Sunday, September 25, 2011

கவிதைகள் இரண்டு

1.மினி ப் பெண்
இருள் ஒரு யுவதியின் கண்களை
நினைவூட்டியது.

அடர்ந்த புதர்களின் நடுவே வீசியெறியப்பட்ட
அவளது உடலும் விழியைப் போலவே
திறந்திருந்தது.
செந்நாய்கள் உடலை இழுத்துச்செல்ல
முயலும் கணத்தில் அவள் ரெப்பைகள்
மூடிக்கொண்டன.

பல்லிருங்கூந்தல் இந்த இரவாக
அறுபடுகிறது

கண்களை அவள் மூடிய கணத்தில்
உக்கிரமான மழை.
செந்நாய்கள் சிதறி ஓடியதும்
அவள் நேத்திரங்களில் வந்தமர்ந்தன
இருள் மின்மினிகள்.

இப்போது

இசையில் எரியும் மூங்கில் நிழல்களோடு
மிதந்து அலைகிறாளவள்.

2.மழைவழிப்பயணம்

அவர்கள் மழைப்பாதையில் பயணித்து
இங்கே வந்திருக்கிறார்கள்.
மொத்தம் மூன்று பேர்.
சிறுமி,
நாய்க்குட்டி,
சிறுமியின் குடுவை மீன்.
ஏழாம் நூற்றாண்டை சேர்ந்தவர்கள்
நாங்கள் என்கிறாள் அச்சிறுமி.
மழை வழியே இந்த நூற்றாண்டிற்குள்
எதற்காக இவ்வருகை என்பதை
அறியும் முன் சிறுமியும் நாய்க்குட்டியும்
அடுத்த நூற்றாண்டிற்குள் நுழைந்துவிட்டார்கள்.
அழுக்கற்ற அன்பைத் தேடி இப்பயணம்
என்றது குடுவை மீன்.
முடிவற்ற பயணமிது என்றபடி தவறவிட்டேன்
குடுவையை.

-நிலாரசிகன்.

5 comments:

said...

அன்பைத்தேடும் ஏழாம் நூற்றாண்டு பயணம் நிதர்சன உண்மையை தழுவிச் செல்கிறது.
பாராட்டுகள் நிலா ரசிகன் அவர்களே.

said...

கவிதைகல் இரண்டும் அருமை.

said...

மிக அழகான கவிதைகள். :)

மழைவழிப்பயணம் கவிதையை மிகவும் ரசித்தேன் :)

said...

மிக அழகான கவிதைகள். :)

மழைவழிப்பயணம் கவிதையை மிகவும் ரசித்தேன் :)

வாழ்த்துக்கள் :)

said...

2me pidichurukku...
2vathu remba pidichurukku.

vaazhthukal nila!