Thursday, January 31, 2008

மறக்கப்படுதலுக்கான உரையாடல்...

வேலைக்காரிக்குரிய
அத்தனை தேர்வுகளிலும்
தேர்ச்சி பெற்றார்
பாட்டி.

வேலைக்காரனுக்குரிய
அத்தனை தேர்வுகளிலும்
தோல்வி அடைந்தார்
தாத்தா.

அடுக்களை கிடைத்தது
பாட்டிக்கு.
திண்ணை கிடைத்தது
தாத்தாவுக்கு.

மறக்கப்படுதலின் வலியை
மறைக்க இயலாமல்
மரணத்தை சுற்றியே
சுழல்கிறது தாத்தாவுக்கும்
பாட்டிக்கும் இடையேயான
உரையாடல்.

Monday, January 28, 2008

நீ,நான்,காதல்(குறுந்தொடர்) - 2. காதல்காலம்


2.காதல்காலம்:

அவன்:

அதிகாலை பனித்துளியில்
குளித்த ரோஜாவொன்றை
உனக்குத் தந்து "விரும்புகிறேன்"
என்று சொல்லிவிட்டு
வேகமாய் வந்துவிட்டேன்.
கண்மணி!
அந்த சிறுரோஜாவுக்குள் புதைந்து
இருப்பது சொல்ல முடியாமல்
தவித்த என் காதலும்,
சிதையிலிட்டாலும் மாறிவிடாத
என் நேசமும்.

அவள்:

இதயத்தின் நான்கு
அறைகளிலும் ஒலிக்கிறது
நீ சொன்ன காதல்வார்த்தை.
ஒரு தேவதையை போன்ற
மிடுக்குடன் என் வீடு செல்கிறேன்
நீ தந்த ரோஜாவுடனும்
உனக்கென நான் வாங்கி வந்த
ரோஜாவுடனும்!

அவன்:

என்னை மறந்து
வானம்பார்த்து புன்னகைத்துக்
கொண்டிருந்தேன்..
தன்னைப் பார்த்து
புன்னகை செய்வதாக
எண்ணிச் சிரிக்கிறது
அந்த வான் நிலா..
பகல்நிலவு உனக்கு மட்டும்தானடி
என் புன்னகை சொந்தம்
என்று எப்படி புரியவைப்பேன்?

அவள்:

எதிர்வீட்டு குழந்தைக்கு
அதிகமாய் இன்று
நான் முத்தமிட்டதை
சந்தேகத்துடன் பார்த்துச் செல்கிறாள்
அம்மா.
குழந்தையென உன்னை
எண்ணி நான் தருகின்ற
முத்தங்கள் உன்னைச் சேர்கின்ற
நாளுக்காக காதலுடன் காத்திருக்கிறேன்.

அவன்:

கடற்கரையில்
கடல்ரசித்து அமர்ந்திருந்தோம்.
உன் பொன்விரல்களால்
மணலில் கோலமிட்டுக்கொண்டு
தலைகவிழ்ந்திருந்தாய்..
உன் விரல்பற்றிக்கொள்ள
நினைத்து இயலாமல்
அலைரசிக்கிறேன் நான்.

அவள்:

ஏதேதோ பேசிவிட எண்ணி
எதுவும் பேசாமல்
அமர்ந்திருக்கிறேன்.
ஊமையாக வாழவும் சம்மதம்
நாளெல்லாம் காதல்மொழி
நீ பேசினால்.

அவன்:

தினமும் சந்திக்கிறோம்.
ஒன்றாக உணவருந்துகிறோம்.
ஒரே பேருந்தில் பயணிக்கிறோம்.
இந்த பிறப்பு முழுவதும் பேசினாலும்
தீராத காதலை நெஞ்சுக்குள்
சுமந்துகொண்டு
திருக்குறளென இருவரிகள்
மட்டும் பேசுகிறோம்.

அவள்:

உன்னிடம் பேச
நினைத்ததையெல்லாம்
என் வீட்டு செவ்வந்திச் செடியிடமும்
என் ப்ரிய நாய்குட்டியிடமும்
பேசித் திரிகிறேன்.
எனக்கென்று ஒரு தனியுலமே
உருவாக்கித் தந்தவன் நீ.
மழையைத் தாங்கும் மண்ணைப் போல்
காத்திருப்பேன் வாழ்வெல்லாம்
உனக்காக.

அவன்:

உன் விரலோடு விரல்
கோர்த்து வெகுதூரம்
நடக்க வேண்டும்.
நீ களைத்தால்
கையில் உன்னை ஏந்தி
நம் பயணம் தொடர வேண்டும்.
நான் வேண்டும் வரமெல்லாம்
வண்ணமயில் நீ மட்டும்தான்.

அவள்:


நிலவாக,மலராக,தேன்சிட்டாக,
பட்டாம்பூச்சியாக
மனம் நிறைந்த கன்னியாக
ஒரே ஒரு வாழ்க்கையில்
பல முறை விதவிதமாக
வாழ்கிறேன் நீ தந்த
காதல் வரத்தால்.

3.ஊடல்காலம்:
(தொடரும்)

Thursday, January 24, 2008

இதயத்தில் ஈரம் இருந்தால் உதவுங்கள்...




தனக்கென வாழ்வதில் ஒரே ஒரு வாழ்க்கை அடங்கியிருக்கிறது.
பிறர்க்கென வாழ்வதில் ஓராயிரம் வாழ்க்கை அடங்கியிருக்கிறது.

சென்னை பூந்தமல்லியில் உள்ள காந்திஜி மறுவாழ்வு மையத்தில்
வழி தவறி வந்தவர்கள், பெற்றோரை இழந்தவர்கள்,வறுமையினால்
கைவிடப்பட்டவர்கள் என்று மொத்தம் 22 குழந்தைகள் உள்ளனர்.(ஒரு குழந்தையால் பேச முடியாது)

திரு.வானரசு(இவருடைய தந்தையால் துவங்கப்பட்டதுதான் காந்திஜி மறுவாழ்வு மையம்)
இந்த குழந்தைகளை கவனித்து வளர்த்து வருகிறார்.

இவர் ஒரு முன்னாள் அரசு பள்ளி ஆசிரியர். இந்தக் குழந்தைகளுக்காக தன் வேலையை
துறந்துவிட்டு முழு நேரமும் இவர்களை கவனித்துக் கொள்கிறார்.

இவர்களுக்கு சரியான வசதியின்றி மிகவும் கஷ்டப்படுகின்றனர்.

கடந்த மாதம் இவர்கள் தங்கி இருந்த வீட்டை காலிசெய்துவிட்டு சுமார் இருபது
நாட்கள் அரசு பள்ளி வளாகத்திலும்,அரசு பொதுமருத்துவமனை வளாகத்திலும்
தங்கி இருந்தனர்.மழையால் மிகவும் துன்புற்றனர்.

தற்சமயம் பூந்தமல்லியில் இவர்கள் தங்கி இருக்கும் வீட்டிற்கு மாத வாடகையாக ரூ 4,500 கொடுக்க வேண்டும்.

இந்தக் குழந்தைகளில் பலர் இலவச அரசு பள்ளியில் படித்தாலும் இரு குழந்தைகளை
ஆங்கில கான்வென்ட் பள்ளியில் சேர்த்துள்ளனர்.(இவர்கள் இருவருக்கும் மாதம் 500 ரூ கட்டணம் செலுத்தவேண்டும்.) அதில் ஒரு சிறுவன் 70 திருக்குறளை அழகாக
சொல்கிறான் - பெயர். கோகுல். வயது - 4



ஒவ்வொரு குழந்தைகளின் கண்களிலும் பெயர்சொல்லத் தெரியாத ஒருவித சோகம் வழிகிறது.

கோகுலத்தில் கோபியர்களில்
மடியில் விளையாடியவனை
இறைவன் என்கிறோம்.
இங்கே மழையிலும் பசியிலும்
தவிக்கும் கோகுலை
என்னவென்று சொல்வது?


நெஞ்சில் ஈரம் இருந்தால் உதவுங்கள் தோழர்களே.

பணம் அனுப்ப விரும்பும் அன்பர்கள் இந்த முகவரிக்கு அனுப்பலாம்.

Indian Bank Account Number : 450345237
Name: Gandhiji Rehabilitation Centre
Branch : Thirumazhisai

Postal Address:

Gandhiji Rehabilitation Centre.
603,Trunk Road,
poonamallee,
Chennai-56 Mobile: 9840931530


கனத்த நெஞ்சுடன்,
நிலாரசிகன்.

Wednesday, January 23, 2008

நீ,நான்,காதல் - குறுந்தொடர்





நீ
நான்
காதல்...

(குறுந்தொடர்)

1.பார்வைக்காலம்:

அவன்:

உன்னை முதன்முதலில்
சந்தித்தது நம் கல்லூரியின்
வேப்பமரத்தடியில்..
காற்றில் பறந்துவந்து என்
நெஞ்சில்மோதி விழுந்தது
சில வேப்பம்பூக்கள்.
நெஞ்சுக்குள் பவித்திரமாய் மலர்ந்தது
காதல்பூக்கள்.

அவள்:

தலைகவிழ்வதே வெட்கம்
என்று தவறுதலாக
எண்ணிவிட்டேன் உன்னை
சந்திக்கும் வரையில்..
இமைக்க மறப்பதே வெட்கம்
என்றுணர்ந்தேன்
உன்னை சந்தித்த முதல்நொடியில்!


அவன்:

தினம் தினம் சுமந்துவருகிறேன்
உன்னிடம் காதல் சொல்ல,
அழகழகான வார்த்தைகளை.
கண்சிமிட்டும் சிலை உன்னைக்
கண்டவுடன் மொழியற்று
ஊமையாகித் திரும்புகிறேன்.


அவள்:

இதழ் திறந்து என் செவிக்குள்
தேனூற்றிச் செல்வாய் என்று
காத்திருந்தேன்.
இதழ்பேசா உன் மெளனத்தால்
சிலையாகி நின்றுவிட்டேன்.

அவன்:

என் நீண்ட இரவுகளை
கடிதமாக்கி உன் முன்
சமர்ப்பிக்கிறேன்.
ஒரு அலட்சிய பார்வை தந்துவிட்டு
சென்றுவிட்டாய் நீ.
முள்ளில் விழுந்த பறவையென
துடிதுடிக்கிறேன் நான்.

அவள்:

புல்லாங்குழலின் இசை கேட்கவே
உன்னிடம் வந்தேன்.
மூங்கிலை மட்டுமே எனக்கு
பரிசளிக்கிறாய் நீ.
கடிதத்தை தூர எறிந்துவிட்டு
என் காதோரம்
இதழ் திறந்து சொல்வாயா
உன் காதலை?

அவன்:

நிலவின் செளந்தர்யத்தை
உன் பூமுகத்தில் உணர்கிறேன்.
நிலவைப்போல் கடைசிவரையில்
எட்டாமல் போய்விடுவாயோ
என்றெண்ணியும் பரிதவிக்கிறேன்.

அவள்:

உன் வானில்
சிறகடித்து பறக்க விரும்பும்
சிறு பட்டாம்பூச்சி
நான்.
வானமாக
நீ மட்டுமே வேண்டும்
பெண்ணிலவும்
நான்.

அவன்:

பார்வைகளை பரிமாறிக்கொண்டே
வாழ்ந்துவிடுவேனா
காலம் முழுவதும்?
தேவதை உன் விழிக்குள்
என் முகம் பார்த்து
நாளை சொல்கிறேன் என்
காதலை.
இரவே கரைந்துவிடு
சீக்கிரம்.

அவள்:

நெஞ்சுக்குள் சுமந்து
திரியும் காதலை
நாளை உன்னிடம்
சொல்லப்போகிறேன்.
காதல் சொல்லத் தயங்கியவன்
சம்மதம் சொல்ல
தயங்கிவிடாதே!
வாடிப்போகும் இந்த
தாவணிமல்லி!

2.காதல்காலம்:

(தொடரும்)

Thursday, January 17, 2008

அன்புள்ள அம்மாவுக்கு...





(உலகில் உள்ள அத்தனை தாய்மாருக்கும் இந்தக்கவிதைகள் சமர்ப்பணம்)


1.மனித இனத்தில்
தானும் பிறக்க எண்ணி
ஒவ்வொரு வீட்டிலும்
பிறந்தான் இறைவன்
அம்மாவாக.

2. எல்லோரும்
விழிக்கும் முன்பே விழித்து
சூடாக தேநீர் தருவாள்
அம்மா.
அந்தச் சுவையான தேநீருக்காகவே
தாமதமாக எழுவார்கள் பிள்ளைகள்.

3. எப்பொழுதும் திட்டாத அம்மா
அடிக்கவும் செய்தாள்
அப்பாவை நான் திட்டியதற்காக.

4.கால்சட்டைப் பருவத்தில்
சிறுவன்;
மீசை முளைத்த பருவத்தில்
வாலிபன்;
காலம் வெவ்வேறு பெயர்களால்
அழைக்கிறது;
எப்பொழுதும் அம்மாவுக்கு
"சின்னக்குட்டி".

5.நான் சுற்றுலா செல்ல
தான் சிறுக சிறுக
சேமித்த பணத்தையெல்லாம்
ஒன்றுசேர்த்து என் கையில்
திணித்து வழியனுப்புகிறாள்.
அவளறியாமல்,
காயத்துப்போன அவள்
கைகளில் விழுந்து தெறிக்கிறது
என்
ஒற்றைத்துளி கண்ணீர்.

6.நட்சத்திரங்கள் எல்லாம்
கண்சிமிட்டி ரசிக்கிறது
அம்மாவின் தாலாட்டுப்பாடலை.

7. நிலவைக் காண்பித்து
நீ ஊட்டிய சோற்றின் சுவையை
எந்த உணவிலும் உணரவில்லை
உள்நாக்கு.

8. தூரலில் நனைந்தால்
துவட்டிக்கொள்ள துண்டாகும்;
கால் இடறி நகம் பெயர்ந்தால்
காயத்தை சுற்றிக்கொள்ள துணியாகும்;
அழுகின்ற பொழுதில் கண்ணீர்
துடைக்கும் கைகளாகும்;
உன் சேலைக்குத்தான் எத்தனை எத்தனை
உருவங்கள்.

9. வாழ்க்கை உன் மீது
சுமத்துகின்ற வலிகளுக்கெல்லாம்
புன்னகை மட்டுமே பரிசாய்
தருகின்ற வித்தை எங்கு கற்றுக்கொண்டாய்
அம்மா?

10.தோட்டத்து செடிகள்
எல்லாம் நீ வந்தவுடன்
இலையசைக்கின்றன...
செடிகளுக்கும் நீ
அன்னையானது எப்போது?

11. நம் வீட்டுக்குள்
மட்டுமே சிறகடித்துப் பறக்கிறாய்
நீ..
உன் சிறகடிப்பு கண்டு வளர்ந்ததால்
இவ்வுலகையே வலம்
வருகிறேன் நான்.

12. சொந்தங்கள் வார்த்தை ஆணிகளால்
உன்னை மெளனச் சிலுவையில்
அறையும் பொழுதெல்லாம்
நீ சிந்துவது ரத்தக்கண்ணீர் அல்ல.
வறுமைகண்டு மனம்தளரா
தன்னம்பிக்கை விதைகள்.

13.வீடு நிறைய செல்வம்
வந்தபின்பும் நீ
மாறிவிடவில்லை.
அதே பழையச்சோறும்
எலுமிச்சை ஊறுகாயுமே
உன் சிற்றுண்டி.

14.அன்று
கிடைக்காத வேலையும்
தொலைந்த நட்புமாய்
நான் தவித்த பொழுதெல்லாம்
ஆலமரமாய் நிழல்
தந்தவள் நீ.
இன்று விழுதாக மாறி
நிற்கிறேன் நான்.

15. கருவில் என்னை
சுமந்த உன்னை
கருவிழியில் சுமந்திட
அனுமதிப்பாயா அன்னையே.?

(தொடரும்)

Friday, January 11, 2008

காதல் பொங்கல்!




காதல் பொங்கல்!

1.உன் வீட்டில் பொங்கல்
கொண்டாடுவதில்லையென்று
வருந்துகிறாள் உன்
இளைய சகோதரி.
சர்க்கரைப்பொங்கலின் தங்கையடி
நீ என்று சொல்ல நினைத்து
முடியாமல் தவிக்கிறேன்
நான்.

2.கட்டிக் கரும்பு
நீ எனக்கு என்கிறேன்.
எப்படி என்று வினவுகிறாய்
விழிகளால்.
இழுத்தணைத்துக்கொள்கிறேன்.
கட்டிக் குறும்பு நீ
எனக்கு என்று காதோரோம்
முணுமுணுக்கிறாய்
நீ.

3.காளையை அடக்கியதால்
வீரன் என்று சொல்கிறது
இந்த உலகம்.
கன்னுக்குட்டி உன் அழகை
என் கண்ணுக்குள் அடக்க
தெரியாமல் விழிக்கிறேன்
நான்.

4.பொங்கலை கையில்
வைத்துக்கொண்டு கா கா என்று
காக்கைகளை அழைக்கிறாய்.
இதென்ன குயில்
கரைகிறதே என்று வியக்கின்றன
காகங்கள்.

-நிலாரசிகன்.

(அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.:)

Tuesday, January 08, 2008

பூக்களில் உறங்கும் மெளனங்கள்...




உன்னிடம் மென்மை
எதிர்பார்த்து ஏமார்ந்து
முள்ளில் விழுந்த பூவென
நான் துடிக்கும் தருணங்களில்

தட்டானின் சிறகுகளை
பிய்த்தெறியும் ஒரு சிறுவனைப்போல்
எவ்வித குற்றவுணர்வுமின்றி
எனை ஆட்கொள்கிறாய் நீ.

ரசனைகளும் எதிர்பார்ப்புகளும்
நசுங்கியதில் வார்த்தைகளிருந்தும்
ஊமையாகிறது என் பெண்மை.

ஆயுதமற்ற போர்க்களத்தில்
தினம் தினம் பூக்கள் சுமந்து
வந்து சருகாகித் திரும்புகிறேன்.

கானல்நீரில் எதிர்நீச்சலடிக்க
இயலாமல் விடியலுக்காக
காயங்களுடன் காத்திருக்கிறேன்
பூக்களில் உறங்கும் மெளனமாக.

Sunday, January 06, 2008

கவிதை நூல் வெளியீடு


அன்புள்ள நண்பர்களே,

என்னுடயை இரண்டாவது கவிதைப்புத்தகம்
"மயிலிறகாய் ஒரு காதல்" (சனவரி 5,2008) வெளியானது.

இணையத்தில் வாங்க விரும்பும் அன்பர்கள் இங்கே வாங்கலாம

சென்னை தி.நகரில்
உள்ள நியூ புக் லேண்ட்ஸ் கடையிலும் வாங்கலாம்.

முகவரி:

New Book Lands
#52C Basement
North Usman Road
T. Nagar
Chennai - 600017
Landmark: Opp ARR Complex,Near Panagal Park
Phone: 044-28158171, 28156006


வாங்கி படித்து,பதிலிடுங்கள்...

உங்கள் விமர்சனத்திற்காக காத்திருக்கும் நண்பன்,
நிலாரசிகன்.