Tuesday, December 10, 2013

கவிதைகள் ஆறு

1.வித்தியாசனும் தா....மதனும்


எதையும் வித்தியாசமாக செய்யவேண்டும்
என்று நினைப்பவன் யாரும் அறியாதபடி
தன் வீட்டுத்தோட்டத்தில் சிங்கக்குட்டிகளை
வளர்க்கிறான். அவை மே என்று கத்துகின்றன.
மலையொன்றின் மீதமர்ந்து
சரிவை நோக்கி தூண்டில் வீசுகிறான்.
காகங்களை பிடித்துவந்து கூண்டிற்குள்
அடைத்துவைத்து முகமன் கற்றுத்தர முயல்கிறான்.
நேற்றின் மீது எழுதப்பட்ட கவிதைகளின்
வரிகள் ஒவ்வொன்றாய் உருவி நாளைக்குள்
எறிந்தபடி நடனமிடுகிறான்.
புணர்வொன்றின் உச்சத்தில் அவனுக்கு
ஒன்றும் நடந்துவிடாத பாவனையில்
சிப்ஸ் சாப்பிடும் யுவதியொருத்தியின்
நினைவு வந்து அடடா அது ஓர் அற்புதகணம் என்கிறான்.
வித்தியாசனை பின் தொடர்ந்து வந்த
தாமதன் அனைத்திலும் தாமதமாகவே இருக்கிறான்.
மீசை வளர்வதற்கே அவனுக்கு இருபத்தி ஏழு
வயதாகிற்று.
தினமும் அவன் எழுதும் வரிகள்
நான்கு மாதம் கழிந்தே கவிதைகள் ஆகின்றன.
அவனது காதலி இரண்டாவது மாடியிலிருந்து
அவனுக்களித்த பறக்கும் முத்தம்
அவளது குழந்தையின் பாதம் பூமி தொட்டபின்பே
அவனைச் சேர்ந்து நகைத்தது.
தானொரு அறிவிலி என்று உணர்ந்த நாளில்
அவனது நாற்பதாவது வயது துவங்கிற்று.
அறியா தேசம் போய்விட தீர்மானித்து
ரயிலுக்காக காத்திருக்கிறான்.
நாற்பத்தெட்டாவது வயதில் அசைந்து
வருகிறது ரயில்.
அதிலிருந்து வெளிக்குதித்து தன் சுண்டுவிரலால்
ரயிலின் வேகத்தை குறைத்து
தலைகோதியபடி செல்கிறான் வித்தியாசன்.
இருவேறு ஊர்களில் அடைமழையும்
மென்சாரலும் பொழிந்துகொண்டேதான்
இருக்கின்றன எப்போதும்.


2.காற்றில் மிதந்தலையும் இறகன்

என்னிரு உள்ளங்கைகளிலும் மறைத்து
வைக்கப்பட்டிருந்தன இரண்டு கண்கள்.
யாரும் இல்லாத தெருவில் அழுதபடியே
தலைகவிழ்ந்து நடந்து செல்லும்
தனியனுக்கு ஒன்றும்
மழை பொழியும் கணங்களில்
தலை சாய்த்து வான் பார்த்து
வா மழையே பெருமழையே என்று
லயித்து மழையாகும் மிருதுவானவனுக்கு
மற்றொன்றும் கொடுத்துவிட்டேன்.
அதீதமாய் அழுவதற்கோ அல்லது
அதிகமாய் புன்னகைப்பதற்கோ அதனை
அவர்கள் பயன்படுத்தக்கூடும்.
இப்பிரபஞ்சத்துடன்
நான் ஆடும் புதிர் விளையாட்டில்
கண்களின்றியும் அனைத்தையும் காண்கிறேன்.
புன்னகைத்தபடியே அழவும்
அழுதுகொண்டே புன்னகைக்கவும் கற்றுக்கொண்டன
என் இனிப்பிதழ்கள்.
யார் வேண்டுமானாலும் முத்தமிடலாம்
என்னை.
காரணமின்றி காயப்படுத்தவும் செய்யலாம்.
காற்றில் மிதந்தலையும்
இறகில் நீங்கள் காணக்கூடும்
கண்களையும் அதனுள்ளே வெகு ஆழத்தில்
கைகள் விரித்தபடியே நகர்கின்ற நதியுருவனையும்.
 
3.ஆட்டுக்குட்டிகள் அழகானவை

என் பிரார்த்தனையில் என்னைத் தவிர்த்து
பிறரை மட்டுமே நினைத்த நொடியில்
கைகளில் ஒரு கொத்து ரோஜாப்பூக்களை
தந்து சென்றார் கர்த்தர்.
மெளனத்தின் இசைக்குள் கண்கள் மூடி
பேரமைதியுடன் லயித்திருந்தபொழுதில்
புன்னகைத்து கையசைத்தார் புத்தர்.
நடுங்கிய உடலுடன் அடர்குளிரில்
மரத்தடியொன்றில் ஒண்டியிருந்த
சிங்கக்குட்டியை கட்டியணைத்த கணத்தில்தான்
கர்த்தரும் புத்தரும் ஒன்றாய் தோன்றினர்.
அதிகாலையில் சேவல் கூவிற்று.
வரமறுக்கும் ஆட்டுக்குட்டியை தரதரவென்று
இழுத்துவந்து முட்டியால் அதன் கழுத்தில்
அழுந்தப்பிடித்தபடி கழுத்தறுத்து கருப்புச்சட்டியில்
இரத்தம் பிடித்து பீடியை இழுத்தான்
கனவில் புத்தனையும் கர்த்தனையும்
கண்டவன்.
அந்த நாள் அவ்வளவு ரம்மியமாய்
துவங்கியது.


4.பெயரற்றவனின் பகல்

அதிகாலை நான்கு முப்பது மணிக்கு
அவன் விழித்தபோது தன் பெயர்
என்னவென்பது மறந்துபோனது.
எவ்வளவு முயன்றும் நினைவில்
மலராத தன் பெயரை ஓடிச்சென்று
அலைபேசிக்குள் தேடிக் களைத்தான்.
டியர்,டார்லிங்,நாயே,மச்சி,மாமோய்
என்று ஆரம்பிக்கும் எந்தவொரு குறுஞ்செய்தியிலும்
அவனது பெயர் எழுதப்படவில்லை.
இதயத்துடிப்பு அதிகமாகி எங்கே சென்று
பெயரைத் தேடுவது என்று குழம்பியவன்
யாரிடமும் கேட்காமலும் ஆவணங்கள்
எதனையும் பார்க்காமலும் தன் பெயரை
கண்டுபிடித்துவிட தீர்மானித்து,
பால்க்காரனுக்காக வாழ்வில் முதன்முறையாக
காத்திருக்கத்துவங்கியவனை
"சார் பால்" என்று சிரித்தபடி பாக்கெட்டுகளை
கொடுத்துவிட்டு நகர்ந்தான் பால்க்காரன்.
பேப்பர்க்காரனை நம்பி சோர்ந்துவிடாமல்
அவசரமாய் அலுவலகம் செல்ல‌ நினைத்த கணம்
இன்று ஞாயிற்றுக்கிழமை
என்பது ஞாபகத்தில் மலர்ந்து
இதயத்துடிப்பை அதிகப்படுத்தியது.
கடன் அட்டைக்காகவோ அல்லது
வங்கிக்கடனுக்காகவோ யாரேனும் அழைத்துவிட்டு
தன் பெயரை உச்சரித்துவிட மாட்டார்களா என்று
பெருங்கவலை கொண்டவன் அசையா சிலையென
அலைபேசியை பார்த்துக்கொண்டிருந்தான்.
திடீரென்று த‌ன் காத‌லியின் ஞாப‌க‌ம் வ‌ந்து
அவளுக்கு முத்தக்குறியிட்டு ஒரு
குறுஞ்செய்தி அனுப்பினான்.
அவள் பதிலுக்கு "இட் இஸ் ஸ்வீட் டா"
என்று மறுமொழிந்தாள்.
தலையில் கை வைத்தபடி உட்கார்ந்தவன்
மிகத்தீவிரமாய் யோசிக்கத்துவங்கினான்.
முகநூலில் புனைப்பெயர்.
அலைபேசியில் "என் எண்".
வீட்டு வாசலில் தொங்கிக்கொண்டிருக்கும்
கடிதப்பெட்டியின் மீது "ஏ4".
உற‌ங்குகின்ற‌ அப்பாவுக்கு "எருமை".
அம்மாவுக்கு "ய‌ய்யா".
எதிர்வீட்டு பாப்பாவுக்கு "ண்ணா"
எதற்குள்ளும் தன் பெயர் இல்லை.
இரவு நெருங்கிக்கொண்டிருந்தது.
பெய‌ர் என்ன‌வென்று தெரியாத‌ துடிதுடிப்புட‌ன்
"என் பெயர் என்ன?" கெஞ்சும் குரலில்
முன‌க‌த்துவ‌ங்கினான்.
விடிய‌லை அறிவித்த‌ப‌டி வ‌ந்துவிழுந்த‌து
வெய்யில்.

5.மூன்றாம் கனவினள்

இருண்ட வீட்டில் கையில் பொம்மையுடன்
அமர்ந்திருக்கும் சிறுமி
அவனது கனவில் அடிக்கடி தோன்றுகிறாள்.
தன் இரண்டு இதயங்களும் வேகமாக
துடிப்பதை உணர்பவன்
உடன் விழித்துக்கொள்கிறான்.
அருகில் உறங்கும் தன் குழந்தையை
தொட்டுப்பார்த்து பதறுகிறான்.
சிறுமியின் பொம்மை மெல்ல மெல்ல
கண்கள் திறந்து மெதுவாய் தலையை திருப்புகிறது.
அவளது மடி நீங்கி இவனது கனவுக்குள்
நுழைகிறது.
கனவின் தூரத்தை ஒரே கணத்தில்
கடந்து உறங்கும் குழந்தையின் அருகில்
படுத்துக்கொள்கிறது.
அதன் மிகக்கூரிய நகங்களால்....
முதல் கனவில் சிறுமியின் மடி பொம்மை.
இரண்டாம் கனவில் குழந்தை படுக்கை பொம்மை.
தன் உடலெங்கும் எரியும் நகக்கீறல்களால்
தரையில் புரள்பவனின் எதிரே
தீர்க்கப்பார்வையுடன் அமர்ந்தபடி
தன் இடமுலையை அறுத்துக்கொண்டிருக்கிறாள்
வலமுலையை பொம்மைக்கு
ஊட்டும் இளம்தாய்.
 
6. பெண் கங்காரு

வேகமாய் வீட்டிற்குள் ஓடுகிறவனின்
உடலிலிருந்து உதிரத்துவங்குகின்றன
சொற்கள்.
அள்ளியெடுக்க இயலாமலும் விழுவதை
தடுக்க இயலாமலும் தடுமாறி ஓடுகிறான்.
மூச்சுவாங்க வரவேற்பறையில் அமர்பவன்
அனுஷ்காவின் புன்னகையை ரசிக்கிறான்.
நீலநிற அவளது கண்களின் கரைந்து
அற்புதம் அற்புதம் என்று பிதற்றுகிறான்.
அவள் அழுதால் தானும் அழுவதாக
பாவனை செய்து கண்ணீர் சிந்துகிறான்.
இப்போது தன்னுடலிலிருந்து தெறிப்பது
சொற்கள் அல்ல பூக்கள் என்றெண்ணுகிறான்.
அனுஷ்காவின் காதலனை பழிப்பவன்
கையிலொரு காய்ந்த ரோஜாப்பூவை
தலைகுனிந்தபடி பார்த்து கதறுகிறான்.
உடல் நீங்கி அறையெங்கும் வியாபித்திருக்கும்
சொற்கள் ஒவ்வொன்றாய் கண்விழிக்கின்றன.
நீந்தி நீந்தி அருகிலிருக்கும் சொற்களுடன்
சேர்ந்துகொண்டு உருவமெடுக்கின்றன.
சோபாவில் கண்ணயர்ந்து அனுஷ்காவுடன்
கங்காருகளின் நடுவே ஓடுகின்ற அவனது
கனவினை துன்புறுத்தாமல்
சுயமாய் கவிதையொன்றை உருவாக்குகின்றன.
அவனது மின்னஞசல் மூலமாய் கவிதையை
இதழொன்று அனுப்பிவிட்டு ஒவ்வொரு சொல்லாய்
உடலுக்குள் நுழைந்து செல்லாகின்றன.
அதிகாலை விழிப்பவன்
அவளொரு பெண் கங்காரு என்றபடி
தன் பிடறியை ஒரே ஒருமுறை சிலிர்த்துக்கொண்டான்.

-நிலாரசிகன்.

 

Sunday, October 27, 2013

தனிமை என்றொரு டிராகன்


1.ஜூலியட்சி

மறியொன்றை பாழ்கிணற்றுக்குள்
புன்னகைத்தபடியே வீசிவிட ஜூலியால்
மட்டுமே முடியும்..
அவனது மறி துடிக்கின்ற கணங்களில்
மெளனத்தின் மதுவை ருசித்துக்கொண்டும்
பெருக்கெடுக்கும் குருதியில் நனைகின்ற‌
பொழுதுகளில்
தேநீர் அருந்தவும் அவளால்
மட்டுமே முடியும்.
தான் விரும்பும் நேரங்களில் அவனை
மறியாக்கி மடியில் கிடத்திடுவாள்.
தான் தன்னை விரும்பும் நேரங்களில்
கிணற்றில் தள்ளிவிட்டு நகர்ந்திடுவாள்.
காலத்தின் அசுர நாவு அவனது
உடலை தீண்டியபடியே கடந்துசெல்கிறது.
யட்சியின் முள்மனதில் அவனது
மறியின் கல்லறை எழும்புகிறது.
மெளனத்தின் மதுவை அவனது
இதழ்கள் ருசிக்க துவங்குகையில்
கரடிபொம்மையொன்றை கட்டியணைத்தபடி
நிம்மதியாய் உறங்குகிறாள்
ஜூலி-யட்-சீ.


2.முடிவுகள் மற்றும் முடிச்சுகளுடன் நிற்கும்ஓர் ஆப்பிள் மரம்.

ஓநாய்க்குட்டிகளுடன் அதன்
நிழலில் தங்குகிறாள் யுவதியொருத்தி.
நடுநிசியில் தன் கழுத்திலிருந்து நீளும்

கயிற்றின் மறுமுனையை கிளை நோக்கி வீசுகிறாள்.
முடிச்சின் இறுக்கத்தில் அதன் கிளையில்
தழும்பொன்று மலர்கிறது.
ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் ஓநாய்க்குட்டிகளின்
மேல் ஒன்றிரண்டு இலைகள் வந்தமர்கின்றன.
தன் இடமார்பில் பொறித்திருக்கும்
பச்சைப்பெயரை வருடிக்கொடுக்கிறாள்.
முடிவொன்றின் மேல் படுத்திருப்பவளின்
உடல் வெம்மையில் சிவந்திருக்கிறது.
விழிநீர் துடைத்து துடைத்து அழுகிறாள்.
அவள் காணாத விடியலில்
பழுக்க துவங்கியிருக்கும் அதன் கனிகள்
சொட்டுச் சொட்டாய் கண்ணீர் சிந்துகின்றன.
மிக நிம்மதியாய் உறங்கிக்கொண்டிருக்கின்றன
ஓநாய்களும்,குட்டிகளும்.

3.தனிமை என்றொரு டிராகன்

அலுவலகம் முடிந்து வீடு திரும்பியவன்
தன் வரவேற்பறையில்
படுத்திருக்கும் டிராகனின் தலையை
தடவிக்கொடுத்துவிட்டு சட்டையை கழற்றினான்.
அந்த டிராகன் தீயை உமிழ்ந்தபடியே
மூலையில் படுத்திருந்தது.
வாங்கி வந்திருந்த ஆரஞ்சு பழத்தை
அதனிடம் நீட்டினான்.
அது முகம் திருப்பிக்கொண்டது.
அருகில் அழைத்து தன் மடியில் கிடத்திக்கொண்டான்.
அவனது கன்னங்களில் முத்தமிட்டு
ஆரஞ்சு பழத்தை சுவைத்தது.
டிராகனின் தலையை வருடிக்கொடுக்கும் பொழுது
அவள் ஞாபகம் நெஞ்சின் மீது
ஓர் உதைவிட்டது.
மழை நாளொன்றில் கடற்கரை மணலில்
அமர்ந்திருந்தார்கள் அவர்கள்.
அவளது கால்களை தன் மடியிலெடுத்து
ஒவ்வொரு நகமாக முத்தமிட்டுக்கொண்டிருந்தான்.
வெட்கத்தில் மழை கடலை
தழுவிக்கொண்ட பொழுதில்
கடற்கரையெங்கும் சிறு பூச்செடிகள் முளைத்து
மறைந்தன.
மடியிலிருந்த டிராகன் உறங்கியிருந்தது.
கண்ணாடி தம்ளரில்
அசைகின்ற நீரைப் போல் அந்த
பின்னிரவு தெருநாய்களின்
குரைப்புச்சத்ததில் தளும்பியபடி இருந்தது.

 - நிலாரசிகன்.

Monday, September 30, 2013

வலிக்கவிதைகள் இரண்டு



1.ரகசியத்தின் அறை

அறையில் மூலையில் பார்க்கும்பொழுதே
முளைத்து வளர்ந்து கிளை பரப்பி நிற்கிறது
ரகசியத்தின் செந்நிற மரம்.
அதன் கிளைகளில் தலைகீழாய் தொங்குகின்றன
அழுக்கடைந்த அன்பின் முட்டைகள்.
ஒவ்வொரு முட்டைக்குள்ளிருந்தும் வெவ்வேறு
உருவத்துடன் வெளிக்குதிக்கிறார்கள் காதலிகள்.
சர்ப்பமென சுருண்டிருக்கும் அவனது
உடலின் கதவுகளை தங்களது இரட்டை நாவினால்
எட்டித்தள்ளி உள்நுழைந்து தின்னத்துவங்குகிறார்கள்.
காதலிகளின் எச்சில்கள் படும் இடமெங்கும்
முளைக்கின்றன ஈச்சமரங்கள்.
அவனது உடல் வெப்பத்தில் உருகி
பாலையின் நடுவில் ஓடும் நதியாகிறது.
நதியில் மிதக்கும் முகில்கள் ஒவ்வொன்றிலும்
நடனமிட்டு சிரிக்கிறார்கள் தீராக்காதலிகள்.
ரகசியத்தின் சமுத்திரத்தை நோக்கி
மெதுவாய் நகர்கிறது நதி.
அறையின் மற்றோர் மூலையில்
காதலிகளின் மார்பில் கிறங்கிக் கிடக்கிறது
மகாசமுத்திரம்.
மகாசமுத்திரம்.

2. இம்பாலாவின் முத்தங்களும்
வனத்திடை திரியும் காடிப் பெண்ணும்

அடர்ந்து படர்ந்திருக்கும் புழுதிப்புற்கள் மீதமர்ந்து
காடியை அவள் மிகவும் ருசித்துக் குடித்துக்கொண்டிருந்தாள்.
அவளது கால் நகங்களின் பிடியில்
ஒரு இம்பாலா* துடிதுடித்துக்கொண்டிருந்தது.
குடுவைக் காடியை குடித்து முடித்தபின்பு
மிக நிதானமாய் அதனது குரல்வளையை கெளவினாள்.
உடலெங்கும் முத்தங்கள் தேக்கி வைத்திருக்கும்
அதனது ப்ரியவுடலைவிட்டு பிரிந்தது உயிர்.
வனம் அதிர சிரித்தவள் ஒவ்வொரு முத்தங்களிடமும்
தன் கூர்நகத்தினை காண்பித்தாள்.
ஒவ்வொரு முத்தமாய் கண்கள் மூடி
மரிக்க துவங்கின.
கடைசி முத்தம் அவளது நகத்திடம்
நலமா என்றது.
கூர்நகம் தலைகவிழ்ந்து தரை நோக்கியது.
சற்று நேரம் கழித்து
பாதையெங்கும் குருதி வழிய வாலாட்டி
நடந்து செல்பவளை பின் தொடர்கின்றன மரித்த முத்தங்கள்,
தங்கள் உடலெங்கும் வனத்தின் வெம்மையை
அப்பியபடி.

-நிலாரசிகன்.



Monday, September 16, 2013

கோட்டிப்பயலும் பச்சைநிற காக்கைக்கூட்டமும்



இந்த புத்தன்
காலை 5.40க்கு கண்ணாடி யன்னலை
இரண்டுமுறை கொத்தி எழுப்பும் காகத்தின்
முகத்தில்தான் தினமும் விழிக்கிறான்.
இரண்டு நதிகள் சேருமிடத்திற்கு
ஓட்டமும் நடையுமாய் வயிற்றை பிடித்துக்கொண்டு
ஓடி - அமர்ந்து - எழுந்த பின்பு சூரியனை
மேலெழ கட்டளையிடுகிறான்.
வீடு திரும்பும் வழியில் அவனுக்கு
பாட வேண்டும் போலிருக்கிறது.
சப்தமிட்டு பாடிக்கொண்டே குதித்தோடுகிறான்.
எருமைகள் மிரண்டு நகர்கின்றன.
ஓடிச்சென்று கிளைகளற்ற மரத்தடியில்
அமர்ந்து இமை மூடுகிறான்.
காகமொன்றின் சிறகில் பயணித்து
மஞ்சள் நதியில் "ஸ்லோ மோஷ"னில் விழுகிறான்.
நீச்சல் தெரியாமல் தத்தளிப்பவனின்
தலைமயிர் பிடித்திழுத்து கரைசேர்க்கிறாள்
யுவதியொருத்தி.
கனவுகளை மிதித்து எழுந்தவன்
தன் உடலெங்கும் ஆயிரம் மொட்டுகள்
ஒளிர்வதை பெருமிதத்தடன் தொட்டுப்பார்க்கிறான்.
யன்னல் காகம் "கோட்டிப்பயல்" என்று
நினைத்து சிரித்துக்கொண்டு பறக்கிறது.
இந்த புத்தனின் அதிகாலை
எப்போதும் இப்படித்தான் புலர்கிறது.

இந்தக் காதலன்

மலை கண்டால் லயித்து நிற்பவன்
மழையில் நனைந்துகொண்டே விசிலடிப்பவன்
காகத்தின் சாம்பல் நிறத்தில் நுழைந்து
தனியொரு உலகில் வாழ்ந்து திரும்புகிறவன்
இடக்கை சுண்டுவிரலுக்குள் காதலை இழுத்துப்பிடித்து
அதிகாலைக் கடற்கரையில் ஓடுபவன்
மிகச்சிறிய இதயத்தின் நான்கு அறைகளுக்குள்ளும்
வெவ்வேறு கண்ணாடிகளை புதைத்து வைத்திருபவன்
அழுதுகொண்டே நகரும் சரக்கு ரயில்களிடம்
புன்னகைத்து கையசைப்பவன்
பின்னிரவுக் கனவுகளிடம் மனம் நெகிழ
உரையாடி களைத்துறங்குபவன்
கவிதையின் வரிகளிடையே வளைந்து நெளிந்து
சிறுவனாகி ஓடி ஒளிபவன்
நெடுஞ்சாலையோர குட்டைகளில் இறங்கிச்சென்று
மீன்குஞ்சுகள் பிடித்து பின் விடுவிப்பவன்
அஃறிணைகளுடன் வெகுநேரம் கலந்து கரைபவன்
மங்கிய விளக்கொளியில் மிதமாய் கசிகின்ற
இசை ரசித்து ரசித்து கோலா குடிப்பவன்
தோல்விகளின் தலைகோதி வெற்றிக்கு
இதழ் முத்தம் தந்து மெளனித்துக்கிடப்பவன்
நிறைவேறாக் காதலின் நினைவுகளை
முன்னிரவில் நினைத்து நடுநிசியில் மறப்பவன்
டயனோசர் குட்டிகளை அந்திநடைக்கு
அழைத்துச் செல்பவன்
அலைபேசிக்குள் உறங்கும் எண்ணற்ற
எண்களை பார்வையால் வருடுபவன்
கரடிபொம்மைகளுக்கு டாட்டா காட்டிவிட்டு
வெளிக்கிளம்புகிறன்
அனைத்தையும் திளைக்க திளைக்க
காதலித்து எப்போதும் காதலில் திரிபவன்
இந்த மகாக் காதலன்!

கோட்டிப்பயலும் பச்சைநிற காக்கைக்கூட்டமும்

இந்தக்கவிதைக்கு இப்படியொரு தலைப்பை
கொடுத்தது நீங்கள்தான்.
உங்களுக்கான இக்கவிதை இப்பொழுதுதான்
பிறந்திருக்கிறது.
துணிவிலக்கி பாலினம் என்னவென்று பார்ப்பதில்
நீங்கள் காட்டும் மும்முரத்தால் நிசப்தத்தில்
அழுகிறது.
நதியோர கிராமமொன்றில் கோணவாயனுக்கும்
சிவந்திகனிக்கும் பிறந்தவனுக்கு நீங்கள்தான்
கோட்டிப்பயல் என்று பெயரிட்டீர்கள்.
அவனது உலகில் கோடரியால் உங்களது பொய்களை
எழுதிச் சிரித்தீர்கள்.
காலம் தன் குதிரைக்கால்களால் வெகுவேகமாய்
ஓடிப்போனதில் பட்டணத்தில் வந்து நின்றான்
கோட்டிப்பயல்.
பரிசுத்தமான அன்பைத்தேடி துவங்கிய அவனது
பயணத்தின் ஒவ்வொரு நிறுத்தத்திலும் நீங்கள்
சிறுநீர் கழித்தீர்கள்.
தன் இருபத்தோராவது வயதில் கவிதையொன்றை அவன்
பிரசவித்தபோது சவத்துடன் ஒப்பிட்டு அவனது
சிறு இதயத்தில் முட்கள் விதைத்தீர்கள்.
யாருமற்ற அவனது உலகில்
பச்சைநிற காகமொன்று மட்டுமே பறந்து திரிந்தது.
குருட்டுக்காகம் அது என்று அவன் அறிந்துகொண்ட
நாளில்தான் தானொரு செவிடு என்பதை
உணர்ந்தழுதான்.
இரவொன்றின் மூன்றாம் சாமத்தில் சடசடவென்று
இறக்கைகள் முளைத்து காக்கைக்கூட்டத்துடன்
கலந்து பறக்கும் அவனது சந்தோஷத்தின் நிழலைக்கூட
உங்களால் தொடமுடியாதுதான்.
அவனுடன் சேர்ந்து பயணிக்கும் இக்கவிதையின்
எந்தவொரு சொல்லையும் உங்களால்
புரிந்துகொள்ளவே முடியாதுதான் மக்காள்!

வற்றாநதியில் மிதக்கும் ஆப்பிள்

தவழ்ந்து தவழ்ந்து தன் வயிற்றை
தரையில் இழுத்து இழுத்து
என்னிடம் வந்து சேர்ந்தது புன்னகையொன்று.
நான் அதற்கொரு ஆப்பிள் ஜூஸ்
வாங்கித்தந்தேன்.
மிக நிதானமாய் அதனை ரசித்து
அருந்திவிட்டு நகர்ந்தது.
அது மறைந்த மறுகணம் மூச்சிரைக்க
ஓடிவந்தது ஒரு துளி கண்ணீர்.
அதன் உடலெங்கும் துளிர்த்து மிளிர்கின்ற
வியர்வையை கைக்குட்டையால் துடைத்துவிட்டேன்.
கன்னத்தில் முத்தமிட்டு மீண்டும்
ஓடத்துவங்கியது.
மிக நிதானமாய் என்னுடலின் யன்னல் திறந்து
உள் தாழிட்டுக்கொண்டேன்.
சற்று தொலைவில் புன்னகையின் தோளில்
சாய்ந்தபடி நடந்து கொண்டிருந்தது
கண்ணீர் எனும் வற்றாநதி.


-நிலாரசிகன்.

 

Thursday, August 15, 2013

கவிதைகளின் ஆறு




பென்ஸ் கார் பன்றியின் ஓர் நாள்

அதிகாலையிலிருந்து இந்த
விபரீதம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
வழக்கம் போல்தான் எழுந்தேன்.
கண்ணாடியை கடக்கும்பொழுதுதான் அதிர்ந்து
நின்றுவிட்டேன்.
நானொரு பன்றியாக உருமாறியிருந்தேன்.
முகத்தை தடவிபார்த்துக்கொள்ள கையை
உயர்த்தினால் முன்னங்கால் மேலெழுகிறது.
காலில் வளர்ந்து நிற்கும் நகங்களும் 
படர்ந்திருக்கும் ரோமங்களும் பயமுறுத்துகின்றன.
நிறம் பற்றிய கவலை மட்டுமில்லை.
எப்போதும் போல அடர்கறுப்புதான்.
வீட்டிலிருந்து தெருவில் இறங்கி 
கொஞ்ச தூரம் நடந்தேன். 
இரண்டு தெருநாய்கள் குரைத்துக்கொண்டு
அருகில் வந்தபோது சொல்லிவிட்டேன் 
பன்றி வடிவ மனிதன் நானென்று.
வாலாட்டிக்கொண்டு போய்விட்டன.
இன்று நானொரு மெர்சிடெஸ் பென்ஸ் 
கார் வாங்குவதற்கான நாள் என்பது ஞாபகம் வந்து
கடைக்குச் சென்றேன்.
துரத்த வந்தவனிடம் கடன் அட்டையை காண்பித்தேன்.
கோட் அணிந்த அவனது தலை தாழ்ந்து,
பணிவாக என்னை அழைத்துச் சென்றான்
சிங்கத்துக்கான சகல மரியாதையுடன்.
குடிப்பதற்கு தேநீர் தருவிக்கப்பட்டது.
பென்ஸில் திரும்பும் வழியில் பீட்சா சுவைத்துக்கொண்டே
பயணித்தேன். 
என்னுடைய உயர்ரக அலைபேசியின் திரையில் அவள்
தோன்றினாள்.
இன்று ஏன் உன் முகம் நேற்றைவிட அழகாய் இருக்கிறது என்றவளின்
தொடர்பை துண்டித்துவிட்டு முகநூலில் 
"பன்றியாக மாறியிருக்கிறேன். மாற விரும்பும் அன்பர்கள்
தொடர்புகொள்ளுங்கள்" என்று நிலைத்தகவலிட்டேன்.
இரண்டாயிரம் லைக்குகள் இருநிமிடத்தில் விழுந்தன.
விசிலடித்துக்கொண்டே காரோட்டியை கடற்கரைக்கு
போகப் பணித்தேன்.
கால்மேல் கால் போட்டுக்கொண்டு சாய்ந்து அமர்ந்திருக்கும்
என் உலகைப்போல் உங்களுக்கும் ஓர் உலகு
இருக்கலாம். இல்லாமலும் போகலாம்.
யார் அழுதார்கள்?

இரவில் ஒளிரும் பறவை

கையில் தொட்டியொன்றை சுமந்து
திரிகிறான் சிறுவன்.
தொட்டியின் மூடி இடுக்கிலிருந்து 
அவ்வப்போது எட்டிப்பார்க்கின்றன இருகண்கள்.
மூடியிலிருந்து செல்லும் கயிற்றின்
மறுநுனியை இறுக பற்றியிருப்பவன் அதை
அசைத்து அசைத்து நடக்கிறான்.
கருவிழிகள் அங்குமிங்கும் பதற்றத்துடன்
அசைகின்றன.
செம்மண் காட்டிற்குள்
நுழைந்தவுடன் அவனது முதுகிலிருந்து இறக்கைகள்
முளை விடத் துவங்குகின்றன.
குவிந்திருக்கும் மண் மேடுகள் ஒவ்வொன்றிலும்
பறந்து சென்று சிறிது நேரம் அமர்ந்துகொள்கிறான்.
தொட்டியை விட்டு வெளிக்குதித்து
அவனுடன் பறக்கின்றன
கண்கள்.
அதற்கு மட்டுமே புரிகின்ற மொழியில்
சன்னமாய் பேசுகிறான். 
யாருமற்ற பரந்த வெளியில் அவர்கள்
பறந்து திரிகிறார்கள்.
கண்பார்வையற்ற சிறுவன் அழுதுகொண்டே
புரண்டு படுக்கிறான்.

ஜூலிப்பூச்சி ஒட்டகம் மற்றும் 
வாழ்வென்னும் பெயர்கொண்ட சுவர்ப்பல்லி.

முடிச்சுகளால் நீண்டு கிடக்கும் கயிற்றை
இழுத்தபடி நகர்கிறது ஒட்டகம்.
பாலைவனத்தின் சுடுமணலை கிழித்துக்கொண்டு
பயணிக்கும் கயிற்றில்
தொற்றிக்கொள்கிறது ஜூலிப்பூச்சி.
யாருமற்ற பெருவெளியை கடக்கும் தருணம்
கயிற்றின் வழியே ஒட்டகத்தை வந்தடைகிறது.
ஒட்டகம்+ஜூலிப்பூச்சி ஒன்றுசேர்ந்து
கிழவியுருவம் பெறுகிறார்கள்.
கால்கள் நீட்டி சுவற்றில் சாய்ந்திருக்குமவள்
தன் கண்கள் இடுக்கி கையிலிருக்கும்
கயிற்றின் முடிச்சை மெல்ல அவிழ்த்துக்கொண்டிருக்கிறாள்.
தலைகீழாய் நின்றபடி கிழவியையும்
முடிச்சையும் பார்த்துக்கொண்டிருக்கிறது
சுவர்ப்பல்லி,
நாவை மெதுவாக சுழற்றியபடி.

இலைகளென உதிரும் புன்னகைகள்
இன்று காலை ஆறு முப்பதிலிருந்து
இரவு ஒன்பது இருபது வரை 
யாரும் எனக்கொரு புன்னகையை
பரிசாக தரவில்லை.
தனியே புன்னகைத்தாகவேண்டிய கட்டாயத்தில்
சாலையோர மரமொன்றின் நிழலில் தனித்திருந்தேன்.
இறுகிய இதழ்களிலிருந்து மெதுவாய்
புன்னகையொன்று உதிர்ந்தது.
அதன் பின் வரிசையாய் இலைகளென
புன்னகைகள் உதிரத்துவங்கின.
நடுநிசிவரை உதிர்ந்த புன்னகை இலைகளால்
சாலை நிரம்பித் தளும்பியது.
வீடு திரும்பும் அவசரத்தில் புன்னகைகளை
ஒதுக்கித்தள்ளிவிட்டு ஓடுகிறார்கள்
மனிதர்கள்.
மிதிபடுகின்றன சில.
கிழிந்து அலறுகின்றன சில.
மெளனித்து மரணிக்கின்றன சில.
அப்போதும் புன்னகைத்தன சில.
நினைவுகளில் யாரோடும் புன்னகைக்கலாம்
என்று தோன்றியபோது
ஆசுவாசமாகத்தானிருக்கிறது.

ததும்பும் நதியில் ஓர் இலை
எப்போதும் கூர்சொற்களால்
சித்திரம் தீட்டும் விஷக்கன்னியை
மிக அருகில் சந்தித்தேன்.
அதுவரை அவளது நிர்வாணக்கண்களை மட்டுமே
கண்டு வந்திருந்தேன்.
முதன்முதலாய் இன்று அவள் என் மீது
புத்தப்பார்வை எய்தாள்.
ததும்பும் நதியில் ஓர் இலை
சப்தமின்றி விழும்
பெரும்சப்தம் கேட்டு சிலிர்த்தது உயிர்.
அருகில் இழுத்தணைத்து நெற்றி முத்தமிட்டாள்.
கடைசித்துளி மெழுகில் எரிந்து சாம்பலானது
அக்கணம்.
நீலவர்ண உடை நெகிழ மூதாட்டி ஒருத்தி
நதியோரம் நடந்துசெல்கிறாள்
தன் தளர்ந்த நடை- பாதையை ரசித்தபடி.

விசித்திரி என்றொரு கோக் பாட்டில்
மெல்லிய குளிரால் நிரம்பியிருக்கும் அறை
அவளின் மார்புச்சூட்டை ஒத்திருந்தது.
நினைவுகளுடன் பேசிச் சலித்தவன்
தன் எதிரே காலியாய் அமர்ந்திருக்கும்
கோக் பாட்டிலுடன் பேசத் துவங்கினான்.
அது அனைத்திற்கும் மெளனத்தையே
பதிலாக்கிக்கொண்டிருந்தது.
அதற்கு விசித்திரி என்று பெயரிட்டான்.
விசித்திரியை கையில் ஏந்திக்கொண்டு
பிடித்த பாடலொன்றை சத்தமிட்டு
பாடி ஆடி மகிழ்ந்தவன்
களைத்து அமர்ந்தபோது பின்னிரவு
முடிந்திருந்தது.
கண்கள் கவிழ்ந்த நிலையில்
விசித்திரியை கட்டிக்கொண்டு
கனவுக்குள் நுழைந்தான்.
கனவுலகில் விசித்திரி கருஞ்சிவப்பு
நிற புடவையொன்றில் கைகோர்த்து
நடந்துகொண்டிருந்தாள்.
கடற்கரை மணலில் பாதம் புதைய
நடந்தவர்களின் கால்களைத் தொட்டு
நகர்ந்தன சிறுநண்டுகள்.
சடசடவென்று பெய்யத் துவங்கிய
மழையில் அவனது தோளில் சாய்ந்துகொண்டே
விசித்திரா என் விசித்திரா என்று
முணுமுணுத்து
கோக் பாட்டிலாய் உருமாறியவளை
ஓர் அலை இழுத்துச்சென்றது.
விசித்திரன் விழித்தபோது உடைந்து
கிடந்த கோக் பாட்டிலின் நடுவே
துண்டுதுண்டாய் கிடந்தன
முள்வடிவ குறுங்கனவுகள்.

-நிலாரசிகன்.

Monday, July 29, 2013

ஆங்கில இலக்கியச் சிற்றிதழ் - Transfire

நண்பர்களுக்கு,

ஆங்கிலச் சிற்றிதழான Transfireல் வெளியான என் கவிதை. இதன் தமிழாக்கம் இங்கே வாசிக்கலாம்.

அப்புக்குட்டன் துபாய்க்கு போகிறான்
தேரிக்காட்டில் பட்டம் விட்டுக்கொண்டிருந்தார்கள்
பதின்ம வயது சிறுவர்கள்.
பட்டத்திலொன்று அறுந்து காற்றின் வேகத்தில்
மிக வேகமாய் திசைதப்பியது.
அறுந்த பட்டத்தை பிடிக்க நான்கு கால்கள்
ஓடிய கணத்தில் மேலும் இரண்டு கால்கள்
அந்த ஓட்டத்தை முந்திச்சென்றன.
ஆம் அப்புக்குட்டனின் அறிமுகம்
இப்படித்தான் ஆரம்பம்.
பனை மரத்தில் சிக்கிய பட்டத்தை கிழிந்துவிடாமல்
மெதுவாய் எடுத்து வெற்றிச்சிரிப்புடன்
இறங்க துவங்கியபொழுதுதான் முதன்முதலாய்
அந்த விமானத்தை பார்த்தான் அப்புக்குட்டன்.
அன்றிலிருந்து மூன்று நாட்களாய்
திறந்த வாயும் விரிந்த கண்ணுமாய்
அலைந்தவனை அவனது
நாய்க்குட்டிகள் பயத்துடன் பார்த்தன.
தன் பத்தொன்பதாவது வயதின்
இரவொன்றில்
நெல்லை எக்ஸ்பிரஸ்ஸில் டிக்கெட் எடுக்காமல்
பயணித்தவர்களில் இவனும் ஒருவன்.
மீனம்பாக்கத்தில் இரண்டு நாட்கள்
சட்டை கிழிந்த பைத்தியக்காரனுடனும்
மஞ்சள் கறை பற்களுடன் சிரிக்கும்
பிச்சைக்காரனுடனும் சுற்றிக்கொண்டு
தலைமீது கடக்கும் உலோக பறவைகளை
ரசித்து லயித்து திரிந்தான்.
கிழவியின் பாம்படம் முதல் கிழவரின்
வெள்ளி அரைக்கொடி வரை விற்ற பணத்தில்
துபாய்க்கு போகும் டிக்கெட்டை இவன்
கைகளில் திணித்தார்கள்.
மந்திரித்து விட்டவனாய் மின்சார ரயிலில்
சுற்றியவன் கடவுச்சீட்டை
தொலைத்ததும்
திறந்த வாயும் விரிந்த கண்ணுமாய்
புலம்பித்திரிந்ததும் அப்புக்குட்டனின்
கறுப்புச் சரித்திரத்தின் தரித்திரபக்கங்கள்
என்பதால் இத்துடன் அப்புக்குட்டனின்
விமானக்கனவு முற்றுப்பெறுகிறது


நன்றி,
நிலாரசிகன்.

Tuesday, June 04, 2013

யாருமற்ற வீட்டினுள்ளிருந்து ஒலிக்கும் குரல்



1.யாருமற்ற வீட்டினுள்ளிருந்து ஒலிக்கும் குரல்

எதைச் சொன்னாலும் செய்கின்ற
அடிமை ஒன்றை நான் வளர்க்கிறேன்.
வன்மம் கொந்தளிக்கும் நாளில்
அடிமையின் கன்னங்கள் இரண்டிலும் 
அடித்து துன்புறுத்துகிறேன்.
வழிகின்ற கண்ணீரை துடைத்துக்கொண்டு
மீண்டும் அடிவாங்க தயாராகிறது அடிமை.
துவண்டு வீடுவரும் நாளில்
கால்கள் பிடித்துவிட்டு அருகில் அமர்ந்திருக்கும்.
இதயத்தின் நான்கு அறைகளிலும் முட்கள்
சுமந்து திரும்பும் நாளில் 
தன் மடியில் கிடத்தி தலைகோதிவிடும்.
சில நேரம் சயனிக்கவும்
எப்போதும் உடனிருக்கவும் அதற்கு
விதிக்கப்பட்டிருக்கிறது.
நாய்க்கு கொடுக்கப்படும் ரொட்டித்துண்டை
பெரும் ஆவலுடன் அது பார்த்துக்கொண்டிருப்பதை
கவனித்த நாட்கள் அதிகம்.
கட்டிலுக்கு அடியில் நைய்ந்த பாயில்
உறங்கும் அதன் முகம் எப்போதும் 
தகதகவென்றிருக்கும்.
எதைச் சொன்னாலும் செய்கின்ற
அடிமை ஒன்றை நான் வளர்க்கிறேன்.
கண்ணாடியில் மட்டுமே தெரியும்
அந்த அடிமைக்கு பெயர்கூட இல்லை.


2.நதிவதை படலம்

நெழிந்தோடும் நதியொன்றின் 
வாலைப்பிடித்திழுத்துக்கொண்டு அந்தத் தீவுக்குள்
நுழைந்தேன்.
எறும்புகள் இரண்டு துளைக்குள்ளிருந்து
வெளியே எட்டிப்பார்த்துவிட்டு மீண்டும்
உள்ளே புகுந்துகொண்டன.
நதி என் கைகளிலிருந்து விடுபட முடியாமல்
துடிதுடித்துக்கொண்டிருந்தது.
பச்சைக்கடல் செய்வதறியாது கைகட்டி
தலைகவிழ்ந்து நின்றுகொண்டிருந்தது.
நீண்டு வளர்ந்த ராட்சத மரத்தில் நதியை
கட்டிப்போட்டுவிட்டு கரும்பானத்தை
குடித்து தீர்த்தேன்.
கண்களில் துவங்கிய கருஞ்சிவப்பு உடலெங்கும்
பரவி, துவண்டிருந்த மிருகத்தை எழுப்பிவிட்டது.
கண்களில் வழிகின்ற பயத்துடன் மரத்தின் பின்
ஒண்டியிருந்த நதியை இழுத்துவந்து
கடற்கரையில் தள்ளியது மிருகம்.
துவண்டிருந்த நதி மெல்ல மிருகத்தின்
கால்கள் பற்றி எழ முயன்று விழுந்தது.
கணங்கள் சில கடந்தபின்.....................
அழுத விழிகளுடன்
தீராவாதையுடன் 
கடலின் மடுவில் பாலருந்திக்கொண்டிருந்தது
நதி.
மிருக உருவிலிருந்து இவ்வுலகிற்குள்
நுழைகையில் உடம்பை இறுக்கிச் சுற்றிக்கொண்டிருந்தன
சிறு சிறு முள்ளுடல் நதிக்குட்டிகள்.

3. ஜூலி, மற்றும் சில கனவுகள்


மிகச்சிறிய கூடை அது.
அதற்குள்
ஐந்து கனவுகள்
தரையில் விழுந்த மீனைப்போல்
துள்ளிக்கொண்டிருந்தன.
வெற்றிக்கனவின் கை கால்களை வெட்டி
எடுத்தவள்
லட்சியக்கனவின் தலை கொய்து
மகிழ்ச்சிக்கனவின் நாசியை அறுத்தெடுத்து
வாழ்க்கைக்கனவின் மேல் உமிழ்ந்தாள்.
காமக்கனவை கூடையில் சுமந்துகொண்டு
தன் அறைக்கதவை படாரென்று மூடிக்கொண்டாள்.
முப்பது நிமிடங்களை காலம் விழுங்கிய பின்
கதவு திறந்தவள்
தன் வீட்டின் எதிரே ஓடுகின்ற‌
சாக்கடையில் காமக்கனவை எறிந்துவிட்டு
அலைபேசியில் தன் இரண்டாம் காதலுடன்
உரையாட துவங்கினாள்.
நீச்சல் அறியாத காமக்கனவையும் அங்கம் இழந்த‌
பிற கனவுகளையும் கடலில் கொண்டு
சேர்த்ததது.
கனவுகளால் நிரம்பித் தளும்பும் 
கடலின் அலைகளை சர்ப்பக் கால்களால்
மிதித்துக்கொண்டே அலை பேசுகிறாள் ஜூலி.
மிகச்சிறிய கடல் அது.

-நிலாரசிகன்.

Sunday, May 12, 2013

விமர்சனம் - தமிழச்சி தங்கபாண்டியன்



புனைவின் நிசியில் மிதக்குமொரு அறை
தமிழச்சி தங்கப்பாண்டியன்.
"கவிஞன் ஒரு குட்டிக் கடவுள் அல்லர் - சாதாரண மக்களின் ஒரு பகுதியாகக் கவிஞன் இருப்பதன் மூலம் மட்டுமே ஒவ்வொரு சகாப்தத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்த தன்மகோன்னத நிலையை மீண்டும் கவிதைக்குத் தர இயலும்.
சமகாலத்தில் தன்னுடன் வாழும் மக்களின் மிகவும் மறக்கப்பட்டமிகவும் சுரண்டப்பட்டவர்களுக்குத் தன்னைப் புரிய வைப்பதற்கு இயலவில்லை என்றால்அந்த இயலாமையே ஒருகவிஞனின் எதிரிஇது எல்லாக் காலங்களுக்கும் எல்லா நாடுகளுக்கும் பொருந்தும்"
பாப்லோ நெரூடா.
கருத்தாக்கங்களை முன்வைத்துக் கவிதைகளைப் படைக்க முடியாது என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மையானது கருத்தாக்கங்களை முன்வைத்து ஒரு கவிதைப் பிரதியைஅணுகக் கூடாது என்பதுவும்விருப்புவெறுப்புபாரபட்சமற்று ஒரு கவிதைப் பிரதியை அணுகுதல் பெருஞ் சுகம்தன் இருப்பை மொழிவழி உயிர்ப்பித்துக் கொள்ளும் ஒரு கவி மனதைக்கல்மிஷங்கள்முன்முடிவுகள்எடைக்கற்கள்தராசு முட்களற்று அணுகுதலே ஒரு கவிதைப் பிரதிக்கு அளிக்கப்படுகின்ற குறைந்தபட்ச நேர்மையான அரவணைப்பும்அதிகபட்ச மா¢யாதையும்.அதன் பின் அவரவர் வானமும்உள்ளங்கையும்அவரவர்க்கு!
                "தப்பிப் பிழைத்திருப்பவனான நான்எனும் கவிதையில் ப்ரக்ட்,
                                "எனக்குத் தெரியும் வாஸ்தவமாக : அது வெறும் அதிர்ஷ்டம் தான்
                                அத்தனை நண்பர்களுக்குப் பிறகும் நான் தப்பிப் பிழைத்திருப்பது.
                                ஆனால் நேற்றிரவு ஒரு கனவில்
                                அந்த நண்பர்கள் என்னைப் பற்றி
                                இப்படிக் கூறுதைக் கேட்டேன்:
                                'தகுதியானதே தப்பித்திருக்கிறது'
                                மேலும் என்னையே வெறுத்தேன் நான்".
வெறுக்கின்ற 'தகுதியிலிருந்துதப்பித்து இருத்தலே ஒரு கவிதைத் தொகுப்பிற்கான சரியான தகுதியென நான் நம்புகிறேன்அவ்வகையில் நிலாரசிகனின்மீன்கள் துள்ளும் நிசி எனக்குசமுத்திரத்தின் உப்பையும்ஈரத்தையும்வியப்பையும் காட்டிய மீன்நிசப்தமும்காதலும்காமமும்துரோகமும்பசியும்கயமையும் கலந்த நிசியைக் காட்டிய நட்சத்திரம்மெளனத்தின்நாவுகளையும்கொண்டாட்டத்தின் நடனத்தையும் உணர்த்திய உயிர் ததும்புமொரு இசைக்கருவி.
                சிறுமிநாய்க்குட்டிவண்ணத்துப் பூச்சிமீன்கள்கடல்நதிதவளைகாற்றுஇறகுபூனைமான்குட்டிசர்ப்பக்குட்டிகள்முத்தம்பொம்மைதட்டான்பறவைக் கூட்டங்கள்அணில்குட்டிஇவர்களோடு ஜூலியுமிருக்கின்ற நிலாரசிகனின் உலகத்திற்குள் நானும் பிரவேசிக்கின்றேன் - நகுலனின்,
                "பூப்பிலிருந்து
                பென்ஸிலின் பிறந்தது
                பிரகிருதி வலை பின்னுகின்றது"
எனும் வா¢கள் பின் தொடர !
                ஒரு கவிமனதைத் தொடர்கின்றஉணர்கின்றஉறைகின்றஉயிர்க்கின்றபகிர்கின்ற கோழியிறகாய் மெல்லப் புரண்டு,இதில் சமயத்தில் களிக்கிறேன் - சமயங்களில் அழுகிறேன்.உலகத்திற்கும் எனக்குமுள்ள தொடர்பின் ஒரு சிறு நாணைச் சுண்டுகிற ஒரு வரிபோதும் எனக்கு - மேதமை அவசியமில்லைஇருந்தாலும் புதுமைப்பித்தன், "கவிதையின் மேதமையை அறிய ஒருவரி போதும்ஒழுக்கமோதர்மமோ அல்லது மோட்சமோ இவற்றிற்காக எழுதப்படும் கவிதைகவிதையாகாதுஎன்பது போல,
                இத்தொகுப்பில் எனக்குப் பல தெறிப்புக்கள் - ஆன்மாவின் நாணைச் சுண்டியிழுத்தன.
                "ஒவ்வொரு சித்திரங்களின் வழியே
                தன் அழகின்மையைக் கடந்து செல்கிறாள்"
                                                (முகமற்றவனின் சித்திரம்)
                "சிறு சிறு முத்தங்கள் வளர்ந்து
                நீண்டதொரு முத்தமாக உருப்பெற்றபோது
                நாம் முத்தமாகியிருந்தோம்"
                                                (இசைதல்)
                "ஊமை படிகளின் முதுகில்
                மெல்ல இறங்குகிறது மழை"
                                                (மேனியிசை)
                "அழுக்கற்ற அன்பைத் தேடி இப்பயணம்
                என்றது குடுவை மீன்"
                                                (மழைவழிப் பயணம்)
                "கவிதையின் ஒவ்வொரு சொல்லின்
                அடியிலும் மீன்கள் மறைந்திருந்தன
                ஒரு சொல்லுக்கும் மறுசொல்லுக்கும்
                இடையே கடல் அலையின்றிக் கிடந்தது"
                                                (மீன்கள் துள்ளும் நிசி)
                "முதுமைக்கும் பால்யத்திற்குமிடையே
                கதையாய் வி¡¢ந்திருக்கிறது
                இந்த இரவு"
                                                (கதை சொல்லி)
                "கடலுக்கு மரணிக்காத மீனொன்று
                காகமொன்றின் அலகில் துடிதுடித்தது"
                                                (முத்த வடிவினள்)
                "பொம்மையாதலின் வழிமுறைகள்
                அறியாமல் விழித்தபடி நின்றனர் கடவுள்கள்"
                                                (பொம்மையாதல்)
                ....
                அப்போது தான் கவனித்தேன்
                வெயிலின் பின்புறத்தை
                நிழலின் முன்புறத்திலிருந்து
                                                (வெயிலான்)
                மேற்சொன்னவை சில சோறு பதம்ஆயின்இவை மட்டுமே ஒரு அனுபவத்தின் கிளர்வைபொதுத்துவமானதொரு உணர்வு கடத்தலை மொழியின் வழி நிகழ்த்திவிட முடியுமாவெறும்தெறிப்புக்களின் பாய்மரத்தில் படகோட்டுபவன் கவிஞன் அல்லவே - அவன் ஆழ முக்குளிப்பவன் - தான் தேர்ந்தவற்றை வாசகனுக்கும்சக மனிதனுக்கும் கைநிறைய அள்ளித் தருவதில்வாழ்பவனும்மரணிப்பவனும் அல்லவா?
                மேலும்ஒரு கவிமனதின் வெளிப்பாடு என்பது - மொழியின் மூலம் - அதன் நேர்த்தியான அழகியல்நடைஉத்திகள் - இவற்றையெல்லாம் மீறி பிரச்சாரமின்றி வெளிப்படுத்துகின்றஅரசியல்சகமனிதனுக்கான குரல்சகபாலினத்தின் மீதான நேர்மையான பார்வைகரிசனம்தன் வேரும்மண்ணும் உலகமயமாதல்வாழ்தலும் பிழைத்தலுமான இருமைகள்சுயமறிதல்,ஒப்புக்கொடுத்தல்எனப் பல்வேறு அடுக்குகள் கொண்டதல்லவாஅவ்வகையில், "தமிழ்க் கவிதையென்பது தமிழகத்தைப் பொறுத்தவரை மத்தியதரவர்க்கப் புத்திஜீவிகளின் மெளனவாசிப்பிற்கான அநுபூதியாக மட்டுமேசூக்குமத்தின் சூட்சுமமாக மட்டுமே சுருங்கிக் கிடப்பதில் எமக்குச் சம்மதமில்லைஎனும் வே.முபொதியவெற்பனின் குரல் எனக்கு மிக முக்கியமானது.அதனை அடியொற்றிப் பார்க்கையில்நிலாரசிகனின் கவி உலகும்அது முன்வைக்கின்ற அனுபவங்களும் மிக முக்கியமானவைநேர்மையானவை.
                பல நூற்றாண்டுகளாகத் தொடர்கின்றதொரு பயணத்தைச் சென்ற நூற்றாண்டின் நிழற் பார்வையுடனும்இந்த நூற்றாண்டின் நம்பகமில்லாத்தன்மையுடனும் பார்த்துக் கொண்டேஅடுத்தநூற்றாண்டிற்குள் அவனது அனுமதியின்றி தள்ளப்படுகின்ற ஒரு எளிய மனிதனின் குரல் தான் இத் தொகுப்பின் தொனிதன் புலன் உணர்வுகள் உணர்ந்தும்உய்த்தும்சேர்த்தவற்றை சொல்லும்,அகம் அரற்றுமொரு கூர்மையான கேவலும்நடைமுறை நிசர்சனத்தை ஒரு சிறிய அவதானிப்புடன் கையறு நிலையில் கடந்து செல்லும் அவலமும் தான் இக்கவிதைகளின் அடையாளம்சகபாலினமான பெண்ணைக் காதலுடனும்பு¡¢தலுடனும்காத்திருப்புடனும்பார்க்கின்ற பார்வையும்வனத்தைபொம்மைகளைகடவுள்களைத் தொலைத்தபிளாஸ்டிக் பைகளில் கட்டிகுப்பைகளில் அன்பைக் கொட்டும் நகரத்தைச் சுட்டும் வலியே இவற்றின் மெளனக் குறிப்புக்கள்
                நிலாரசிகனது மொழிஉரை நடைக்கும்வசனத்திற்குமான இடைப்பட்ட ஒன்றுகொஞ்சம் தட்டையானது தான் - ஆனால் இக்குறையைத் தட்டிச் சீர்படுத்தி விடுகின்ற ஒரு சித்திரவிவரித்தலுக்கரியது அவரது லாவகம்கவிதைக்கு அழகியலை விட உயிர்த் தன்மையே முக்கியமென்கின்ற நவீன மனதின் கருதுகோளின் படி நிலாரசிகனது பல கவிதைகள் என்னை முற்றாகக்கவர்ந்தவை என்றாலும் கீழ்க் குறிப்பிட்ட 'முதல்துளிஎனக்குத் தந்த அனுபவம் ஒரு மிகச் சிறந்த தரிசனம் - a vision indeed. இதுவே நிலாரசிகனை இன்றைய நவீனக் கவிதைப் பரப்பில் மிகமுக்கியமானதொரு ஆளுமையாக நிலை நிறுத்துகின்றது.

முதல் துளி
                சைக்களின் முன் இருக்கையிலிருந்து
                கடந்து செல்லும் மரங்களிடம் பேசியபடி
                வருகிறாள் சிறுமி.
                மரங்களின் மொழியை அவளுடன்
                பயணிக்கும் தட்டான்களுக்குக் கற்றுத் தருகின்றாள்.
                அவளிடம் கற்ற மொழியுடன்
                மரத்தின் இலையில் அமர்கின்ற
                தட்டான்களின் சிறகில் ஒளிர்ந்து
                நகரும் வெயில் மரமொழியை
                கற்றுக் கொண்டு மறைந்து போகிறது.
                கொதிக்கும் பாலையின் வெயிலுக்குள்ளிருந்து
                முளைக்கும் மரக்கன்று
                சிறுமியின் மொழியில் தலையசைத்து
                தலையசைத்துப் பேசத் துவங்குகிறது
                பாலையின் முதல் துளியிடம்.
                அற்புதமானதொரு அனுபவத்தையும் அதன் தொடர்பான விழிப்புணர்வுமிகிழ்வுநம்பிக்கை - முதலியவற்றையும் எனக்களித்த கவிதை இதுமனிதனுக்கும்இயற்கைக்கும் உள்ளஉறவைஅதன் பிரபஞ்சப் பிணைப்பைதன் நிலத்தில் காலூன்றி நின்று உலகம் முழுமைக்குமான உண்மை ஒன்றைக் கடத்தும் கண்ணியான கவிதையாய் மிகச் சிறந்த பதிவு இது!
                "கவிதையின் தன்மை என்ன என்பதையும்கவிதையின் செயற்பங்கு என்ன என்பதையும்பிரஸ்தாபிக்காமல்கவிதையின் அழகியல் குறித்த 'எந்த விவாதமும்கடந்து செல்ல முடியாது"என்கின்ற பிரம்மராஜன், "கவிதை பு¡¢யப்படும் விதம்கவிதையின் மொழிகவிதை வாசக மனதிற்குள் இயங்கும் விதம்அர்த்தச் சாத்யப்பாடுகள் ஆகியவற்றைச் சேர்த்துக் கொண்டால்தான்அக்கருத்துத் தொகுதிகள் நவீன கவிதையின் அழகியலாக ஆகும் தகுதி வாய்ந்தவையாவது சாத்யம்என்றும் சுட்டுகின்றார்.
                மேற்சொன்ன நான்கு "touchstone method" (to borrow from T.S. Eliot) இன் படிநிலாரசிகனின் கவிதைகளை வரையறுக்கையில்ஒரு வாசகனை அவரது தட்டையான வாக்கிய அமைப்புக்களின்முற்றுகள் அயர்ச்சியுறச் செய்தாலும்,
உதாரணம் :
                [இருக்கிறாள் / செல்கிறாள் / பார்க்கிறாள்
                நீந்துகிறோம் / கையசைக்கின்றன / செல்கிறார்கள்
                தொடர்கிறோம் / பார்க்கின்றன
                ஏற்படுத்தியிருந்தது / பொறிக்கப்பட்டிருந்தது
                தயார்படுத்துகிறேன் / ஓடுகிறேன்]
அவன் அதனுள் நுழையத் தடையற்று அவனை ஈர்ப்பது கவிஞனின் “என்ன சகா!” எனும் சமநிலைப்படுத்துதலும்தோழமையும்தான்.
உள்ளூறப் பிணைக்கின்ற அனுபவமெனும் சூட்சுமத்தின் கயிற்றை இந்த கவிக்காரகன் சமத்காரமாக அறிந்திருக்கிறான்தானறியாததொரு கழைக் கூத்தாடியின் கலை நேர்த்தியோடுமனச்சித்திரங்களாக அவை வரையப்படுவதே இவனது கவிதைகள் புரியப்படும் விதம்உருவகங்களும்குறிப்பான்களும்படிமங்களும் ஊடுபாவும் புனைவின் திரிசங்கு நிலமே இவனது மொழி.
                   மெதுவாக அருகமர்ந்து தோள் தொடுகிறதே என்று திரும்பினால் திடீரென்று அந்தரத்திலும்குபீரென்று அடி ஆழத்திலும் தள்ளுகின்ற உணர்வு நிலையைக் கிளறுவதே இக்கவிதைகள்இயங்குகின்ற விதம்சிந்தனையும்உணர்வும் சரிசமமான நேர்த்தியுடன் புணர்கின்ற இவரது கவிதைகளின் அர்த்தச் சாத்தியப்பாடுகள் அவரவர் மனவெளிபுரிதல் பாற்பட்டது என்றாலும்எனக்குஇவை - தத்துவங்களின் அதிகாரமற்றுஅடிப்படையானதொரு நேயத்தைபுகார்களற்று வாழ்தலுக்கான தேடலைகுறைந்தபட்ச இருத்தலுக்கானதொரு கைப்பிடிப்பைக் கோருகின்ற சாத்தியங்கள்உடையவைஆகவே வாசகனுக்கு மிக முக்கியமானவை - எனக்கு நெருக்கமானவை.
                "நெருடாவின் சமயமாகத் தெருக்களே திகழ்ந்ததென்றுஅவர் குறித்த நினைவஞ்சலிக் கட்டுரை ஒன்று குறிப்பிடுகிறதுமக்களின் கவிஞனான நெரூடா, "புத்தகங்களுக்கு அந்தந்த சிந்தனைப்போக்குகள் என அடையாள முத்திரைகள் இடப்படுவதை நான் ரசிப்பதில்லைஎந்தச் சிந்தனைப் போக்குகளையும் வகைப்பாடுகளையும் சாராத புத்தகங்கள் வாழ்க்கையைப் போலவே எனக்குவேண்டும்என்பார்நிலாரசிகனது கவிதைகளும் எந்தவித அடையாள முத்திரைகளுககுள்ளும் சிக்காதவைவாழ்க்கையைப் புனைவின் தூ¡¢கை கொண்டு வரைந்தாலும்இரத்தத்தின் வண்ணமும்,நிணத்தின் மணமும் கொண்டவைகொஞ்சம் குறியீடுகள்உருவகங்களின் மேலேறும் 'பாண்டி விளையாட்டைநாம் அறிந்து கொண்டோம் என்றால்அவற்றின் ஆகாய நீலமும்,  அடர் வனத்தின்பச்சயமும்பள்ளத்தாக்கின் மெளனமும்பெருங்கடலின் வசீகரமும் நமக்கு வசப்படலாம்.
                கவிஞனது சமூகச் சுயமும்தன் சுயமும் இடைவெளியின்றி ஒன்றிப் போகின்ற கவி ஆளுமை சாத்தியப் படுமா என்கிற கேள்வி எப்போதும் என்னை ஈர்க்கின்றதொரு மாயக்கண்ணாடி.சமகாலத்தில் நவீனக் கலை பரப்பில் பயணிக்கின்ற பெரும்பான்மையினர் எத்தகைய நெருக்கடிக்கு ஆளாகின்றனர் என்பதனை 'கலை ஓர் அனுபவம்என்ற நூலில் ஜான் டியூவி,
                "தொழில் இயந்திர மயமாக்கப்பட்டுள்ளதுஆனால் ஒரு கலைஞன் இயந்திரத்தன்மையுடன் பெருவா¡¢ உற்பத்தி செய்யும் வேலையைச் செய்ய முடியாது... தங்கள் படைப்பைத்தங்களைத்தனித்துவப்படுத்திக் காட்டும் 'சுய வெளிப்பாடாகக்கையாளுவதைத் தங்கள் மீது சுமத்தப்பட்ட கடமையாகக் கலைஞர்கள் காண்கிறார்கள் / கொண்டுள்ளனர்பொருளாதாரச் சக்திகளின்போக்கிற்கேற்ப வளைந்து கொடுக்காமல் இருப்பதற்காகக் கோட்டித்தனம் செய்தாவது தங்கள் தனித்தன்மையை மிகைப்படுத்திக்காட்டும் எண்ணம் அவர்களுக்குக் கட்டாயமாக ஏற்படுகின்றது"என்கிறார்.
                கவிதை வெளிக்கும் இது பொருந்தும் - தனித்தன்மையை நிரூபிக்கின்ற கோட்டித்தனம்அஷ்டாவாதானம்சிரசாசனம்கோட்பாடுபிராணாயாமம் இவை எதுவுமின்றி இயல்பாகக் கால்நீட்டிகொஞ்சம் வெள்ளந்தியான புனைவின் அணைப்பில் வாசகனோடு உறவு கொள்கின்றன நிலாரசிகனது கவிதைகள்தன்னைக் கொஞ்சம் பிட்டுக் கொடுத்துப்பகிர்ந்து கொண்டு,வாசகனிடமிருந்து பகிர்தலைத் தவிர வேறெதனையும் கோராத பொக்கை வாய்ச் சிரிப்புடன் நம்மை எதிர் கொள்கின்ற இந்த மீன்கள் துள்ளும் நிசி - தூண்டில்கள் வேண்டாதததுஉள்ளங்கையளவுஉப்பு நீர் கேட்கும் அதற்கு நம் ஒரு சொட்டுக் கண்ணீரோ அல்லது சிட்டிகை புன்னகையோ போதும்!
                "கவிதை என்பது வார்த்தைகளிலான அமைப்பா என்ன?" -
"இல்லைஎன்பதை எனக்கு மீண்டுமொரு முறை உணர்த்திய நிலாரசிகனது இந்தப் படைப்பு பகிரப் பட வேண்டியது - பேசப்படவேண்டியதுவாழ்தலின் வெளிப்பாடுகளான இவை சின்னஞ்சிறு அகல்போல் ஒளிர்பவை - தீப்பிழம்புகளிலிருந்து தனித்துத் தொ¢பவை.
ஆம் -
                "சாம்ராஜ்யங்களிலிருந்து வெகு தொலைவாய்
                எத்தனை ஸ்திரமாக நிற்கிறது அறை!”
                நிலாரசிகனது மீன்களுடனும்நமது கடலுடனும்
                புனைவின் நிசியில்,
                எத்தனை ஸ்திரமாக நிற்கிறது இந்த அறை!

நன்றி: உயிர் எழுத்து - மே'13