Wednesday, January 23, 2008

நீ,நான்,காதல் - குறுந்தொடர்





நீ
நான்
காதல்...

(குறுந்தொடர்)

1.பார்வைக்காலம்:

அவன்:

உன்னை முதன்முதலில்
சந்தித்தது நம் கல்லூரியின்
வேப்பமரத்தடியில்..
காற்றில் பறந்துவந்து என்
நெஞ்சில்மோதி விழுந்தது
சில வேப்பம்பூக்கள்.
நெஞ்சுக்குள் பவித்திரமாய் மலர்ந்தது
காதல்பூக்கள்.

அவள்:

தலைகவிழ்வதே வெட்கம்
என்று தவறுதலாக
எண்ணிவிட்டேன் உன்னை
சந்திக்கும் வரையில்..
இமைக்க மறப்பதே வெட்கம்
என்றுணர்ந்தேன்
உன்னை சந்தித்த முதல்நொடியில்!


அவன்:

தினம் தினம் சுமந்துவருகிறேன்
உன்னிடம் காதல் சொல்ல,
அழகழகான வார்த்தைகளை.
கண்சிமிட்டும் சிலை உன்னைக்
கண்டவுடன் மொழியற்று
ஊமையாகித் திரும்புகிறேன்.


அவள்:

இதழ் திறந்து என் செவிக்குள்
தேனூற்றிச் செல்வாய் என்று
காத்திருந்தேன்.
இதழ்பேசா உன் மெளனத்தால்
சிலையாகி நின்றுவிட்டேன்.

அவன்:

என் நீண்ட இரவுகளை
கடிதமாக்கி உன் முன்
சமர்ப்பிக்கிறேன்.
ஒரு அலட்சிய பார்வை தந்துவிட்டு
சென்றுவிட்டாய் நீ.
முள்ளில் விழுந்த பறவையென
துடிதுடிக்கிறேன் நான்.

அவள்:

புல்லாங்குழலின் இசை கேட்கவே
உன்னிடம் வந்தேன்.
மூங்கிலை மட்டுமே எனக்கு
பரிசளிக்கிறாய் நீ.
கடிதத்தை தூர எறிந்துவிட்டு
என் காதோரம்
இதழ் திறந்து சொல்வாயா
உன் காதலை?

அவன்:

நிலவின் செளந்தர்யத்தை
உன் பூமுகத்தில் உணர்கிறேன்.
நிலவைப்போல் கடைசிவரையில்
எட்டாமல் போய்விடுவாயோ
என்றெண்ணியும் பரிதவிக்கிறேன்.

அவள்:

உன் வானில்
சிறகடித்து பறக்க விரும்பும்
சிறு பட்டாம்பூச்சி
நான்.
வானமாக
நீ மட்டுமே வேண்டும்
பெண்ணிலவும்
நான்.

அவன்:

பார்வைகளை பரிமாறிக்கொண்டே
வாழ்ந்துவிடுவேனா
காலம் முழுவதும்?
தேவதை உன் விழிக்குள்
என் முகம் பார்த்து
நாளை சொல்கிறேன் என்
காதலை.
இரவே கரைந்துவிடு
சீக்கிரம்.

அவள்:

நெஞ்சுக்குள் சுமந்து
திரியும் காதலை
நாளை உன்னிடம்
சொல்லப்போகிறேன்.
காதல் சொல்லத் தயங்கியவன்
சம்மதம் சொல்ல
தயங்கிவிடாதே!
வாடிப்போகும் இந்த
தாவணிமல்லி!

2.காதல்காலம்:

(தொடரும்)

5 comments:

said...

வழக்கமான வார்த்தைகள் இருந்தாலும் மனதைத் தொடுகின்றன!!!!
அன்புடன் அருணா

said...

Romba Nallarukku....

_ Praharika

said...

// காதல் சொல்லத் தயங்கியவன்
சம்மதம் சொல்ல
தயங்கிவிடாதே!
வாடிப்போகும் இந்த
தாவணிமல்லி//

அழகா சொல்லி இருக்கீங்க....

said...

நன்றி அருணா,பிரஹாரிகா மற்றும் நாணல்.

said...

As usual, good one from u Nila..

- Karthi