Wednesday, October 29, 2008

கல்கி இதழில் என் கவிதை

நண்பர்களுக்கு வணக்கம்.

இவ்வார கல்கி இதழில் வெளியான என்னுடைய மூன்று கவிதைகளை இத்துடன் இணைத்திருக்கிறேன்.

கல்கியில் வெளியான கவிதைகள்

(மேலுள்ள சுட்டியின் மூலம் கவிதையை படிக்க இயலாதவர்களுக்காக,கல்கியில் வெளியான கவிதைகளை இங்கே பிரசுரிக்கிறேன்)

குழந்தைகளின் உலகம்

1. கூரையிலிருந்து வழிந்து
கொண்டிருக்கும் மழைத்துளிகளை
சேகரித்து தங்கமீன்கள் இரண்டு
நீந்திக்கொண்டிருந்த கண்ணாடி
தொட்டிக்குள் விட்டுக்கொண்டிருந்தாள்
அச்சிறுமி.
மழை நிற்கும் வரை
இதைச்செய்தவள் மழை நின்றபின்
கைகள் இரண்டையும் தேய்த்து
கன்னத்தில் வைத்துக்கொண்டு கேட்டாள்
"ஸ்ஸ்ஸ் ரொம்ப குளிருதில்ல?"
வாலாட்டியபடி ஆமோதித்தன
மீன்கள்.

2. அப்பாவிடமும் அம்மாவிடமும்
பள்ளியில் பெற்ற "வெரிகுட்"ஐ
பலமுறை சொல்லி
ஏதோவொன்று குறைந்தவளாய்
தன் பொம்மைகளிடம்
சொல்ல ஆரம்பித்தாள் அச்சிறுமி.
தலையாட்டிக்கொண்டிருந்தன பொம்மைகள்
அப்பாவாய்,அம்மாவாய்.

3. மழையில் நனைந்து
விளையாடிக்கொண்டிருந்தார்கள் அந்த
சிறுவனும் அவனது நாயும்.
அப்பாவிடம் அடியும்
அம்மாவிடம் திட்டும் வாங்கிக்கொண்டு
தலைதுவட்டினான் சிறுவன்
அம்மா கொடுத்த துவாலையால்.
"கவலப்படாத அப்பா உன்னை
அடிக்க மாட்டார்" என்றான்
தன் நாயிடம்.
உடம்பை சிலிர்த்துக்கொண்டு
அவனையே பார்த்தது அச்சிறுநாய்.

**********************************************************************************

எப்போதும்
எனக்கு ஊக்கமளிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

Tuesday, October 21, 2008

ருசித்துக் கொண்டிருந்த இரவு

ஆழ்ந்த உறக்கத்திலிருந்த
நிசியில் விசித்திரமானதொரு
அரவம்கேட்டு விழித்தெழுந்தேன்.
அறை முழுவதும் நடமாடிக்கொண்டிருந்தன
புத்தகங்களைவிட்டு வெளியேறிய
சொற்கள்.
ஏதேதோ கோஷமிட்ட
அவைகளின் மொழி புரிந்துகொள்வதாயில்லை.
திடீரென்று அவைகளுக்குள்
பெரும் யுத்தமொன்று உருவாயிற்று.
செத்து வீழ்ந்தன சில.
தோற்று ஓடின சில.
வென்று திரும்பிய சொற்கள் ஓடிச்சென்று
மீண்டும்
புத்தகத்தினுள் நுழைந்துகொண்டன.
வீழ்ந்த சொற்களின் குருதியை
யாருமறியாமல்
ருசித்துக்கொண்டிருந்தது இரவு.

கனத்த மெளனம்

கனத்த மெளனம்
தேகமெங்கும் முட்களாய்
பரவி வெறுமை சூழ்ந்து
காற்றில்லா வெளியொன்று
உருவாகி வெளிச்சமற்ற புலத்தில்
எனை வீசிய பிரிவுப்பொழுதில்...
எவ்வித அதிர்வுகளுமின்றி
பிடித்தபாடலொன்றை முணுமுணுத்தபடி
போய்க்கொண்டிருக்கிறாய்
நீ

-நிலாரசிகன்

நன்றி: உயிரோசை இணைய இதழ்

Wednesday, October 15, 2008

இரு கவிதைகள்

1.

கனத்த மெளனம்
தேகமெங்கும் முட்களாய்
பரவி வெறுமை சூழ்ந்து
காற்றில்லாவெளியொன்று
உருவாகி வெளிச்சமற்ற புலத்தில்
எனை வீசிய பிரிவுப்பொழுதில்...
எவ்வித அதிர்வுகளுமின்றி
பிடித்தபாடலொன்றை முணுமுணுத்தபடி
போய்க்கொண்டிருக்கிறாய்
நீ.

2.

உனக்கான கடைசி
கடிதத்தை நான்
எழுதிக்கொண்டிருக்கையில்
புரிந்துகொள்ளப்படாத எனதன்பில்
விழுந்திருந்த கீறல்
உடைந்திருக்ககூடும்.

அறியப்படாத பூவொன்றின்
வாசனையில் லயித்திருக்கும்
உனக்கென் பிணத்தின்
வாடை திடுக்கிடச்செய்யலாம்
அல்லது
கைதட்டவும் தோன்றலாம்.

எவ்வளவு முயன்றும்
நினைவில் மலராத
கனவென மரணிக்கின்றன
என் ப்ரியங்கள்.

Friday, October 10, 2008

நீங்குதல்

வெகு இயல்பாய் நிகழ்கிறது
நம்மிடையேயான
ப்ரியங்களின் நீங்குதல்.

பிரிவுகுறித்த பிரக்ஞையற்று
உறைந்திருக்கும் உயிரின் மீது
தன் கூரியபற்களை பதிக்கிறது
தனிமை.

எதிர்ப்புகளின்றி
வெட்டுண்ட மரமென
வீழ்கின்ற
உயிரில் படிய ஆரம்பிக்கிறது
நீங்குதலின் ரத்தக்கறை.

Tuesday, October 07, 2008

விகடனில் என் கதை

நண்பர்களுக்கு,

விகடனின் "யூத்புல் விகடன்" பகுதியில் என்னுடைய "ஏலியன்" விஞ்ஞான புனைக்கதை பிரசுரமாகியுள்ளது.

தொடர்புக்கு: http://youthful.vikatan.com/youth/story3.asp

கிட்டத்தட்ட ஒருமாதத்திற்கு முன்னரே பிரசுரமாகியிருக்கலாம் என்றெண்ணுகிறேன். இன்றுதான் இதனை கவனித்தேன்.

கதை படித்துவிட்டு பின்னூட்டமிடுங்கள்.

Monday, October 06, 2008

பொழுதுகள்...

1. இரு அறைகளை
மட்டுமே தனக்குள்
நிறைத்திருந்த அச்சிறு
வீட்டின் ஓர் அறையின்
மூலையில் ஒடுங்கியிருந்தேன்.
அடுத்த அறையிலிருந்து
துவங்கிய
நீர்சொட்டும் ஒலி
பின்னிரவைக் கடந்து
வைகறையிலும் கேட்டது.
அதிகாலையில் அடங்கியிருந்தது
எனக்குள் மட்டுமே
ஒலித்த ஓலம்.


2. எதிர்படும் நபர்களிடம்
பூ விற்க முயன்றுகொண்டிருந்தாள்
சிறுமி ஒருத்தி.
சூரியக்கதிர்கள் மங்கிப்போன
கருக்கலில் வாடியவளாய்
கடற்கரை மணலில் கால்நீட்டி
அமர்ந்து கடல் பார்த்தாள்.
முதல் முறையாக தன்னை
பார்க்கும் அச்சிறுமிக்கென
ஓர் அலையை அனுப்பியது
நீலக்கடல்.

3. நாய்களின் குரைப்புச்சத்தம்
இரவின் மெளனத்தை
குலைத்துக்கொண்டிருந்த தருணத்தில்
உடலை மறைக்கவியலா
உடைகளணிந்த கன்னியொருத்தி
குப்பைத்தொட்டில் எதையோ
தேடிக்கொண்டிருந்தாள்.
இருளை சுமந்துகொண்டு
அவளை நெருங்கின
இரு நாய்கள்.

4. தனித்துவிடப்பட்ட இரவில்
நெருப்பை உமிழ்ந்து
கொண்டிருந்தது தனிமையின்
நாவுகள்.
நடுச்சாமத்தில் தட்டப்பட்டது
அறைக்கதவு.
விடியத்தொடங்கிய அதிகாலை,
தனிமையின் மீது
உமிழ்ந்துவிட்டு புரண்டு படுத்தேன்.

அக்டோபர் 2008 "வார்த்தை" இலக்கிய இதழில் வெளியான கவிதைகள்