Thursday, January 31, 2013

ஜூலியின் அப்பா எண்களால் ஆனவர்



1.ஜூலியின் அப்பா எண்களால் ஆனவர்


இருபத்தி எட்டு வருடங்களுக்கு முன்
நான்காவது மகளாக ஜூலி
பிறந்த செய்தி கேட்டவுடன் வேகமாய்
மருத்துவமனை விட்டு வெளியேறினார் 
ஜூலின் அப்பா.
அதன் பின்னர் எப்பொழுதும் அவர்
தன் முதல் மூன்று பெண்களையும்
எண்களை வைத்தே அழைக்க ஆரம்பித்தார்.
ஒன்று 
கல்லூரியில் இரண்டாம் வருடம் படிக்கிறது.
இரண்டு
பள்ளி இறுதி ஆண்டு படிக்கிறது.
மூன்று
படிப்பில் ஆர்வமில்லை அதனால் தையல்
வகுப்பு போய் வருகிறது
இப்படித்தான் எல்லோரிடமும் 
தன் பெண்களின் மகிமை பேசுவார்.
நான்காவது எண்ணுடைய ஜூலியை
அவர் விரும்பியதே இல்லை.
ஒன்றிலிருந்து மூன்றுவரை திருமணம்
முடிந்து மறுவீடு சென்றபின்னரும்
நான்கை பற்றிய அக்கறையின்றி
திரிந்ததால்
தன் முப்பதாவது வயதில்
ஜூலி காதல் மணம் புரிந்து வெளியேறினாள்.
யாருமற்ற வீட்டின் அடுக்களையில்
நைந்த கறுப்புவெள்ளை புகைப்படமொன்றை
கைகளில் ஏந்தியபடி
ஜூலியின் அம்மா ஒருநாள் 
முணுமுணுத்துக்கொண்டிருந்தாள்
"அவர் பூஜ்ஜியம் அவர் பூஜ்ஜியம்" என்று.

2.மிஸ்டர் எம் மற்றும் எக்ஸ்ஸின் காதலி : எஸ் என்கிற எஸ்

கடற்கரையில்தான் எஸ் தன் குழந்தைமையிலிருந்து
குமரியாக மாறினாள். 
மருத்துவமனையில்தான் எஸ் ஒரு காதலை கொன்று
வீசினாள்.
காதல்மாதத்தில்தான் எஸ் தன் மூத்தகாதலான
"எம்"மை கைப்பிடித்தாள்.
முகநூலில்தான் எஸ் தன் புகைப்பட முகத்தை
முதன்முதலாய் காண்பித்தாள்.
மயில்கள் திரியும் தோட்டத்தில்தான் எஸ்ஸின் மீதான‌
காதலை கண்ணீர்மல்க எக்ஸ் புலம்பினான்.
யாருமற்ற இரவில்தான் எக்ஸ் ஒரு திருமணத்திற்கு
சம்மதித்தான்.
உலக அழிவை பேராவலோடு எக்ஸ் எதிர்நோக்கிய‌
கணத்தில்தான் எம்மும் எஸ்ஸும் குற்றாலம் போவது
பற்றிய முடிவெடுத்தனர்.
எக்ஸ் வேறு வழியின்றி தூக்கில் தொங்க நினைத்தபோது
அறுந்து விழுந்து சிரித்தது வாழ்க்கைவடிவ‌
தூக்குக் கயிறு.
காலம் அனைத்தையும் மறக்கடிக்கும் என்று
எக்ஸ்க்கு அறிவுரை வழங்கி எஸ்
ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாள்.
எக்ஸை சேரும்போது அந்த எஸ்.எம்.எஸ்ஸில்
வார்த்தைகளே இல்லை.
எஸ்ஸின் பேரன்பின் முத்தங்களின் கனம் தாளாமல்
ஒரு நாள் எக்ஸ் மரித்துப்போனான்.
அப்போது எம்மும் எஸ்ஸும் நயாகராவில்
புகைப்படமெடுத்துக்கொண்டிருந்தனர்.

-நிலாரசிகன்.

Friday, January 11, 2013

மீன்கள் துள்ளும் நிசி

நண்பர்களின் கவனத்திற்கு: புத்தக கண்காட்சியில் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கு எண் 43/44 ல் எனது கவிதை தொகுப்பான "மீன்கள் துள்ளும் நிசி" கிடைக்கும்...
அனைவருக்கும் "புத்தககண்காட்சி வாழ்த்துகள்" :)

Wednesday, January 09, 2013

மீன்கள் துள்ளும் நிசி - விமர்சனம் - கவிஞர்.இளஞ்சேரல்


நிலா ரசிகனின் ”மீன்கள் துள்ளும் நிசி” குறித்து


நிழல் விரிகிறதென்றால்

பகல் சுடுகிறது என்று பொருள்--

நிலா ரசிகனின் ”மீன்கள் துள்ளும் நிசி” குறித்து

 

இளஞ்சேரல்

 

         நவீன காலத்தின் பிரதிபலிப்பை பிரித்து எரியப்பட்ட கார்பன் கழிவுகளைப் போலவும் திரும்பவும் அவைகளைக் கைப்பற்றி தாள்களுக்குள் சொருகிச் சொருகி சில பொம்மைகளை வரையும் சேரியின் சிறுவர் சிறுமிகளின் சித்திரங்கள் போலவே நமது நவீன கிராமங்களின் கவிதைகள் பதிகிறது.

               எல்லாக் கிரயப்பத்திரங்களும் பதிவு செய்யப்பட்டபின் அந்த நிலத்தை மீண்டும் அத்தாட்சி சுத்தமாகச் சென்று பார்த்து வருகிற மாதாந்திரச் சம்பளக்காரனின் வாழ்வுதான் நவீன கவிதை

         நவீன கவிதையியல் குறித்து எழுத எழுத தீராத மணற்குமிழ்கள்.அது எல்லா இடத்திலும் இருக்கும் பால்பாயிண்ட் பேனாவின் குமிழ் போல சில சமயம் கொஞ்சம் கண்களால் அறியமுடியும். சில வற்றை அள்ளி அதில் எங்கானும் தவறிய சில சங்குப் பாசிகளை நுற் சங்குகளைப் பொறுக்கிக் கொள்ளலாம். நமக்குத் தேவைப்படும் பட்சத்தில்

              நிலாரசிகன் கவிதைகளை தொடர்ந்து வாசிக்கப் படும் போது அடிக்கடி இருதயத்தைத் தொட்டுப்பார்த்துக் கொள்கிற ஆஸ்துமாகாரன் போலத்தான் மிளர வேண்டியிருக்கிறது. படிமங்களை மிக அதிகமாகவும் பிரழ்வு சோகையுடனும் அதிகமாக எழுதப்பட்டிருக்கிறது. சங்கிலிக் கண்ணக

ளாக அடுக்கப்பட்டிருக்கும் காட்சி சிலாகிப்பு-எரி நட்சத்திரம் போல அடிக்கடி காணாமல் போகும் சற்று முன் விவரித்த சித்திரக் காட்சிகள் என்பதான நிறைய பிடிமானம் இல்லாத கத்திகளும் முள் உருண்டைக் கருவிகளுமாகக் கைகளில் பற்றுவதாக இருக்கிறது.

43. பொம்மையாதல்- கவிதை நாம் மேதமை கொண்டோர் என அறிந்தவர்கள் கூட சிறு அப்பியாசம் கூட அறியாதவர்களாக இருப்பர்.அல்லது

குழந்தையாக இருப்பினும் கூட கேட்டுப்பெறுபவர்க

ளாக இருப்பர் என்கிறார் இக்கவிதையில் குழந்தைகள் அறிந்ததைக் கடவுள் கூட அறியாது என்பதாகிறது. இவ்விடம் குழந்தை நவீன காலத்தின் குழந்தையாகவும் காட்டுவதுதான் நிலாரசிகனின் நுட்பம்.

 

அப்பாவும் அம்மாவும்

தராத அரவணைப்பை

பொம்மைக்குத் தந்தபடி

உறங்கிக் கொண்டிருந்தது குழந்தை

கனவில் தோன்றிய கடவுள்கள்

அச்சிறு குழந்தையின் அரவணைப்பை

வரமாய்க் கேட்டனர்

வரிசையில் நின்றிருந்த

கடவுளர்களுக்கு உறக்கப் புன்னகையை

தந்துவிட்டு பொம்மையை

இறுக்கி அணைத்துக் கொண்டதது.

பொம்மையாதலின் வழிமுறைகள்

அறியாமல் விழித்தபடி நின்றனர்

கடவுளர்கள்..

         மாயத்தின் தத்ரூபமான தரிசனம் இக்கவிதையில் கிடைக்கிறது. ஏற்கெனவே இந்த கவிமொழி நமக்கு குறுங்கவிதைகள் எழுதுகிற கவிஞர்கள் மூலமாக நமக்கு அனுபவமாகக் கிட்டியியிருந்தாலும் பொம்மையாதலின் வழிமுறைகளை அறியாதவர்தான் கடவுள் என்பது நல்ல புனைவும் அதியதார்த்தம் மீறிய கூட்டிணைப்பு

கடவுள் குழந்தைகளிடம் எந்த சமரையும் வைத்துக் கொள்வதில்லை. குழந்தைகள் புத்திசாலித்தனத்தை கடவுளிடம் கேட்டுக் கொண்டெல்லாம் காத்திருப்ப தில்லை. இங்கு குழந்தை என்பது இயற்கையின் ரூபம் என்பதாக வாசகனுக்கு அறிய நேர்கிறது.

 

வேர்களற்றவர்கள்

 

மௌனம் உருகி படர்ந்திருக்கும்

மலை உச்சியில் நாம் அமர்ந்திருக்கிறோம்

என் அணைப்பின் தகதகப்பில்

அடர்பச்சை மரக் காடுகளை

பார்வையின் வழி சென்றடைகிறாய்

மெல்ல உன் வதனம் திருப்பி

இதழ்களில் முத்தமிடுகிறேன்

வனம் சில்லிட்டு சிதற சிதற

நம்மிடையே வளர்கின்றன

ஓராயிரம் வேர்களற்ற விருட்சங்கள்

இதழ்களிலிருந்து வெளியேறும்

முத்தப்பறவைகளிலொன்று உன்னை

அள்ளிச் செல்கிறது

இதழ்களிலிருந்து வெளியேறிய

கருந்தேள் என்னைத் தின்று பசியாறுகிறது

நம் தடயங்களற்ற மலையின் உச்சி

இப்பொழுதும் மௌனித்துக் கிடக்கிறது.—பக்-28

 

       நிலாரசிகன் அதிகமான படிமங்களை உருப்போட்டிருக்கும் கவிதை இந்தக் கவிதை. அவருடைய எல்லாவிதமான சாத்தியங்களும் கவிதையின் சத்தியமும் இக்கவிதையில் இருக்கிறது. நவீன காலத்தின் எல்லா உபகரணங்களையும் கைக் கொண்டிருக்கிற ஒருவன் தான் அனுபவிக்கின்ற இன்பங்களை அல்லது இழப்பீடுகளைப் பேசும் போது இப்படியான பிறழ்வுப் படிமங்கள் வரும். பிரம்மராஜன், பசுவய்யா,ஞானக் கூத்தன், அழகிய சிங்கர் ஆகியோர் இப்படி நிறையப்படிமங்களை அடுக்கியிருக்கிறார்கள்.

              காதலுறுதல் காமுறுதல் உயர்வு நவிற்சி பாடல்களில் சங்கப் பாடல்களிலும் சரி பக்தி இலக்கியக் காலங்களிலும் சரி மிகு உயர்வு நவிற்சியைப் பயண்படுத்தி கவிரசம் சொட்டச் சொட்ட பந்தியிட்டிருக்கிறார்கள் நம் பாணர்கள்.

           அந்த வகையில் நம் நெகு காலமானாலும் சரி கல் குவாரி காலமானாலும் சரி பாதாள சாக்கடையை இன்னும் நான்கு பேர் இறங்கி முங்கி சுத்தம் செய்யும் காலமானலும் சரி கவிஞனுக்கு எல்லாமே வலிமிகுந்த காலம்தான்..

 

நடுநிலைத்திணை

 

ஒவ்வோர் இதழிலும்

வெவ்வேறு நிறங்ளைக் கொண்டிருக்கும்

அம்மலருக்குள்

ஓர் உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறது

எண்ணிலடங்கா பட்சிகளும் விலங்குகளும்

நிறைந்த அவ்வுலகில்

சர்ப்பமொன்று பச்சை மரக்கிளையில்

ஊர்ந்து செல்ல

காட்டாற்றின் கரையில்

மூன்று நிழல்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன

பறவையின் முதல் நிழலும்

அலகுப்புழுவின் இரண்டாம் நிழலும்

சந்திக்கும் புள்ளியில் உருப்பெற்ற

மூன்றாம் நிழலில்

ஓய்வெடுக்கிறது கனத்தவோடு முதிர் ஆமை

சுழலும் அதன் நாவில் வெப்பமலரொன்றை

சுவைத்துக் கொண்டு..

           நல்லதொரு மீள் தரிசனத்தைத் தரும் இக்கவிதையில் அவர் ஆழக்கட்டும் காகிதக் கட்டிடங்களில் நாம் வசிக்கலாகாதா எனத் தோன்றுகிறது. தொகுப்பின் மொத்தக் கவிதைகளும் ஏதாவது ஒரு அழுத்தமான பிடியையும் பிம்பத்தின் ஊனையும் உறவையும் போற்றியபடியே இருக்கிறது.

           துண்டு துண்டாக வெட்டிப் பின் கலைத்து கலைத்து பின் வேறென்றாகச் சேர்க்கப் பார்த்து அது வேறொரு சித்திரமாக உருவெடுப்பதுதான் நவீன கவிதையின் கடலாழ பலம். அந்தப் பலத்தை நிலாரசிகன் ஒரு பளுதூக்கும் வீரனாக எல்லா பளு வில்லைகளை மாட்டி மாட்டி தூக்கிநிறுத்தப் பார்த்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.. வாசகனாக என்றும் நல்ல அனுபவம்.. இந்தத் தொகுப்பின் மூலம் கிடைத்திருக்கிறது. பிரமிள், புதுமைப்பித்தன், நகுலன், ஆத்மாநாம், சி.மணி, அப்பாஸ் போய்விட்டார்கள். நம்மையும் நம் கவிதையையும் காப்பவர்கள் யார் என்று புலம்பியிருக்கிறோம் நாம் முதல் முதலில். பிறகு அவர்களாகவே நாம் மாற யத்தனிப்பதுதான் அவர்களுக்கு நாம் செய்யும் பணிவிடையாகிறது. அந்த பரமாத்மாக்களின் விட்ட பணியை ஆளாளுக்குத் தூக்கிச் சுமக்க பிரியப்படும் எண்ணற்ற கவிஞர்களில் நிலாரசிகனும் ஒருவராக இருப்பது இந்தத் தொகுப்பில் தெரிகிறது.

    

         வாசிப்பின்  நுட்பமான அந்த அனுபவமே இந்த நூற்றாண்டின் தமிழ் நவீன கவிதைக்கு அவசியமாகிறது.

           கவிஞனைப் போற்றுவது நல்ல கவிதைகளின் வாசகனைப் போற்றுவதாகிறதால் நான் என்னை முதலில் இந்தத் தொகுப்பின் மூலமாக என்னைப் போற்றிக் கொள்கிறேன்.. நிலாரசினின் முயற்சிகள் கவிதைகளுக்காகத் தொடர்வது கவிதையின் ரசிகனான எனக்கு என்றும் இன்பம்தான்..

 

வாய்ப்பிருந்தால் மேலும் சில கவிதைகள் குறித்து எழுதுவேன்..