Monday, August 30, 2010

முடிவின் துவக்கப்புள்ளி.


 
பூவொன்றின் மரணத்திற்கான
கடைசி துளி கண்ணீரில்
நானொரு பாடல் எழுதுகிறேன்.
எவருக்கும் புரிந்துவிடாத அப்பாடலின்
வரிகள் செந்நீரில் எழுதுப்படுகின்றன.
காற்றின் காதுகளை அவை
தீண்டும் பின்னிரவில்
சடலங்களை பிரசவிக்கும்
மேகத்துடன் ஆரம்பமாகிறது
ஓர் ஊமையின் உரையாடல்.
-நிலாரசிகன்.

Tuesday, August 03, 2010

நிறமற்ற மழை



1.
உதிர்ந்த முத்தங்களை பொறுக்கும்
நட்சத்திரா தன் கன்னத்தின் சுருக்கங்களை
வருடிக்கொடுக்கிறாள்.
சிதறிக்கிடக்கும் முத்தங்களின் நடுவே
காலம் கண்சிமிட்டிக்கொண்டிருப்பதை
வலியுடன் நோக்குகிறது அவளது கண்கள்.
தீராப்பசியுடன் வானம் பார்த்து
கதறுகின்றன வீழ்ந்த இலைகள்.
மெல்ல வலுக்கிறது
நிறமற்ற மழை.

2.
சிறுவனின் மணல்வீட்டை
அழித்துப்போனது அலை.
அவளது முதல் கோலத்தை
நனைத்துச் சிரித்தது மழை.
வேலியோர முள்ளில்
உடைபடுகிறது பலூன்காரனின்
வெண்ணிற பலூன்.
காரணம் அறியாமல்
அழுதுதீர்க்கிறார்கள்
அவர்கள்.
-நிலாரசிகன்.

Sunday, August 01, 2010

நண்பர்கள் தின வாழ்த்துகள்..





வெயிலின் உக்கிரத்தில் நிழல்
தந்து மறைந்தவர்களுக்கும்..
தோல்வியின் உச்சத்தில்
தோள் கொடுத்து உடன் நின்றவர்களுக்கும்..
ஜெயத்தில்  சுயம் வெளிப்படுத்தி
தகிக்கும் பாலையாய் மாறியவர்களுக்கும்..

கனவுகளில் கல்லெறிந்து காணாமல்
போனவர்களுக்கும்..
வாழ்நாள் நண்பன் என்றுரைத்து
வார்த்தை முடியும் முன்பே மறைந்தவர்களுக்கும்…
வீழ்ந்தபோது இது வீழ்தல் அல்ல
விதைத்தல் என்று புரியவைத்தவர்களுக்கும்..
சுயநலத்தின் உயிர்வடிவமாய்
விலகி பறந்தவர்களுக்கும்..
தமிழால் இணைந்து இதயம் நுழைந்து
தழைப்பவர்களுக்கும்..
கவிதைக்காக எப்போதும் நேசிக்கும்
நல்லிதயங்களுக்கும்...
-நிலாரசிகன்.