Wednesday, December 31, 2008

நிலா விருதுகள் 2008

ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் நான் அதிகம்
எதிர்பார்ப்பது ஆனந்தவிகடனில் சுஜாதா அவர்களின்
விருதுகளைத்தான். இவ்வருடம் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார்
அந்த காந்த எழுத்தாளர். அவருக்கு அஞ்சலியுடன்
இந்தப்பதிவை சமர்ப்பிக்கிறேன்.

[இது முழுக்க முழுக்க என்னுடைய தனிப்பட்ட Judgement]


விளையாட்டு :


சிறந்த கிரிக்கெட் அணிகள் : தென்னாப்ரிக்கா,இந்தியா

சிறந்த மட்டையாளர் : கெளதம் காம்பீர்

சிறந்த பந்துவீச்சாளர் : ஸ்டெயின்

சிறந்த பீல்டர் : ரிக்கி பாண்டிங்

சிறந்த கேப்டன் : தோனி

சிறந்த வர்ணனையாளர் : ரவி சாஸ்திரி

சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் : சச்சின் டெண்டுல்கர் 103* இங்கிலாந்துக்கு எதிராக, டும்னி 166 ஆஸ்திரேலியாவுக்கு எதிராக.

சிறந்த ஒருநாள் இன்னிங்ஸ் : சச்சின் டெண்டுல்கர் 117 முதல் பைனலில் - எதிரணி ஆஸ்திரேலியா

சிறந்த டி20 இன்னிங்ஸ் : கிறிஸ் கெயில் 67 ரன்கள் - எதிரணி நியுசிலாந்து

சிறந்த மைதான வாசகம்: ""Commit all your crimes when Sachin is batting. They will go unnoticed because even the Lord is watching." சிட்னி மைதானத்தில் டெண்டுல்கர் விளையாடியபோது காணப்பட்டது.

சிறந்த விக்கெட் : ரிக்கி பாண்டிங்ஐ போல்ட் ஆக்கிய இசாந் சர்மாவின் பந்துவீச்சு

சிறந்த புதுமுகம்: அஜந்தா மெண்டீஸ் - இலங்கை.


சிறப்பு விருது : அபிநவ் பிந்ரா,விஸ்வனாதன் ஆனந்த் மற்றும் சீனாவிற்கு(தொடர்ந்து ஒலிம்பிக்கில் ஆதிக்கம் செலுத்திய அமெரிக்காவை 2ஆம்
இடத்திற்கு தள்ளியதற்காக)

சொதப்பல் விருது: ஹர்பஜன் சிங்( ஸ்ரீசாந்தின் கன்னத்தை மைதானத்திலேயே பதம் பார்த்ததால்) மற்றும் BCCIக்கு -தொடர்ந்து
ICLஐ தடை செய்து வருவதற்கு.


இலக்கியம்:

சிறந்த கவிதை தொகுப்பு :கவிஞர்.இளங்கோ கிருஷ்ணனின் "காயசண்டிகை" [காலச்சுவடு வெளியீடு]

சிறந்த சிறுகதை தொகுப்பு: தவளைகள் குதிக்கும் வயிறு - வா.மு.கோமு

சிறந்த கட்டுரை தொடர் : தீதும் நன்றும் - நாஞ்சில் நாடன்,தீராநதியில் ஜெயமோகனின் அங்கத கட்டுரை

சிறந்த சிறுகதைகள் : "சாட்டை" - கண்மணி குணசேகரன்,"இந்த நகரிலும் பறவைகள் இருக்கின்றன" -எஸ்.ராமகிருஷ்ணன்

சிறந்த சிற்றிதழ் : மணல்வீடு

சிறந்த புதிய இதழ் : வார்த்தை

சிறந்த புதுமுக கவிஞர்கள் : சகாராதென்றல்,குட்டிசெல்வன்,அனுஜன்யா,லக்ஷ்மி சகாம்பரி,செல்வராஜ் ஜெகதீசன்,ரிசான் ஷெரீப்,பாஸ்கர்

சிறந்த புதுமுக சிறுகதையாளர்கள்: தமிழ்நதி,உமாஷக்தி,அருட்பெருங்கோ

சிறப்பு விருது : சிங்கையிலிருந்து வெளிவரும் நாம் சிற்றிதழுக்கும், இலங்கை இனப்படுகொலையை கண்டித்து
எழுந்த இலக்கிய உலக எதிர்குரலுக்கும்(உண்ணாவிரதம்,ஊர்வலம்)


வலையுலகம்:

சிறந்த நகைச்சுவை பதிவு: துப்பாக்கி தேவை - செல்வேந்திரன்

சிறந்த அறிவியல் புனைக்கதை : வலைப்பதிவர் வெண்பூ எழுதிய "இரண்டாவது மூளை"

சிறந்த சினிமா பதிவுகள் : முரளிக்கண்ணன்

சிறந்த இணைய இதழ்: உயிரோசை

சிறந்த புதுமுகங்கள் : யாழிசை ஒர் இலக்கிய பயணம் மற்றும் அதிஷாஆன்லைன்

சிறந்த யோசனையாளர் : தமிழ்மணம் கருவிப்பட்டை பிரச்சனைக்கு தீர்வு அளித்த வலைப்பதிவர் "யோசிப்பவர்"

சிறப்பு விருது: சிறில் அலெக்ஸ்(அறிவியல் புனைக்கதைகள் போட்டி நடத்தி பல வலைப்பதிவர்களின் கற்பனைக்குதிரைகளை
தட்டி விட்டதற்காக)

சொதப்பல் விருது: காணாமல் போன தேன்கூடுவிற்கு.

சினிமா:

சிறந்த திரைப்படம் : சுப்பிரமணியபுரம்

சிறந்த பிறமொழி திரைப்படம் : தாரே ஜமீன் பர்(ஹிந்தி)

சிறந்த பாடல்வரிகள் : அனல்மேல் பனித்துளி(வாரணம் ஆயிரம்)

சிறந்த பாடலாசிரியர் : தாமரை (வாரணம் ஆயிரம்,சுப்பிரமணியபுரம் திரைப்படங்களுக்காக)

சிறந்த இசையமைப்பாளர் : Harris ஜெயராஜ்(வா.ஆயிரம்)

சிறந்த ஒளிப்பதிவாளர்: கதிர்

சிறந்த இயக்குனர் : சசிக்குமார்,சசி

சிறந்த நடிகர்: சூர்யா(வாரணம் ஆயிரம்)

சிறந்த நடிகை: பார்வதி(பூ)

சிறந்த வில்லன்: பிரசன்னா - அஞ்சாதே
சிறப்பு விருது: அஞ்சாதே,தசாவதாரம்,சரோஜா மற்றும் பத்துவேடங்களில் அசத்திய கமலுக்கும்.

சொதப்பல் விருது: குசேலன்(தலைவா இனிமே இந்த மாதிரி ரோல்ல எல்லாம் நடிக்காத,எங்களுக்கு தேவை பாட்சாவும்,படையப்பாவும்தான்
தல - ஒரு பாமர ரசிகனின் வேண்டுகோள்!!)


அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். நினைத்தது நடந்தேறவும்,கனவுகளும்,லட்சியங்களும்
நிஜமாகவும் என் உளமார்ந்த வாழ்த்துகள்.

அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.

Tuesday, December 30, 2008

இலக்கிய சிந்தனை

நண்பர்களே யுக‌மாயினி ந‌வ‌ம்பர் 2008 இத‌ழில் வெளியான‌ என்னுடைய‌ "சேமியா ஐஸ்" எனும் சிறுகதைக்கு இலக்கிய சிந்தனை அமைப்பு ந‌வ‌ம்ப‌ர் மாத‌த்தில் ப‌ல்வேறு இத‌ழ்க‌ளில் வெளியான‌ 60 க‌தைக‌ளில் இர‌ண்டாம் இட‌த்தை அளித்திருக்கிற‌து என்ப‌தை ம‌கிழ்வுட‌ன் தெரிவித்துக்கொள்கிறேன்.

Saturday, December 27, 2008

பாதங்களின் மொழி

1.பாதங்களின் மொழி

இதழ் உதிர்க்கும் பழகிய
வார்த்தைகளில் சலிப்புற்ற
பாதங்கள் தமக்கென தனிமொழியை
உருவாக்க ஆரம்பித்தன.
பூக்களை மிதிக்கும் தருணங்களில்
மெளனத்தை மொழியாக கொள்ளவேண்டுமெனவும்
சுவடுகளை மிதித்தால்
மன்னிப்பை மொழியாக்க வேண்டுமெனவும்
தீர்மானித்தன.
வார்த்தைகள் ஏதுமின்றி மொழியொன்று
உருவானது.
ஒவ்வோர் உதடுகளாய் ஊமையாகி
பாதங்களின் மொழி
பூமியெங்கும் பரவ ஆரம்பித்தபோது
ஊனன் எனும் சொல்
பூமியின் அடியாழத்தில்
தொலைந்துபோயிருந்தது.

2.சொல்லப்படாத சொற்கள்

பிரக்ஞையற்று உதிர்ந்துகொண்டிருந்த
அவனது கலைந்தசொற்கள்
அவளை நோக்கி
கைகள்விரித்தவாறு
காற்றில் நீந்த ஆரம்பித்தன.
ஒவ்வொரு சொற்களாய்
அள்ளியெடுத்து
சரமாக்கி கூந்தலில் சூடிக்கொண்டு
சிரித்தாள்.
அவனுக்கும் அவளுக்கும்
இடையே அலைந்துகொண்டிருந்தன
சொல்லப்படாத சொற்கள் சில.

Wednesday, December 24, 2008

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்

இயேசு கிறிஸ்து பிறந்த தினமான டிசம்பர் 25ம் தேதியில் எனக்கு மிகவும் பிடித்த பாடலை
இங்கு பதிவிடுகிறேன். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய் வந்தவன் மின்னினானே
விண்மீங்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ புகழ்மைந்தன் தோன்றினானே
கண்ணீரின் காயத்தை சென்னீரில் ஆற்றவே சிசுபாலன் தோன்றினானே

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே
போர்கொண்ட பூமியில் பூக்காடு காணவே புகழ்மைந்தன் தோன்றினானே
(புகழ்மைந்தன் தோன்றினானே)

கல்வாரி மலையிலே கல்லொன்று பூக்கவும் கருணைமகன் தோன்றினானே
நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும் ஒளியாகத் தோன்றினானே
இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே இறைபாலன் தோன்றினானே
முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே புவிராஜன் தோன்றினானே

(அன்பென்ற மழையிலே)
(அன்பென்ற மழையிலே)

2008ல் மறக்கமுடியாத/மறக்க விரும்பும் நிகழ்வுகள்..

1.ஆனந்தவிகடன்,கல்கி,மற்றும் சிறுபத்திரிகைகளில்
வெளியான என் படைப்புகள்

2.முத்தமிழ் உறுப்பினர் சீதாலட்சுமி அம்மா முதல் தேகிவரை குழும நண்பர்கள்
பலரின் சந்திப்பு - தித்திப்பு.

3. நன்றி மறந்த வி*ரோ.

4. சில வருடங்களாக பார்க்க நினைத்து முடியாமல் இவ்வருடம்
பார்த்து ரசித்த இரு திரைப்படங்கள் 1.City of God 2.Rabbit Proof Fence

5. சேலம் மாவட்ட இலக்கிய நண்பர்களின் சந்திப்பு

6. வெகு நாட்களாக வாசிக்க நினைத்து இவ்வருடம் வாசித்த வண்ணநிலவனின்
"கடல்புரத்தில்" நாவல்.

7. நண்பன் விழியன் திருமண நிகழ்ச்சி மற்றும் பெங்களூரு சந்திப்பில் நடந்த கலந்துரையாடல்

8. ஏற்காடு சுற்றுலா

9. நண்பன் வினோத் செய்த மறக்க/மறுக்க முடியாத உதவி.

10. மறக்க விரும்பாத ஒரு கனவு. மறக்க விரும்பும் சில நினைவுகள்.

11. ஊக்கமூட்டும் ஒரு புதிய நட்பும்,நம்பிக்கை துரோகம் செய்த ஒரு நட்பும்.

12.இவ்வருடம் வெளியான என்னுடைய இரண்டு கவிதை புத்தகங்கள் (மயிலிறகாய் ஒரு காதல்,ஒரு பட்டாம்பூச்சியின் கனவுகள்)

Monday, December 22, 2008

வனம்

வனத்தில் வழிதப்பிய சிறுவனாக திக்கற்று திகைத்து நிற்கிறது என் மனசு. திசைகள் மறந்துவிட்ட கால்கள்
எங்கு செல்வதென்று புரியாமல் தவிக்கின்றன. முட்கள் நிறைந்த பாதையில் பூவொன்று என்னை வழிமறித்து
என்னை எடுத்துக்கொள் என்றது. இரண்டு கரங்களிலும் அப்பூவை ஏந்தி பாதங்களில் உதிரம் சிந்த வெகுதூரம்
கடந்து வந்தேன். முட்பாதை மறையும் தருணம் என் கரத்திலிருந்து துள்ளி வெளிக்குதித்து மறைந்தோடியது
அந்த வெண்மலர். ஏந்திய கரமிரண்டிலும் கொஞ்சம் கண்ணீர்த்துளிகள் மட்டும் பிசுபிசுத்தது.
புரிந்துகொள்ளாத பூவை எண்ணி எண்ணி கண்ணீர்த்துளிக்குள் விழுந்து விம்முகிறது கனமாகிப்போன இதயம்.

இலைகளை உதிர்த்து நிற்கிறது ஒரு தனிமரம். நிழல்தேடி வந்த பாதங்கள் ஏமாந்து திரும்புகின்றன.
இரவின் கூரிய பற்களில் வடிகிறது என் தனிமையின் ரத்தம். கறுப்பு வெள்ளை பட்டாம்பூச்சியொன்றின் உதிர்ந்த
சிறகுகள் காற்றில் மிதக்கும் பின்னிரவில் எங்கோ ஒருத்தியின் சன்னமான அழுகுரலை காற்று இழுத்துச்செல்கிறது.

அவளும் அவனும் பரிமாறிக்கொண்ட நேசம் உருப்பெற்று ஓலமிட்டு வீதியில் அலைகிறது. நினைத்துப்பார்க்காத
கடவுள் கனவில் தோன்றும் அதிகாலையில் சிலிர்த்து அடங்குகிறது உடல். கண்விழித்தால் சன்னலோரத்தில் மெதுவாய்
கேட்கிறது மழையின் ஓசை. எதிலும் லயிக்காத மனம் கட்டுகளை உடைத்து வேகமாய் ஓடத்துவங்குகிறது. கூகையின்
பார்வையில் பயந்து வீடு திரும்புகிறது மனம். எனக்குள் உருவாகிறது வெப்பநீருற்று. என்னை முழுவதுமாய் இழந்து
உடலிலிருந்து பிய்த்தெடுத்து வெளிக்குதிக்கிறேன். என்னுடலை நோக்கி ஒளிர்கிறதென் கண்கள்.
ஜீவனற்ற உடல் மண்ணில் வீழ்வதை வேடிக்கை பார்க்கிறேன். உடலற்ற உயிருடன் கைவீசி நடக்கிறேன் மனம்போன
போக்கில். காவிகள் வியப்புடன் என்னை பார்க்கின்றன. தாடிக்குள் புதைந்த முகத்துடன் உற்று நோக்குகின்றன சில கண்கள்.
வேகமாய் ஓடுகின்ற நதிக்குள் மெல்ல இறங்குகிறது என் உயிர். கடும்குளிர் நீரில் அமிழ்கிறது உயிரின் கடைசி மூச்சு.

யாருமற்ற இருண்ட வனத்தில் வழிதப்பிய சிறுவனாக திக்கற்று திகைத்து நின்றுகொண்டிருக்கிறேன் உருவமற்று.

Monday, December 15, 2008

அலைபேசி தொலைந்த தினம்..

அலைபேசிக்குள் புதைந்துகிடந்தன
தொடர்புகொள்ளப்படாத
எண்கள் பல.

விரைந்தோடும் காலநதியில்
எப்பொழுதாவது பளிச்சிட்டன
மறக்கப்பட்ட எண்கள்.

ஏதோவொரு நபருக்கான
தேடலில் ஆழ்ந்திருக்கையில்
கண்முன் தோன்றி மறைந்தன
முகம்மறந்த எண்கள்.


காலச்சுழற்சியில் தொலைந்த
நண்பர்களின் நினைவுகளை
ஊமையாய் உள்ளிருந்து
நினைவூட்டிக்கொண்டே இருந்தன
அழிக்கப்படாத எண்கள்..


எதிர்பாரா கணத்தில்
தொலைந்துவிட்ட அலைபேசிக்குள்
மரித்துப்போயின அழைக்கப்படாத
எண்களும் அர்த்தமிழந்த நட்புகளும்.

(வடக்குவாசல் டிசம்பர் 2008 இதழில் வெளியாகிய கவிதை)

Friday, December 05, 2008

உருவமற்ற நிழல்பொழுது

1.
நான் தனித்திருக்கும் உலகில்
என்னுடன் பயணிக்கிறது
நிழலொன்று.
எங்கிருந்து வந்ததென்றும்
யாருடையதென்றும் புரியவில்லை.
நடந்தும் ஓடியும் அதனிடமிருந்து
தப்பித்துவிட இயலாமல்
தளர்ந்து அமர்கிறேன்.
மெதுவாய் என் நிழலிடம்
பேச ஆரம்பித்தது
அந்த அந்நிய நிழல்.
புரிந்து கொள்ள முடியாத
மொழியில் இரு நிழல்களும்
பேசுவதை ஊமையாய்
பார்த்துக்கொண்டிருக்கிறேன்
நான்.

2. மனம்

மேகங்கள் அலையும் மலைச்சரிவு
பச்சைநிறத்தை உடுத்திக்கொண்டு
உறங்குகிறது.
மரங்களின் நடுவில் நுழைந்து
பாறையில் விழுந்து
உடைகிறது மழைத்துளி.
சாம்பல் நிற அரவம்
அசைவற்று கிடக்கிறது
பெருத்த வேர்களைக்கொண்ட
மரத்தடியில்.
ஏதோ சில பறவைகளின்
சிறகடிப்புச் சத்தம் காற்றில்
கரைந்து வழிகிறது.
மலைப்பாதை வழியே
வளைந்து நெளிந்து ஊர்ந்துகொண்டிருக்கிறது
பேருந்தும் மனதும்.
-நிலாரசிகன்.

நன்றி : திண்ணை.காம்

Monday, December 01, 2008

கவிதைகள் இரண்டு

1.கண்ணாடியில் ஓர் அந்நியன்

இரவிலும் பகலிலும்
பிம்பங்களை உள்வாங்கி
சலித்த கண்ணாடி
ஒவ்வொரு முறையும்
வெவ்வேறு பிம்பத்தை
காண்பிக்க துவங்குகிறது.
சுயம் தொலைந்த நிஜம்
தெரியாமல் நீங்கள்
யாரோ ஒருவனை
தினம் சந்திக்கிறீர்கள்.
உங்களுக்கான நிறம்கரைந்து
உருகி மறையும் அந்தியில்
பிம்பங்களற்ற உருவத்தில்
உலாவுகின்றன
உங்களது வெற்றுடல்கள்.

2.இரவுக்குள் ஒளிந்திருக்கும் பகல்

மெல்ல மெல்ல ஆட்கொள்கிறது
பகலின் கீற்றுகள்.
முழுவதும் பகலான
மதியவேளையில்
உக்கிரதாண்டவமாடுகிறது
சில ஞாபகங்கள்.
பிரிவின் தகிப்பில் உதிர்ந்த
இலைகளை மிதித்தழித்து
உச்சமடைந்த ஞாபகங்கள்
ஒவ்வொன்றாய்
வீழ்ந்து மரித்தன.
தாங்கமுடியாத வலியுடன்
ஓடிச்சென்று இரவுக்குள்
நுழைந்து வழிகின்ற
கண்ணீரை துடைக்கிறது
பகலின் கரம்.

நன்றி: உயிரோசை