக்கிறார்கள். பதிப்பகத்திற்கு வாழ்த்துகள்.
விஜய மகேந்திரனுக்கும்.

நூலின் பெயர்: நகரத்திற்கு வெளியே
பகுப்பு: சிறுகதைகள்
ஆசிரியர்: விஜய் மகேந்திரன்
பக்கம் : 78
விலை: ரூ.50
பதிப்பகம் : உயிர்மை


Wednesday, December 23, 2009

கோணவாயன் கதை - உரையாடல் போட்டிக்கவிதை


 
அப்பன் செம்பட்டையும்
ஆத்தா செவ்வந்தியும் மூணாவதா
பெத்துப்போட்ட கழுதக்குட்டி நானு.
மொத ரெண்டு புள்ளயும்
கிடாவாகிபோனதால  மூணாவது பொறந்தா
பொட்டப்புள்ளதான் பொறக்குமுன்னு
எங்காத்தா நெனச்சிபுட்டா.
குஞ்சான ஆட்டிகிட்டு குறுகுறுன்னு
வந்துவிழுந்த என்ன,
பொட்டப்புள்ளபோல வளக்க ஆரம்பிச்சா.
ட்ரவுசருக்கு பதிலா பாவாட மாட்டிவிட்டு
பவுடருக்கு பதிலா மஞ்சளையும் தேச்சுவிட்டு
அழகு பாத்தா ஆத்தாக்காரி.
திக்கி திக்கி பேசுறதால பேய்க்காமன்கற
எம்பேர கோணவாயன்னு
ஊருக்குள்ள மாத்திபுட்டானுவ.
கோணவாய் பயன்னு
ஊரெல்லாம் மென்னு துப்புனப்போ
அடுத்தவீட்டு  மாரி  மட்டும்
தோளோட தோளு நின்னான்.
என்னோட நண்பனா
உசிரோட ஒட்டிக்கிட்டான்.
அவனுக்கு மீசை மொளக்கற
வயசுல
அவன் மேல ஆச மொளச்சுது.
நாளாக நாளாக
உடம்புக்குள்ள
ஏதேதோ மாறிப்போச்சு.
ராவெல்லாம் அவன் நெனப்பா
தூக்கத்துல உளரி கெடந்தேன்
அவனுக்கே வாக்கப்பட்டு
வாழனும்னு கங்கணம் கட்டிக்கிட்டேன்.
சிவனா பொறந்தவன் சக்தியா
மாறிப்போனேன்.
வளஞ்சு நெளிஞ்சு வெட்கத்தோட
நான் பேச
தோளோட தோள் நின்னவன்
தொலைதூரம் போக ஆரம்பிச்சான்.
ஓடக்கர கோவிலுல மழ ஓஞ்ச
ஒருநாளுல “கட்டிக்குவியா”ன்னு
கேட்டுபுட்டேன்.
“சீ போடா ஒம்போது”ன்னு
மூஞ்சிமேல எச்சி துப்பி புட்டான்.
உசிரு ஒடஞ்சு ஊசலாட
ராவோட ராவா
நாம்போறேன் ரயிலேற.
-நிலாரசிகன்.


Monday, December 21, 2009

இதனால் சகலமானவர்களுக்கும்...


 

நேற்று மாலை சிறுகதை நூல்வெளியீடு சிறப்பாக நிகழ்ந்தேறியது. மாலை 6 மணிக்கு ஆரம்பித்த நிகழ்ச்சில் 27 நூல்களை திரிசக்தி பதிப்பகம் வெளியிட்டது. இசைக்கவிஞர் ரமணன் அவர்கள் சிறப்பாக தொகுத்தளித்தார். காவல்துறை உயர் அதிகாரி திரு.இரவி என் நூலிற்கான அறிமுகத்தை மிகச்சிறப்பாக எடுத்துரைத்தார். எழுத்தாளர் இந்துமதி நூலை வெளியிட்டார். எழுத்துலக ஜாம்பவான்கள் நாஞ்சில் நாடன்,புஷ்பா தங்கதுரை,விக்கிரமன்,கவியோகி,பிலிம் நியூஸ் ஆனந்தன் என்று பலரும் 
விழாவில் கலந்து கொண்டது மகிழ்வாக இருந்தது.

விழாவில் கலந்து கொண்ட நண்பர்கள் விழியன்,கிருஷ்ண பிரபு,முத்துசாமி,முத்தலிப்,விஷ்ணுகுமார்,சிவன்,படைப்பாளி,சுரேஷ்,சுகந்தராஜ்,அடலேறு,எவனோ ஒருவன்,லக்கிலுக்,அதிஷா,பரமேஸ்வரன்,நாவிஷ்செந்தில்குமார்,ஆனந்தகுமார்,உமாஷக்தி,யோசிப்பவர்,சுந்தர்,விஜி,ப்ரியா,ரோகினி,குமார்,பேராசிரியர் செல்வகுமார்,குகன்,கவிஞர்.அண்ணா கண்ணன்,ஐயா அப்துல் ஜப்பார்,எழுத்தாளர் சைலஜா ஆகியோருக்கும்,விழாவில் கலந்துகொள்ள நினைத்து இயலாமல் மடலிலும் அலைபேசியிலும் வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியும் நட்பும் எப்போதும்.
சில நெகிழ்வான சம்பவங்களால் இந்நிமிடமும் மனம் பூரிப்புடன் இருக்கிறது.
சம்பத் என்றொருவர் என் க(வி)தைகள் படித்துவிட்டு மடலிடுவார். அவர் ஏதோ இருபது இருபத்தைந்து வயதுக்காரர் என்றே எண்ணியிருந்தேன். நேற்று ஒரு அறுபது வயது பெரியவர் என்னருகே வந்து கரம்பற்றி “உங்களை பார்க்கணும்னுதான் தம்பி வந்தேன்…என் பெயர் சம்பத்” என்றபோது சிலிர்த்துவிட்டது மனம். தமிழுக்கு நன்றி சொன்னோம் இருவரும்.
அதேபோல் புகழ்பெற்ற கிரிக்கெட் வர்ணணையாளரும் எழுத்தாளருமான அப்துல் ஜப்பார் அவர்கள் அமீரகத்தில் ஆசிப் அண்ணாச்சியுடன் இருக்கிறார் என்ற நினைப்பிலேயே அவரை விழாவிற்கு அழைக்காமல் விட்டுவிட்டேன். அவர் “குழுமங்களில் விழா குறித்தான செய்திகண்டு கலந்துகொண்டேன்” என்றபோது குற்றவுணர்வுடன் கூடிய ஆனந்த அதிர்ச்சி என்னை ஆட்கொண்டது.
விழாமுடிந்து வீட்டிற்கு வந்து இறங்கிய மறுநிமிடம் தொலைபேசிய முத்துசாமி,சிவன்,முத்தலிப் அனைவரும் அதற்குள் சிறுகதை தொகுப்பை படித்துவிட்டதாக சொல்லி சிறுகதைகள் குறித்துபேசிய போது இதயம் நெகிழ்ச்சியால் நிறைந்துபோனது.
ஈரோடு பதிவர் சந்திப்புக்கு சென்றுவிட்டதால் விழாவில் கலந்துகொள்ள முடியாத கவிஞர்.கேபிள் சங்கர் இரவு 11 மணிக்கு அழைத்து வாழ்த்தியதும்,
பின்னிரவு 3 மணிக்கு  நாவிஷ் செந்தில்குமார் தொகுப்பின் முதல் கதையின் பாதிப்பிலிருந்து மீளமுடியவில்லை என்று மடலிட்டிருந்ததும்,
வீடு வருவதற்குள்ளாகவே விழாவில் எடுத்த புகைப்படங்களை மடலிட்ட விஷ்ணுகுமாரின் அன்பிலிருந்தும்,
மும்பையிலிருந்து தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்த கவிஞர்.விபாகையின் நட்பிலிருந்தும் இன்னும் மீளவேயில்லை நான்.
பெருகியோடிய மகிழ்ச்சிக்கு மத்தியிலும் எழுத்தாளர்.ஷைலஜா அவர்களின் கைக்கடிகாரம் தொலைந்துபோனதும் விழா முடிந்த மகிழ்விலும் 120 பிரதிகள் விற்ற களிப்பிலும் U turn எடுக்கக்கூடாத இடத்தில் எடுத்ததால் ஒரு “நல்ல” காவலருக்கு 200 ரூபாய் கப்பம் கட்டியதும் நண்பர்கள் ஒவ்வொருவராக விழா அரங்கினுள் நுழையும்போது இப்போது வருவாரா இப்போது வருவாரா என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து கடைசி வரை வராமல் போன ஒரு நல்லவரின் நேசமும் மனதை நெருடிய விஷயங்கள்.
பின்குறிப்புகள்:
1.நன்றி நவிழ்தலில் என் மறதியால் யாருடைய பெயராவது விடுபட்டிருப்பின் மன்னித்து மறந்துவிடுங்கள் :)
2.சிறுகதை நூல் இணையம் வழியே கடன் அட்டை மூலமாக பணம் செலுத்தி வாங்கிக்கொள்ள விரும்பும் அன்பர்கள் இங்கே சுட்டுங்கள்.
3.சென்னையில் டிசம்பர் 30 முதல் ஜனவரி 10 வரை நடைபெற இருக்கும் புத்தக கண்காட்சியில் திரிசக்தி பதிப்பகத்தாரின் கடை எண் 207,208,223,224ல் சிறுகதை தொகுப்பு இடம்பெற்றிருக்கும்.




மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் என் நன்றி :)
நன்றியில் நீராடும் விழிகளுடன்,
- நிலாரசிகன்.


Thursday, December 17, 2009

நகுலன் வீட்டில் யாருமில்லை,அகநாழிகை,மற்றும் சில






1.எஸ்.ராவின் "நகுலன் வீட்டில் யாருமில்லை" தருகின்ற உள்-அனுபவம் அலாதியானது.தும்மலோசை,புனிதப்பூனை,ந.வீ.யாருமில்லை,பெருநகரத்தவளைகள்,ரப்பர் பந்து,பகலின் முதுகு கதைகள் வாசித்து முடித்து சில நிமிடங்களுக்கு வேறெதுவும் செய்ய முடியவில்லை(அடுத்த கதைக்குள் நுழைய அவகாசம் தேவைப்பட்டது).வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் பிரபஞ்சன் குறிப்பிட்டது போல தமிழுக்கு எஸ்.ரா தந்திருக்கும் கொடை இப்புத்தகம். விலை.ரூ.80,பக்கம் 135,வெளியீடு உயிர்மை பதிப்பகம்

2.அகநாழிகை இரண்டாவது இதழ் வெளிவந்துவிட்டது.கவிஞர்.மனுஷ்ய புத்திரனின் நேர்காணல் பொறி பறக்கிறது. லஷ்மி சரவணக்குமாரின் சிறுகதை(சற்றே பெரிய) அற்புதமானதொரு படைப்பு.ஒரு வனத்தின் காட்சிகள் கண் முன் விரிகின்றன.நதியலையின் மொழிபெயர்ப்பு கவிதையும் திலகபாமாவின் கவிதையும் அதிகம் கவர்ந்தன.இதழின் அட்டைப்படம் Superb!

3.கிரிக்கெட் உலகிற்கு இரண்டு இளம் சச்சின்கள் புயல்கள் கிடைத்திருக்கிறார்கள். பாகிஸ்தானின் உமர் அக்மல் மற்றும் மேற்கு இந்திய தீவுகளின் பரத்.
விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தி இருக்கிறார்கள்.இந்தியாவுக்கு செளராஸ்ட்ராவின் புஜாராவை எதிர்பார்க்கலாம்.

4.சேத்தன் பகத்தின் 2 States நாவலில் சென்னை குறித்தான பார்வையும் சில கெட்டவார்த்தைகளும் முகச்சுழிப்பை தருகிறது(நிதர்சனம் என்றபோதும்). இவரது இரண்டாவது நாவலின் விறுவிறுப்பு மற்ற எந்த நாவலிலும் இல்லை. ஆனாலும் தொடர்ந்து விற்பனையில் நம்பர் 1.காரணம் இளவட்டங்கள்.:)

5.வருகின்ற ஞாயிறு(டிசம்பர் 20) என் சிறுகதை நூல் வெளியீடு.பதிவ/வாசக நண்பர்கள் அனைவரையும் நட்புடன் வரவேற்கிறேன்.

-நிலாரசிகன்

Tuesday, December 15, 2009

இரண்டாம் பரிசு..




சர்வேசன் நடத்திய "நச்" சிறுகதை போட்டியில் என் கதை(அப்பா சொன்ன நரிக்கதை) இரண்டாவது பரிசு பெற்றிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.


முதல் பரிசு பெற்ற Sridhar Narayananக்கும், கலந்து கொண்ட அனைத்து எழுத்தாளர்களுக்கும் என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.

நட்புடன்,
நிலாரசிகன்.

Monday, December 14, 2009

சங்க மித்திரை


சங்க மித்திரை - சிறுகதை


ழைய சோற்றை தின்றுகொண்டிருந்த மணி பெரும் சத்தம் கேட்ட திசையை நோக்கி குரைக்க ஆரம்பித்த போது அடுப்பங்கரையில் சமைத்துக்கொண்டிருந்த அம்மாவும், பழைய செய்தித்தாள்களை எடைக்கு போடுவதற்குகட்டிக்கொண்டிருந்த அப்பாவும் வேகமாக பின்வாசலுக்கு ஓடினர். பள்ளிக்கூடத்திற்கு கிளம்பிக்கொண்டிருந்த என் காதுகளை கிழித்துவிடுவதாய் இருந்தது அந்த சத்தமும் மணியின் குரைப்பும்.
வீட்டை சுற்றிலும் அமைக்கப்பட்டிருக்கும்
தென்னந்தட்டி வேலியிலொன்றை பிரித்துவிட்டு பின்னாலிருக்கும் தோட்டத்திற்குள் நுழைந்தார் அப்பா.பதறியபடி பின்னால் ஒடினாள் அம்மா. என்னவென்றே தெரியாமல் தெரிந்துகொள்ளும் அவசரத்தில் அம்மாவை தொடர்ந்தேன் நான். தோட்டத்து கிணற்றில் தத்தளித்துக்கொண்டிருந்தாள் மித்திரை. கண்ணிமைக்கும் நேரத்தில் கிணற்றில் குதித்து அவளது முடியை பற்றிக்கொண்டார் அப்பா. சத்தம் கேட்டு தேங்காய் உரித்துக்கொண்டிருந்த பாண்டி அண்ணனும் இன்னும் சிலரும் ஓடி வந்தார்கள். பாண்டி அண்ணன் மோட்டார் ரூமிலிருந்து வடக்கயிற்றை கொண்டுவந்து கிணற்றுக்குள் ஒரு நுனியை வீசிவிட்டு மற்றொரு நுனியை அருகிலிருந்த வேப்பமரத்தில் கட்டினார். அதற்குள் மேலும் இருவர் கிணற்றுக்குள் குதித்து மித்திரையின் கைகளை பிடித்துக்கொண்டனர். ஏதோ முனகிக்கொண்டிருந்தாள் அவள். அவளது நீண்ட கூந்தல் கருமேகம் போல் கிணற்றில் மிதந்து கொண்டிருந்தது. கட்டியிருந்த பச்சை தாவணி இறக்கைபோல் விரிந்து இருபுறமும் மிதந்தது. நார்கட்டிலை உள்ளிறக்கி அவளை மேலே கொண்டுவருவதற்கு அரைமணி நேரத்திற்கும் மேலானது.

விஷயம் கேள்விபட்டு மித்திரையின் அம்மா மூச்சிரைக்க ஓடிவந்தாள். வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைக்க ஆரம்பித்தவளை கையமர்த்தினார் அப்பா. அப்போதும் முந்தானையால் வாயை பொத்திக்கொண்டு அழுதாள். உடலெங்கும் நனைந்திருக்க கைகளை தரையில் ஊன்றிக்கொண்டு கால்களை நீட்டி உட்கார்ந்திருந்தாள் மித்திரை. கண்கள் இரத்தச் சிவப்பாய் மாறியிருந்தன.பார்வை மட்டும் விறைத்திருந்தது. கிணற்றில் ஏன் குதித்தாய் என்று ஒவ்வொருவராய் கேட்டு பதிலேதும் கிடைக்காமல் கலைந்து சென்றனர்.கடைசி ஆளாக நான் கிளம்பும்போது அவளது தோளை உலுக்கி "அந்த சண்டாளன இன்னுமாடி நெனச்சுகிட்டு கிடக்க?" மித்திரையின் அம்மா கேட்டது என் காதில் விழுந்தது. அந்தசண்டாளன் யாரென்று எனக்கும் தெரியும்.

o0o
சங்க மித்திரை எங்கள் வீட்டிற்கு எதிர்வீட்டில்தான் வசிக்கிறாள்.
அப்பா கிடையாது. ஒரே ஒரு தம்பி என்னுடன் ஏழாம் வகுப்பில் படிக்கிறான். தினக்கூலிக்கு வாழைத்தோட்டத்திற்கு செல்பவள். கறுப்பு, ஆனால் லட்சணம்.பார்த்தவுடன் எல்லோரிடமும் சிரித்து பேசுவாள்.கிண்டலும் கேலியும் கலந்த அவளது பேச்சில் லயித்து நிற்பாள் என் அம்மா. மித்திரை எங்கள் வீட்டிற்கு வந்துவிட்டால் ஊரில் நடக்கும் அத்தனை விஷயங்களும் அம்மாவின் காதுகளுக்கு வந்துவிடும். கருக்கலில் வீட்டுத்திண்ணையில் உட்கார்ந்துகொண்டு பேசிக்கொண்டே இருப்பார்கள் இருவரும்.அப்பா கடையை சாத்திவிட்டு வரும் வரை சலிக்காமல் தொடரும் பேச்சு. மேலத்தெரு வெள்ளைப்பாண்டியும் இவளுடன் வேலைபார்க்கும் செவ்வந்திக்கனியும் காதலிப்பதும்,செவ்வந்திக்கனியின் மார்பில் வெள்ளை என்று பச்சை குத்திகொண்டதும் மித்திரை மூலமாகவே தெரிந்துகொண்டாள் அம்மா.செவ்வந்திக்கனி அவள் அப்பாவுக்கு பயந்ததை விட நூறு மடங்கு அதிகம் மித்திரையின் குத்தலான பேச்சுக்கு பயந்தாள். "என்ன புள்ள வலமாருல வெள்ளன்னு குத்திகிட்ட இடமாரு சும்மாதான இருக்கு பாண்டின்னு குத்திகிட வேண்டியதானே?"சொல்லிவிட்டு சத்தம்போட்டு சிரிப்பாள்.

அம்மன் கோவில் திருவிழா மிகச்சிறப்பாக நடந்துகொண்டிருந்தபோதுதான் முதன் முதலில் அவனை பார்த்தேன். பெல் பாட்டம் பேண்ட்டும்,நீளமான காலர் சட்டையுமாய் "ஒருதலை ராகம்" சங்கர் போலிருந்தான். அடர்த்தியான மீசையும் பளிச்சென்ற சிரிப்பும் அவனை பார்த்தவுடனே இந்த பொட்டல்காட்டில் இவன் அந்நியனாகத்தானிருக்க வேண்டும் என்று உணர்த்தியது. தர்மகர்த்தாவின் தூரத்து சொந்தம்,சென்னைக்காரன் என்கிற விஷயம் கேள்விப்பட்டவுடன் சிறுவர் பட்டாளம் அவனை சுற்ற ஆரம்பித்தது.நானும் குழாய் பேண்ட் அண்ணே குழாய் பேண்ட் அண்ணே என்று உள்ளுக்குள் பரிகசித்துக்கொண்டே பின் தொடர்ந்தேன். வாயாடித்திரிந்த மித்திரை வாய் பிளந்து ரசித்த முதல் ஆண்மகன் அவன் தான்.
வாழைத்தோட்டத்தை பார்க்க வந்தவனின் கண்களில் பூஞ்சிட்டாய் மித்திரை விழுந்ததும் அதன் பிறகு ஊர் அறியா பொழுதுகளில் இரு உயிர்கள் சந்தித்துக்கொண்டதும் தொடர்ந்தபடியே இருந்தன. என்னை கடக்கும்போதெல்லாம் பின்னந்தலையில் தட்டிவிட்டு "ஒழுங்கா படிடா இல்ல வாத்தியாருகிட்ட வத்தி வச்சுருவேன்" என்றவள் அவனது வருகைக்குப்பின் என்னை பொருட்டாகவே நினைத்ததில்லை. அவள் தம்பியை பார்க்க போகும்போதெல்லாம் ஏதாவது வம்பிழுத்தவள் இப்போது ஏதோவொன்றை இழந்தவளாய் கயிற்றுக்கட்டிலில் புரண்டுகொண்டிருந்தாள். ஒரு முறை அவள் வீட்டிற்கு சென்றபோது சுவற்றில் சாய்ந்துகொண்டு கால்நீட்டி உட்கார்ந்திருந்தாள். கள்குடித்தவள் போல் கண்கள் பாதி திறந்தும் திறக்காமலும் இருந்தன. ஓடிச்சென்று அவள் மடியில் படுத்துக்கொண்டு பின் ஒரே ஓட்டமாக ஓடிவிடலாம் என்று தோன்றியது எனக்கு. பின்னந்தலையில் அடிப்பவள் மூக்கை உடைத்துவிட்டால் என்னசெய்வது? பேசாமல் திரும்பி விட்டேன்.

o0o
அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டு மித்திரை அமர்ந்திருந்த நேசப்பொழுதை அழுக்கு கண்களுடன் பார்த்துச்சென்ற எவனோ ஒருவன் தர்மகர்த்தாவுக்கு வாய்த்தந்தியில் செய்தியை தடதடத்தபோது திருக்கை வால் சாட்டையால் விளாசி தள்ளிவிட்டார் குழாய் அண்ணனை.
பெண்பிள்ளை என்பதால் மித்திரையை எச்சரித்து அனுப்பிவிட்டார்.மறு நாள் நொண்டிக்குதிரையாய் பஸ் ஏறிவிட்டான் அவன்.
அவன் சென்றபின் ஒருவாரம் வீட்டுக்குள் முடங்கிக்கிடந்தாள் மித்திரை. கண்கள் எப்போதும் அழுதுகொண்டே இருக்கும். அவளை பார்க்க பார்க்க எனக்கும் அழுகை வரும். அவள் கண்களை துடைத்துவிட்டு ,கைகளை பிடித்துக்கொண்டு கொஞ்ச நேரம் நடக்க ஆசையாயிருக்கும். அவள் எனக்குள் நடக்கும் போராட்டங்களை உணர்வதில்லை என்று புரியும்போது ஏமாற்றத்துடன் விளையாட போய்விடுவேன். ஒரு மாதம் கழித்துதான் இந்த கிணற்றில் குதிக்கும் சம்பவம் நிகழ்ந்தேறியது. அந்த சண்டாளனை இன்னும் நினைத்துக்கொண்டிருக்கிறாளே என்று கோபமும் மறுநிமிடம்
அனுதாபமும் என்னை சூழ்ந்துகொண்டது. யாரையும் திருமணம் செய்யாமல் என்னுடனே எப்போதுமிருப்பாள் என்கிற எண்ணத்தில் அவள் அம்மா
பாறாங்கல்லை தூக்கிப் போட்டாள்.

அடுத்த மாதமே தன் தம்பிக்கு கட்டி வைத்தாள். மித்திரை ஒரு வார்த்தையும் பேசாமல் எப்போதும் வாடிய முகத்துடனே இருந்தாள். திருமணம் முடிந்து இருவரும் பக்கத்து ஊருக்கு போனபோதுதான் தாங்கிக்கொள்ள முடியாத துயரம் என்னை சூழ்ந்துகொண்டது.
அவளும் புகுந்தவீடு போவதற்கு முதல்நாள் எங்கள் வீட்டிற்கு வந்து அம்மாவிடம் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தாள். அம்மா எதுவும் மனசுல வச்சுக்காம நல்லா குடும்பத்த நடத்தும்மா என்றவுடன் தலையை குனிந்துகொண்டாள். திண்ணையில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்த எனக்கு அவளது தலைகுனிவை கண்டவுடன் கோபமாக வந்தது. எங்கும் எதற்கும் தலை குனியாதே மித்திரை. நீ நல்லவள். மனம் திரும்ப திரும்ப அதே வரிகளை சொன்னபோது என்னருகில் வந்து "உன்னை விட்டுட்டு போறதுக்கு கஷ்டமா இருக்குடா" என்றாள்.எதிர்பார்க்கா இவ்வார்த்தைகள் மனதின் உட்சுவர்களில் மோதி பலமுறை எனக்குள் ஒலித்தது. மித்திரைக்கு என்னை பிடிக்கும் என்பது தெரியும். ஆனால் என் பிரிவு வருத்தம் தருவதாக இருக்கும் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. எதிர்வீட்டில் இருந்தபோது நினைத்த நேரமெல்லாம் மித்திரையை ஓடிச்சென்று பார்த்து, பேசி வளர்ந்தவன் அவளது பிரிவை தாங்கமுடியாமல் துடிதுடித்தேன்.

o0o

பள்ளிமுடிந்து கல்லூரியில் இளங்கலை பயில கோவைக்கு சென்றுவிட்டபின்பு வாழ்க்கை தடம் மாறியது. நல்லதொரு வேலை கிடைத்து திருமணம் முடிந்து என் மகள் பிறக்கும்வரை என் வாழ்விலிருந்து மித்திரை எனும் பெண் மறக்கப்பட்ட ஜீவனாகியிருந்தாள். பிரசவ வலியெடுத்து
மருத்துவமனைக்கு விரைந்து மனைவியை ஆபரேஷன் தியேட்டருக்குள் அனுப்பிவிட்டு வெளியிலிருந்த பெஞ்சில் அமர்ந்தபோது எதிர் பெஞ்சில்
பெண்ணொருத்தி அமர்ந்திருந்ததை நான் கவனிக்கவில்லை. குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் என்கிற வேண்டுதலில் மனம் ஓடிக்கொண்டிருந்தது.சிறிது நேர ஆசுவாசத்திற்கு பின் எதிர் பெஞ்சை பார்த்தபோது லட்சம் சில்லுகளாய் உடைந்துபோனது இதயம். என் பால்யகனவுகளில் தாவணிதேவதையாய் வலம்வந்த என் மித்திரை எனக்கு முன் அமர்ந்திருக்கிறாள்.
காலம் அவளது செளந்தர்யத்தை சலவை செய்திருந்தபோதும்
சுருக்கங்கள் இல்லாத விரல்கள் வனப்பின் கடைசி நிமிடங்களில் பூமி பார்த்துக்கொண்டிருந்தன. கருமை நிறத்தாலான மெழுகு சிலை போல் என்னெதிரில் அமர்ந்திருந்தவளின் வயது நாற்பதை கடந்திருக்கும் என்பதை நம்புவது கடினமானதாய் இருந்தது.

"மித்திரை" என் குரல்கேட்டு திடுக்கிட்டவள் யாரென்று பார்வையால் வினவியபோது,சிறுவயதில் அவள் பிரிந்த அன்று ஏற்பட்ட பிரிவின் வாசம் என் நாசிக்குள் நுழைந்து குரலை உடைத்தது. "நான்....நான்..எதிர்வீட்டு செல்வராசு". உடன் மலர்ந்த விழிகளுடன் அருகில்வந்து கண்களுக்குள் உற்றுப்பார்த்தபடி கேட்டாள் "இன்னும் என்னை ஞாபகம் வச்சிருக்கியா ராசு?". சொல்லமுடியாத உணர்வுகளால் அதுவரை கட்டிவைத்திருந்த கண்ணீர் பொத்துக்கொண்டது. "நீ இன்னும் மாறவே இல்ல" என் கண்ணீர் துடைக்க கைகள் உயர்த்தியவள் துடைக்காமல் பின்னகர்ந்து பெஞ்சில் போய் உட்கார்ந்தாள் கொண்டாள். அப்போதுதான் அவளது சேலையின் நிறம் வெண்மை என்பதை கவனித்தேன்.

o0o
"பறவை போல் சிறகிருந்தால் எவ்வளவு அற்புதமானதாக இருந்திருக்கும் இந்த வாழ்க்கை" சங்கமித்திரை என்னிடம் சொன்னபோது
குளக்கரை படிக்கட்டில் உட்கார்ந்தபடி வறண்ட குளத்தை பார்த்துக்கொண்டிருந்தவன் நிமிர்ந்து அவளை பார்த்தேன். எவ்வித சலனமுமின்றி
படிக்கட்டில் ஊர்கின்ற கட்டெறும்புகளை கால்களால் நசுக்கிக்கொண்டிருந்தாள். என்னை விட பத்து வயது பெரியவள் எனினும் அவளை அக்கா என்று ஒருபோதும் நான் அழைத்ததில்லை. முதன் முதலில் அக்கா என்றபோதே "அக்கான்னு சொல்லாதடா பேர் சொல்லியே கூப்பிடேன்" செல்லமாக கன்னத்தில் தட்டிவிட்டு அவள் நடந்து சென்றது இருபது வருடங்கள் கழித்தும் என்னுள் அப்படியே இருக்கிறது. என்னை விட பெரியவளை அக்கா என்றழைக்காமல் பெயர் சொல்லி கூப்பிடுவது முதலில் கடினமாக தோன்றினாலும் உள்ளுக்குள் இனம் புரியாத சிலிர்ப்பு அப்போது இருந்தது.

"என்ன அப்படி புதுசா பார்க்குற?" மித்திரையின் இரண்டாவது கேள்வியில் தன்னிலை மறந்த உலகத்திலிருந்து இயல்புக்கு திரும்பினேன். "ஏன் சிறகிருந்தா உயர பறக்கலாம்னு நெனச்சியா?"என் கேள்விக்கு இரு நிமிட மெளனத்தை பதிலாக்கியவள் மெளனம் உடைத்து "இல்ல யாருமே பார்க்காத இடத்துக்கு தூரமா போயிடலாம்ல,அதான்"சொல்லி முடிக்கும்போது அந்த அழகிய கண்களில் நீர்கோர்த்திருந்தது.

"நான் இருக்கேன்ல? என்கூடவே இருப்பியா? என்னை விட்டுட்டு போறது கஷ்டமா இல்லையா?" துயரம் படர்ந்த வார்த்தைகளால் சன்னமாய் அவளிடம் கேட்டேன். சற்று நேர அமைதிக்குப்பின் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு என் அருகில் வந்தவள் பின்னந்தலையில் தட்டி "உன்கூடதான் இருப்பேன் ராசு" என்றபடி என் விரல் பற்றிக்கொண்டு உடன் நடக்க ஆரம்பித்தாள்.என் மகளின் பிஞ்சு விரல்களை தொட்ட போது ஏற்பட்ட ஸ்பரிசத்தை நினைவூட்டியது அவளது தொடுகை.தாய்மை நிரம்பிய அந்த ஸ்பரிசத்தில் மீண்டும் சிறுவனாக உருமாற துவங்கியிருந்தேன் நான்.

-நிலாரசிகன்.

Saturday, December 12, 2009

இருள் விலகும் கதைகள்



-----------------------------------------
நூலி்ன் பெயர்: இருள் விலகும் கதைகள்

பகுப்பு: சிறுகதைகள்

புத்தகத்தின் விலை: ரூ.90

பதிப்பகம்: தோழமை

தொகுப்பாசிரியர்: விஜய் மகேந்திரன்

-----------------------------------------

நவீன சிறுகதைகளின் காலகட்டமான இக்காலத்தில் தமிழ்ச்சிறுகதைகளின் பங்கு மிக முக்கியமானது. வெவ்வேறு விதமான பரிசோதனை முயற்சிகள்,தனித்து நிற்கும் கதைசொல்லல்,கற்பனைவீச்சின் உச்சத்தில் நிற்கும் கதைகள் என பல சிறுகதைகள் தமிழில் வந்த வண்ணம் உள்ளன.


இன்றைய இளம் எழுத்தாளர்களின் சிறுகதைகளை தொகுத்து தோழமை வெளியீடாக
வெளியிட்டிருக்கிறார் சிறுகதையாளர் விஜய் மஹேந்திரன்.

வா.மு.கோமு ,சுதேசமித்திரன்,ஷாராஜ்,கே.என்.செந்தில்,ஹரன் பிரசன்னா,எஸ்.செந்தில்குமார்,பாலைநிலவன்,லஷ்மி சரவணக்குமார்,சிவக்குமார் முத்தையா,விஜய் மகேந்திரன்,புகழ் மற்றும் என்.ஸ்ரீராம்
மொத்தம் 12 சிறுகதையாளர்களின் சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன.


ஒவ்வொரு கதைகளும் வெவ்வேறு முகம்கொண்டவையாக இருப்பது வாசகனுக்கு புதியதோர் அனுபவமாக இருக்கிறது. கதை சொல்லும் உத்திகளாலும்,கதைக்களத்தின் புதுமையாலும் அனைத்து கதைகளுமே ரசிக்கும்படி இருப்பது இத்தொகுப்பின் பலம்.இந்த தொகுப்பிற்காகவே எழுதப்பட்ட கதைகள் என்பதும் கூடுதல் பலம்.
இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ள 12 கதைகளில் மூன்று கதைகளை பற்றிய குறிப்புகள் மட்டும் இங்கே கொடுத்திருக்கிறேன்.


செறவிகளின் வருகை:


சிவக்குமார் முத்தையா எழுதியிருக்கும் இந்தக்கதையின் களம் புதிது.செறவி எனும் பறவைகளால் ஒரு மலையடிவார கிராமம் அல்லல்படுகிறது.கூட்டமாக வரும் அப்பறவைகள் விளைந்திருக்கும் நெல்மணிகளை தின்று மொத்த வயலையும் அழித்துவிட்டு போகின்றன. அந்த பறவைகளிடமிருந்து தங்கள் வயலை பாதுக்காக்க போராடும் கிராம மக்களின் வாழ்வை சித்தரிக்கிறது.கதையின் நாயகன் கலியனின் வாழ்க்கையை

செறவிகள் எப்படி கலைத்துப்போடுகின்றன என்பதை கதையின் முடிவு அற்புதமாய் எடுத்துரைக்கிறது.செறவிகளின் வருகை குறித்த விவரணைகள் அருமை. இந்த தொகுப்பிலிருக்கும் மிகச்சிறந்த கதை இது.


நகரத்திற்கு வெளியே:


விஜய மகேந்திரன் கணையாழியில் தனது முதல் படைப்பிலேயே அதிக கவனம் பெற்றவர். நகரத்திற்கு வெளியே கதை இளம் யுவதி ஒருத்தியை பற்றியது. அவளது காதலனால் அவள் படும் தவிப்பை சொல்லியிருக்கிறார்.நகரத்தில் நடக்கும் அவலங்களை முகத்தில் அறைந்தாற் போல் விவரிக்கிறது ஒவ்வொரு வரியும்.காதல் என்கிற பெயரில் நடக்கும் விஷம செயல்களை நகர பெண்கள் எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதே இக்கதையின் மூலக்கருவாக உணரமுடிகிறது.


காலவாயனின் காடு:

திரைப்படத் துறையில் பணிபுரியும் எழுத்தாளர் புகழின் கதையிது. மற்ற கதைகளிலிருந்து இதனை வேறுபடுத்தி காட்டுவது இதன் மொழி. சொல்கதை என்றபோதும் இதன் நுட்பமான விவரிப்பு ஆச்சர்யமூட்டுகிறது.வட்டார வழக்கில் வாசகனும் சங்கமித்துவிடுகிறான். காலவாயன் என்கிற விவசாயியின் மனவோட்டமாக கதை நீள்கிறது.நல்லதொரு கதை.

இருள் விலகும் கதைகள் நூலின் அட்டைப்படத்தின் வசீகரிப்பில்தான் இந்நூலை வாங்கினேன். இவை போன்ற தொகுப்பு நூல்கள் பல வெளிவர வேண்டும்.பல சிறுகதையாளர்களின் கதையை ஒரே நூலில் வாசிப்பது புதுவித வாசிப்பனுபவத்தை தருகிறது.ஒவ்வொரு கதையும் வெவ்வேறு பின்புலத்தை கொண்டிருப்பதால் வாசிப்பில் சலிப்பேற்படுத்தவில்லை.தொகுப்பாசிரியர் விஜய மகேந்திரன் கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியவர்.


-நிலாரசிகன்

நீர்க்கோல வாழ்வை நச்சி





நீர்க்கோல வாழ்வை நச்சி - நூல் விமர்சனம்
 
-----------------------------------------------------------------------
நூலின் பெயர் : நீர்க்கோல வாழ்வை நச்சி
வெளியீடு : அகநாழிகை பதிப்பகம்
விலை : ரூ.40
பக்கம்: 64
நூலாசிரியர் : லாவண்யா சுந்தரராஜன்
-----------------------------------------------------------------------
 

சிறு குழந்தையின் வெள்ளை மனதை ஒத்த இவ்வாழ்வின் அற்புத கணங்களை ரசிக்கவும்,வாழவும் விடாமல் துரத்தியடிக்கும் இயந்திர உலகின் கோரப்பிடியிலிருந்து நாம் தப்பிக்க துணைபுரிவது கவிதையுலகம். அங்கே நமக்கான வாழ்வை,தேவைகளை,துணையை
அழகியலை நாமே சிருஷ்டித்துக்கொள்ள முடியும். எதைப் பற்றிய கவலையுமின்றி,வாழ்தல் குறித்தான பிரக்ஞையின்றி கவிதைக்குள் வாழ்தல் நம்மை ரசனைகளில் குவியலாக்கிவிடுகிறது. 

நினைத்தவுடன் பட்டாம்பூச்சியாக,தேன்சிட்டாக,முகிலாக,நிலவாக,தூறல்மழையாக உருமாறிக்கொள்ள கவிதையுலகில் மட்டுமே சாத்தியப்படுகிறது.மனம் கனக்கின்ற போதெல்லாம் கவிதைத்தோள் தேடி அலைவது ஒரு வகை இன்பத்தையே தந்தாலும் யதார்த்த வாழ்க்கையை விட்டு கவிதை வாழ்வு புறம் தள்ளியே எப்போதும் இருக்கிறது. கவிதை வாசித்தல் தருகின்ற சொற்ப நேர சந்தோஷங்களில்தான் தொக்கி நிற்கிறது மிச்ச வாழ்க்கை.

நீர்க்கோல வாழ்வை நச்சி கவிதை நூல் மூலம் இலக்கிய உலகிற்குள் தன் முதலடியை எடுத்து வைத்திருக்கிறார் லாவண்யா. இத்தொகுப்பின் தலைப்பின் வசீகரமே இதனை உடனே படிக்க வேண்டும் என்கிற ஆவலை என்னுள் எழச் செய்தது. இணையத்திலும் சில சிற்றிதழ்களிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்த லாவண்யாவின் கவிதைகளை மொத்தமாக ஒரே இடத்தில் படித்த போது முதல்தொகுப்பு என்ற எண்ணமேதும் இல்லாத வகையில் சிறப்பாகவே இருந்தன பல கவிதைகள். இயல்பான மொழியில் எழுதப்பட்டிருக்கும் கவிதைகளில் புற உலகின் மீதான நுண்ணிய கவனித்தலை அற்புதமாக பதிவு செய்திருக்கிறார் லாவண்யா.

இத்தொகுப்பின் மிகச்சிறந்த கவிதை "நீர்த்துளியும் நாய்க்குட்டியும்" என்பேன்.இக்கவிதையின் கடைசி ஆறு வரிகளில் சட்டென்று மனம் இறகாகி  காற்றில் மிதக்க ஆரம்பித்துவிடுகிறது.

"உன்னைத் தெளித்த
நீர்த்துளிப்பட்டு சிலிர்த்தது
என் நினைவென்னும் நாய்க்குட்டி

உனது குடை விரிப்புகளில்
சட்டென அடங்கியது
எனக்கான வான்"

"கவிதை போலும்" என்றொரு கவிதையில் நிராகரிப்பின் வலியை,பிரிதலின் கடும்துயரத்தை,எச்சிலென தன்னை இகழ்ந்த உறவை அற்புதமாக எழுதியிருக்கிறார்.

"இறுதியில் நீ உமிழ்ந்துவிட்டு போன
எச்சில் மிதக்கும் சாக்கடையில் நிலவொன்று
கலங்கியது எனக்காக"

கடைசி மூன்று வரிகளை நான்கைந்து முறை வாசித்தேன்.எதுவும்/யாரும் நிரந்தரமற்ற இவ்வுலகில் யாரும் யாருடனும் இல்லை என்கிற நிதர்சன அவலம் கண்முன் தோன்றியது.

"கண்ணாடிக் கோப்பைகளும் சில பிரியங்களும்" கவிதை மற்ற கவிதைகளிலிருந்து வேறுபட்டு நவீனகவிதையாக அமைந்திருக்கிறது. அகத்தின் குமுறலாக இக்கவிதை பரிணமித்திருக்கிறது.

ஞாபகமீட்சி,மனம் பழகாத பயம்,தொடரும் பயணம்,பிரியங்களின் பிரியம்,என் இருப்பும் உன் இருப்பும் - இவை அனைத்தும் இத்தொகுப்பிற்கு வலுசேர்க்கும் கவிதைகள்.

தானியங்கி குழாய்களும் நானும்,கொஞ்சம் கண்ணீர் சில கவிதைகள் - இவை கவிதை தொகுப்பின் அடர்த்தியை குறைக்கும் கவிதைகள்.

லாவண்யா எழுத ஆரம்பித்த நாள் முதல் அவரது எழுத்துக்களை வாசித்து வருகிறேன். கடந்த ஓராண்டியில் இவரது மொழிவளமும்,கவிதைத்தேடலின் வளர்ச்சியும் அதீதமாகி இருப்பதை இந்தக்கவிதைகள் உணர்த்துகின்றன. தொடர்ச்சியான வாசிப்பனுபவம் மட்டுமே கவிதைகளின்
குறைகளை களைய உதவும். தேவையற்ற வார்த்தைகளை நீக்குவதும்,ஒரே வார்த்தையை அதிகம் உபயோகப்படுத்தாமலிருப்பதும் எழுத எழுதத்தான் கைக்கூடும்.  இனி எழுதும் கவிதைகளில் இதனை லாவண்யா நினைவில் கொள்ள வேண்டும். அப்போதுதான்
இதுவரை எழுதிய கவிதைகளை கடந்து செல்வது எளிதாகும். 

லாவண்யா மேலும் பல கவிதைகள் படைத்திட என் மனமார்ந்த வாழ்த்துகள்.



-நிலாரசிகன்