Saturday, December 12, 2009

நீர்க்கோல வாழ்வை நச்சி





நீர்க்கோல வாழ்வை நச்சி - நூல் விமர்சனம்
 
-----------------------------------------------------------------------
நூலின் பெயர் : நீர்க்கோல வாழ்வை நச்சி
வெளியீடு : அகநாழிகை பதிப்பகம்
விலை : ரூ.40
பக்கம்: 64
நூலாசிரியர் : லாவண்யா சுந்தரராஜன்
-----------------------------------------------------------------------
 

சிறு குழந்தையின் வெள்ளை மனதை ஒத்த இவ்வாழ்வின் அற்புத கணங்களை ரசிக்கவும்,வாழவும் விடாமல் துரத்தியடிக்கும் இயந்திர உலகின் கோரப்பிடியிலிருந்து நாம் தப்பிக்க துணைபுரிவது கவிதையுலகம். அங்கே நமக்கான வாழ்வை,தேவைகளை,துணையை
அழகியலை நாமே சிருஷ்டித்துக்கொள்ள முடியும். எதைப் பற்றிய கவலையுமின்றி,வாழ்தல் குறித்தான பிரக்ஞையின்றி கவிதைக்குள் வாழ்தல் நம்மை ரசனைகளில் குவியலாக்கிவிடுகிறது. 

நினைத்தவுடன் பட்டாம்பூச்சியாக,தேன்சிட்டாக,முகிலாக,நிலவாக,தூறல்மழையாக உருமாறிக்கொள்ள கவிதையுலகில் மட்டுமே சாத்தியப்படுகிறது.மனம் கனக்கின்ற போதெல்லாம் கவிதைத்தோள் தேடி அலைவது ஒரு வகை இன்பத்தையே தந்தாலும் யதார்த்த வாழ்க்கையை விட்டு கவிதை வாழ்வு புறம் தள்ளியே எப்போதும் இருக்கிறது. கவிதை வாசித்தல் தருகின்ற சொற்ப நேர சந்தோஷங்களில்தான் தொக்கி நிற்கிறது மிச்ச வாழ்க்கை.

நீர்க்கோல வாழ்வை நச்சி கவிதை நூல் மூலம் இலக்கிய உலகிற்குள் தன் முதலடியை எடுத்து வைத்திருக்கிறார் லாவண்யா. இத்தொகுப்பின் தலைப்பின் வசீகரமே இதனை உடனே படிக்க வேண்டும் என்கிற ஆவலை என்னுள் எழச் செய்தது. இணையத்திலும் சில சிற்றிதழ்களிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்த லாவண்யாவின் கவிதைகளை மொத்தமாக ஒரே இடத்தில் படித்த போது முதல்தொகுப்பு என்ற எண்ணமேதும் இல்லாத வகையில் சிறப்பாகவே இருந்தன பல கவிதைகள். இயல்பான மொழியில் எழுதப்பட்டிருக்கும் கவிதைகளில் புற உலகின் மீதான நுண்ணிய கவனித்தலை அற்புதமாக பதிவு செய்திருக்கிறார் லாவண்யா.

இத்தொகுப்பின் மிகச்சிறந்த கவிதை "நீர்த்துளியும் நாய்க்குட்டியும்" என்பேன்.இக்கவிதையின் கடைசி ஆறு வரிகளில் சட்டென்று மனம் இறகாகி  காற்றில் மிதக்க ஆரம்பித்துவிடுகிறது.

"உன்னைத் தெளித்த
நீர்த்துளிப்பட்டு சிலிர்த்தது
என் நினைவென்னும் நாய்க்குட்டி

உனது குடை விரிப்புகளில்
சட்டென அடங்கியது
எனக்கான வான்"

"கவிதை போலும்" என்றொரு கவிதையில் நிராகரிப்பின் வலியை,பிரிதலின் கடும்துயரத்தை,எச்சிலென தன்னை இகழ்ந்த உறவை அற்புதமாக எழுதியிருக்கிறார்.

"இறுதியில் நீ உமிழ்ந்துவிட்டு போன
எச்சில் மிதக்கும் சாக்கடையில் நிலவொன்று
கலங்கியது எனக்காக"

கடைசி மூன்று வரிகளை நான்கைந்து முறை வாசித்தேன்.எதுவும்/யாரும் நிரந்தரமற்ற இவ்வுலகில் யாரும் யாருடனும் இல்லை என்கிற நிதர்சன அவலம் கண்முன் தோன்றியது.

"கண்ணாடிக் கோப்பைகளும் சில பிரியங்களும்" கவிதை மற்ற கவிதைகளிலிருந்து வேறுபட்டு நவீனகவிதையாக அமைந்திருக்கிறது. அகத்தின் குமுறலாக இக்கவிதை பரிணமித்திருக்கிறது.

ஞாபகமீட்சி,மனம் பழகாத பயம்,தொடரும் பயணம்,பிரியங்களின் பிரியம்,என் இருப்பும் உன் இருப்பும் - இவை அனைத்தும் இத்தொகுப்பிற்கு வலுசேர்க்கும் கவிதைகள்.

தானியங்கி குழாய்களும் நானும்,கொஞ்சம் கண்ணீர் சில கவிதைகள் - இவை கவிதை தொகுப்பின் அடர்த்தியை குறைக்கும் கவிதைகள்.

லாவண்யா எழுத ஆரம்பித்த நாள் முதல் அவரது எழுத்துக்களை வாசித்து வருகிறேன். கடந்த ஓராண்டியில் இவரது மொழிவளமும்,கவிதைத்தேடலின் வளர்ச்சியும் அதீதமாகி இருப்பதை இந்தக்கவிதைகள் உணர்த்துகின்றன. தொடர்ச்சியான வாசிப்பனுபவம் மட்டுமே கவிதைகளின்
குறைகளை களைய உதவும். தேவையற்ற வார்த்தைகளை நீக்குவதும்,ஒரே வார்த்தையை அதிகம் உபயோகப்படுத்தாமலிருப்பதும் எழுத எழுதத்தான் கைக்கூடும்.  இனி எழுதும் கவிதைகளில் இதனை லாவண்யா நினைவில் கொள்ள வேண்டும். அப்போதுதான்
இதுவரை எழுதிய கவிதைகளை கடந்து செல்வது எளிதாகும். 

லாவண்யா மேலும் பல கவிதைகள் படைத்திட என் மனமார்ந்த வாழ்த்துகள்.



-நிலாரசிகன்

11 comments:

said...

சுட சுட பதிவா.??

சகோதரி லாவண்யாவிற்கு வாழ்த்துகள்.

நண்பன் நிலாவிற்கு நன்றி.

said...

வாழ்த்துக்கள்..நான் சென்னை வந்ததும் நம் சக பதிவர்களின் எல்லா புத்தகங்களையும் வாங்க வேண்டும்.

said...

லாவண்யாவிற்கு வாழ்த்துக்கள்.

இணையத்தின் மூலம் இந்த புத்தகத்தை வாங்க முடியுமா? எனது வீட்டிற்கு ஒரு பிரிதியினை அனுப்பு ஆவலாக உள்ளேன்.

said...

புத்தக வெளியீட்டு விழாவில் உங்களை சந்தித்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி நிலா ரசிகன் அவர்களே..:-) முடிந்த வரை இன்று மாலை வரப்பார்க்கிறேன் .. வந்தால் கண்டிப்பாய் உங்களை சந்திக்கிறேன்.. நன்றி.

said...

தோழி லாவண்யாவுக்கு என் வாழ்த்துக்கள்...
உங்களுடைய எழுத்து நடை மிகவும் ரசிக்கும் படி இருந்ததது..கவிதை போலவே..

said...

//சிறு குழந்தையின் வெள்ளை மனதை ஒத்த இவ்வாழ்வின் அற்புத கணங்களை ரசிக்கவும்,வாழவும் விடாமல் துரத்தியடிக்கும் இயந்திர உலகின் கோரப்பிடியிலிருந்து நாம் தப்பிக்க துணைபுரிவது கவிதையுலகம். அங்கே நமக்கான வாழ்வை,தேவைகளை,துணையை
அழகியலை நாமே சிருஷ்டித்துக்கொள்ள முடியும். எதைப் பற்றிய கவலையுமின்றி,வாழ்தல் குறித்தான பிரக்ஞையின்றி கவிதைக்குள் வாழ்தல் நம்மை ரசனைகளில் குவியலாக்கிவிடுகிறது.
நினைத்தவுடன் பட்டாம்பூச்சியாக,தேன்சிட்டாக,முகிலாக,நிலவாக,தூறல்மழையாக உருமாறிக்கொள்ள கவிதையுலகில் மட்டுமே சாத்தியப்படுகிறது.மனம் கனக்கின்ற போதெல்லாம் கவிதைத்தோள் தேடி அலைவது ஒரு வகை இன்பத்தையே தந்தாலும் யதார்த்த வாழ்க்கையை விட்டு கவிதை வாழ்வு புறம் தள்ளியே எப்போதும் இருக்கிறது. கவிதை வாசித்தல் தருகின்ற சொற்ப நேர சந்தோஷங்களில்தான் தொக்கி நிற்கிறது மிச்ச வாழ்க்கை.//

அருமை நிலா!

மிக அற்புதமான பகிர்வு,விமர்சனம்!

லாவண்யாவிற்கு அன்பும்,வாழ்த்துக்களும்!

said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க நிலா, லாவண்யா அவர்களுக்கு வாழ்த்துகள்.

said...

நீர்க்கோல வாழ்வை நச்சி-ithil....நீர்க்கோல வாழ்வை-varaikkum purikirathu.நச்சி-yennathu ithu?

nijamaave thalaippu puriyala nilaa..

said...

//கவிதை வாசித்தல் தருகின்ற சொற்ப நேர சந்தோஷங்களில்தான் தொக்கி நிற்கிறது மிச்ச வாழ்க்கை//

ithai naan nirayaa time unarnthirukkiren...

azhagu...nila

:)

said...

மிக்க‌ ந‌ன்றி நிலார‌சிக‌ன்.

"நீர்க்கோல‌ வாழ்வை ந‌ச்சி"

நீர்க்குமிழி போன்ற‌ வாழ்வின் மேல் ப‌ற்று கொண்டு...

வாழ்த்திய‌ அனைவர்க்கும் ந‌ன்றி.

said...

so..,"ந‌ச்சி"means "patru"-nu yeduththukkanumo? SWEET...


NANTRI LAVANYAA.......:)