Monday, March 11, 2013

கவிதைகள் ஆறு

1.பதினெட்டாவது தளத்திலிருந்து குதிப்பவன்

வானில் தன் தலையை உரசியபடி நிற்கும்
இந்த பெரும் கட்டிடத்தில் நேற்று அதிகாலை
நான்கு முப்பதுக்கு அவன் நுழைந்தபோது
ஆழ்ந்த அமைதி நிலவியது.
ஏழாவது தளத்தில் என்பது மட்டுமே
அவன் அறிந்திருந்தான்.
அந்த அதிகாலை குறுஞ்செய்தியில்
வேறெதுவுமில்லை.
ஒவ்வொரு அறையின் முன்பும்
இரண்டு நொடிகள் நின்று, நகர்ந்தான்.
சட்டை நனைத்திருக்கும் வியர்வையில்
மெல்லியதாய் நடுங்கிய உடலை
திடப்படுத்திக்கொண்டான்.
ஏழாவது தளத்தின் எந்தவொரு அறையும்
திறக்கப்படவில்லை.
ஐந்து நாற்பதுக்கு அறை எண்
ஏழுநூற்றி இருபதிலிருந்து வெளிப்பட்டவள்
கறுப்பு நிற உடை அணிந்திருந்தாள்.
ஆறு மணிக்கு சிவப்பு நிறமான
உடை அருகே அமர்ந்திருந்தான்.
ஆறு முப்பதுக்கு பதினெட்டாவது தளத்திற்கு
வந்தவன் இப்பெரு நகரத்தின் மீது
மூன்று முறை உமிழ்ந்துவிட்டு
தடுப்பைத் தாண்டி குதித்தான்.
ஏழாவது தளத்தை கடக்கும் கணத்தில்
அவன் இறந்திருக்கக்கூடும் என்ற
குறுஞ்செய்தியை ஆசுவாசத்துடன்
நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள்.


2.முத்துநகர் எக்ஸ்பிரஸ் - எஸ்.நான்காவது மற்றும் மூன்றாவது பெட்டிகள்
இரவின் நடுவே விரையும் முத்துநகர்
எக்ஸ்பிரஸ்ஸின் எஸ்.நான்காவது பெட்டியில்
தன்னுடைய மடிக்கணினியை திறக்கிறான்
பச்சை நிற சட்டைக்காரன்.
கணித்திரையில் புன்னகைக்கும் அவனது
எதிர்கால மனைவியை தன்
செல்பேசியில் புகைப்படமெடுக்கிறான்.
பின்
ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டு
எஸ் மூன்றாவது பெட்டியின்
கதவருகே நிற்கிறான்.
சட்டைப்பைக்குள்ளிருந்து
செல்பேசியை வெளியே எடுத்து
ஆங்கில முதல் எழுத்தின் வரிசையில்
அவளைத் தேடுகிறான்.
அனுவின் அறையில் ஒலிக்கிறது
செல்பேசி.
அனுவின் கண்ணீரை கொஞ்சமாய்
பருகியபின் பாதி குடித்த சிகரெட்டை
தூர எறிகிறான்.
அது ரயில் கடக்கும் பாலத்தின்
அடியில் விழுகிறது.
நாயொன்று ஓடிச்சென்று முகர்ந்து பார்த்துவிட்டு
நகர்ந்து செல்கிறது.
அப்பர் பெர்த்தில் நிம்மதியாய்
உறங்கத் துவங்குகிறான்.
செல்திரையில் நாற்பது மிஸ்டுகால்களாய்
உருமாறிக்கிடந்தாள் அனு.


3.தீராகனவில் உலவும் விஷக்கன்னி
கைகளில் சர்ப்பக்குட்டியை சுற்றிக்கொண்டு
ஒரு கனவிலிருந்து மறுகனவிற்கு
தாவிக்கொண்டிருந்தாள் தோட்டத்தில்
துயிலும் யுவதி.
நிர்வாணத்தில் மிளிரும் வெயிலை பொருட்படுத்தாமல்
வானம் பார்த்து அருகில் கிடந்தான்
உலகின் முதலாமவன்.
கடக்கும் பட்சிகளுக்கும் விலங்குகளுக்கும்
பெயர்களை சூட்டிக்கொண்டிருந்தவனின்
பார்வை அருகிலிருக்கும் யுவதியின் பக்கம் திரும்பியது.
அவனிலிருந்து உருவாக்கப்பட்டவள்
கண்விழித்து சர்ப்ப வார்த்தைகளை
உதிர்க்கத்துவங்கினாள்.
அவனது கனவுகளில் நுழைந்து
பெருகின சர்ப்பக்குட்டிகள்.
அவளது செவிகளில் நிசப்தத்துடன்
அந்த மூன்று வார்த்தைகளை இட்டான்.
ஓடிச்சென்று இலைகளுக்குள் மறைந்துகொண்டாள்.
நெளிந்து நெளிந்து வெளியேறியவளை
சேர்ந்தான் ஆதி மனிதன்.
யுகங்கள் பல கடந்த ஓர் இரவில்
ஒரு புணர்வில்
ஒரு குழந்தை பிறக்கிறது.
சிறிது நேரம் அழுதுவிட்டு கண்கள் மிளிர‌
"ஸ்ஸ்ஸ்" என்று சப்தமிடுகிறது.
ஜூலி பிறந்தாள்.


4.ஜூலி - ஒன்பது குறிப்புகள் - சர்ப்பம் முதல் காகம் வரை
முதலாவது:
ஜூலிக்கு சர்ப்பம் என்பது
தத்திரமுள்ளது என்று தெரிந்திருக்கவில்லை.
சர்ப்பத்தை அதீதமாய் நேசித்த காரணம்
அவள் மட்டுமே அறிந்தது.
மூன்றாவது:
பதின்பருவத்தில் ஜூலி ஒரு மாபெரும்
தவறை வாஞ்சையுடன் செய்திருக்கிறாள்.
சர்ப்பத்தின் முத்தம் அவ்வளவு
தித்திப்பானது. ஒருமுறை தன் தோழியிடம்
ஜூலி சொன்ன வார்த்தைகள் இவை.
ஐந்தாவது:
கழுத்தின் கீழிருந்து தன்னுடல்
சர்ப்பத்தின் உடலைப்போலிருக்கிறது
என்பதை ஓர் இரவில் உணர்ந்துகொண்டாள்.
கைகளில் அடர்திருக்கும் ரோமக்கற்றைக்குள்
அங்குமிங்கும் பறந்து சலித்தது
தட்டானொன்று.
ஏழாவது:
ஜூலி தானொரு காகத்தின்
மனித உருவம் என்று புலம்பிய காலம்.
மரங்கள் அடர்ந்த அவளது வனத்தில்
ஒரு மறி மரித்துக்கிடந்தது.
ஒன்பதாவது:
தன்னைப் பற்றிய குறிப்புகளை
சுமந்துகொண்டு யாரிடமேனும்
சொல்லிவிட துடித்து அறைக்குள் அங்குமிங்கும்
அலைந்துகொண்டிருக்கிறது
ஜூலி என்னும் காகம்.


5.சயனித்தல் - மன்னித்தல் - மறத்தல்
முன்பொரு காலத்தின் கடும் பனிக்கால இரவில்
நெருங்கி அமர்ந்திருக்கும் சிட்டுக்குருவிகளாய்
இருந்தோம்.
முத்தங்களால் உறவாடிக்கொண்டும்
உமிழ்நீரின் பாக்டீரியாக்களில் சொற்கள்
பரிமாறிக்கொண்டும் சயனித்துக்கிடந்தோம்.
அது முடிந்த கதையாயிற்று.
நீண்ட தொரு பயணித்தில் திறந்துகொண்டன‌
கண்கள்.
ஆதியில் வார்த்தை இருந்தது.
அது மூடிய கண்களை திறந்துவிடும்
வார்த்தையாக இருந்தது.
அது தொடர் கதையாயிற்று.
குதிரையின் கடிவாளத்தை
பற்றியிருந்தது வலக்கை.
பத்துவிரல்களையும்
ஒரு சொட்டு கண்ணீரையும்
ஏந்தியிருந்தது இடக்கை.
பின்பொரு காலத்தில் கவிதையொன்றில்
வேனிற்காலம் குறித்து எழுதப்பட்டது.
அது மறத்தலின் கதையாயிற்று.


6.நட்சத்திராவும் மூன்று எறும்புகளும் அல்லது
பாவத்தின் உதாரணங்கள்


தெரியாமல் செய்து விட்ட தவறொன்றிற்காக‌
அழுதுகொண்டிருந்தாள் நான்காம் வகுப்பு
ஏ பிரிவில் படிக்கும் நட்சத்திரா.
எவ்வளவு சமாதானம் செய்தும்
அழுகை நிறுத்த முடியாமல் திணறினர்
அம்மாவும் அப்பாவும்.
பின் அப்பா சொன்னார்
"உயிர்களை கொல்வது பாவமா இல்லையா
நட்சத்திரா?"
பாவம் தான் என்றாள் சிவந்த விழிகளுடன்.
தன்னருகில் அழைத்தார்.
நடந்து வந்த நட்சத்திரா மூன்று எறும்புகளை
தெரியாமல் மிதித்துக் கொன்றிருந்தாள்.
"உனக்குத் தெரியாமல் மூன்று
உயிர்கள் மரித்துவிட்டன ஆயினும்
இது பாவமில்லை" சொல்லிவிட்டு
உறங்கச்சென்றார் அப்பா.
தன் இருபத்தி இரண்டாவது வயதில்
நட்சத்திரா தெரிந்தே ஒரு தவறு
செய்தாள்.
தெரிந்து செய்த தவறுக்கு
மரித்த மூன்று எறும்புகளை
உதாரணமாக்கிவிட்டு
தவறுடன் சேர்ந்து சிரிக்க‌த்துவங்கினாள்.

-நிலாரசிகன்.