Monday, June 27, 2011

யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்

யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள் - நூல் விமர்சனம் - பொன்.குமார்

மனித வாழ்க்கை பல கட்டங்களைக் கொண்டதாகும். முக்கியமாக பிறப்பு ஓரிடம், வசிப்பு வேறிடம் இருக்கும்.இன்று மாநகரத்தில் தொழில் நிமித்தமாக வசிப்பவர்கள் எல்லாம் பெரும்பாலும் கிராமத்தில் இருந்து வந்தவர்களே ஆவர். வசதியாக வாழ்ந்தாலும் அவர்களின் மனத்தில் கிராமமே அழியாமல் இருக்கும். வாழும். இரட்டை வாழ்க்கையே வாழ்ந்து வருகின்றனர். படைப்பாளியாக இருப்பவர்கள் படைப்புகள் மூலம் கிராமத்து வாழ்வை வெளிப்படுத்தி வருகின்றனர். கவிஞரான நிலா ரசிகன் கிராமத்து அனுபவங்களுடன் சில புனை கதைகளையும் இணைத்து தந்திருக்கும் தொகுப்பு "யாரோ ஒருத்தியின் டைரிக் குறிப்புகள்." "புத்தகம் இல்லாத ரயில் பயணத்தை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை" என பயணிக்கிறது,.
 "யாரோ ஒருத்தியின் டைரிக் குறிப்புகள்" என்னும் சிறுகதையுடன் தொகுப்பு. நாட்காட்டிக் குறிப்புகள் என்பதால் கதையை நாள் வாரியாக எழுதியுள்ளார். ஒவ்வொரு நாளும் சிறுமி தன் அனுபவத்தை எழுதி வைத்ததாக கதை நகர்கிறது. பலாத்காரம் செய்யப்படுவது கூட சிறுமிக்குத் தெரிவதில்லை. சாக்லேட்டுச் சுவையில் மறந்து விடுகிறாள். வலிப்பதாக எழுதியிருப்பது வலிக்கவே செய்கிறது. நாட்காட்டி முழுமை அடையாததால் சிறுமியைப் பற்றிய வினாவுடன் முதல் பகுதி நிற்கிறது. இரண்டாம் பயணத்தில் இன்னொரு டைரி கிடைக்கிறது. சிவப்பு விளக்கிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட பெண்ணுடையதாக உள்ளது. ஆசிரியருக்குள் ஒரு சந்தேகம். அந்த சிறுமிதான் இந்தப் பெண்ணோ என எண்ணுவதுடன் கதையை முடித்துள்ளார். வாசகருக்குள் கதையைத் தொடரச் செய்கிறார். மும்பைக்கு சிறுமிகளை அழைத்துச் சென்று சித்ரவதைப்பதை வெளிச்சப்படுத்தியுள்ளார். சிவப்பு விளக்குப் பெண்ணானாலும் வாழ்க்கை அமைந்ததை வரவேற்கிறார்." "அழகு அல‌ங்கோலம் இவையெல்லாம் அவரவர் மனப்பான்மை" என்கிறார். யாரோ இருவரின் நாட்காட்டியை "ஒருத்தி"யின் நாட்காட்டி என இதயத்தைத் தொட்டுப் பார்க்கச் செய்துள்ளார்.
செல்வராசு என்னும் சிறுவனுக்கு அவனை விட பத்து வயது மூத்த பெண்ணுடன் சினேகம் ஏற்படுகிறது. அவளும் பிரியமாக இருக்கிறாள். அக்கா என்று அழைப்பதை விரும்பவில்லை. பெயர் சொல்லி அழைப்பதையே விரும்புகிறாள். அவளுக்கும் வேறு ஒருவனுக்கும் காதல் உண்டாகிறது. அவனின் பிரிவால் அவள் தற்கொலைக்கு முயல்கிறாள். விளைவு, வேறிடத்தில் திருமணம். செல்வராசுக்குத் திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் பிறந்து விடுகிறது. பல்லாண்டுகளுக்குப் பின் அவளை ஒரு கைம்பெண்ணாகக் காண்கிறான். உடனிருக்க அழைக்கிறான். விரும்பி விரல் பற்றி வரும்போது மகளின் ஸ்பரிசத்தையே உணர்கிறான். அவனுக்குள் துளியும் காதலோ காமமோ இல்லை, முடிகிறது. "சங்கமித்திரை" என்னும் இக்கதை ஒரு பெண்ணின் நிலையைக் கூறியுள்ளது. பெண்ணின் உணர்வைப் பிரதிபலித்துள்ளது.
"வேட்கையின் நிறங்கள்" வித்தியாசமான கதை. ஓரினச் சேர்க்கையைப் பற்றியதாயிருந்தாலும் அதற்கான காரணம் என்னவென்றும் உணர்த்துகிறது. அம்மாவை இம்சிக்கும் அப்பா, உறவாட முயலும் அத்தை மகன் என் ஆண்களைக் கண்டாலே வெறுப்பு உண்டாகிறது. மாறாக, பெண்களைப் பிடிக்கிறது. உடன் படித்த பெண்ணையே துணையாக நினைத்து வாழ்வைக் கடத்துகிறாள். அப் பெண்ணுக்கு ஓர் ஆணின் தொடர்பு இருப்பதைக் கண்டு அதிர்கிறாள். ஆண்களைக் காணும் போதெல்லாம் ரத்தம் ஏறிய கண்களும் ஒருவித துர்நாற்றமும் அவளைச் சூழ்ந்து கொள்வது போல அப் பெண்ணைக் கண்டதும் அவளுக்குள் சூழ்கிறது. ஆணுக்குள் எழும்
பெண்ணுணர்வு ஆணையே விரும்பும். பெண்ணுக்குள் எழுந்த உணர்வு பெண்ணையே விரும்புகிறது. சமுகத்தில் இவ்வாறான பெண்களும் உள்ளனர் என துணிந்து காட்டியுள்ளார்.
இலங்கை அரசு அப்பாவித் தமிழர்களை முள்வேலிக்குள் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்தி வருகின்றது. இதை வைத்து எழுதப்பட்ட கதை ''வேலியோர பொம்மை மனம்". போராட ஆண் பிள்ளை வேண்டும் என்று எதிர்பார்த்தபோது வாய் பேச முடியாமல், காது கேளாத நிலையில் ஒரு பெண் பிறக்கிறாள். அவளுக்கு பொம்மைகளே உலகமாக இருந்தது. அப்பா வெறுக்கிறார். ஒரு குண்டு வெடிப்பில் அம்மா உயிரிழக்கிறாள். அனாதை என்னும் நிலையில் முள்வேலிக்குள் அடைக்கப்படுகிறாள். ஒரு இராணுவ வீரனைக் கண்டு பயப்படுகிறாள். சோர்வாக அவன் இருந்ததைக் கண்டு அவளுக்குத் தரப்பட்ட ரொட்டித் துண்டில் ஒன்றைத் தருகிறாள். அவனுக்குள் ஒரு நடுக்கம் ஏற்படுகிறது. வாசிப்பவனுக்குள்ளும் ஒரு நடுக்கம் ஏற்படுகிறது. இலங்கையின் அநியாயச் செயலை வெளிச்சப்படுத்தியிருந்தாலும் இராணுவ வீரனுக்குள் இதயம் இருப்பதைக் காட்டியுள்ளார். அன்பின் முன் துப்பாக்கி அடிமையே என்கிறார். ஆனால் தமிழ் இனத்தையே இலங்கை அழித்து வருவது துக்கத்தையே உண்டாக்குகிறது.
"கிணற்றில் மிதக்கும் நிலவின் சடலம்" என்னும் சிறுகதை மூன்று கதைகளைச் சொல்வதாகத் தொடங்குகிறது. ஆனால் ஒரே கதையே என்று முடிவு உணர்த்துகிறது. ஒவ்வோர் அத்தியாயத்திற்கும் ஓர் எண்ணம் கொடுத்துள்ளார். முதல் கதை பாத்திரம் பேசுவதாக உள்ளது. மற்றவை ஆசிரியர் கூற்றாக உள்ளது. ஒரு பெண்ணைக் காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு பட்டணம் சென்று வேறு பெண்ணைத் திருமணம் செய்து பிள்ளையும் பெற்று சட்டமன்ற உறுப்பினரும் ஆகின்றான். ஏமாற்றப்பட்ட பெண் தற்கொலை செய்து கொள்கிறாள். கெட்டவர்களே வாழ முடிகிறது என்கிறார். நல்லவர்களுக்காக வருந்தியுள்ளார்.
"ப்ரியாக்குட்டி நான்காம் வகுப்பு ஏ’ பிரிவு என்னும் கதை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள, இறப்புக்கு அருகாமையிலுள்ள ஒரு சிறுமியின் கதை. அதுவும் தத்தெடுக்கப்பட்டவள். அவள் வீட்டு மாடியில் குடியிருக்கும் இளைஞனுக்கு அவள் மீது பிரியம் அதிகம். அவள் நிலையறிந்து வருந்துகிறான். கோவிலுக்கே செல்லாதவன் சிறுமிக்காக கோவில் செல்கிறான். பாசத்தின் முன் பகுத்தறிவு வெல்லாது என்கிறார்.
"சேமியா ஐஸ்"க்காக எவ்வளவு அடியையும் பொறுத்துக் கொள்ளும் சிறுவனைப் பற்றி ஒரு கதையில் கூறியுள்ளார். பிற கதைகளின் தாக்கம் இதில் இல்லை. "வால்பாண்டி சரித்திரம்" கதையும் சிறுவர்களை முன்னிலைப்படுத்தியே உள்ளது. சிறு வயது குறும்புகளே காட்டப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கிடையேயான உறவையும் எதார்த்தமாக எழுதி உள்ளார். சிறுவனையே சுற்றி வந்தாலும் "சைக்கிள்" சோகமானது. சைக்கிள் வந்த பின்னே சிறுவனுக்கு நல்லது நடப்பதாக நம்புகின்றனர். அவன் கல்லூரிக்குப் படிக்கச் சென்ற பின் அதுவரை சைக்கிளையே ஓட்டாத தந்தை சந்தைக்கு சைக்கிளில் சென்றவர் விபத்தில் மரணிக்கிறார். தற்போது சைக்கிள் சபிக்கப்படுகிறது.
நல்லது நடந்தால் வந்ததைப் பாராட்டுவதும் கெட்டது நடந்தால் திட்டுவதும் மக்கள் இயல்பு. மக்களின் இயல்பையே கதை கூறுகிறது. "சைக்கிள்" ஒரு பாத்திரமாகவே சித்தரிக்கப்பட்டுள்ளது.
"தனலட்சுமி டாக்கீஸ்" எனும் கதை கற்பனையா நிஜமா என்று தெரியாது. ஆனால் எங்கள் ஊரில் ஒரு "தனலட்சுமி டாக்கீஸ்" இருந்தது உண்மை. கதையின் சம்பவங்கள் எங்கள் அனுபவங்களை நினைவு கூரச் செய்தது. டாக்கீஸை நம்பி வாழ்ந்த கட்டையனின் நிலை பரிதாபமாக உள்ளது. கதையின் முக்கிய செய்தி கேபிள் டிவி வருகையாலே டாக்கீஸ்கள் அழிந்தன என்று குற்றம் சாட்டி உள்ளார். அவ்வாறு மரணத்தை சந்திக்கும் டாக்கீஸ்களுக்கு இக்கதையை சமர்ப்பித்துள்ளார்.
"தாய்மை" போற்றியதற்கான கதையின் போக்கு ஜனரஞ்சகமானதாக உள்ளது. எழுதியது நிலாரசிகனா என்று சந்தேகம் எழுகிறது.
தர்மகர்த்தா முதல் மனைவி இறந்த பிறகு இருபது வயது சிறிய பெண்ணை இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார். இப்பெண்ணுக்கும் மாடு மேய்ப்பவனுக்கும் தொடர்பு ஏற்படுகிறது. அதைப் பார்த்ததால் "பட்டாணி" களவாணி ஆக்கப்பட்டு, காவல்நிலையம் அனுப்ப்படுகிறான். அவனால் தாங்க முடியவில்லை. அதற்காக ஊரைக் கூட்டி அப்பெண்ணை முத்தமிட்டு "அன்னிக்கு கருப்பன் இப்படித்தான் செஞ்சான்" என வெளிச்சப்படுத்துகிறான். வெட்கப்படச் செய்கிறான். ஆதிக்க சாதிகளின் முகத்திரையைக் கிழித்துள்ளார்.
அப்பா இறந்துவிடுகிறார். அம்மா அழுகிறாள். அக்கா திருமணமாகிப் புகுந்த வீடு செல்கிறாள். அம்மா அழுகிறாள். இரண்டாவது அக்காவிற்கும் திருமணமாகிச் செல்கிறாள். அண்ணன் வேலைக்காக வெளிநாடு செல்கிறான். சிறியவனும் படிப்புக்காக வெளியூர் செல்கிறான். ஒவ்வொரு பிரிவின்போதும் அம்மா அழுதாலும் அடுத்ததில் கவனம் செலுத்தி வாழ்கிறாள். இறுதியில் செடியிடம் உறவாடுகிறாள். "ஆலம்" என்னும் இச்சிறுகதை எதார்த்தமாகவும் அதே சமயம் அம்மாவைப் பாசம் உள்ளவளாகவும் காட்டியுள்ளது.
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்றைச் சேகரிக்க வேண்டும் என்னும் ஆவல் இருக்கும். ''தூவல்" நாயகனுக்கு "பேனா" சேகரிப்பதில் ஆசை அதிகம். பேனா சேகரிப்பதை வைத்து அதன் மீதான காதலை வைத்து ஒரு நல்ல கதையைத் தந்துள்ளார். அது தொடர்பான சம்பவங்களை அழகாகப் பின்னியுள்ளார். முடிவு, பேனா முனையால் இதயத்தைக் கீறியது போலிருந்தது. தூக்குத் தண்டனையால் சாவதற்குக் கூட வருந்தவில்லை. தூக்குத் தண்டனைக்கான தீர்ப்பு வழங்கிய பின் பேனா முனை உடைக்கப்பட்டதற்காக வருந்துகிறார். பேனாவை மையப்படுத்தி இருந்தாலும் நல்லவரோடு சேர்வதே நல்லது என்றும் கதை உணர்த்துகிறது.
நண்பர்களிடையே "சம்யுதை" என்னும் பெண் வருகிறாள். ஒருவனைக் காதலிப்பதால் மற்றொருவன் விலகுகிறான். அவளுக்கு வேறிடத்தில் திருமணம் நடக்கிறது. அவன் தற்கொலை செய்து கொள்கிறான். அறிந்த நண்பனின் ஆத்மா அவன் உடம்பில் புகுகிறது. வழக்கமான கதை எனினும் சொல்லிய முறையில் வேறுபட்டுள்ளது.
"அப்பா சொன்ன நரிக்கதை"யில் ஆசிரியர் சொன்ன சிறுகதை அதிரச் செய்கிறது. அம்மாவின் இரண்டாம் கணவனாக, அவளுக்கு அப்பாவாக வந்தவன் "நரிக்கதை" சொல்வதாக அவளையே சீண்டுகிறான். அறிந்த அம்மா திட்டுகிறாள். அப்பா இடத்தில் இருந்தாலும் ஓர் "ஆண்" ஆகவே இருந்துள்ளான் என்கிறார். அப்பா எனும் நரியின் கதையை "தந்திரம்" ஆக கூறியுள்ளார். நரியின் தந்திரத்தை அம்பலப்படுத்தியுள்ளார்.
கதை எழுதுவது ஒரு கலை. விமரிசனம் எழுதுவது ஒரு கலை. கதையை விமர்சனமாக எழுதுவது அரியது, பெரியது. ஒரு கதையை விமர்சனமாகவே எழுதியுள்ளார். "மை லிட்டில் ஏலியன் ப்ரெண்ட் நூல் விமர்சனம்" என தலைப்பையும் விமர்சனப் பார்வையிலேயே வைத்துள்ளார். ஒரு விமர்சனமாகவே கதையைக் கொண்டு சென்று உள்ளார். விலை, ,வெளியீடையும் குறிப்பிட்டு விமர்சன வடிவத்தையே கையாண்டுள்ளார். ஒரு தமிழராயிருந்தும் அழகாக ஓர் ஆங்கிலக் கதையைக் கூறியுள்ளார். வாசிக்கும்போது அமெரிக்கச் சூழலிலேயே இருப்பது போன்ற ஓர் உணர்வு ஏற்படுகிறது.
கவிஞரான நிலா ரசிகன் "யாரோ ஒருத்தியின் டைரிக் குறிப்புகள்" மூலம் ஒரு சிறுகதையாசிரியராக வெற்றி பெற்றுள்ளார். முதல் தொகுப்பிலேயே முத்திரை பதித்துள்ளார். கதையை எழுதுவதை விட அதை எப்படி எழுத வேண்டும், எதை எழுத வேண்டும் என்பதும் முக்கியமானது. நிலா ரசிகன் இரண்டிலும் கவனம் செலுத்தியுள்ளார். ஆனால் ஆசிரியர் கூற்றாகவே கதைகளை எழுதி உள்ளார். கதைகளில் பெண்களை முதன்மையாக மையப்படுத்தியுள்ளார். அவர்களின் நிலையைக் காட்டியுள்ளார். அடுத்ததாக இடம் பெற்றது சிறுவர்கள். சிறுவயது அனுபவங்களை நினைவு கூர்ந்துள்ளார். மீட்டெடுத்துள்ளார். சமகால பிரச்சினைகளையும் கதையாக்கி தன்னுணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.
நல்ல முறையில் தயாரித்துள்ளது திரிசக்தி பதிப்பகம். ஒரு சிறுகதை தொகுப்பில் ஒரு கதை நல்லதாக இருந்தாலே போதும் என்பர். விதிவிலக்காக உள்ளது "யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்". இத்தொகுப்பு நிலா ரசிகனிடம் ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. நிறைவேற்ற வேண்டும்.

வெளியீடு : திரிசக்தி பதிப்பகம்
56/21, முதல் அவென்யூ,
சாஸ்திரி நகர், அடையார்,
சென்னை - 600 020
விலை : ரூ. 70/-

Thursday, June 16, 2011

இரவைக் கொண்டாடும் துயர்மிகு வரிகள்

 இரவைக் கொண்டாடும் துயர்மிகு வரிகள் - கவிஞர். க.அம்சப்ரியா

நவீன கவிதைக்கான அடையாளமென்பது பாடு பொருளையும் சொல்லாட்சியையும் முந்தைய புதுக்கவிதையிலிருந்து நகர்த்தி வேறு தளத்திற்கு சேர்ப்பதாக அடையாளப்படுத்தலாம். எல்லோர்க்கும் பாதிக்கிற பொது அம்சங்களின் அழுத்தம் வேறு வேறு தொனியில் வெளிப்படுத்துவதும்,தனக்கேயான மனமுறிவு உளைச்சல்கள்,பூரிப்பின் உச்சக்கட்டங்கள்,சமநிலையில் தத்தளிக்கிற எண்ணங்கள் என்று நவீன கவிதை இன்றைக்கு பாய்ச்சலாக போய்க் கொண்டிருக்கிறது.

ஆர்வமிகுதியால் அல்லது வாசிப்பூக்க எழுச்சியில் பீறிடும் சொற்கூட்டங்கள் கவிதையின் முகவரியை தாங்கிக் கொண்டு போலிகளாக வரத்துவங்கிவிடுவது துவக்க நிலையின் பலவீனமாகும்.

புதுக்கவிதையின் இப்படிநிலையைக் கடந்து,ஏற்கனவே புதுக்கவிதையின் மூலம் அறிமுகமாயிருந்தபோதும்,உயிர்மை வெளியீடாக நிலாரசிகன் நவீன கவிதையில் இது தன்னுடைய முதல் தொகுப்பென்று வெளிப்பட்டிருக்கிறார்.
வழக்கமான வெளிப்பாடுகளில் திருப்தியின்மையை இவர் உணர்ந்திருக்கக் கூடும். அல்லது சமகாலத்தை பயின்றிருக்க வேண்டும். இதுவே இவரை இவ்வாறான பிரகடனத்திற்கு நகர்த்தியிருக்கிறது.

இவரது இந்த சுய அறிவிப்பிற்கேற்றபடியாகி இக்கவிதைகள் உள்ளதா? பல அரசியல் நுணுக்கங்களை பட்டவர்த்தணமாக்கும்படியான நவீன குரலாக இத்தொகுப்பு வெளிப்பட்டிருக்கிறது.

நவீன கவிதைக்குள் தனிமையின் குரல் புதிதல்ல எனினும் தனிமை இசையைப் போலிருப்பது புதிதுதான். இசையெனில் அது எவ்வகையான இசை? தாலாட்டா? ஒப்பாரியா? மென் ஒலிச்சந்தமா? இந்த இசை எதையெல்லாம் கொண்டு வரும்? தொகுப்பின் முதல் கவிதையிலேயே அதிர்வு வாசகத்தளத்திற்கு நம்மை உள்ளிழுத்துக் கொள்கிறார். இத்தனிமையின் இசை சிறகுகளற்ற பறவைகளை பிரசவிக்கிறது. ஒரு பறவையின் உயிரோட்டமே அதன் சிறகுகள்தான். ஆனால் நாம் சிறகுகளற்ற பறவைகளாகத்தான் உலாவருகிறோம். சிறகுகளற்ற பறவையின் ஒலி நிச்சயமாக மகிழ்ச்சியை கொண்டிருக்கப்போவதில்லை. அது துயர்மிகுந்த இரவின் பாடலையே இசைக்கக் கூடும். "தனிமையில் இசையில்" எனத்தொடங்கும் இக்கவிதையனுபவம்,கவியாழத்தில் மூழ்கிய ஒருவருக்கு எத்தனையோ பொக்கிஷங்களை அள்ளித்தருகின்றது.

நம்பிக்கையைச் சொல்லும் கவிதைகள் உண்டு என்று சொல்கிறபோது ஓர் அச்சம் பரவுகிறது. நவீன கவிதைக்குள் நம்பிக்கையின்மையின் குரல் இயல்பானது என்பதால் இது அசட்டு நம்பிக்கையின் குரலோ என்று
ஐயம் எழுந்துவிடும் என்பதால் இந்தக் கவிதையை நீங்கள் அறியத்தருகிறேன்.

"உலர்ந்த உன் இதழ்களின்
வெடிப்பில் நெடுங்கோடையின்
சாயல் ஒளிர்கிறது.
நீரில் மிதக்கும் கசங்கிய
காகிதத்தில் எழுதப்பட்டிருக்கிறது
உன் சரித்திரம்.
செவிக்குள் ரீங்காரமிட்டுக்கொண்டே
இருக்கின்றன மரணவண்டுகள்.
முற்றும் எழுதப்பட்டுவிட்டது
உன் வாழ்க்கை.
யாருமற்று/எதுவுமற்று விடிகின்ற
அதிகாலைகளிலும்
மழைப்பாடலுடன் துவங்குகிறது
உனது நாட்கள்"

தன் ஒவ்வொரு வினாடி அனுபவங்களையும் தன் கவிதைக்குள் கொண்டு வருகின்ற மாயவித்தை இவருக்கு கைவந்திருக்கிறது. அதனாலேயே எல்லாக் கவிதைகளும் ஏதோ ஒரு வகையில் தனக்குள் வாசகனை உள்வாங்கிக்கொள்கிறது.

இரவுகளைப் பற்றிய அந்திமச்சொற்கள் மயான வெளிக்குள் இழுத்துச்சென்று மூச்சடைக்க வைக்கின்றன. கனவுகளின் பாதையில் நடந்து போயிருக்கிற் மனிதர்கள் விலங்குகளாகி கவிஞனைச் சிதைக்கிற வன் உலக முரண்பாடுகள் கலக்குரல்களாகவும், ஈனஸ்வர அழுகையாகவும் வெளிப்பட்டிருப்பதை நுண்வாசகன் ஒருவன் இந்தத் தொகுப்புக்குள் அறியக்கூடும்.

பகலின் அபத்தங்களையும்,இரவின் சூழ்ச்சிகளையும் கவனித்துக்கொண்டேதான் இருக்கிறது நிலா. மையப்புள்ளியிலிருந்து உள்நுழைகிற ஒரு புதித மனத்துக்காரன் எல்லாவற்றையும் சிரித்துக்கொண்டே சகித்துக்கொள்கிறான். தன் மெய்யுணர்வை யார் மீதும் பிரயோகிக்க நினையாதவனே ஞானியாகிறான். அப்போது உதட்டோரம் வெளிப்படுகின்ற சிரிப்பு நிர்வாணத்தைக் கொண்டலைகிறது. "நீந்துதலின் சுகம்" எனத்துவங்கும் கவிதைக்குள் ஞான தரிசனத்தை உணர முடிகிறது.

யாருமற்ற தெருக்களிலும் ஏதோவொன்று அலைந்து கொண்டிருக்கிறது. சூன்யமென்றோ வெற்றிடமென்றோ ஏதாவது இருக்கிறது? இவரின் கவிதைகளுக்குள் இரவுகள் ஏதோவொன்றோடு இடைவிடாமல் அலைந்து கொண்டிருக்கின்றன. குரலற்ற பறவைகள்,மரணத்தை இனிப்பென்று சுவைக்கிற சுவைஞன்,மணல்வீட்டின் சிறுவர்களிடம் எஞ்சியிருக்கிற மணலில் குழந்தைமையை தரிசிக்கும் அபூர்வம்,இரவைக் கொண்டாடும் பறவைகள் என கவிமனம் பொங்கிக்கொண்டேயிருக்கிறது. பித்துக்கொண்டு அலைகிறது. எனக்குப் பிடித்த இரு கவிதைகளை பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

"நான்கு சுவர்களுக்குள்
சுற்றிச் சுற்றி வரும்
ஏதோ ஒரு பறவை
விட்டுச்சென்ற இறகு
நான்"

வாசிக்கிறவனுக்கு கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை கைகாட்டிவிட்டு ஓரமாய் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க இக்கவிஞரின் இன்னொரு கவிதை

"இந்தக் கவிதை இப்பொழுதுதான்
பிறந்திருக்கிறது.
தாலாட்ட யாருமற்ற பின்னிரவில்
பீறிட்டு எழும் அழுகை
ஏதுமின்றி வெகு இயல்பாய்
மலர்ந்திருக்கிறது.
கால்களை உதைத்துக்கொண்டு
கண்களை உருட்டியபடி
விழிக்கிறது.
துணி விலக்கி பாலினம்
என்னவென்று அறிந்துகொள்ளாத
வரையில் இக்கவிதை
சிரித்துக்கொண்டுதானிருக்கும்"

வெயில் தின்ற மழை நம் எல்லோர்க்குள்ளும் இருக்கிறது. மழை வெயிலை தின்றதா? வெயில் மழையை தின்றதா? என்று சொற்களின் இடைவெளியில் புதைந்து கிடக்கிறது இரகசியங்களை உணர இத்தொகுப்பு உதவும்.

நூலின் பெயர்: வெயில் தின்ற மழை
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்
விலை: ரூ.50
இணையத்தில் வாங்க: http://www.uyirmmai.com/Publications/BookDetails.aspx?bid=339