Saturday, December 31, 2011

வம்சி சிறுகதை போட்டி


வம்சி பதிப்பகம் நடத்திய சிறுகதை போட்டியில் என் "பெருநகர சர்ப்பம்" சிறுகதை "தொகுப்புக்கு" தேர்வாகியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். வெற்றி பெற்ற அனைத்து சிறுகதையாளர்களுக்கும் என் வாழ்த்துகள். இப்போட்டியை நடத்திய தீராத பக்கங்கள் மாதவராக் அவர்களுக்கு நன்றியும் நேசமும். நண்பர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

சிறுகதைக்கான சுட்டி: http://www.nilaraseeganonline.com/2011/10/blog-post_29.html

அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.

Sunday, December 25, 2011

துத்திப்பூக்களும் கோணங்கியும்

துத்திப்பூக்களின் நடுவே ஓர் உரையாடல்

இருநாட்களுக்கு முன் கோவில்பட்டிக்கு சென்றிருந்தேன். எழுத்தாளர் கோணங்கி,உதயசங்கர் மற்றும் கவிஞர்.தேவதச்சன் ஆகியோரை சந்தித்தேன்.  முதலாவதாக கோவில்பட்டி சென்றவுடன் கோணங்கி வீட்டிற்கு சென்றேன். அவரது அப்பாவிடம்(எழுத்தாளர்.சண்முகம்) பேசிவிட்டு மாடிக்கு அழைத்துச்சென்றார். அறையெங்கும் நிறைந்திருக்கும் புத்தகங்களின் நடுவே ஜன்னலோர இருக்கையில் தன் அடுத்த நாவலுக்கான எழுத்துப்பணியில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கிறார் கோணங்கி. நாவலை பற்றி பேசத் துவங்கியவுடன் மிகுந்த உற்சாகமாகி நிறைய விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.சிற்றிதழ்கள் பற்றியும் கல்குதிரையின் பழைய இதழ்களை பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம்.ஒரு மாபெரும் எழுத்தாளர் என்கிற எவ்வித சுவடுமின்றி மிக எளிமையாக வசிப்பவர் அவர் என்பதாலயே அவர்மீதான அன்பும்,மதிப்பும் உயர்ந்துகொண்டே இருக்கிறது.

மதிய உணவிற்கு பிறகு தேவதச்சனை அவரது வீட்டில் சந்தித்து "விளக்கு" விருது வாங்கியதற்காக வாழ்த்திவிட்டு அவரையும் அழைத்துக்கொண்டு குமாரபுரம் ரயில் நிலையம்(கு.அழகிரிசாமியின் "குமாரபுரம் ஸ்டேசன்" இதுதான்) சென்றோம். கோவில்பட்டியிலிருந்து சுமார் 20 கி.மி தொலைவில் இருக்கிறது குமாரபுரம்.ரயில் நிலையம் செல்லும் தார் ரோட்டின் இருபுறமும் சோளக்கதிர்கள் அடர்ந்திருந்தன. இடுப்புயர புதர்க்காட்டின் நடுவே பயணிப்பது அற்புதமானதொரு அனுபவமாக இருந்தது. "17ம் நூற்றாண்டிற்குள் பயணிப்பது போலிருக்கிறது" என்றார் தேவதச்சன். ரயில் நிலையத்தை சுற்றிலும் படர்ந்திருக்கும் பசுமை மனதை கொள்ளை கொண்டது. வழியெங்கும் துத்திப்பூக்களும்,ஆவாரம்பூக்களும் நிறைந்து கிடந்தன. புதர்க்குருவிகள் காற்றில் அலைந்துகொண்டிருந்தன.

குமாரபுரம் ரயில் நிலையத்தில் ஸ்டேசன் மாஸ்டராக இருக்கிறார் எழுத்தாளர் உதயசங்கர். அவருடன் தேநீர் அருந்திக்கொண்டே ஓர் உரையாடல் ஆரம்பமானது. தற்கால கவிதை,கு.அழகிரிசாமி,சிற்றிதழ்கள்,தகவல் தொழில்நுட்பத்தின் சாதக/பாதகங்கள்,இன்றைய இளம் எழுத்தாளர்களின் தனித்துவ வெளிப்பாடு, இன்றைய இளம் கவிஞர்களின் தனிக்குரல்,டெம்ப்ளேட் ஆளுமைகள் என்று விரிவானதொரு உரையாடலாக அது நீண்டது.கோணங்கியின் எழுத்தை பின்பற்றி எழுதும் இன்றைய எழுத்தாளர்களை பற்றியும் பேசினோம்.
உதயசங்கரின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் தொகுப்பு பாரதி புத்தகாலயம் வெளியீடாக இந்த புத்தக கண்காட்சிக்கு வருகிறது.
தேவதச்சனின் கவிதைகள் குறித்தான உரையாடலும் கருத்துக்களும் மிகவும் முக்கியமானவை. அவர் பேச பேச பல்வேறு திறப்புகள் மனதில் தோன்றியபடியே இருந்தன. கவிதையியல் குறித்தான கட்டுரைகளை அவர் எழுதவேண்டும் என்பது என் பேராவல். மூன்று மணிநேர உரையாடல் முடியும் தருவாயில் வந்து நின்றது ரயில். அரவமற்ற ரயில்நிலையத்தில் ரயிலை ரசிப்பதை விட அற்புதமானது எது?
மிகச்சிறந்த உரையாடல் மிகச்சிறந்த புலத்தில் நிகழ்ந்தேற காரணமாயிருந்த கோணங்கி அண்ணனுக்கு என் நன்றி.

இன்னும் வெகு நாட்களுக்கு மனதெங்கும் வியாபித்திருக்கும் இச்சந்திப்பு.

-நிலாரசிகன்.

Monday, December 19, 2011

படித்ததில் பிடித்தது:


இன்னும் தன் அம்மாவிடம்
சொல்லவில்லை
தான் குழந்தை உண்டாயிருப்பதை
ஓரிரு நாளில் அவள்
சொல்லிவிடக்கூடும்
அம்மாவிடம்
அம்மா சொல்வதற்கு
என்ன இருக்கிறது
இருக்கத்தான் செய்கிறது
எப்போதும்
இலையின் பின்பக்கம்
முன்பக்கத்திடம் சொல்வதற்கு
ஏதோ ஒன்று
எப்போதும் இருக்கிறது.
பின்பக்கம்
முன்பக்கத்திடம் சொல்ல முடியாத ஏதோஒன்று.

-தேவதச்சன்
- "இரண்டு சூரியன்" தொகுப்பிலிருந்து.

Sunday, December 11, 2011

எக்ஸைல் - ஒரு வாசிப்பனுபவ பகிர்வு

நாவலாசிரியரின் பெயரை சொல்லி "அவர்" நாவல் வாசித்துக்கொண்டிருக்கிறேன் என்று இலக்கியம் பேசும் நண்பர்களிடம் சொன்னால் அவர் எழுதுவது நாவலே இல்லை என்பார்கள். அல்லது சுயபுலம்பலை தவிர அவருக்கு என்ன தெரியும் என்பார்கள். முதல் அத்தியாயத்தில் கதாபாத்திரங்களின் வர்ணனையும் அதன் பிறகான அத்தியாயங்களில் கதையின் மையத்தையும் நோக்கி நகரும் நாவல்களை வாசித்தே பழக்கப்பட்டுவிட்ட யாருக்கும் எக்ஸைல் ஒரு மாற்று அமிர்தம்.
எந்தவொரு 435 பக்க நாவலையும் இரண்டு நாட்களில் அதுவும் அலுவலகத்தில் கிடைக்கும் இடைவெளிகளில் நான் வாசித்ததில்லை. சந்தேகமின்றி  தன் மாஸ்டர் பீஸாக நாவலாசிரியர் கருதும் "0 டிகிரி"யை எக்ஸைல் தாண்டிவிட்டதென்று மார்தட்டலாம். அல்லது தேகத்தில் தொலைந்த "ஏதோவொன்றை"  இந்நாவலில் கண்டெடுத்ததாகவும் எண்ணலாம்.

அப்படி என்னதான் இருக்கிறது இந்நாவலில்?  எது நாவல் எனும் கேள்வியை புறந் தள்ளிவிட்டு  எக்ஸைலுக்குள் நுழைந்தால் வாசிப்பு முடிந்து வெளியேறும் கணம் சர்வ நிச்சயமாக உணரலாம் எக்ஸைலின் தனித்தன்மையை(Uniqueness). வாசிக்க ஆரம்பித்து சில மணிநேரங்கள் கழிந்துதான் கவனித்தேன் நானிருப்பது 160வது பக்கத்திலென்று. வாசகனை தன் எழுத்தின் வழியே 'சலிப்பின்றி' பயணிக்க செய்வதிலாகட்டும் உலக இலக்கிய ஆளுமைகளை தொடர்ந்து அறிமுகப்படுத்துவதிலாகட்டும் சாரு ஜெயித்திருக்கிறார். காமத்திலிருந்து காயகல்பம் வரை பல விஷயங்களை கடந்து செல்லும் நாவலில் உதயா,அஞ்சலி,கொக்கரக்கோ(Excellent characterization) மற்றும் சிவா முக்கிய கதாபாத்திரங்களாக உலவுகிறார்கள்.அஞ்சலியின் கொடூர பால்யம் பற்றிய விவரிப்பு வாசகனுக்குள்  வலியை ஏற்படுத்தும் தருணங்களில் ,"சித்தன்" சிவாவும் அவ்வப்போது வந்து "சொய்ங்"கென்று அசத்தும் கொக்கரக்கோவும் வாசகனை ரசிக்க வைக்கிறார்கள். நாகூரின் தெருக்கள்,தாஜ்ஜியர் கஃபே,பிரான்ஸின் சாலைகள்,சித்தர்பாடல்கள்,சமையல் குறிப்புகள்,காதல்,துரோகம்,காமம்,பெண்களில் விதவிதமான ஆடைகள்,Current affairs,"அந்த" chat பிரச்சினை,நித்தி,கொக்கரக்கோவின் 'பாடை', சுதாகருடன் ஒட்டிக்கொண்டிருக்கும் நாய்(நாய்கள் மீது அதிக பிரியம் உரிய நாவலாசிரியர் எதற்காக நாயை சுதாகர் எனும் கதாப்பாத்திரம் மூலமாக கேவலப்படுத்த வேண்டும்?),விதவிதமான வித்தியாசமான க்ளைமேக்ஸ்,ஜி.ஸ்பாட், பக்கிரிசாமியின் ஆவி,சபரிமலை பயணம்,ராயர் காஃபி,பகவதி பாலு,நாவலெங்கும் விரவிக்கிடக்கும் பிரஞ்சு வார்த்தைகள்,சொக்குப்பொடி என்று இந்நாவல் பரந்து விரிந்து பல திசைகளில்,பல கிளைகளில் பயணிக்கிறது. அதிக வாசகனுபவம் இல்லாத முதல் வாசகர்கள் இந்நாவலை படித்துவிட்டால் நாவலாசிரியரின் மற்ற நூல்களின் விற்பனை அதிகரிக்கும்.

இவ்வளவு இருக்கும் நாவலில் குறையே இல்லையா? குறையில்லாத படைப்பேது? கீழ் வரும் விடயங்கள் என் பார்வையில் குறையாக அல்லது நாவலின் அசுர வேகத்தை தொய்வாக்குபவையாக தோன்றுகின்றன.


  • பிச்சாவர கார்னிவலுக்கான மிகப்பெரிய பட்டியல்
  • ஒரு நாயகி, அவளுக்கு பல பிரச்சினைகள்,கண்ணீர்,அடிஉதை மற்றும் சுதாகர் நாய் எனும் வில்லன் - 0 டிகிரியின் சில பக்கங்களை நினைவூட்டுகிறது
  • பதினெட்டு படிகளை பற்றிய மிக நீ....ள விவரணைகள்
  • அதீதமான பிரஞ்சு வார்த்தைகள்
  • ஸாரோ,பப்பு(இன்னும் எத்தனை முறை எழுதுவார்?)
  • நாகூரின் தெருப்பட்டியல்
அதிகம் ரசிக்க வைத்தவை:

  • கொக்கரக்கோவின் பால்யமும் குறும்பும்
  • உதயா,அஞ்சலியின் உரையாடல்கள்/கடிதங்கள்
  • பக்கிரிசாமியின் பக்கங்கள்
  • அஞ்சலியின் பிரசவத்தின்போது நடுச்சாமத்தில் குளிரை தாங்க முடியாமல் போர்வையை எடுக்க துடிக்கும் வரிகள்
  • நளினியின் பிரசவத்தின்போது உதயாவின் தியாகங்கள்(வேறெந்த வார்த்தையும் பொருந்தாது)

சாருவை "செக்ஸ் எழுத்தாளர்" என்று மட்டுமே எண்ணி நாவலுக்குள் நுழைபவர்களுக்கு எக்ஸைல் வேறுவிதமான நாவல் என்பது புரியவரும்.
மொத்தத்தில் எக்ஸைல் ஒரு மிகச்சிறந்த வாசிப்பனுபவம். An unique reading experience.

-நிலாரசிகன்.

Tuesday, December 06, 2011

இசைதல்

1.
சிறு சிறு முத்தங்கள் வளர்ந்து
நீண்டதொரு முத்தமாக உருப்பெற்றபோது
நாம் முத்தமாகியிருந்தோம்.
அறைக்குள் சிதறிய மிச்ச முத்தங்கள்
களியாட்டத்தில் ஒன்றுடன் ஒன்று பிணைந்திருந்தன.
ஊர்ந்த எறும்புகள் களியாட்டம் கண்டு
பித்தமேறி ஆடி மகிழ்ந்தன.
முத்தவாசனையில் வெட்கி தலைகுனிந்திருந்தது
தொட்டிச்செடி.
ஓர் அழகிய நிகழ்வின் துவக்க கணத்தில்
இதழ் பிரித்து ஓடி மறைந்தாய்.
இசையறுந்த
பியானோ ஒன்றும் வயலின் ஒன்றும்
அவரவர் அறையில் தனியே
இசைத்தடங்குகிறது.

2.
ஊமை படிகளின் முதுகில்
மெல்ல இறங்குகிறது மழை.
முழுவதும் நனைந்துவிட்ட படிகள்
சில்லிட்டு சிலிர்க்கையில்
வலுக்கிறது.
மழையும் வெயிலும் இணையும்
புள்ளியிலிருந்து கசிகிறது மேனியிசை.
விருட்சமொன்றின் வேர் பற்றி
மேலெழுகின்ற மல்லிகைக்கொடி
இதழ் பிரிந்த கணத்தில்
வெயில்மழையை சூழ்ந்து மறைக்கிறது.
யாருமற்ற கடற்கரையில் நிலாபார்த்து
மலர்கிறாள் முதிர்ந்த கடற்கன்னியொருத்தி.

-நிலாரசிகன்.

Thursday, December 01, 2011

அம்ருதா இதழில் வெளியான கவிதைகள்

1.உனக்கும் எனக்குமான யுத்தத்தின் பெயர் இதழ் முத்தம்

மெளனம் உருகி படர்ந்திருக்கும்
மலை உச்சியில் நாம் அமர்ந்திருக்கிறோம்.
என் அணைப்பின் தகதகப்பில்
அடர்பச்சை மரக்காடுகளை
பார்வையின் வழி சென்றடைகிறாய்.
மெல்ல உன் வதனம் திருப்பி
இதழ்களில் முத்தமிடுகிறேன்.
வனம் சில்லிட்டு சிதற சிதற
நம்மிடையே வளர்கின்றன
ஓராயிரம் வேர்களற்ற விருட்சங்கள்.
இதழ்களிலிருந்து வெளியேறும்
முத்தப்பறவைகளிலொன்று உன்னை
அள்ளிச் செல்கிறது.
இதழ்களிலிருந்து வெளியேறிய
கருப்பு சர்ப்பம் என்னை தின்று பசியாறுகிறது.
நம் தடயங்களற்ற மலையின் உச்சி
இப்பொழுதும் மெளனித்து கிடக்கிறது.

2.வனத்தின் நடுவில் நடனமிடும் முத்தங்கள்
சிறகுகள் விரித்திருக்கும்
வண்ணத்துப்பூச்சியை வருடுகிறது
சுவை உணரும் உறுப்பொன்று.
தீண்டலின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க
சிறகுகளை அடித்துக்கொள்கிறது.
கற்குகையின் இருண்ட பள்ளத்தில்
இரண்டு வெப்பமீன்கள் எதிரெதிரே
நீந்துகின்றன.
கார்காலத்தின் முதல் துளி
கடலென விரிந்து விழுகிறது.
விழுகின்ற துளியினூடாக
இரண்டு மீன்களை கெளவிக்கொண்டு
பறக்கிறது மீன்கொத்தி.
குகையின் இருளடர்ந்த பள்ளத்தில்
மீனுருவில் ஆழ்ந்து உறங்குகிறது
ஒரு வண்ணத்துப்பூச்சி.

-நிலாரசிகன்.

Saturday, November 26, 2011

பொதிகை தொலைக்காட்சியில்..

இரமணன் அண்ணன் பொதிகை தொலைக்காட்சியில் நடத்தும் “கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்” நிகழ்ச்சியில் நானும் உயிர்த்தோழன் விழியனும் குழந்தைகள் பற்றிய கவிதைகளை பற்றி பேசுகின்றோம்.

பொதிகை - 28 நவம்பர் - திங்கள் இரவு - 9.30 மணிக்கும் மறுஒளிபரப்பு 29 நவம்பர் - செவ்வாய் மதியம் 1.00 மணிக்கும்.

நிகழ்ச்சியை நண்பர்கள் யாராவது பதிவு செய்து தர இயலுமா?

நட்புடன்,
நிலாரசிகன்.

Monday, October 03, 2011

ஒலிவடிவ பறவைகள்


அறையெங்கும் ஒலி நிரப்பும்
தாரிச்சிட்டிலிருந்து
உதிர்கின்ற சொற்கள் சிறகு முளைத்து
காற்றில் அலைந்து திரிகின்றன.
பிரபஞ்சத்தின் முடிவுறா இருளில்
அவை ஒலிவடிவ பறவையாக
பறந்து பறந்து களிப்படைந்து,
சொற்களற்ற மெளனத்துடன்
என் தோளில் வந்தமர்கின்றன.
ஆத்மார்த்த பேரன்புடன் அதனுடன்
உரையாட துவங்குகிறேன்.
ரகசியமான தருணமொன்றில்
அதன் சுதந்திரத்தின் சிறகுகளை
நான் கத்தரித்துவிட்டதை
அறியாமல் தினம்
தொடர்கிறது மொழியற்ற
உரையாடல்.

[இவ்வார கல்கியில் வெளியான கவிதை]

[வீட்டிற்கு புதிதாய் வந்துள்ள செல்லப்பறவைகள் செம்பருத்தி,செம்பரிதி இருவருக்கும்]

-நிலாரசிகன்.

Wednesday, September 28, 2011

கொம்பு சிற்றிதழ் கவிதைகள்

1.தரு

எதிரெதிர் திசைகளில் பறக்கும் பறவைகளின்
எச்சத்திலிருந்து முளைத்த தரு
கிழக்கிலொரு கிளையும்
... மேற்கிலொரு கிளையுமாக விரிந்து நிற்கிறது.
திசைகளில் தொலைந்த பறவைகளை
வேர்களின் பயணத்தில் கண்டுபிடித்திட
முயல்கிறது.
முடிவற்ற பயணத்தின் தோல்வியில்
காகமொன்றின் நிரந்தர கூடாக மாறி
மெளனித்து காலம் கடத்துகிறது.
இக்கணம்,
என்னை உற்றுநோக்கும்
இச்சிறு பென்சில் எந்த தருவின்
சுட்டுவிரல்?
உயிரற்ற விரல் வழி
தன் சரிதம் சொல்லிக்கொண்டிருக்கிறது
எப்போதோ சரிந்த தரு.

2.நிழல்களுடன் பேசுபவன்

நிழல்களுடன் பேசுபவன்
தன் இடக்கையில்
வண்ணத்துப்பூச்சியொன்றை வரைகிறான்.
ஒவ்வொரு நிழலுடன்
பேசும்பொழுது அது சிறகடித்துக்கொள்கிறது.
உக்கிர வெப்பம் பாதங்களின் வழியே
அவனுள்ளேறும்போது
சிறகை உதிர்த்துக்கொள்கிறது.
கல்லறை நிழலில்
அவன் உறங்கும் தருணங்களில்
தன் வர்ணங்களை கறுப்பு வெள்ளையாக
மாற்றிக்கொண்டு ஊமையாகிறது.
யாருமற்ற வெளியொன்றில்
ஒரு தவறை
தன் நிழலுடன் அவன் துவங்குகையில்
நீங்கிச் செல்கிறது நிரந்தரமாய்.

-நிலாரசிகன்.

Sunday, September 25, 2011

கவிதைகள் இரண்டு

1.மினி ப் பெண்
இருள் ஒரு யுவதியின் கண்களை
நினைவூட்டியது.

அடர்ந்த புதர்களின் நடுவே வீசியெறியப்பட்ட
அவளது உடலும் விழியைப் போலவே
திறந்திருந்தது.
செந்நாய்கள் உடலை இழுத்துச்செல்ல
முயலும் கணத்தில் அவள் ரெப்பைகள்
மூடிக்கொண்டன.

பல்லிருங்கூந்தல் இந்த இரவாக
அறுபடுகிறது

கண்களை அவள் மூடிய கணத்தில்
உக்கிரமான மழை.
செந்நாய்கள் சிதறி ஓடியதும்
அவள் நேத்திரங்களில் வந்தமர்ந்தன
இருள் மின்மினிகள்.

இப்போது

இசையில் எரியும் மூங்கில் நிழல்களோடு
மிதந்து அலைகிறாளவள்.

2.மழைவழிப்பயணம்

அவர்கள் மழைப்பாதையில் பயணித்து
இங்கே வந்திருக்கிறார்கள்.
மொத்தம் மூன்று பேர்.
சிறுமி,
நாய்க்குட்டி,
சிறுமியின் குடுவை மீன்.
ஏழாம் நூற்றாண்டை சேர்ந்தவர்கள்
நாங்கள் என்கிறாள் அச்சிறுமி.
மழை வழியே இந்த நூற்றாண்டிற்குள்
எதற்காக இவ்வருகை என்பதை
அறியும் முன் சிறுமியும் நாய்க்குட்டியும்
அடுத்த நூற்றாண்டிற்குள் நுழைந்துவிட்டார்கள்.
அழுக்கற்ற அன்பைத் தேடி இப்பயணம்
என்றது குடுவை மீன்.
முடிவற்ற பயணமிது என்றபடி தவறவிட்டேன்
குடுவையை.

-நிலாரசிகன்.

Thursday, September 22, 2011

361 - இரண்டாவது இதழ்


நண்பர்களுக்கு,

361 டிகிரி இரண்டாவது இதழ் இன்று வெளியானது. சென்னையில் டிஸ்கவரி புக் பேலஸிலும்,நியு புக்லேண்ட்ஸ் கடையிலும் கிடைக்கும். சேலத்தில் பாலம் புத்தக கடையில் நாளையிலிருந்து கிடைக்கும். இதழில் பங்கெடுத்த படைப்பாளிகளுக்கும் சந்தாதாரர்களுக்கும் இதழ் அனுப்பப்பட்டு வருகிறது. இதழ் வேண்டுவோர் கீழ் கண்ட வங்கி கணக்கிற்கு பணவிடை/காசோலை/online transfer செய்துவிட்டு 361degreelittlemagazine@gmail.com க்கு தங்கள் முகவரியை அனுப்பினால் இதழ் அனுப்பிவைக்கப்படும்.

ஆண்டுச் சந்தா: ரூ.200

Name S.V.P.Rajesh
Account Num: 05001610013962
Bank Name HDFC BANK
City CHENNAI
Branch Location KOTTIVAKKAM, CHENNAI
MICR Code 600240020
IFSC Code HDFC0000500
Account Type Savings

மூன்றாம் இதழுக்கான படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. டிசம்பரில் அடுத்த இதழ் வெளிவரும்.
நண்பர்களின் தொடர்ந்த ஆதரவும்,நட்புமே நாங்கள் செயல்படுவதற்கான காரணிகள்.

நன்றி.

Monday, September 05, 2011

குறி சிற்றிதழ் கவிதைகள்

1.விசித்திரி

நதியின் மேல் விழுகின்ற
மழைத்துளிகள் பருகி வளர்ந்த
அச்செடி
தன் விசித்திர பெயரின் அர்த்தங்களை
யாரிடமும் பகிர்ந்துகொள்ளவில்லை.
நதியில் நீராடும் பேரானந்த கணங்களிலும்
தன் மேல் வந்தமரும் நீர்ப்பறவைகளுடனான
உரையாடலின்போதும் புதிர் நிரம்பிய
பெயரின் காரணத்தை மறைத்துக்கொண்டது.
அனல் நிறைந்த கடுங்கோடையொன்றில்
மீன்களின் பசிக்கு உணவாகியபோது
அதன் விசித்திர பெயரும் உணவுடன்
கலந்து கரைந்தது.
நதிக்கரையில் ஒதுங்கிய மீன்களை
பொறுக்கி சென்றவள்
மறுநாளின் அதிகாலையில்
தன் பெயர் விசித்திரி என்றாள்
உடலெங்கும் வளர்ந்த புதர்ச்செடியுடன்.

2.மழையில் நனையும் வயலின்

சொட்ட சொட்ட நனைந்தபடி
இசையால் ஓவியங்கள் 
வரைந்துகொண்டிருந்தான் அவன்.
இசைக்கம்பிகளில் நகர்ந்து வரும்
துளியொன்றை அசைவின்றி 
பார்க்கிறாள் யுவதியொருத்தி.
மெல்ல அருகில் வருமவள்
தன் சிறுவிரல் நகத்தில் வயலின் சிந்தும்
துளியை பெற்றுக்கொள்கிறாள்.
கண்கள் திறந்தவனின் முன்பு
துளியுடன் நிற்கிறாள்.
மீண்டும் இசைக்கிறான்
வயலினாக அவளும் துளியாக
அவனும் பிணைந்து இசையாகிறார்கள்.
பழுதடைந்த அந்த வயோதிக வயலின்
யாருமின்றி இசைத்துக்கொண்டே இருக்கிறது
இதைப்போன்று ஆயிரம் கதைகளை.

-நிலாரசிகன்
 
[இம்மாத குறி சிற்றிதழில் வெளியான கவிதைகள்]

Saturday, September 03, 2011

361 டிகிரி - இரண்டாவது இதழ்

அன்பின் நண்பர்களே  361டிகிரி இரண்டாவது இதழ் தயாராகிவிட்டது 50 க்கும் மேற்பட்ட படைப்பாளிகளின் படைப்புகளோடு வரும் செப்டம்பர் 11(ஞாயிற்று கிழமை)முதல் கடைகளில் கிடைக்கும் .தொடர்ந்து புதிய படைப்பாளிகள் உருவாகவும் ,படைப்பாளிகள் இயங்கவும் 361டிகிரி இதழ் தளமாக அமையும் .முதல்  இதழிற்கு கிடைத்த வரவேற்பும் ,கவனமும் தொடர்ந்து இதழ் வெளிவருவதற்க்கான சாத்தியங்களை தந்தது  மகிழ்ச்சி.
இதழ் வேண்டுவோர்  தொடர்பு கொள்ளுங்கள்  .
361degreelittlemagazine@gmail.com

அன்பும், நன்றியும் .
நரன்  & நிலாரசிகன்

Thursday, September 01, 2011

உயிர் எழுத்து கவிதைகள்

1.இலை
அங்குமிங்கும் அலைவுறும்
இலையின்
பின் ஓடுகிறாள் சிறுமி
கைகளில் அகப்படாத
இலையை
முயல்போல் தாவித்தாவி
பின் தொடர்கிறாள்.
மாபெரும் விருட்சங்கள்
தலைகுனிந்து அவளோட்டத்தை ரசிக்கின்றன.
வெண்காகங்கள் அவளுடன் நீந்திக்கொண்டு
இலையை தொடர்கின்றன.
பச்சை இலையின் நரம்புகளை
தீண்ட விரல் நீட்டுகையில்
ருதுவாகிறாள்.
அசைவற்று கிடக்கிறது இலை.

2.நிகழ்தல் என்பது

ஏதோவொன்று நிகழ்ந்துகொண்டிருப்பதை
உணர்கொம்புகள் உணர்த்துகின்றன.
ஒவ்வொரு அறையாக
செல்கிறேன்.
முதல் அறையில் இரண்டு புகைப்படங்கள்
சுவரில் தொங்குகின்றன.
அவைகளில் சலனமில்லை.
இரண்டாம் அறையின் உட்புறம்
சன்னல்கள் இரண்டு மெல்ல பேசிக்கொள்கின்றன.
அருகில் செல்கிறேன்.
இளம் புணர்ச்சியொன்றை கண்ணுற்ற கதையை
அவை பேரானந்தத்துடன் பகிர்ந்துகொள்கின்றன.
மூன்றாம் அறை பூட்டப்பட்டிருக்கிறது.
நான்காம் அறையில் மெழுகொன்று
தன் இறக்கைகளை விரித்து அழுதுகொண்டிருக்கிறது.
மெதுவாய் கண்கள் திறக்கிறேன்
இதயத்தின் நான்கு அறைக்குள்ளிருந்தும்.


3.மார்புக்காலம்
மலைகள் சூழ்ந்த அருவிக்கரையில்
கச்சை சரி செய்யும் பேரிளம் பெண்
தன் மார்புகளில் வழிகின்ற
நீரின் வழியே வருடங்கள் பல
பின்னோக்கி நகர்ந்து முதன் முதலாய்
நீராடிய குளக்கரையின் படித்துறைக்கு
செல்கிறாள்.
குளத்தில் மிதக்கும் தாமரை இலைகளின்
நடுவே சிறிமியொருத்தி நீந்தும் தருணம்
மொட்டொன்று மலர்வதை மிகுந்த
வலியுடன் தாங்கிக்கொள்கிறது குளம்.
மார்புகளில் வழிகின்ற துளிகளுடன்
வீட்டிற்கு செல்லுமவள்
மெளனத்தின் அறைக்குள் ஒளிந்துகொள்கிறாள்.
சிறுமியிலிருந்து யுவதிக்கும்
யுவதியிலிருந்து பேரிளம் பெண்ணுக்கும்
இடையே வெளவ்வாலாக தொங்குகிறது
மார்புக்காலம்.

4.அரூபவெளி
சிதைந்த கல்லறையின் மேல்
படுத்திருக்கும்
சாம்பல் பூனையின்
கூரிய நகங்களும் பற்களும்
இப்போது உறங்கிக்கொண்டிருக்கின்றன.
புதர்ப்பறவையொன்றின் கண் திறக்காத
இரண்டு குஞ்சுகளை தின்று விட்ட
பெரு நிம்மதியுடன் உறங்குகிறது.
தட்டானை அலகிடுக்கில் பிடித்துக்கொண்டு
கூடு திரும்பிய சிறுபறவை
தன் குஞ்சுகளை தேடுகிறது.
உதிர்ந்த இறகுகளும் கடித்து துப்பிய
பிஞ்சுக்கால்களும் கண்டு
கதறி அழுகையில்
அலகிலிருந்த தட்டானின் பிணம்
இறகில் விழுகிறது.
கல்லறைக்குள் நுழைகின்றன
நான்கு அரூபங்கள்.

5.வதை
இரண்டு கால்களையுடைய
மிருகம் எப்போதும் என்னுடன்
பயணித்தபடியே இருக்கிறது.
அதன் கூர்மையான கொம்புகளில்
நெளிகின்ற கருஞ்சிவப்பு நிற
சர்ப்பத்தின் பார்வை
என்னை நோக்கி குவிந்திருக்கிறது.
ஒரு பெரும் சுமையை இழுத்தபடி
நடக்கின்ற என் பாதையெங்கும்6
குறுக்கும் நெடுக்குமாக ஓடுகின்றன
சின்னஞ்சிறு மிருகங்கள்.
நீண்டு விரிந்த பச்சை வெளியொன்றை
கடக்கும் பொழுது உணர்கிறேன்
மிருகமொன்றின் நிழலாக
நானிருக்கிறேன் என்பதை.

6.எதிர் விசை
மழை ஓய்ந்த இருளில்
ஈரம் பொதிந்த சாக்குப்பைகளின் வழியே
கசிந்துகொண்டிருக்கும் முனகல்கள்
மூன்று நாய்க்குட்டிகளுக்கானவை.
குளிரிலும் அசைவிலும்
ஒடுங்கியிருக்கும் அவைகளை இப்போது
கொன்றாக வேண்டும்.
முதலில் வெண்ணிற குட்டி
அதன்பின் பழுப்பு
கடைசியாக கருமை நிறம்.
நீண்ட ஒற்றையடிப்பாதையின்
இரு பக்கங்களிலும் அடர்ந்த புதர்கள்
சரசரத்துக்கொண்டிருந்தன.
சுழித்தோடும் ஆற்றுநீரை நோக்கி
பயணப்படுகையில்
நெளிந்து கடந்தது சர்ப்பம்.

-நிலாரசிகன்.
[இம்மாத உயிர் எழுத்து(செப்டம்பர் 2011) இதழில் வெளியான கவிதைகள்]

Wednesday, August 24, 2011

கவிதைகள் இரண்டு

1.இறகின் கதை
மலைச்சரிவில் பூத்திருக்கும்
பூக்களின் நடுவில் வீழ்ந்து கிடக்கிறது
ஓர் இறகு.
வெளிமான்கள் மேயும் அம்மலையில்
மார்கச்சை அற்ற யுவதி ஒருத்தி
மலையேறுகிறாள்.
பூக்கள் நடுவில் கிடக்கும் இறகை
பேரன்புடன் கைகளில் அள்ளிக்கொள்கிறாள்.
தன் தளிர் விரல்களால் இறகை
வருடிக்கொடுக்கிறாள்.
சிலிர்த்த மலை ஒரு மாயக்கம்பளமாக
உருப்பெறுகிறது.
யுவதியும் இறகும் வெகு தூரம்
பயணித்து
சிற்றோடைகள் நிறைந்த வனத்தில்
இறங்கி நடக்கிறார்கள்.
ஒளிக்கண்களுடன் அவளை நெருங்குகிறான்
வனத்தின் இளவரசன்.
தன் செல்லப்பறவையின் இறகை
திரும்பக்கேட்கிறான்.
இறகை கொடுத்தவுடன் தன்னுடலில்
சிறகுகள் வளர்வதை உணர்கிறாள்.
வனத்தின் இளவரசனை தன்
விழிப்பூக்களில் அமர்த்திக்கொள்கிறாள்.
பிரபஞ்சத்தின் புதிர் நிறைந்த பக்கங்களுக்குள்
அவர்கள் பேரானந்தமாய் பறக்கிறார்கள்
ஓர் இறகின் வடிவில்.

2.நதிக்கரையில் நீந்தும் சிறுமீன்


மரத்திலிருந்து விழுகின்ற கண்ணாடிக்குடுவை
காற்றினூடாக வேகமாக பயணிக்கிறது.
குடுவைக்குள் தளும்பும் நீரில்
இரண்டு மீன்குஞ்சுகள் நீந்துகின்றன.
கிளையொன்றில் மோதும் குடுவையை
அதன் பின் காணவில்லை.
இடவலமாக வானில் பறக்கும்
பறவைகள் நதியொன்றில்
விட்டுச் செல்கின்றன
இரண்டு இறகுகளை.
அவை மெல்ல நீந்தி
மீன்குஞ்சுகளாக உருக்கொள்கையில்
கனவொன்றின் நதிக்கரையில்
இக்காட்சியை கண்டபடி நடந்துசெல்கிறாள்
நட்சத்திரா.
-நிலாரசிகன்.

Monday, August 08, 2011

வேண்டுகோள் - நண்பர்களின் பார்வைக்கு

அன்புடையீர்

வணக்கம்

மண்ணில் ஜனித்த கலைகள் ஆயிரமாயிரம். அவற்றுள் முந்திப் பிறந்தவை
தோற்பாவை, கட்டப்பொம்மலாட்டம் , தெருக்கூத்து,முதலான
நிகழ்த்துக்கலைகள்தாம் என்றால் அது மிகையில்லை. மனிதனுக்கு மண் அளித்த
மாபெருங்கொடையென்று இவற்றைச் சொல்லலாம். நவீனயுகத்தில் இதுபோன்ற மண்சார்
நிகழ்த்துக்கலைகள்,மற்றும் கிராமியக்கலைகள் கேலிக்கும், கேள்விக்கும்
உள்ளாகி நாம் தொலைத்துவரும் வாழ்வாதாரங்களின் பட்டியலில் இடம்
பெறத்துவங்கிவிட்டாலும் நுண்கலைகளின் தாய்வடிவம் அவற்றில்தான்
கற்சிற்பமாய் உயிர்ப்புடன் வீற்றிருக்கிறது என்பது தெளிவு. இன்று
ஏகோபித்த சனங்களிடையே புழங்கும் சினிமா, டி.வி, இன்னும்பிறவுள்ள
ஊடகங்களின் வழியே வெளிப்படும் கலை உற்பத்திகளில் மேலதிகமான வறட்சியே
எஞ்சி நிற்கிறது. அது மட்டுல்ல விளம்பரயுகத்தில் வலிந்து
வெளிச்சப்படுத்தப்படும் கலைவடிவங்கள்தாம் கவனம் பெற்றுவருகின்றன,, பெற
வைக்கிறார்கள். ஆனால் இவற்றுக்கெல்லாம் எட்டாத உயரத்தில் மிக உன்னதமான
கலை சிருஷ்டிகளென நிகழ்த்துக்கலைகள் ஜீவிதம் பெற்று காலத்துக்கும்
நிலைத்து நிற்கின்றன. சினிமா உள்ளிட்ட நவீன ஊடகங்கள் போன்றே தோற்பாவை,
கட்டபொம்மலாட்டம், தெருக்கூத்து ஆகியனவற்றையும் வெறும் பொழுது
போக்குச்சாதனங்கள் என்கின்றாற்போல் தீர்த்துப்பார்க்க முடியாது.
மரபார்ந்த தொல்கலைக்கூறுகளிலிருந்து நசிந்துவிட்ட நிகழ்கால வாழ்மானங்களை
ஆற்றுப்படுத்திக்கொள்வதுடன், சக உயிர்களின் மீதான கரிசனத்தையும் ,
அக்கறையையும் , அதிகாரங்களுக்கு எதிரான, போர்க்குணங்களையும்
கலகக்குரல்களையும் நாம் அங்கிருந்துதான் பெற வேண்டியிருக்கிறது. அத்துடன்
ஒரு உடல் உழைப்பாளிக்கு தன்னை மறந்து ஒன்றிக்கிடக்கும் உத்சாகத்தையும்
உத்வேகத்தையும் இவற்றைத்தவிர வேறெந்த கொம்பு முளைத்த கலை இலக்கிய
உற்பவனங்களும் தந்துவிட முடியாது கலைத்தாயிடம் ஞானப்பால்
அருந்தியவர்களுக்கு மாத்திரமே பீடம் என்றாகிவிட்ட இன்றைய காலகட்டத்தில்
படிப்பு வாசனை ஏதுமின்றி வழிவழியாக தாம்பெற்ற கேள்வி அறிவை முதலாக வைத்து
கைக்கொண்ட காரியத்தில் துலங்கி அந்த அரியக்கலைகளுக்கு உயிரூட்டிவரும்
கிராமியக்கலைகளின் சூத்ரதாரிகள்தாம் உண்மையான கலையின் பிதாமகர்கள் என்று
அறைகூவ வேண்டியிருக்கிறது.நம் சகோதரர்களை இனங்கண்டு பாராட்டுவதும்
அரசியல் சூழ்ந்துள்ள இந்த நெடிய உலகத்தில் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை
வழங்குவதும், அவர்தம் வாழ்வாதரத்தை உயர்த்தும்படியான பொருளாதாரச்சூழலை
உருவாக்குவதும் நம் இன்றியமையாத கடப்பாடு ஆகும். கலைஞர்கள் வாழ்வை
மேம்படுத்துவதன் மூலம்  தொல்கலைகளை மீட்டெடுப்பதோடு அதன் தொன்மம் மாறாது
பராம்பர்யம் வழுவாது வளர்தலைமுறைகளிடம் அவற்றை (நமது ஒப்பற்ற பண்பாட்டு
அடையாளங்களாக) கையளிக்கும் கடமையும் நமக்கிருக்கிறது. மேற்சென்ன
களப்பணிகளில் கடந்த ஐந்தாண்டு காலங்களாக முனைப்புடன் செயல்பட்டு வரும்
களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம்
தோற்பாவை|கட்டபொம்மலாட்ட|கூத்து
க்கலைஞர் திரு அம்மாபேட்டை கணேசன்
அவர்களது வாழ்வியலை ஓர் ஆவணப்படமாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.
அத்தோடு கூத்தில்  முதன்மையான கோமாளிப்பாத்திரம்  நிகழ்வின்
ஊடாகச்சொல்லும் கதைகளையும் அப்பாத்திரம் ஏற்போர் வாழ்க்கையையும் ஒருசேர
தொகுத்து  (எழுத்தாவணமாக) சபையலங்காரம் என்னும் தொகைநூல் வெளியீட்டிற்கான
 பதிப்புவேலையையும் தொடங்கியிருக்கிறது. பள்ளி,கல்லூரி வளாகங்களில்
தோற்பாவைக்கூத்து,பொம்மாலாட்டங்கள் நிகழ்வுகள் நடத்த இசைவான இலகு
நிகழ்த்து மேடையொன்றையும் வடிவமைத்து தயாரித்து வருகிறது.
இவற்றுக்கான நிதி திட்ட வரைவு ஒன்று இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
பெரும்நிதி கோரும்  இப்பணிகளுக்கு ஆர்வமுள்ள அன்பர்கள் தங்களால் இயன்ற
நிதியுதவி வழங்கி உதவவேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
மு. ஹரிகிருஷ்ணன்,
ஆசிரியர் மணல்வீடு.
குறிப்பு;நன்கொடை வழங்க விழைவோர் கீழ்காணும் வங்கி கணக்கில் செலுத்த வேண்டுகிறேன்.
kalari heritage and charitable trust,
a\c.no.31467515260
sb-account
state bank of india
mecheri branch
branch code-12786.


நிதி திட்ட வரைவு :

அம்மாபேட்டை கணேசன் ஆவணப்படத்திற்கானது.

பேனாசோனிக் மினி டிவி 3சிடிசி வகை கேமரா.
10நாள் வாடகை.(கேமரா ஸ்டேண்ட், 2 மைக்குகள் ஒளிப்பதிவாளர் சம்பளம் உட்பட)
                                          -50000
கேசட்(பேனா சோனிக் புரோபசனல்)                          2000

பின்னணிக்குரல் முழு படத்திற்கும்                             7500

எடிட்டிங்                                                     20000

முதல் பிரதி காப்பியெடுக்க                                    2500


பின்னணி இசைச்சேர்ப்பு                                       5000

கவர் டிசைனிங்&ஸ்டிக்கரிங்                                   12500

டிவிடி ரைட்டிங் ஆயிரம் பிரதி                               15000

சோனி டிவிடி ஆயிரம் பிரதிகளுக்கு                          15000

போக்குவரத்துச்செலவுகள்                                    2500

மொத்தச்செலவு                                        1,32000

--------------------------------------------------------------------------------

சபையலங்காரம் நூற்பதிப்பு ஆயிரம்பிரதிகள்:

புத்தகளவு1\8 டெம்மி சைஸ்
70ஜி.எஸ்.எம் 16ரீம்                                      9600


டைப்செட்,லேஅவுட், பாலிமர்ஸ்                        9000

மெய்ப்பாக்கம்                                             3000

வண்ணமுகப்பட்டைதயாரிப்பு&அச்சு                     10000

புத்தகக்கட்டு                                              7000

மொத்தச்செலவுகள்                                     38600

-------------------------------------------------------------------------------

 தோற்பாவை|கட்டபொம்மலாட்டத்திற்கான இலகு மேடை

தயாரிப்புச் செலவு மொத்தம்                           25000

Monday, July 25, 2011

பெருநகர சர்ப்பங்கள்



அம்முவுக்கு தற்போது எழுபது
வயதாகி விட்டது.
அவள் தன் ஒற்றை நாயுடன்
தனியே வசிக்கிறாள்.
யாருமற்ற அவளது தெருவில்
கொஞ்சமாய் உதிர்ந்துகிடக்கின்றன
முன்பிருந்த மரத்தின் சருகுகள்.
எப்போதும் வாசற்கதவின் திறப்புச்சத்தத்திற்காக
காத்திருக்கிறாள்.
அவளறியா பொழுதுகளில் உள்நுழைகின்ற
சர்ப்பங்கள் அவளது வீட்டை
நகர்த்திக்கொண்டே இருக்கின்றன.
பெருநகரத்தின் வாசல் வரை நகர்ந்துவிட்ட
வீட்டினுள் நீண்ட மெளனத்தில்
உறைந்திருக்கிறாள்.
அடர்ந்த அந்தியொன்றில் தன்னுடல்
சர்ப்பத்தை போன்றிருப்பதை உணர்கிறாள்.
அப்போது அவளது நாய் இறந்துகிடந்தது.
தவழ்ந்து தவழ்ந்து வெளியேறியவள்
நகரத்தில் சந்திக்கும் முதல் மனிதன்
மீது உமிழ்கிறாள்.
அன்றிரவு அம்மு தன் நாயுடன்
தோளில் வீடொன்றை சுமந்து சென்றதை
வியந்து பார்த்தன
பெருநகர சர்ப்பங்கள்.
-நிலாரசிகன்.

Monday, June 27, 2011

யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்

யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள் - நூல் விமர்சனம் - பொன்.குமார்

மனித வாழ்க்கை பல கட்டங்களைக் கொண்டதாகும். முக்கியமாக பிறப்பு ஓரிடம், வசிப்பு வேறிடம் இருக்கும்.இன்று மாநகரத்தில் தொழில் நிமித்தமாக வசிப்பவர்கள் எல்லாம் பெரும்பாலும் கிராமத்தில் இருந்து வந்தவர்களே ஆவர். வசதியாக வாழ்ந்தாலும் அவர்களின் மனத்தில் கிராமமே அழியாமல் இருக்கும். வாழும். இரட்டை வாழ்க்கையே வாழ்ந்து வருகின்றனர். படைப்பாளியாக இருப்பவர்கள் படைப்புகள் மூலம் கிராமத்து வாழ்வை வெளிப்படுத்தி வருகின்றனர். கவிஞரான நிலா ரசிகன் கிராமத்து அனுபவங்களுடன் சில புனை கதைகளையும் இணைத்து தந்திருக்கும் தொகுப்பு "யாரோ ஒருத்தியின் டைரிக் குறிப்புகள்." "புத்தகம் இல்லாத ரயில் பயணத்தை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை" என பயணிக்கிறது,.
 "யாரோ ஒருத்தியின் டைரிக் குறிப்புகள்" என்னும் சிறுகதையுடன் தொகுப்பு. நாட்காட்டிக் குறிப்புகள் என்பதால் கதையை நாள் வாரியாக எழுதியுள்ளார். ஒவ்வொரு நாளும் சிறுமி தன் அனுபவத்தை எழுதி வைத்ததாக கதை நகர்கிறது. பலாத்காரம் செய்யப்படுவது கூட சிறுமிக்குத் தெரிவதில்லை. சாக்லேட்டுச் சுவையில் மறந்து விடுகிறாள். வலிப்பதாக எழுதியிருப்பது வலிக்கவே செய்கிறது. நாட்காட்டி முழுமை அடையாததால் சிறுமியைப் பற்றிய வினாவுடன் முதல் பகுதி நிற்கிறது. இரண்டாம் பயணத்தில் இன்னொரு டைரி கிடைக்கிறது. சிவப்பு விளக்கிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட பெண்ணுடையதாக உள்ளது. ஆசிரியருக்குள் ஒரு சந்தேகம். அந்த சிறுமிதான் இந்தப் பெண்ணோ என எண்ணுவதுடன் கதையை முடித்துள்ளார். வாசகருக்குள் கதையைத் தொடரச் செய்கிறார். மும்பைக்கு சிறுமிகளை அழைத்துச் சென்று சித்ரவதைப்பதை வெளிச்சப்படுத்தியுள்ளார். சிவப்பு விளக்குப் பெண்ணானாலும் வாழ்க்கை அமைந்ததை வரவேற்கிறார்." "அழகு அல‌ங்கோலம் இவையெல்லாம் அவரவர் மனப்பான்மை" என்கிறார். யாரோ இருவரின் நாட்காட்டியை "ஒருத்தி"யின் நாட்காட்டி என இதயத்தைத் தொட்டுப் பார்க்கச் செய்துள்ளார்.
செல்வராசு என்னும் சிறுவனுக்கு அவனை விட பத்து வயது மூத்த பெண்ணுடன் சினேகம் ஏற்படுகிறது. அவளும் பிரியமாக இருக்கிறாள். அக்கா என்று அழைப்பதை விரும்பவில்லை. பெயர் சொல்லி அழைப்பதையே விரும்புகிறாள். அவளுக்கும் வேறு ஒருவனுக்கும் காதல் உண்டாகிறது. அவனின் பிரிவால் அவள் தற்கொலைக்கு முயல்கிறாள். விளைவு, வேறிடத்தில் திருமணம். செல்வராசுக்குத் திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் பிறந்து விடுகிறது. பல்லாண்டுகளுக்குப் பின் அவளை ஒரு கைம்பெண்ணாகக் காண்கிறான். உடனிருக்க அழைக்கிறான். விரும்பி விரல் பற்றி வரும்போது மகளின் ஸ்பரிசத்தையே உணர்கிறான். அவனுக்குள் துளியும் காதலோ காமமோ இல்லை, முடிகிறது. "சங்கமித்திரை" என்னும் இக்கதை ஒரு பெண்ணின் நிலையைக் கூறியுள்ளது. பெண்ணின் உணர்வைப் பிரதிபலித்துள்ளது.
"வேட்கையின் நிறங்கள்" வித்தியாசமான கதை. ஓரினச் சேர்க்கையைப் பற்றியதாயிருந்தாலும் அதற்கான காரணம் என்னவென்றும் உணர்த்துகிறது. அம்மாவை இம்சிக்கும் அப்பா, உறவாட முயலும் அத்தை மகன் என் ஆண்களைக் கண்டாலே வெறுப்பு உண்டாகிறது. மாறாக, பெண்களைப் பிடிக்கிறது. உடன் படித்த பெண்ணையே துணையாக நினைத்து வாழ்வைக் கடத்துகிறாள். அப் பெண்ணுக்கு ஓர் ஆணின் தொடர்பு இருப்பதைக் கண்டு அதிர்கிறாள். ஆண்களைக் காணும் போதெல்லாம் ரத்தம் ஏறிய கண்களும் ஒருவித துர்நாற்றமும் அவளைச் சூழ்ந்து கொள்வது போல அப் பெண்ணைக் கண்டதும் அவளுக்குள் சூழ்கிறது. ஆணுக்குள் எழும்
பெண்ணுணர்வு ஆணையே விரும்பும். பெண்ணுக்குள் எழுந்த உணர்வு பெண்ணையே விரும்புகிறது. சமுகத்தில் இவ்வாறான பெண்களும் உள்ளனர் என துணிந்து காட்டியுள்ளார்.
இலங்கை அரசு அப்பாவித் தமிழர்களை முள்வேலிக்குள் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்தி வருகின்றது. இதை வைத்து எழுதப்பட்ட கதை ''வேலியோர பொம்மை மனம்". போராட ஆண் பிள்ளை வேண்டும் என்று எதிர்பார்த்தபோது வாய் பேச முடியாமல், காது கேளாத நிலையில் ஒரு பெண் பிறக்கிறாள். அவளுக்கு பொம்மைகளே உலகமாக இருந்தது. அப்பா வெறுக்கிறார். ஒரு குண்டு வெடிப்பில் அம்மா உயிரிழக்கிறாள். அனாதை என்னும் நிலையில் முள்வேலிக்குள் அடைக்கப்படுகிறாள். ஒரு இராணுவ வீரனைக் கண்டு பயப்படுகிறாள். சோர்வாக அவன் இருந்ததைக் கண்டு அவளுக்குத் தரப்பட்ட ரொட்டித் துண்டில் ஒன்றைத் தருகிறாள். அவனுக்குள் ஒரு நடுக்கம் ஏற்படுகிறது. வாசிப்பவனுக்குள்ளும் ஒரு நடுக்கம் ஏற்படுகிறது. இலங்கையின் அநியாயச் செயலை வெளிச்சப்படுத்தியிருந்தாலும் இராணுவ வீரனுக்குள் இதயம் இருப்பதைக் காட்டியுள்ளார். அன்பின் முன் துப்பாக்கி அடிமையே என்கிறார். ஆனால் தமிழ் இனத்தையே இலங்கை அழித்து வருவது துக்கத்தையே உண்டாக்குகிறது.
"கிணற்றில் மிதக்கும் நிலவின் சடலம்" என்னும் சிறுகதை மூன்று கதைகளைச் சொல்வதாகத் தொடங்குகிறது. ஆனால் ஒரே கதையே என்று முடிவு உணர்த்துகிறது. ஒவ்வோர் அத்தியாயத்திற்கும் ஓர் எண்ணம் கொடுத்துள்ளார். முதல் கதை பாத்திரம் பேசுவதாக உள்ளது. மற்றவை ஆசிரியர் கூற்றாக உள்ளது. ஒரு பெண்ணைக் காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு பட்டணம் சென்று வேறு பெண்ணைத் திருமணம் செய்து பிள்ளையும் பெற்று சட்டமன்ற உறுப்பினரும் ஆகின்றான். ஏமாற்றப்பட்ட பெண் தற்கொலை செய்து கொள்கிறாள். கெட்டவர்களே வாழ முடிகிறது என்கிறார். நல்லவர்களுக்காக வருந்தியுள்ளார்.
"ப்ரியாக்குட்டி நான்காம் வகுப்பு ஏ’ பிரிவு என்னும் கதை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள, இறப்புக்கு அருகாமையிலுள்ள ஒரு சிறுமியின் கதை. அதுவும் தத்தெடுக்கப்பட்டவள். அவள் வீட்டு மாடியில் குடியிருக்கும் இளைஞனுக்கு அவள் மீது பிரியம் அதிகம். அவள் நிலையறிந்து வருந்துகிறான். கோவிலுக்கே செல்லாதவன் சிறுமிக்காக கோவில் செல்கிறான். பாசத்தின் முன் பகுத்தறிவு வெல்லாது என்கிறார்.
"சேமியா ஐஸ்"க்காக எவ்வளவு அடியையும் பொறுத்துக் கொள்ளும் சிறுவனைப் பற்றி ஒரு கதையில் கூறியுள்ளார். பிற கதைகளின் தாக்கம் இதில் இல்லை. "வால்பாண்டி சரித்திரம்" கதையும் சிறுவர்களை முன்னிலைப்படுத்தியே உள்ளது. சிறு வயது குறும்புகளே காட்டப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கிடையேயான உறவையும் எதார்த்தமாக எழுதி உள்ளார். சிறுவனையே சுற்றி வந்தாலும் "சைக்கிள்" சோகமானது. சைக்கிள் வந்த பின்னே சிறுவனுக்கு நல்லது நடப்பதாக நம்புகின்றனர். அவன் கல்லூரிக்குப் படிக்கச் சென்ற பின் அதுவரை சைக்கிளையே ஓட்டாத தந்தை சந்தைக்கு சைக்கிளில் சென்றவர் விபத்தில் மரணிக்கிறார். தற்போது சைக்கிள் சபிக்கப்படுகிறது.
நல்லது நடந்தால் வந்ததைப் பாராட்டுவதும் கெட்டது நடந்தால் திட்டுவதும் மக்கள் இயல்பு. மக்களின் இயல்பையே கதை கூறுகிறது. "சைக்கிள்" ஒரு பாத்திரமாகவே சித்தரிக்கப்பட்டுள்ளது.
"தனலட்சுமி டாக்கீஸ்" எனும் கதை கற்பனையா நிஜமா என்று தெரியாது. ஆனால் எங்கள் ஊரில் ஒரு "தனலட்சுமி டாக்கீஸ்" இருந்தது உண்மை. கதையின் சம்பவங்கள் எங்கள் அனுபவங்களை நினைவு கூரச் செய்தது. டாக்கீஸை நம்பி வாழ்ந்த கட்டையனின் நிலை பரிதாபமாக உள்ளது. கதையின் முக்கிய செய்தி கேபிள் டிவி வருகையாலே டாக்கீஸ்கள் அழிந்தன என்று குற்றம் சாட்டி உள்ளார். அவ்வாறு மரணத்தை சந்திக்கும் டாக்கீஸ்களுக்கு இக்கதையை சமர்ப்பித்துள்ளார்.
"தாய்மை" போற்றியதற்கான கதையின் போக்கு ஜனரஞ்சகமானதாக உள்ளது. எழுதியது நிலாரசிகனா என்று சந்தேகம் எழுகிறது.
தர்மகர்த்தா முதல் மனைவி இறந்த பிறகு இருபது வயது சிறிய பெண்ணை இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார். இப்பெண்ணுக்கும் மாடு மேய்ப்பவனுக்கும் தொடர்பு ஏற்படுகிறது. அதைப் பார்த்ததால் "பட்டாணி" களவாணி ஆக்கப்பட்டு, காவல்நிலையம் அனுப்ப்படுகிறான். அவனால் தாங்க முடியவில்லை. அதற்காக ஊரைக் கூட்டி அப்பெண்ணை முத்தமிட்டு "அன்னிக்கு கருப்பன் இப்படித்தான் செஞ்சான்" என வெளிச்சப்படுத்துகிறான். வெட்கப்படச் செய்கிறான். ஆதிக்க சாதிகளின் முகத்திரையைக் கிழித்துள்ளார்.
அப்பா இறந்துவிடுகிறார். அம்மா அழுகிறாள். அக்கா திருமணமாகிப் புகுந்த வீடு செல்கிறாள். அம்மா அழுகிறாள். இரண்டாவது அக்காவிற்கும் திருமணமாகிச் செல்கிறாள். அண்ணன் வேலைக்காக வெளிநாடு செல்கிறான். சிறியவனும் படிப்புக்காக வெளியூர் செல்கிறான். ஒவ்வொரு பிரிவின்போதும் அம்மா அழுதாலும் அடுத்ததில் கவனம் செலுத்தி வாழ்கிறாள். இறுதியில் செடியிடம் உறவாடுகிறாள். "ஆலம்" என்னும் இச்சிறுகதை எதார்த்தமாகவும் அதே சமயம் அம்மாவைப் பாசம் உள்ளவளாகவும் காட்டியுள்ளது.
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்றைச் சேகரிக்க வேண்டும் என்னும் ஆவல் இருக்கும். ''தூவல்" நாயகனுக்கு "பேனா" சேகரிப்பதில் ஆசை அதிகம். பேனா சேகரிப்பதை வைத்து அதன் மீதான காதலை வைத்து ஒரு நல்ல கதையைத் தந்துள்ளார். அது தொடர்பான சம்பவங்களை அழகாகப் பின்னியுள்ளார். முடிவு, பேனா முனையால் இதயத்தைக் கீறியது போலிருந்தது. தூக்குத் தண்டனையால் சாவதற்குக் கூட வருந்தவில்லை. தூக்குத் தண்டனைக்கான தீர்ப்பு வழங்கிய பின் பேனா முனை உடைக்கப்பட்டதற்காக வருந்துகிறார். பேனாவை மையப்படுத்தி இருந்தாலும் நல்லவரோடு சேர்வதே நல்லது என்றும் கதை உணர்த்துகிறது.
நண்பர்களிடையே "சம்யுதை" என்னும் பெண் வருகிறாள். ஒருவனைக் காதலிப்பதால் மற்றொருவன் விலகுகிறான். அவளுக்கு வேறிடத்தில் திருமணம் நடக்கிறது. அவன் தற்கொலை செய்து கொள்கிறான். அறிந்த நண்பனின் ஆத்மா அவன் உடம்பில் புகுகிறது. வழக்கமான கதை எனினும் சொல்லிய முறையில் வேறுபட்டுள்ளது.
"அப்பா சொன்ன நரிக்கதை"யில் ஆசிரியர் சொன்ன சிறுகதை அதிரச் செய்கிறது. அம்மாவின் இரண்டாம் கணவனாக, அவளுக்கு அப்பாவாக வந்தவன் "நரிக்கதை" சொல்வதாக அவளையே சீண்டுகிறான். அறிந்த அம்மா திட்டுகிறாள். அப்பா இடத்தில் இருந்தாலும் ஓர் "ஆண்" ஆகவே இருந்துள்ளான் என்கிறார். அப்பா எனும் நரியின் கதையை "தந்திரம்" ஆக கூறியுள்ளார். நரியின் தந்திரத்தை அம்பலப்படுத்தியுள்ளார்.
கதை எழுதுவது ஒரு கலை. விமரிசனம் எழுதுவது ஒரு கலை. கதையை விமர்சனமாக எழுதுவது அரியது, பெரியது. ஒரு கதையை விமர்சனமாகவே எழுதியுள்ளார். "மை லிட்டில் ஏலியன் ப்ரெண்ட் நூல் விமர்சனம்" என தலைப்பையும் விமர்சனப் பார்வையிலேயே வைத்துள்ளார். ஒரு விமர்சனமாகவே கதையைக் கொண்டு சென்று உள்ளார். விலை, ,வெளியீடையும் குறிப்பிட்டு விமர்சன வடிவத்தையே கையாண்டுள்ளார். ஒரு தமிழராயிருந்தும் அழகாக ஓர் ஆங்கிலக் கதையைக் கூறியுள்ளார். வாசிக்கும்போது அமெரிக்கச் சூழலிலேயே இருப்பது போன்ற ஓர் உணர்வு ஏற்படுகிறது.
கவிஞரான நிலா ரசிகன் "யாரோ ஒருத்தியின் டைரிக் குறிப்புகள்" மூலம் ஒரு சிறுகதையாசிரியராக வெற்றி பெற்றுள்ளார். முதல் தொகுப்பிலேயே முத்திரை பதித்துள்ளார். கதையை எழுதுவதை விட அதை எப்படி எழுத வேண்டும், எதை எழுத வேண்டும் என்பதும் முக்கியமானது. நிலா ரசிகன் இரண்டிலும் கவனம் செலுத்தியுள்ளார். ஆனால் ஆசிரியர் கூற்றாகவே கதைகளை எழுதி உள்ளார். கதைகளில் பெண்களை முதன்மையாக மையப்படுத்தியுள்ளார். அவர்களின் நிலையைக் காட்டியுள்ளார். அடுத்ததாக இடம் பெற்றது சிறுவர்கள். சிறுவயது அனுபவங்களை நினைவு கூர்ந்துள்ளார். மீட்டெடுத்துள்ளார். சமகால பிரச்சினைகளையும் கதையாக்கி தன்னுணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.
நல்ல முறையில் தயாரித்துள்ளது திரிசக்தி பதிப்பகம். ஒரு சிறுகதை தொகுப்பில் ஒரு கதை நல்லதாக இருந்தாலே போதும் என்பர். விதிவிலக்காக உள்ளது "யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்". இத்தொகுப்பு நிலா ரசிகனிடம் ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. நிறைவேற்ற வேண்டும்.

வெளியீடு : திரிசக்தி பதிப்பகம்
56/21, முதல் அவென்யூ,
சாஸ்திரி நகர், அடையார்,
சென்னை - 600 020
விலை : ரூ. 70/-

Thursday, June 16, 2011

இரவைக் கொண்டாடும் துயர்மிகு வரிகள்

 இரவைக் கொண்டாடும் துயர்மிகு வரிகள் - கவிஞர். க.அம்சப்ரியா

நவீன கவிதைக்கான அடையாளமென்பது பாடு பொருளையும் சொல்லாட்சியையும் முந்தைய புதுக்கவிதையிலிருந்து நகர்த்தி வேறு தளத்திற்கு சேர்ப்பதாக அடையாளப்படுத்தலாம். எல்லோர்க்கும் பாதிக்கிற பொது அம்சங்களின் அழுத்தம் வேறு வேறு தொனியில் வெளிப்படுத்துவதும்,தனக்கேயான மனமுறிவு உளைச்சல்கள்,பூரிப்பின் உச்சக்கட்டங்கள்,சமநிலையில் தத்தளிக்கிற எண்ணங்கள் என்று நவீன கவிதை இன்றைக்கு பாய்ச்சலாக போய்க் கொண்டிருக்கிறது.

ஆர்வமிகுதியால் அல்லது வாசிப்பூக்க எழுச்சியில் பீறிடும் சொற்கூட்டங்கள் கவிதையின் முகவரியை தாங்கிக் கொண்டு போலிகளாக வரத்துவங்கிவிடுவது துவக்க நிலையின் பலவீனமாகும்.

புதுக்கவிதையின் இப்படிநிலையைக் கடந்து,ஏற்கனவே புதுக்கவிதையின் மூலம் அறிமுகமாயிருந்தபோதும்,உயிர்மை வெளியீடாக நிலாரசிகன் நவீன கவிதையில் இது தன்னுடைய முதல் தொகுப்பென்று வெளிப்பட்டிருக்கிறார்.
வழக்கமான வெளிப்பாடுகளில் திருப்தியின்மையை இவர் உணர்ந்திருக்கக் கூடும். அல்லது சமகாலத்தை பயின்றிருக்க வேண்டும். இதுவே இவரை இவ்வாறான பிரகடனத்திற்கு நகர்த்தியிருக்கிறது.

இவரது இந்த சுய அறிவிப்பிற்கேற்றபடியாகி இக்கவிதைகள் உள்ளதா? பல அரசியல் நுணுக்கங்களை பட்டவர்த்தணமாக்கும்படியான நவீன குரலாக இத்தொகுப்பு வெளிப்பட்டிருக்கிறது.

நவீன கவிதைக்குள் தனிமையின் குரல் புதிதல்ல எனினும் தனிமை இசையைப் போலிருப்பது புதிதுதான். இசையெனில் அது எவ்வகையான இசை? தாலாட்டா? ஒப்பாரியா? மென் ஒலிச்சந்தமா? இந்த இசை எதையெல்லாம் கொண்டு வரும்? தொகுப்பின் முதல் கவிதையிலேயே அதிர்வு வாசகத்தளத்திற்கு நம்மை உள்ளிழுத்துக் கொள்கிறார். இத்தனிமையின் இசை சிறகுகளற்ற பறவைகளை பிரசவிக்கிறது. ஒரு பறவையின் உயிரோட்டமே அதன் சிறகுகள்தான். ஆனால் நாம் சிறகுகளற்ற பறவைகளாகத்தான் உலாவருகிறோம். சிறகுகளற்ற பறவையின் ஒலி நிச்சயமாக மகிழ்ச்சியை கொண்டிருக்கப்போவதில்லை. அது துயர்மிகுந்த இரவின் பாடலையே இசைக்கக் கூடும். "தனிமையில் இசையில்" எனத்தொடங்கும் இக்கவிதையனுபவம்,கவியாழத்தில் மூழ்கிய ஒருவருக்கு எத்தனையோ பொக்கிஷங்களை அள்ளித்தருகின்றது.

நம்பிக்கையைச் சொல்லும் கவிதைகள் உண்டு என்று சொல்கிறபோது ஓர் அச்சம் பரவுகிறது. நவீன கவிதைக்குள் நம்பிக்கையின்மையின் குரல் இயல்பானது என்பதால் இது அசட்டு நம்பிக்கையின் குரலோ என்று
ஐயம் எழுந்துவிடும் என்பதால் இந்தக் கவிதையை நீங்கள் அறியத்தருகிறேன்.

"உலர்ந்த உன் இதழ்களின்
வெடிப்பில் நெடுங்கோடையின்
சாயல் ஒளிர்கிறது.
நீரில் மிதக்கும் கசங்கிய
காகிதத்தில் எழுதப்பட்டிருக்கிறது
உன் சரித்திரம்.
செவிக்குள் ரீங்காரமிட்டுக்கொண்டே
இருக்கின்றன மரணவண்டுகள்.
முற்றும் எழுதப்பட்டுவிட்டது
உன் வாழ்க்கை.
யாருமற்று/எதுவுமற்று விடிகின்ற
அதிகாலைகளிலும்
மழைப்பாடலுடன் துவங்குகிறது
உனது நாட்கள்"

தன் ஒவ்வொரு வினாடி அனுபவங்களையும் தன் கவிதைக்குள் கொண்டு வருகின்ற மாயவித்தை இவருக்கு கைவந்திருக்கிறது. அதனாலேயே எல்லாக் கவிதைகளும் ஏதோ ஒரு வகையில் தனக்குள் வாசகனை உள்வாங்கிக்கொள்கிறது.

இரவுகளைப் பற்றிய அந்திமச்சொற்கள் மயான வெளிக்குள் இழுத்துச்சென்று மூச்சடைக்க வைக்கின்றன. கனவுகளின் பாதையில் நடந்து போயிருக்கிற் மனிதர்கள் விலங்குகளாகி கவிஞனைச் சிதைக்கிற வன் உலக முரண்பாடுகள் கலக்குரல்களாகவும், ஈனஸ்வர அழுகையாகவும் வெளிப்பட்டிருப்பதை நுண்வாசகன் ஒருவன் இந்தத் தொகுப்புக்குள் அறியக்கூடும்.

பகலின் அபத்தங்களையும்,இரவின் சூழ்ச்சிகளையும் கவனித்துக்கொண்டேதான் இருக்கிறது நிலா. மையப்புள்ளியிலிருந்து உள்நுழைகிற ஒரு புதித மனத்துக்காரன் எல்லாவற்றையும் சிரித்துக்கொண்டே சகித்துக்கொள்கிறான். தன் மெய்யுணர்வை யார் மீதும் பிரயோகிக்க நினையாதவனே ஞானியாகிறான். அப்போது உதட்டோரம் வெளிப்படுகின்ற சிரிப்பு நிர்வாணத்தைக் கொண்டலைகிறது. "நீந்துதலின் சுகம்" எனத்துவங்கும் கவிதைக்குள் ஞான தரிசனத்தை உணர முடிகிறது.

யாருமற்ற தெருக்களிலும் ஏதோவொன்று அலைந்து கொண்டிருக்கிறது. சூன்யமென்றோ வெற்றிடமென்றோ ஏதாவது இருக்கிறது? இவரின் கவிதைகளுக்குள் இரவுகள் ஏதோவொன்றோடு இடைவிடாமல் அலைந்து கொண்டிருக்கின்றன. குரலற்ற பறவைகள்,மரணத்தை இனிப்பென்று சுவைக்கிற சுவைஞன்,மணல்வீட்டின் சிறுவர்களிடம் எஞ்சியிருக்கிற மணலில் குழந்தைமையை தரிசிக்கும் அபூர்வம்,இரவைக் கொண்டாடும் பறவைகள் என கவிமனம் பொங்கிக்கொண்டேயிருக்கிறது. பித்துக்கொண்டு அலைகிறது. எனக்குப் பிடித்த இரு கவிதைகளை பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

"நான்கு சுவர்களுக்குள்
சுற்றிச் சுற்றி வரும்
ஏதோ ஒரு பறவை
விட்டுச்சென்ற இறகு
நான்"

வாசிக்கிறவனுக்கு கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை கைகாட்டிவிட்டு ஓரமாய் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க இக்கவிஞரின் இன்னொரு கவிதை

"இந்தக் கவிதை இப்பொழுதுதான்
பிறந்திருக்கிறது.
தாலாட்ட யாருமற்ற பின்னிரவில்
பீறிட்டு எழும் அழுகை
ஏதுமின்றி வெகு இயல்பாய்
மலர்ந்திருக்கிறது.
கால்களை உதைத்துக்கொண்டு
கண்களை உருட்டியபடி
விழிக்கிறது.
துணி விலக்கி பாலினம்
என்னவென்று அறிந்துகொள்ளாத
வரையில் இக்கவிதை
சிரித்துக்கொண்டுதானிருக்கும்"

வெயில் தின்ற மழை நம் எல்லோர்க்குள்ளும் இருக்கிறது. மழை வெயிலை தின்றதா? வெயில் மழையை தின்றதா? என்று சொற்களின் இடைவெளியில் புதைந்து கிடக்கிறது இரகசியங்களை உணர இத்தொகுப்பு உதவும்.

நூலின் பெயர்: வெயில் தின்ற மழை
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்
விலை: ரூ.50
இணையத்தில் வாங்க: http://www.uyirmmai.com/Publications/BookDetails.aspx?bid=339

Thursday, May 19, 2011

கவிதைகள் இரண்டு

1.உடலுக்குள் பயணிக்கும் கப்பல்
மடித்துக்கட்டியிருக்கும் காவி நிற
உடையில் வியர்வை பூக்க ஆரம்பித்தபோது
கைகளில் வைத்திருந்த கிளி பொம்மையை
இறுக பற்றிக்கொள்கிறாள்.
இறுக்கம் தாளாத கிளி
தன் தலையை விடுவிக்க முயன்று
அங்குமிங்கும் அசைக்கிறது.
கிளியின் கழுத்திலாடும் சிறுமணியில்
ஒன்று சப்தமின்றி விழுந்து சிதறிய
கணம்
அவளுடலை திறந்து உள்நுழைகிறது
கருமை நிற கடல்.
அங்கே,
நீரைக் கிழித்து பயணிக்கும் கப்பலின்
நிழலில் மிதந்துகொண்டிருக்கிறது
கிளியின் சடலம்.

2.நடுநிலைத் திணை

ஒவ்வோர் இதழிலும்
வெவ்வேறு நிறங்களைக் கொண்டிருக்கும்
அம்மலருக்குள்
ஓர் உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறது.
எண்ணிலடங்கா பட்சிகளும் விலங்குகளும்
நிறைந்த அவ்வுலகில் .
சர்ப்பமொன்று பச்சை மரக்கிளையில்
ஊர்ந்து செல்ல
காட்டாற்றின் கரையில்
மூன்று நிழல்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
பறவையின் முதல் நிழலும்
அலகுப் புழுவின் இரண்டாம் நிழலும்
சந்திக்கும் புள்ளியில் உருப்பெற்ற
மூன்றாம் நிழலில்
ஓய்வெடுக்கிறது கனத்தவோடு முதிர் ஆமை.
சுழலும் அதன் நாவில் வெப்பமலரொன்றை
சுவைத்துக்கொண்டு.

-நிலாரசிகன்.

[361˚ சிற்றிதழில் வெளியான கவிதைகள்]

Saturday, May 14, 2011

சொர்ணபூமி

தாய்லாந்து பயணக் கட்டுரை:

சென்னை விமான நிலையத்தில் சோதனைக்காக பக்கவாட்டில் கைகள் இரண்டையும் நீட்டிக்கொண்டு நின்றபோது காவலர் ஹிந்தியில் வருத்தமுடன் சொன்னார். "கம்பீர் அவுட். ஜெயிச்சிடுவாங்கல்ல?". இந்திய இலங்கை உலகக்கோப்பை இறுதி போட்டி அதகளத்துடன் அரங்கேறிய நாளில்தான் தாய்லாந்திற்கு சுற்றுலா செல்ல விமான நிலையம் சென்றோம். எங்கள் விமானம் புறப்பட இரண்டு மணிநேரம் இருந்ததால் இறுதிப்போட்டியை எவ்வித பதற்றமும் இன்றி சந்தோஷ கூச்சலுடன் விமான நிலையத்திலிருந்த தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தோம்.
அப்போது சிங்கப்பூர் கிளம்பவேண்டிய விமானம் ஒரு பயணிக்காக காத்திருந்தது. அந்த ஒரு பயணியை தேடிய பணிப்பெண் தொலைக்காட்சி முன்பு கிரிக்கெட்டில் மூழ்கியிருந்தவரிடம் சென்று விமானம் காத்திருப்பதாக சொன்னார். "இந்தியா ஜெயிப்பதை பார்த்துவிட்டுத்தான் கிளம்புவேன். இன்னும் ஐந்து நிமிடம் பொறுக்க முடியாதா" என்று ஆதங்கப்படும் தருணம் தோனி அடித்த சூப்பர் சிக்ஸரில் இந்தியா வென்றது. 28 வருட கனவு நிறைவேறிய மகிழ்வில் விமானம் ஏறினோம்.

பாங்காக் நகரம் சென்று இறங்கியவுடன் எங்கள் குழுவுக்கான பேருந்தில் பட்டாயா என்னும் சிறுநகரம் நோக்கி பயணப்பட்டோம்.தாய்லாந்தின் சாலைகள் அமெரிக்க நாட்டின் சாலைகளை நினைவூட்டின.வழியெங்கும் வாழைத்தோட்டங்களும் வயல்வெளிகளும் தென்பட்டன.உலகிலேயே அதிக அளவு அரிசியை ஏற்றுமதி செய்யும் நாடாக தாய்லாந்து விளங்குகிறது. பட்டாயா நகருக்குள் நுழையும்போதே பல வெளிநாட்டவர் தென்பட்டனர். பல நூற்றாண்டுகளாக ஒரு சிறு மீன்பிடி கிராமமாக விளங்கிய பட்டாயா 1961ம் வருடத்திற்கு பிறகு ஒரு நகரத்தின் அந்தஸ்த்தை பெற்றதன் காரணம் சுவாரஸ்யமானது. அவ்வருடம் வியட்நாம் போரில் ஈடுபட்டிருந்த சுமார் 100 அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்கள் போர் விடுமுறை நாட்களில் ஓய்வெடுக்க ஓர் இடம் தேடினர்.அப்போது அவர்கள் வந்து ஓய்வெடுத்த இடம்தான் இந்த பட்டாயா. அதன் பின்னர் பல தங்கும் விடுதிகள்,கடைகள் முளைத்து இன்று தாய்லாந்தின் தவிர்க்க முடியாத சுற்றுலா நகரமாக வளர்ந்து வருடத்திற்கு 40 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும்
இடமாக மாறியிருக்கிறது. நாங்கள் தங்கிய விடுதி கடற்கரையின் ஓரத்தில் இருந்தது. வெண்ணிற கடற்கரை மணலில் கால்கள் பதிய சிறிது தூரம் நடந்து அங்கே காத்துக்கொண்டிருந்த படகில் ஏறினோம். கோரல் என்னும் சிறு தீவு நோக்கி விரைந்தது விசைப்படகு. தீவுக்கு சற்றே முன்பாக நடுக்கடலில் மிகப்பெரிய படகொன்று நின்றிருந்தது. அதில் பேராசைலிங்(Parasailing) எனப்படும் பாராசூட்டில் பறக்கும் வீரவிளையாட்டில் பங்கெடுத்தோம்.அதன் பின்னர் கோரல் தீவை நோக்கி பயணப்பட்டோம். சுற்றுலா பயணிகள் அதிக அளவில் தென்பட்டனர். தவளை,ஆமை,கடல்சிப்பி இவையனைத்தும் அத்தீவில் உலவுகின்றன என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இவைகளை நன்றாக வறுத்து உணவாக்கி வைத்திருந்தார்கள் அங்குள்ள சிறிய கடைகளில்! தாய்லாந்து மக்களின் உணவில் தவளை,வண்டு,வெட்டுக்கிளி எல்லாம் சகஜம் என்றார் எங்களை அழைத்துச் சென்ற வழிகாட்டி.

மாலை வரை அற்புதமாய் கழிந்தது பொழுது. தீவை விட்டு மீண்டும் தங்கிருந்த விடுதிக்கு திரும்பினோம். தாய்லாந்தில் வாழ்க்கை இரவுதான் ஆரம்பிக்கிறது. அல்காசர் எனப்படும் புகழ்பெற்ற ஷோவிற்கு சென்றோம். தாய்லாந்தின் கலாச்சார நடனத்தில் ஆரம்பித்து பிற நாடுகளின் கலாச்சார நடனங்களையும்,நாடகங்களை நிகழ்த்தினார்கள் பால்நிற கன்னிகள். பின்புதான் தெரிந்தது அவர்கள் திருநங்கைகள் என்று. அவர்களை Ladyboys என்று தாய்லாந்து மக்கள் அழைக்கிறார்கள்.பட்டாயா நகரில் திரும்பிய பக்கமெல்லாம் மதுவிடுதிகளும்,நடன விடுதிகளும்,மசாஜ் பார்லர்களும் இருக்கின்றன.பின்னிரவில் பெண்களால் நிரம்பி வழிகின்றன பல தெருக்கள். வெகு இயல்பாக நடக்கிறது உலகின் புராதான தொழில். இங்கு வருகின்ற சுற்றுலாப்பயணிகளின் 10 சதவிகித பணம் விலைமாதுக்களிடம் செலவிடப்படுகிறதாக தகவல்.

இரண்டு நாட்கள் பட்டாயாவில் தங்கியிருந்தோம். மூன்றாம் நாள் பாங்காக் கிளம்பினோம். பாங்காக்கில் முதலில் சென்ற இடம் உலகின் மிகப்பெரிய தங்கசிலை கொண்ட புத்தர் கோவில். ஐந்தரை டன் 18 காரட் தங்கத்தில் செய்யப்பட்ட புத்தர் சிலை ஜொலித்துக்கொண்டிருந்தது.அதன் வாசலில் தாய்லாந்தின் 84 வயது மன்னரின் மிகப்பெரிய புகைப்படம் கண்டோம். தாய்லாந்து மக்களின் நேசத்துக்குரிய தேசப்பிதா மன்னர் ஒன்பதாவது ராமா என்று அழைக்கப்படுகிறார்.அவர் தங்கியிருக்கும் பிரம்மாண்டமான அரண்மனை ஒரு நதிக்கரையில் ரம்மியமாக காட்சியளிக்கிறது.

பாங்காக்கில் சிறுவர்கள் காணவேண்டிய இடங்கள் பல உண்டு. மிருகக்காட்சிசாலைகள்,பூங்காக்
கள் என்று நிறைய. அனைத்து இடங்களிலும் யானைகளை அதிகம் பார்க்க முடிகிறது. Elephant show மிகப்பிரபலமானது. சிறுவர்களை கவரும் வண்ணம் யானைகள் அடிக்கும் லூட்டி ரசிக்க வைக்கிறது. அதேபோல் Sealion show,birdshow,dolphin show என்று நிறைய ஷோக்களில் கல்லா கட்டுகிறார்கள்.

பாங்காக்கின் இரவு வாழ்க்கையும் பட்டாயா போன்றே காட்சியளிக்கிறது.நடைபாதைக்கடைகள் இரவு பதினோரு மணிவரை திறந்திருக்கின்றன.முக்கியமாக துணிக்கடைகளும்,எலக்ட்ரானிக் கடைகளும் அதிகம்.பேரம் பேசி வாங்க முடிகிறது. ஐந்து நாட்கள் பயணம் முடிந்து சொர்ணபூமி சென்றோம். அதுதான் தாய்லாந்தின் விமானநிலையத்தின் பெயர். எப்படி இந்தப்பெயர் வந்தது என்ற காரணத்தை வினவியபோது கிடைத்தபதில் சோழர்கள் தாய்லாந்தில் ஆட்சி செய்திருக்கிறார்கள். அதன் காரணமாகவே பல சிவன் கோவில்கள் தாய்லாந்தில் எழுப்பப்பட்டிருக்கின்றன. இன்றும் திருப்பாவையும்,தேவாரமும் தாய்லாந்திலுள்ள சிவன் கோவில்களில் பாடப்படுகின்றன. சோழர்கள் ஆண்ட நாட்டை தரிசித்துவிட்டு திரும்பிய மகிழ்ச்சியில் சென்னை வந்தடைந்தோம்.

-நிலாரசிகன்.
 
[இன்றைய கல்கி இதழில் வெளியான கட்டுரை]

Wednesday, May 11, 2011

361˚ சிற்றிதழ் வெளியீட்டு விழா அழைப்பிதழ்


Wednesday, May 04, 2011

361˚ புதிய சிற்றிதழ் அறிமுகம்.

 
நண்பர் நரனும் நானும் இணைந்து சிற்றிதழ் ஒன்றை துவங்கியுள்ளோம் .361 டிகிரி என்று பெயர் . நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்பாளிகள் பலர் இந்த இதழில் பங்கெடுத்துள்ளனர். இதழ் வரும் திங்கள் கிழமை முதல் நியூ புக் லண்ட்ஸ்/டிஸ்கவரி புக்பேலஸ் கடைகளில் கிடைக்கும் .அடுத்த இதழுக்கான படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. 
படைப்புகள்/கருத்துகள் அனுப்ப வேண்டிய முகவரி:  361degreelittlemagazine@gmail.com
நண்பர்களின் தொடர்ந்த ஆதரவை எதிர்நோக்குகிறோம். இது ஒரு காலாண்டிதழ்.
நட்புடன்,
நிலாரசிகன்.

Sunday, April 24, 2011

கல்குதிரை கவிதைகள்




1. சோலஸ்

ஆழியின் மையத்தில் ஒரு அரச குடும்பத்தினர்
வசிக்கிறார்கள்.
அவர்களுக்கு சோலஸ் என்றொரு மகள்
இருக்கிறாள்.
அவளை கவர்ந்து சென்றான்
அலைக்குதிரையில் ஒலிவேகத்தில் வந்தவன்.
எட்டுத் திசையில் தேடியும் சோலஸ்ஸை
அரசனால் கண்டுபிடிக்க இயலவில்லை.
சோர்ந்தவனின் கண்களில் வழிகிறது
செந்நீர்.
கடலின் சுவை மாறிப்போகிறது.
யுகம் பல கடந்த பின்னும்
அலையாகி கரையெங்கும் தேடுகிறான்.
தூரத்தில் ஏதோவொரு சிறு நதியில்
ஒன்றாய் நீந்துகிறார்கள்
சோலஸ்ஸும் அவனும்.

2. சாமக்கோடாங்கி

கோடாங்கியின் குடுகுடுப்பைக்குள்
இரண்டு பேர் அமர்ந்திருக்கிறார்கள்.
இரவை இரண்டாக பிளக்கும்
கூர்வாளை அவர்கள் தயார் செய்கிறார்கள்.
சாம்பல் நிற நாய்களையும்
கூகையொன்றையும் விஷமேற்றி
வளர்க்கிறார்கள்.
நீண்ட சடை முடிக்குள்
மேலும் இருவர் அமர்ந்திருக்கிறார்கள்.
நீல நிறத்தாலான கண்களும்
சிவந்த உடலையும் கொண்டிருக்கிறார்கள்.
கோடாங்கி,
ஐந்து தலையுடைய நாகத்தின்
உருவமெடுக்கிறான்.
இரவை விஷத்தால் நிரப்பிக்கொண்டு
திரிகிறான்/நடனமிடுகிறான்/கிறங்குகிறான்
விடியலில்,
விஷமனிதர்களை கண்ணுற்று
ஓடி மறைகிறான்.

-நிலாரசிகன்
[இவ்வருட கல்குதிரை இலக்கிய இதழில் வெளியான கவிதைகள்]

Friday, April 22, 2011

குடுவை மீன்

 
வெற்றிடங்களால் நிரம்பியிருக்கும்
அறையை தன் சிறு கண்களால்
பார்க்கிறது கண்ணாடிக்குடுவை மீன்.
நிசப்த அறைக்குள் நீண்டதொரு
கடற்கரையை காண்கிறது.
அக்கரையில் ஈரம் படர
அதன் வாலசைவில் பேரலையொன்றை
உருவாக்குகிறது.
அலை வழியே கரையடைந்து
யாருமற்ற கரையில்
நீந்தியும் நடந்தும் விளையாடுகிறது
கடலை படைத்த குடுவைமீன்.
கடலிருக்கும் அறைக்கதவு
தட்டப்படும் வரை.

(இன்று மரணித்தை தழுவிய நான் வளர்த்துவந்த மீன் “வந்தியத்தேவனுக்கு”. புகைப்படத்தில் வந்தியத்தேவன்)
-நிலாரசிகன்.