Sunday, November 28, 2010

யன்னல் கசியும் சிறுவெளிச்சம்



சில கடிதங்களின் முதல் வரியை எழுதுவதற்குள் காலம் நம்மை முழுமையாய் தின்றுவிடும். இந்தக் கடிதத்தின் முதல் வரியை பின்னிரவின் தனிமைக்குள்ளிருந்து கண்டெடுத்துவிட முயல்கிறேன். இது ஒரு வன்மத்தின் கறை துடைக்க முயன்றிடும் கடிதம் எனலாம். தண்டிக்கப்படுதல் தெரியாமல் புன்னகைக்கும் உதடுகளின் மீதொரு போர்தொடுத்தல் எனலாம்.  தீராவன்மையின் காரணத்தால் என் மீது தொடுக்கப்பட்ட மெளனப் போர் மெளனம் கலைந்து வெளியேறிய தினத்தில் தீக்குளத்தில் கருகிய மீனாய் கரையில் கிடந்தேன். துயரத்தாலும் கோபத்தாலும் ஒரு சதுரத்திற்குள் நடந்துகொண்டேயிருந்தேன். அமில மழை நின்றுவிட்டபின் வடிந்த நீர்த்துளிகளாய் அனைத்தும் மறைந்திருந்தது விடியலில். அன்று நானொரு துறவியின் நிலையிலிருந்தேன்.முழுவதுமாய் நிரம்பியிருந்தது மனக்கோப்பை. உன்னதமானதொரு நட்பை தவமிருந்து தவணை முறையில் காயப்படுத்த உன்னால் மட்டுமே சாத்தியப்பட்டிருக்கிறது. சூன்யத்தின் பிடியில் நீ தவித்திருந்த காலத்தில் யன்னல் கசியும் சிறு வெளிச்சமாய் என் வார்த்தைகள் உன்னோடிருந்தன.

அப்போது உன் வானம் கருமையின் நிறத்தை கொண்டிருந்தது. தூரம் பற்றிய பிரக்ஞையின்றி ஒட எத்தனித்து ஊனம் உணர்ந்து திகைத்து நின்றாய். மெதுவாய் உன்னை அழைத்துச்செல்லும் நடைவண்டியாய் மாறியிருந்தது என் சுயம். கையில் எப்போதும் கொடுவாளுடன் வலம் வந்த காலநீலி நம்மை பிரித்துச்சென்றாள். நம்மிடையே வீழ்தல் என்றும் இருந்ததில்லை. வீழும் நிலையின் போதெல்லாம் நாம் நிழலாய் மாறியிருக்கிறோம். நிழலுக்குள்ளிருந்து உருவம் பெற்று வீழ்தலை தடுத்திருக்கிறோம். வருடங்கள் கரைந்துவிட்ட பின்னும் நம்மிடையே ஒன்று மட்டும் நிலைத்திருந்தது நேற்றுவரை.

இன்றென்பது இல்லாதிருந்தால் நானொரு ஞானமரத்தில் இளைப்பாறியிருக்க மாட்டேன். இன்றென்பது உறைந்து போயிருந்தால் என் முன் ஒரு ரகசியம் உடைபடாமல் போயிருக்கும்.இன்றென்பது நேற்றைப்போல் இல்லை. இன்றென்பது நாளைக்குள் நுழைய மறுத்தது. இன்றென்பது இதயத்தின் நான்கு சுவர்களையும் நெருப்பால் நிரம்பி சிரித்தது. இன்றென்பது துரோகத்தின் உச்சத்தை நினைவூட்டியது. இன்றென்பது ஒரு ஒநாயின் குருதி கசியும் பற்களை காண்பித்தது. இன்றென்பது தவிர்த்தலின் பொருளை ஒவ்வோர் இறகாய் பிய்த்து எறிந்து உணர்த்தியது. இன்றென்பது இல்லாத நானொரு குழந்தையின் குதூகலத்தை சுமந்திருந்தேன்.இன்றென்பது இருளின் கொடுங்கனவில் என்னை ஆழ்த்தி மகிழ்ந்தது. இன்றென்பது நீ அல்ல. இன்றென்பது உன் நண்பனின் சுய ரூபத்தையும் ஒரு பிம்பமாக்கி என்னில் விட்டுச்சென்றது. இன்றென்பது நீ என்பது ஒன்றல்ல இரண்டு என்றுணர்த்தியது. இன்றென்பது.....

தவிர்த்தலின் காரணம் அறியாத ஓர் ஆத்மா உன் காயத்தில் பங்கேற்க வந்தபோது நீயொரு வேட்டைநாயாக நின்றிருந்திருக்கிறாய். வேட்டையாடப்படுதலை விட எதற்காக இவ்வேட்டை என்கிற புரிதலற்ற இந்த உயிர்  உதிர்ந்த மலருக்கு சமம். துரோகிக்கும் பூச்செண்டு கொண்டு செல்லும் நீ எனக்கொரு சிறு வாழ்த்தும் தர விரும்பவில்லை. ரணத்தில் வந்தமர்கிறது ஓர் இறகு. யாருமற்ற வனத்தில் நானொரு புள்ளியாய் மறைந்துகொண்டிருக்கிறேன்.

வா! உயிர் புசிக்கும் உன் பேருன்னதமான நண்பனின் சடங்கில் கலந்துகொள். மூன்றுமுறை பிடிமண்ணை வீசி எறிந்துவிட்டு ரயிலேறிச்செல். பாலையொன்றில் நடனமிடும் பெண்ணொருத்தியின் அழகை யன்னல் வழியே ரசித்துக்கொண்டே நீ செல்லும் வழியெங்கும் சிவப்பு நிறத்தில் மாறியிருக்கும் விசும்பின் ஓரத்தில் விசும்பிக்கொண்டிருப்பேன் நிலவாக.

-நிலாரசிகன்.

Tuesday, November 23, 2010

நூல் விமர்சனம்

வலைப்பதிவர் ராமலஷ்மி அவர்கள் என் சிறுகதை நூலிற்கு மதிப்புரை எழுதியிருக்கிறார்

இங்கே வாசிக்கலாம் : http://tamilamudam.blogspot.com/2010/11/blog-post_23.html

பிற விமர்சனங்கள்: 


1. விஜய் மகேந்திரன்    http://vijaymahendran.blogspot.com/2010/06/blog-post_14.html
2. அஷிதா   http://tamilkirukals.blogspot.com/2010/05/blog-post.html
3.  அடலேறு  http://adaleru.wordpress.com/2010/01/05/book-review-yaaroo-oruthiin-diary-kuripugal/
4.  கடிதம்  http://www.nilaraseeganonline.com/2010/03/blog-post_12.html
5.  கிருஷ்ண பிரபு :http://online-tamil-books.blogspot.com/2009/12/blog-post_29.html
6. கிரகம்: http://www.nilaraseeganonline.com/2010/03/blog-post_30.html

7.நாளைபோவான்: http://iraichchal.blogspot.com/2010/12/blog-post.html



இணையத்தில் நூலை பெற:

http://ezeebookshop.com/eshop/product_info.php?products_id=79


நன்றி,
நிலாரசிகன்.
 

Saturday, November 20, 2010

எஸ்தர்

தமிழில் எத்தனையோ சிறுகதைகள் எழுதப்பட்டுள்ளன. எழுதப்படுகின்றன. ஒவ்வொரு கதையும் ஏதோ ஒரு வகையில் நம்முடன் உரையாடுகின்றன.
கடந்த வார விகடனில் வெளியான "அப்பு" கதையின் பாதிப்பிலிருந்து இன்னும் மீளவில்லை நான்.
அதேபோல் சில வருடங்களாகவே தேடிக்கொண்டிருந்த கதை வண்ணநிலவனின் "எஸ்தர்". சில நாட்களுக்கு முன்
கிருஷ்ண பிரபு அந்தக்கதையை அனுப்பியிருந்தார். அதீத வேலைப்பளுவின் காரணமாக வாசிக்க நேரம் கிடைக்கவில்லை.
இப்பொழுதுதான் வாசித்தேன். அழியாச்சுடரிலும் இக்கதை இருக்கிறது.

இங்கே வாசிக்கலாம்.

ஒரு மிகச்சிறந்த சிறுகதை எழுதுவது(படைப்பது) எப்படி என்பதற்கு இக்கதை மிகச்சிறந்த உதாரணம்.

அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.

Tuesday, November 16, 2010

நான் என்பது..



1.

காற்றின் உட்புறமிருந்து
இசைக்கும் கனவின் பாடலொன்று
அகாலத்தின் நீள அகலத்தை அளந்தபடி
நகர்ந்துகொண்டிருந்த கணத்தில்
கிளை முறிந்த வலியில்
துடித்தழுகிறது கொன்றைமரம்.
திடுக்கிடல் ஏதுமின்றி விழுகின்ற
கிளையை ஏந்திக்கொண்டு கிளர்ந்தது
தெரு.
அந்தரத்தில் மிதக்கின்ற வீட்டின்
கதவுகளைத் திறந்துகொண்டு
உலர்ந்த பூக்களுடன் வெளி வருகிறாள்
சிறுமியொருத்தி.
முணுமுணுக்கும் அவளது உதடுகள்
கனவின் பாடலொன்றை
உதிர்த்துக்கொண்டிருக்கிறது.

2.
இலைகளில் துளசியும்
வேர்களில் விஷமும்
கொண்டிருக்கும்
விசித்திரம்
நீ.

3.

நான் என்பது
ஒரு துளி கடல்
ஒரு கல்லோவியம்
ஒரு வண்ணத்துப்பூச்சி
ஒரு வனம்
ஒரு யுகம்
ஒரு பறவை
ஒரு துயர இரவு
அல்லது
ஒரு மழைநாளின் தேநீர்.
அல்லது
ஒரு உடைந்த கனவு
அல்லது
முரண்களால் ஆன
உயிர்க்கவிதை என்க!

-நிலாரசிகன்.

Sunday, November 14, 2010

குழந்தைக் கவிதைகள்

அ)
அப்பாவும் அம்மாவும்
தராத அரவணைப்பை
பொம்மைக்கு தந்தபடி
உறங்கிக்கொண்டிருந்தது குழந்தை.
கனவில் தோன்றிய கடவுள்கள்
அச்சிறு குழந்தையின் அரவணைப்பை
வரமாய் கேட்டனர்.
வரிசையில் நின்றிருந்த
கடவுள்களுக்கு உறக்கப்புன்னகையை
தந்துவிட்டு பொம்மையை
இறுக்கி அணைத்துக்கொண்டதது.
பொம்மையாதலின் வழிமுறைகள்
அறியாமல் விழித்தபடிநின்றனர்
கடவுள்கள்.

ஆ)
கதை சொல்ல நச்சரித்தது
குழந்தை.
பேய்க்கதை சொல்லத்துவங்கினேன்.
அனைவரும் உறங்கிவிட்ட
ஓர் இரவில் பேய்கள் என்னைமட்டும்
துரத்தி ஓடிவந்தன என்று
தொடங்கினேன்.
பேய்க்குத்தான் கால்கள் இல்லையே
பின்னெப்படி ஓடிவரும் என்றது
குழந்தை.
உறங்கிவிட்ட பாவனையில்
கண்மூடிக்கிடந்தேன் நான்.

இ)

கூரையிலிருந்து வழிந்து
கொண்டிருக்கும் மழைத்துளிகளை
சேகரித்து தங்கமீன்கள் இரண்டு
நீந்திக்கொண்டிருந்த கண்ணாடி
தொட்டிக்குள் விட்டுக்கொண்டிருந்தாள்
அச்சிறுமி.
மழை நிற்கும் வரை
இதைச்செய்தவள் மழை நின்றபின்
கைகள் இரண்டையும் தேய்த்து
கன்னத்தில் வைத்துக்கொண்டு கேட்டாள்
"ஸ்ஸ்ஸ் ரொம்ப குளிருதில்ல?"
வாலாட்டியபடி ஆமோதித்தன
மீன்கள்.

ஈ)
அப்பாவிடமும் அம்மாவிடமும்
பள்ளியில் பெற்ற "வெரிகுட்"ஐ
பலமுறை சொல்லி
ஏதோவொன்று குறைந்தவளாய்
தன் பொம்மைகளிடம்
சொல்ல ஆரம்பித்தாள் அச்சிறுமி.
தலையாட்டிக்கொண்டிருந்தன பொம்மைகள்
அப்பாவாய்,அம்மாவாய்.

உ)
மழையில் நனைந்து
விளையாடிக்கொண்டிருந்தார்கள் அந்த
சிறுவனும் அவனது நாயும்.
அப்பாவிடம் அடியும்
அம்மாவிடம் திட்டும் வாங்கிக்கொண்டு
தலைதுவட்டினான் சிறுவன்
அம்மா கொடுத்த துவாலையால்.
"கவலப்படாத அப்பா உன்னை
அடிக்க மாட்டார்" என்றான்
தன் நாயிடம்.
உடம்பை சிலிர்த்துக்கொண்டு
அவனையே பார்த்தது அச்சிறுநாய்.

ஊ)
இந்தப்பசுவிற்கு நான் தான்
அம்மா என்றது.
இந்தப்பசு எப்போதும்
பால்தருமென்றது.
பசுவின் கன்றுக்கு
தன் மொழி புரியுமென்றது.
பசுவைக் கட்டிக்கொண்டே
உறங்குவேன் என்றது
கோணலாய் இருப்பினும்
குழந்தையின் உலகிலிருக்கும்
ஓவியப்பசு அழகாய்த்தானிருக்கிறது.

எ)
இரண்டு முறை பிரகாரம்
சுத்திவந்துவிட்டு கால்வலிக்கிறதென்று
அரச மரத்தில் சாய்ந்து
கால்நீட்டி அமர்ந்துகொண்டது
குழந்தை
கோவிலைச் சுற்ற அழைத்த அம்மாவின்
அழைப்பை நிராகரித்தபடி.
என்னசெய்வதென்று புரியாமல்
கெஞ்சிக்கொண்டிருந்தாள்
அம்மா.
குழந்தையிடம் கெஞ்சுகின்ற
சுகத்தை கடவுளிடம் கெஞ்சுவதில்
பெறமுடியாதுதான்.

ஏ)

வீடு கட்ட குவித்திருக்கும்
ஆற்றுமணலில் விளையாடிக்கொண்டிருந்தார்கள்
சிறுமியும் அவளது பொம்மையும்.
பொம்மையுடன் பேசுவதற்கென்றே
தனிமொழியை உருவாக்கியிருந்தாள்
சிறுமி.
வெகுநேர விளையாட்டிற்குபின்
குடிசைக்குள் சென்ற சிறுமியின்
வலக்கையில் தலையும்
இடக்கையில் உடம்புமாய்
துண்டுகளாகியிருந்தது பொம்மை.
அப்போதும் அதனுடன் பேசிக்கொண்டிருக்கிறாள்
அவள்.

ஐ)

எப்போதும் கண்டிராத
ஓவியங்கள் சிலவற்றை
விற்றுக்கொண்டிருந்தாள்
அந்தச் சிறுமி.
சருகு நிறத்தாலான
அவளது பாவாடையை
நிறைத்திருந்தன முயல்குட்டிகள் சில.
ஒவ்வொரு ஓவியம்
விற்றவுடன்
தன் பாவாடை முயல்களிடம்
ஏதோ பேசுகிறாளவள்.
இக்காட்சியை நிலவில் தீட்டுகிறது
சூரியக்கரங்கள்.
நிலவில் உருப்பெறுகிறது
ஓர் முயலோவியம்.

ஒ)
யாருமற்ற அறைக்குள்
தன் பொம்மைகளுடன்
நுழைகிறாள் நட்சத்திரா.
அவளது மழலையை
உற்று கவனிக்கின்றன பொம்மைகள்.
அவள் கேட்கும்
கேள்விகளுக்கும் பதிலளிக்கின்றன.
கதவு திறக்கும் சத்தம்
கேட்டவுடன் ஊமையாகி
அசையாமல் நிற்கின்றன.
வேலை முடித்து
வீட்டிற்குள் வருகின்ற
அம்மா பொம்மையிடம்
பேச துவங்குகிறாள் நட்சத்திரா.

***********************************************************************

குழந்தைகளுக்கும்,குழந்தை மனதோடு இப்பதிவை ரசித்த இணைய எழுத்தாள/வாசக நண்பர்களுக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள் :)
(மீள்பதிவு)

-நிலாரசிகன்.

Tuesday, November 09, 2010

இரவின் சருகுகள் இசைக்கும் மழை நாளில்..




1.

உலகின் மிக கனமான
பொருளை நான் சுமந்து வந்தேன்.
மார்பில் ஊர்ந்து உடலெங்கும்
பரவி உயிரின் வேரில்
அமர்ந்துகொண்டது அப்பொருள்.
பின்,
அதனுடன் ஓர் உரையாடல்
ஆரம்பமானது.
இலை பிரியும் தருணம் பற்றியும்
நீள் கனவொன்றின் உதிரம் பற்றியும்
உரையாடி சலித்தபோது
அதன் எடை குறைய துவங்கியிருந்தது.
நீராலான அதன் பெயரை
கண்ணீரென்று நீங்கள் உணரும்போது
விலங்கின் உருவிலிருந்து
பறவையாக
மாறியிருக்கும் என் தேகம்.

2.

பெயரில்லா இந்த உலர்ந்த
இரவை முத்தங்களால்
நிரப்பிக்கொண்டிருக்கிறது மழை.
பல நாட்கள் பத்திரப்படுத்திய கனவுகள்
ஒவ்வொன்றாய் வீழ்ந்து மரிப்பது
பற்றிய கவலையேதுமின்றி
முத்தமிடுகிறது மழை.
மெளனம் கிழித்து வார்த்தைகள்
வெளிக்குதித்தோடி மறைகின்றன.
தியானவெளியில் வெண்ணிற
உடையுடன் அலைகிறாள் அவள்.
தன் நிர்வாணம் கண்டு வெட்கி
மறைகிறது மழை.
இரவின் சருகுகள் உதிர்கின்ற
மூன்றாம் சாமத்தில்
உனக்கொரு கடிதம் எழுத
அமர்கிறேன் நான்.

3.
பூக்களால் நீ அலங்கரிக்கப்பட்டிருக்கிறாய்
இறுகத் தழுவிக்கொண்டு நெற்றியில்
ஓர் ஒற்றை முத்தமிட நினைத்து
தோற்கிறேன்.
நம்மிடையே காலம்
அழுகிய புன்னகையுடன் நிற்கிறது.
உயிருடன் நம் வண்ணத்துப்பூச்சி
புதைக்கப்படுகிறது.
நாம் செல்லவேண்டிய
பாதைகள் நம் அனுமதியின்றி
அடைக்கப்படுகின்றன.
வெவ்வேறு திசையில் ஆரம்பமாகும்
பயணத்தில்
நீ
மழையின் நடுவே நடந்து செல்கிறாய்.
நான்
மழையாதலின் சாத்தியக்கூறுகள் பற்றிய
சிந்தனையில் ஆழ்ந்து மறைகிறேன்.

 -நிலாரசிகன்.

Monday, November 08, 2010

படித்ததில் பிடித்தது:

அந்தக் குழந்தையின் காலோசை
நம்மை அழைக்கிறது.

குழந்தையின் வடிவம் நம்
பார்வைக்குப் புலப்படவில்லை.

நம்  கலவரம்,நம் பதற்றம்
நம் பார்வையை மறைக்கிறது.

தன் காலோசையால்
நம்மை அணைத்துக்கொள்ள
அந்தக் குழந்தை நம்மைத்
தேடி வருகிறது.

நாம் நம் தத்தளிப்பை மறைக்க
மேலும் உரக்கப் பேசுகிறோம்.

- சுந்தர ராமசாமி.
(சுந்தர ராமசாமி கவிதைகள் நூலிலிருந்து)