Thursday, October 18, 2012

மழைக்காலப் பகல்





ஒரு மழைக்காலப் பகலை உன்னுடன்
களிப்பது எதனுடனும் ஒப்பிடமுடியாதது.
அணைப்பின் கதகதப்பில்
மெல்லியதாய் நீ உதிர்க்கும்
முனகல்கள் முகில்களாய்
தவழ்ந்து தவழ்ந்து
என் உயிர் நிரப்புகிறது.
அறையெங்கும் படர்கின்ற
செயற்கைக்குளிரின் நடுவில்
தகிக்கும் வெப்பநதியாய்
பிணைந்திருக்கிறோம்.
முதுகில் பதியும் இதழ்களின்
ஈரத்தில் உடல் சிலிர்த்து
உதடு கடிக்கிறாய்.
ஒரு மழைக்காலப் பகலை உன்னுடன்
களிப்பது எதனுடனும் ஒப்பிடமுடியாதது
மழைக்குப் பின் ஒன்றுடனொன்று
உரசியபடி அமர்ந்திருக்கும்
தேன்சிட்டுக்களை போல.
-நிலாரசிகன்.

Sunday, October 07, 2012

வனப்பூ



நீண்டிருக்கும் இரவில் உன்னோடிருப்பது
எதனுடனும் ஒப்பிட முடியாதது.
கூந்தலுக்குள் நுழைந்து வெளியேறும்
விரல்களின் சிலிர்ப்பில் மின்மினிகள்
உடலெங்கும் மின்னி மறையும்.
விடியலுக்காக காத்திருக்கும் பறவைகளின்
செளந்தர்ய மெளனமென
மடியில் புரள்கின்றன உன் மோனங்கள்.
இதழ்களில் பதிந்து பிரியும்
இதழ்களில் நிரம்பித்தளும்புகிறது
காதலென்னும் பெருங்கடல்.
காட்டிடையே அமைந்திருக்கும்
சிறுகுடிலின் நடுவே
உடலெங்கும் பூக்கள் மலர
சிவந்திருக்கிறாய்.
வனப்பூக்களின் வசீகர வாசம்
நம் அறையெங்கும் படர்ந்திருக்கிறது.
நீண்டிருக்கும் இரவில் உன்னோடிருப்பது
எதனுடனும் ஒப்பிட முடியாதது.
ஒரு
வனப்பூவின் உயிர் நிரப்பும்
அதீத மணத்தைப்போல..

-நிலாரசிகன்.