Thursday, September 01, 2011

உயிர் எழுத்து கவிதைகள்

1.இலை
அங்குமிங்கும் அலைவுறும்
இலையின்
பின் ஓடுகிறாள் சிறுமி
கைகளில் அகப்படாத
இலையை
முயல்போல் தாவித்தாவி
பின் தொடர்கிறாள்.
மாபெரும் விருட்சங்கள்
தலைகுனிந்து அவளோட்டத்தை ரசிக்கின்றன.
வெண்காகங்கள் அவளுடன் நீந்திக்கொண்டு
இலையை தொடர்கின்றன.
பச்சை இலையின் நரம்புகளை
தீண்ட விரல் நீட்டுகையில்
ருதுவாகிறாள்.
அசைவற்று கிடக்கிறது இலை.

2.நிகழ்தல் என்பது

ஏதோவொன்று நிகழ்ந்துகொண்டிருப்பதை
உணர்கொம்புகள் உணர்த்துகின்றன.
ஒவ்வொரு அறையாக
செல்கிறேன்.
முதல் அறையில் இரண்டு புகைப்படங்கள்
சுவரில் தொங்குகின்றன.
அவைகளில் சலனமில்லை.
இரண்டாம் அறையின் உட்புறம்
சன்னல்கள் இரண்டு மெல்ல பேசிக்கொள்கின்றன.
அருகில் செல்கிறேன்.
இளம் புணர்ச்சியொன்றை கண்ணுற்ற கதையை
அவை பேரானந்தத்துடன் பகிர்ந்துகொள்கின்றன.
மூன்றாம் அறை பூட்டப்பட்டிருக்கிறது.
நான்காம் அறையில் மெழுகொன்று
தன் இறக்கைகளை விரித்து அழுதுகொண்டிருக்கிறது.
மெதுவாய் கண்கள் திறக்கிறேன்
இதயத்தின் நான்கு அறைக்குள்ளிருந்தும்.


3.மார்புக்காலம்
மலைகள் சூழ்ந்த அருவிக்கரையில்
கச்சை சரி செய்யும் பேரிளம் பெண்
தன் மார்புகளில் வழிகின்ற
நீரின் வழியே வருடங்கள் பல
பின்னோக்கி நகர்ந்து முதன் முதலாய்
நீராடிய குளக்கரையின் படித்துறைக்கு
செல்கிறாள்.
குளத்தில் மிதக்கும் தாமரை இலைகளின்
நடுவே சிறிமியொருத்தி நீந்தும் தருணம்
மொட்டொன்று மலர்வதை மிகுந்த
வலியுடன் தாங்கிக்கொள்கிறது குளம்.
மார்புகளில் வழிகின்ற துளிகளுடன்
வீட்டிற்கு செல்லுமவள்
மெளனத்தின் அறைக்குள் ஒளிந்துகொள்கிறாள்.
சிறுமியிலிருந்து யுவதிக்கும்
யுவதியிலிருந்து பேரிளம் பெண்ணுக்கும்
இடையே வெளவ்வாலாக தொங்குகிறது
மார்புக்காலம்.

4.அரூபவெளி
சிதைந்த கல்லறையின் மேல்
படுத்திருக்கும்
சாம்பல் பூனையின்
கூரிய நகங்களும் பற்களும்
இப்போது உறங்கிக்கொண்டிருக்கின்றன.
புதர்ப்பறவையொன்றின் கண் திறக்காத
இரண்டு குஞ்சுகளை தின்று விட்ட
பெரு நிம்மதியுடன் உறங்குகிறது.
தட்டானை அலகிடுக்கில் பிடித்துக்கொண்டு
கூடு திரும்பிய சிறுபறவை
தன் குஞ்சுகளை தேடுகிறது.
உதிர்ந்த இறகுகளும் கடித்து துப்பிய
பிஞ்சுக்கால்களும் கண்டு
கதறி அழுகையில்
அலகிலிருந்த தட்டானின் பிணம்
இறகில் விழுகிறது.
கல்லறைக்குள் நுழைகின்றன
நான்கு அரூபங்கள்.

5.வதை
இரண்டு கால்களையுடைய
மிருகம் எப்போதும் என்னுடன்
பயணித்தபடியே இருக்கிறது.
அதன் கூர்மையான கொம்புகளில்
நெளிகின்ற கருஞ்சிவப்பு நிற
சர்ப்பத்தின் பார்வை
என்னை நோக்கி குவிந்திருக்கிறது.
ஒரு பெரும் சுமையை இழுத்தபடி
நடக்கின்ற என் பாதையெங்கும்6
குறுக்கும் நெடுக்குமாக ஓடுகின்றன
சின்னஞ்சிறு மிருகங்கள்.
நீண்டு விரிந்த பச்சை வெளியொன்றை
கடக்கும் பொழுது உணர்கிறேன்
மிருகமொன்றின் நிழலாக
நானிருக்கிறேன் என்பதை.

6.எதிர் விசை
மழை ஓய்ந்த இருளில்
ஈரம் பொதிந்த சாக்குப்பைகளின் வழியே
கசிந்துகொண்டிருக்கும் முனகல்கள்
மூன்று நாய்க்குட்டிகளுக்கானவை.
குளிரிலும் அசைவிலும்
ஒடுங்கியிருக்கும் அவைகளை இப்போது
கொன்றாக வேண்டும்.
முதலில் வெண்ணிற குட்டி
அதன்பின் பழுப்பு
கடைசியாக கருமை நிறம்.
நீண்ட ஒற்றையடிப்பாதையின்
இரு பக்கங்களிலும் அடர்ந்த புதர்கள்
சரசரத்துக்கொண்டிருந்தன.
சுழித்தோடும் ஆற்றுநீரை நோக்கி
பயணப்படுகையில்
நெளிந்து கடந்தது சர்ப்பம்.

-நிலாரசிகன்.
[இம்மாத உயிர் எழுத்து(செப்டம்பர் 2011) இதழில் வெளியான கவிதைகள்]