Saturday, May 02, 2020

நிசப்த மச்சம் - ஒன்பது கவிதைகள்




1.
அப்பாவைக் கொன்றது
இன்றா நேற்றா என்பது
ஞாபகத்தில் இல்லை.
சுருட்டின் நுனிப்புகை வழியே
அப்பா வெளியேறி இருக்கக்கூடும்.
பூட்டப்பட்ட அறைக்குள் 
அப்பா தனித்திருக்கலாம்
அல்லது
அப்பாவாக நானிருக்கலாம்.
உடைந்து விழும் கண்ணாடி
யன்னலின் சப்தம் மட்டும்
நிசப்தமாக எதிரொலிக்கிறது.


2.
எவரும் நுழையத்தயங்கும்
அறைக்குள்
இந்த மஞ்சள் வெய்யில் மட்டும்
நுழைந்துவிடுகிறது.
கூடவே அதன் நிழலும்.
பின் 
ஒரு பசித்த மரப்பல்லி
ஒருகால் உடைந்த எட்டுகாலி
ஒற்றைக்கண் சிட்டில்
கூடவே இவர்களது நிழலும்.
தரையெங்கும் படர்ந்திருக்கும்
குருதியை புசிக்கும்
எறும்புக்கூட்டம் ஓடிச்சென்று
நிழல்களை கடித்திழுத்துச் செல்கின்றன
பதிமூன்று கால்களையும்
தன் கால்களாக பார்க்கின்றன
என் அசைவற்ற விழிகள்.


3.
முடிச்சுகள் அவிழ்க்கும்
புதிர்விளையாட்டின் கடைசி
முடிச்சினை அவிழ்த்து
பதினான்காம் தளத்திலிருந்து
வீசுகிறேன்
அதுவொரு காய்ந்த மரத்தின்
காக்கைக்கூட்டில் விழுகிறது.
பறவைகள் தளும்புகின்றன.
முடிச்சுகளற்ற கணமொன்றில்
மரம் உட்புறமாக 
ஒரே ஒருமுறை 
தன்னுடலைத் தழுவி மீண்டது.
சப்தமின்றி முறிந்து விழுகின்றன
எண்ணற்ற கிளைமுடிச்சுகள்.

4. இருளில் நகரும் நிழல்களுடன்
பேசக்கற்றுக்கொண்டார்கள்
அஞ்ஞானிகள்.
பிழைகளால் மொழியொன்றினை
உருவாக்கி அதன் மூலம் உரையாடுவதும்
அவர்களது இயல்பானது.
கண்களுக்கு புலப்படாத அரூப கோட்டைக்குள்
அவர்களது நர்த்தனம் தொடர்கிறது.
அலரும் கூகைகளும் ஒடுங்கிய
யாமத்தில்
முலைகளால் அழுதிடும் பேரிளம்
பெண் 
நிழலின்றி நகர்ந்து இருளுக்குள் 
மறைகிறாள்.


5. பாறையின் இடுக்கிலிருந்து
கசிந்துவரும் கீச்சொலி பசித்தழும்
        கடைசி பிள்ளையுடையது.
  வீடு திரும்பிய அம்மாப்பறவை
மீனற்ற அலகை 
பாறைமீது தேய்த்து ஒலி எழுப்புகிறது.
மனதெங்கும் துள்ளிய மீன்களிலொன்றை
அம்மாப்பறவை நோக்கி வீசுகிறாள்.
இவளும் கடைசிப்பிள்ளை
எல்லாவற்றிலும்
எல்லா விதத்திலும்.


6. கூழாங்கற்களை எடுத்து
வந்தாள்.
நதியும் உடன் வந்தது.
கொஞ்சமாய் அந்தியை 
பெயர்த்து ருசித்தவளின்
பாதம் தொட்டது முன்னிரவு.
காய்ந்த இலையொன்றை
முத்தமிட்டு
நான் நான் என்ற கணத்தில்
மலர்ந்தன காடுகள்
புஷ்பங்கள்
மற்றும் சில
இருவுடல் இரவுகள்.



7.
ஏதேனுமொரு பொருளை
எப்போதும் தவறவிடுகிறாள்
அந்தி முதல் யாமம் வரை.
கீழ் தளத்தில் வசிப்பவன்
விழுகின்ற சப்தத்தை 
சேகரித்து பலூனில் அடைக்கிறான்.
அவனது அறையெங்கும்
பலூன்களால் நிரம்பியிருக்கின்றன.
வெப்ப இரவொன்றில்
பலூன்களை 
உடைத்து உடைத்து
உடைகிறான்.
இப்போதைய அதிகாலைகளில்
மேல் தளத்தின் நிசப்தங்களை
தவறாமல் வீசுகிறாள் அவள்.
.
8.
எப்போதாவது நிசப்தம்
பேசுகிறவளின் கழுத்து மச்சம்
கழுத்திலிருந்து மார்புக்கு
தாவிச் செல்கிறது.
அதற்கு அவள்
நிசப்த மச்சம் எனப் பெயரிடுகிறாள்.
ஓடையற்ற
ஓடையொன்றில் நீராடி 
மார்புக் கச்சையை சரி செய்கையில்
நிசப்த மச்சத்தை காணவில்லை.
அவளைச் சுற்றிலும்
நீந்தும் மச்சங்களில்
எந்த மச்சம் நிசப்த மச்சம்
எந்த மச்சம் சப்த மச்சம்
எந்த மச்சத்தினுள் சென்றாளோ
அவள்.

9.


அமிழ்ந்துகொண்டே இருக்கும்
கடலாழ சப்தச் சிப்பிகளில்
ஒரே ஒரு சிப்பி மட்டும்
திறந்து கொள்கிறது
அதனுள்ளிருந்து தெறிக்கின்றன
முத்தங்கள்
முனகல்கள்
முடிவிலிக்கனாக்கள்
முடிவற்ற பெருமூச்சுகள்
பின்
எதுவும் நடந்துவிடாத 
பாவனைகள் 
எதற்கென்றே தெரியாத
விசும்பல்கள்
கடைசியாய் 
புணர்ந்து சிலிர்த்த 
நிசப்தங்கள்
நிசப்தங்கள்


-ராஜேஷ் வைரபாண்டியன்

(நிலாரசிகன்)