Wednesday, September 27, 2006

பிரிவுக் கவிதைகள்....

1.நீ பிரியும்
தருணத்தில் வழியனுப்ப
மனமில்லாமல்
பேசுவதற்கு வார்த்தைகள்
இல்லாமல்
நான் தவித்து நின்றேன்.

கன்னம் நனைக்கும்
கண்ணீருடன் நீ
சொன்னாய்.
"உனக்கு வர்ற
மனைவி கொடுத்துவச்சவடா"
என்று.

உன் பிரிவை விட
அதிகமாய்
வலிக்கிறது
உன் வாழ்த்து.


2. என்னை விட்டுப்
போகின்ற கடைசி
நாளில் நீ அழாமல்
போகவேண்டும் என்று
துடிக்கிறது மனசு.

என் பிரிவெண்ணி
அழாமல் போய்விடுவாயோ
என்றும் தவிக்கிறது அதே
மனசு.

முரண்பட்ட நினைவுகளில்
சிக்கித் தவிக்கிறது
உன் மீதான் என்
உயிர்ப்புள்ள காதல்.

3. எத்தனை முறை
காதலை கொடுத்த
இறைவனுக்கு
நன்றி சொல்லியிருப்போம்.
நம்மைப் பிரித்து
நன்றிக்கடன் செலுத்தும்
இறைவனுக்கு காதலின்
வலி தெரியுமா?

4. நீ எனக்காக அழ
நான் உனக்காக அழ
நமக்காக பாவம்
நாளெல்லாம் காதல்
அழுகிறது கண்மணி!
நாம் வாழ பிறந்தவர்களா
இல்லை அழ பிறந்தவர்களா?

Saturday, September 16, 2006

அக்கரை சீமை அழகினிலே...

"நல்ல வாட்ச் ஒண்ணு வாங்கிட்டு வா
மாப்ளே" என்பான் தோழன்.

"நமக்கு ஒரு கேமரா போதும்
தம்பி" என்பார் பக்கத்துவீட்டு
அண்ணன்.

"ரிமோட் கண்ட்ரோல் ஏரோப்ளேன்
வேணும் மாமா" என்பான் அக்காள்
மகன்.

எல்லோர் முன்பும் வெளிநாட்டில்
வசிப்பது பெருமையாக
எண்ணும் வேளையில்..

எல்லோரும் எல்லாமும் கேட்டுச்
சென்றபின் அருகில் வந்து
உள்ளங்கை பற்றி மெதுவாய் சொல்லும்
மனைவியின்
"அடிக்கடி போன் பண்ணுங்க உங்க
குரல் கேட்கணும்" என்கிற வாக்கியத்தில்
மறைந்து போகும் பெருமையும்
வெளிநாட்டின் வசதிகளும்!

விழித்துப்பார் மகனே...




எனக்கு மின்னஞ்சலில் வந்த ஒரு புகைப்படம்
மனதை ஏதோ செய்தது...

அதில் என் எண்ணங்களை பதிவு செய்தேன்.

Monday, September 11, 2006

குறுந்தகவல்(S.M.S) நட்பு!

அதிகாலை அற்புதமானதொரு
காலை வணக்கம்
அனுப்புவாய்...

மனம் தளர்ந்த பொழுதுகளில்
வாழ்வினை எதிர்கொள்ள
வளமான வரிகளை
அனுப்புவாய்...

சோர்ந்து விழும் நேரங்களில்
சுமைதாங்கியாய்
மென்வார்த்தைகள்
அனுப்புவாய்..

சிரிக்க மறந்த வாழ்க்கையில்
சிரிப்பின் அவசியத்தை
நகைச்சுவை வரிகளில்
நகைப்புடன் அனுப்புவாய்...

இருண்ட இரவில்
மின்மினிபோல் பளிச்சிடும்
இரவு வணக்கமொன்றை
இயல்பாய் அனுப்புவாய்...

நண்பா..
குறுந்தகவல் பரிமாற்றத்தினால்
குறுகிப்போயிற்று
நம்குரல்களின் சந்திப்பு.

நேரில்சந்திக்கும் பொழுதினிலாவது
பேச மறந்து
குறுந்தகவல் தட்டச்சும்
நிலை வராமலிருக்க
வரம் கேட்போம் இறைவனிடம்!

Friday, September 08, 2006

"நெஞ்சு பொறுக்குதில்லையே!"

கோவில் திருவிழாவிற்காக எங்கள் கிராமம் சென்றிருந்தேன். எத்தனை ஊர் சென்றாலும்
சொந்த ஊரில் பாதம் படும் போது ஏற்படும் உணர்விருக்கிறதே! அடடா.... காதல் போல்
உணர மட்டுமே முடியும்...

பால்ய நண்பன் வீடு தேடி வந்தான்...
பழைய கதைகள் பேசி பொழுது போனது,,,

"இன்னைக்கு இராத்திரி ஏழு மணிக்கு ரெடியா இருடா திருவிழா பார்க்க போகலாம்"
என்று சொல்லிப்போனான் தோழன்.

இரவு நண்பர்கள் படையுடன் திருவிழா ரசித்துக்கொண்டிருந்தோம்.....
பக்தியுடன் சாமி ஆடுவது கண்ட பின்
கிண்டலுடன் கரகாட்டம் காண சென்றோம்...

நேரமாக நேரமாக கோவிலில் கூட்டம் அதிகரித்துக்கொண்டே போனது...

"மச்சான் வாங்கடா பலூன் கடைக்கு போகலாம் என்றான் தோழன் ஒருவன்....

பலூன் வாங்கற வயசாடா என்றேன் நான்..

அடப்போடா பலூன் கடையிலதான் டா வளையலும் விற்கிறாங்க...என்றான் சிரித்துக்கொண்டே தோழன்.

பின்புதான் புரிந்தது வளையல் அவனது எதிர்வீட்டு தேவதைக்கு என்று!

சரி போகலாம் என்று கடை நோக்கி நடந்தோம்.

பெட்ரமாஸ் விளக்கு வெளிச்சத்தில் சாக்குப்பை விரித்து அதில் கடை போட்டிருந்தார்கள்.

நண்பன் கடைக்காரரிடம் பேரம் பேசிக்கொண்டிருந்தான்...

அப்போது....

என் அருகில் ஒருவர் தன் சிறுமகளுக்கு பலூன் வாங்க என்னருகில் வந்தார்...

இந்த முகம்.... எங்கோ பார்த்த நியாபகம்.... சட்டென்று மனம் கனத்துப்போனது!

அவரா இவர்?

நடை தளர்ந்து,உடல் குறுகி.... பற்களில் சிலவற்றை இழந்து.... அய்யோ
டேவிட் அண்ணா நீங்களா இப்படி?

என்னைக் கண்டதும், என் பார்வையினைப் புரிந்து கொண்டு அவ்விடம்
விட்டு நகர எத்தனித்தார்...

"டேவிட் அண்ணா....."

அவர் கைப்பிடித்து நிறுத்தினேன்...

கெட்ட வாடை வீசியது அவர் மேல். டேவிட் அண்ணன் குடித்திருந்தார்.

"எப்படி இருக்கீங்கண்ணா..."

"நல்லா இருக்கேன்பா.... சரி நான் கிளம்புறேன்..." விறுவிறுவென்று
நடந்து போய்விட்டார்.

சுயநினைவிழந்து நின்ற என் தோள் தட்டினான் தோழன்..

"மச்சான் வாடா வீட்டுக்கு போலாம்.."

மெதுவாய் நடந்தேன்...

மனதெங்கும் டேவிட் அண்ணனின் நியாபகம்... எட்டு வருடங்கள் பின்னோக்கி
மனம் பறந்து சென்றது....


********************************************************************************************************************8
அப்போது நான் கல்லூரி இளநிலை மூன்றாம் வருட மாணவன்.
எங்கள் கிராமத்திலிருந்து டவுனுக்கு இருபது கிலோமீட்டர்கள் பேருந்தில் பயணிப்போம்.

டேவிட் அண்ணா என் பக்கத்து கிராமம். அவர் ஒரு மிகச் சிறந்த விளையாட்டு வீரர்.
அவர் கிரிக்கெட் மட்டையை எடுத்துக்கொண்டு மைதானம் சென்றால் பந்து
மைதானத்திற்கு வெளியில்தான் வந்து விழும்.
கிரிக்கெட் விளையாட சென்றதால் எங்களுக்குள் நல்ல பரிச்சயம்.

அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

நான் கல்லூரி முடிந்து முதலில் பேருந்து நிலையம் வந்தால் அவருக்கு உட்கார
இடம் பிடித்து வைப்பேன்.

அவர் முதலில் வந்தால் எனக்கு இடம்பிடிப்பார்.

ஒரு நாள்...

"அண்ணே ஒரு டீ குடிக்கலாமா?"

"சரிடா வா"

"அண்ணே என்கிட்ட சில்லரை இருக்கு நான் கொடுக்கிறேன்"

"படிக்கிற புள்ளைக காசு செலவு பண்ணக்கூடாதுடா" என்றவாறே தன் பர்ஸை
திறந்து ஒரு பத்து ரூபாய்த் தாளை கடைக்காரரிடம் நீட்டினார்.

அப்போதுதான் அவர் பர்ஸைப் பார்த்தேன். நூறு ருபாய்த் தாள்களால்
நிரம்பி வழிந்தது...

"என்னண்ணே எங்கயாவது கொள்ள கிள்ள அடிச்சீங்களா?" கிண்டலாய் கேட்டேன் நான்.

"இல்லடா இன்னைக்குதான் சம்பளம் கிடைச்சுது தம்பி"

"எவ்ளோ சம்பளம்ணே"

"அது ஒரு பத்து தேறும்டா"

"பத்தா?"

"ஆமாடா பத்தாயிரத்தி சொச்சம்"

"அடேயப்பா பெரிய ஆளுண்ணே நீங்க" எனக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை...

அவர் போல் நாமும் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

அதன் பின் டீக்கு பதில் குளிர்பானம்(பெப்சி வந்த புதிது) கேட்பேன் வெட்கமின்றி(அட நம்ம அண்ணாச்சி,பக்கத்து ஊரு வேற இதுல வெட்கம் என்ன கிடக்கு! )

"நமக்கு டீதான் ஓகே. இந்தா பக்கத்து கடையில குடிச்சிக்க....என்று பத்து ரூபாய் தருவார்...

என் இளைநிலை பட்டம் முடித்து,முதுகலை படிக்க சென்னை வந்துவிட்டேன்.

அதன் பின் அவரைச் சந்திப்பது வெகு கடினமாகிப்போனது.

**********************************************************************************************************
எட்டு வருடம் கழித்து நேற்றிரவுதான் கோவிலில் டேவிட் அண்ணனை சந்தித்தேன்...

"அம்மா நான் டேவிட் அண்ணனை பார்த்துட்டு வரேன்மா"
கிளம்பினேன்.

சைக்கிள் மிதித்த காலத்தை நினைத்துக் கொண்டே இன்று பைக்கில் எங்கள் கிராமத்தின் செம்மண்
சாலையில் விரைந்தேன்.

அவர் வீடு.....

"அண்ணே..." பதிலில்லை.

"அண்ணேணே....." சற்று குரல் உயர்த்தியபின் உள்ளிருந்து மறுகுரல் கேட்டது

"யா...யாரு..." வெளியில் வந்தார்.

தம்பி... வா உள்ள வாப்பா.... சாராய வாடையுடன் என்னை உள்ளே அழைத்துச் சென்றார்...

அண்ணே.... எப்படி இருக்கீங்கன்னு கேட்கிற நிலைமையில் நானில்லை...

மெளனமாய் அவரைப் பார்த்தேன்..

எங்கள் மெளனத்தில் கல்லெறிந்தது ஒரு சிறுபூவின் குரல்...

"அப்பா நான் வெளயாட போறேன்பா" என்று சொல்லிவிட்டது அந்த பட்டாம்பூச்சி..

"அண்ணே உங்க ஒய்ப் எங்கே? "

அவரது கண்ணிலிருந்து கண்ணீர்த்துளியொன்று விழுந்து உடைந்தது...

"என்னண்ணே என்னாச்சு? என்ன பிரச்சினை.... நீங்க ஏன் இப்படி இருக்கீங்க"

தம்பி வாழ்க்கையில எல்லாத்தயும் இழந்துட்டேன்....

இதோ போறாளே எம் மக.... இவளுக்காகதான் என் உசிரு இன்னும்
இருக்குதோ என்னவோ....

இவ பொறந்த அன்னைக்கே எம்பொஞ்சாதி என்ன விட்டுப் போயிட்டா!

வேற ஒருத்தி கட்டிக்க மனசு வரல.... ஏன்னா எம்பொண்டாட்டிய நான்
உசிருக்கு உசிரா நேசிச்சேன்....

அவ நியாபகம் வரும்போதெல்லாம் குடிக்க ஆரம்பிச்சேன்...

குடிச்சுட்டுதான் தினமும் ஆபிஸ் போவேன்...

இரண்டு தடவ சொல்லிப்பார்த்தாங்க....அப்புறம் வேலைய விட்டு தூக்கிட்டாங்க!

பொழப்புக்கு வழியில்ல.... எனக்கு வேற வேலையும் கிடைக்கல...

கவலைய மறக்க குடிச்சு குடிச்சு ஓடா தேஞ்சு போனேன்...

இன்னும் ஆறுமாசமோ ஒரு வருசமோ!

இதுக்கு மேல சொல்ல என் பிளாஷ்பேக் வேற இல்ல தம்பி...

பேசி முடித்தவுடன் அவர் கண்களில் அருவியாய் நீர்த்துளிகள்..

"தம்பி ஒரு ரெண்டு ரூபா இருந்தா கொடேன்... பீடி வாங்க காசில்லை "

என்றார்...

நூறு ருபாய் கொடுத்துவிட்டு கனத்த மனதுடன் வெளியில் வந்தேன்...

வெளியே தெருச்சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்
டேவிட் அண்ணனின் மகள்.

"பாப்பா இங்க வாம்மா"

"என்ன அங்கிள்"

"உன் பேர் என்ன்? "

"ஜாய், அங்கிள்"

இவள் பெயரைப்போலவே வாழ்க்கையிலும் இனி சந்தோஷம் ஏற்படுத்துவேன் என்று மனசுக்குள்
உறுதி கொண்டு, அவள் கைகள் பற்றிக் கொண்டு சொன்னேன்

"இனி என்னை அங்கிள்னு கூப்பிடக்கூடாதும்மா"

"அப்போ எப்படி கூப்பிடறது"

"அப்பான்னு".

-நிலாரசிகன்.


(இது ஒரு நிஜக்கதையின் கரு.)

Tuesday, September 05, 2006

கவிதை...

மழை பற்றி
கவிதை ஒன்று
எழுதினேன்.

மழை போலவே
மனசைத் தொட்டது
அக்கவிதை.

அடடா நானுமொரு
சிறந்த கவிஞன்
என்று மார்தட்டினேன்.

பத்திரிக்கைக்கு அனுப்ப
பத்திரமாய் மடித்து
வைத்தேன்.

மறுநாள் அதிகாலை
எழுந்து தேடினேன்
கவிதைத் தாளை.
கிடைக்கவே இல்லை.

இதயம் நொந்து
வெளியில் வந்தேன்.

என் கவிதைத்தாளில்
காகிதக் கப்பல்
ஒன்று அழகாய் மிதந்து
வர,அதனைக்கண்டு
விழிகள் மலர
சிரித்தாள் என் மகள்.

இதைவிடவா சிறந்த
கவிதை என்னால்
எழுத இயலும்?

Saturday, September 02, 2006

பெண்ணினம்..

அவசரக்காரன் அடிப்பான்
பொறுத்துக்கொள்
என்றீர்கள்.

சரியென்றேன்.

கோபக்காரன் திட்டுவான்
பொறுத்துக்கொள்
என்றீர்கள்.

சரியென்றேன்.

குடித்தாலும் நல்லவன்
பொறுத்துக்கொள்
என்றீர்கள்.

சரியென்றேன்.

கொஞ்சம் முரடன்
பொறுத்த்க்கொள்
என்றீர்கள்.

சரியென்றேன்.

எல்லாவற்றையும்
பொறுத்துக்கொண்ட
என்னை ஊர்கூட்டி
மலடி இவள்
என்கிறான்.

பொறுத்துக்கொள்
என்பீர்கள் என்றெண்ணி
சரியென்று தலையசைக்க
தயாராகுகிறேன்
அவன் மலடன்
என்பதை அறிந்த
நான்.

"பார்த்தேன் ரசித்தேன்" கவிதைகள்

மதுரையிலிருந்து நெல்லை சென்று
கொண்டிருந்தேன் கடந்த வாரத்தில்
ஒரு நாள்.

பேருந்து பயணம். கூட்டம் அதிகம்
மூன்று மணி நேரமாக நின்று கொண்டே
பயணித்தேன்..

அப்போது கால்வலி மறந்து,
தூரம் மறக்க
என் செல்பேசியில்
எழுதியது இக்கவிதைகள்



1. "எளிதில் தீப்பற்றும்
பொருட்களை பேருந்தில்
கொண்டு செல்ல தடை"
என்று எழுதி வைத்துவிட்டு
பார்த்தாலே பற்றிக்கொள்ளும்
விழி கொண்ட உன்னை
மட்டும் பயணிக்க அனுமதிக்கும்
இந்த நடத்துனர் மீது
பயங்கர கோபம் எனக்கு!


2."பயணச்சீட்டு இல்லாமல்
பயணித்தால் 500 ரூபாய்
அபராதமாம்"
பேருந்தில் ஏறியதிலிருந்து
என் இதயத்தில் எந்த
பயணச்சீட்டும் இல்லாமல்
பயணிக்கும் உன் விழிகளுக்கு
அபராதமாக எதைக் கேட்பது?

3.உட்கார இடமிருந்தும் நீ
ஏன் நின்று கொண்டே
பயணிக்கிறாயென தவித்தபோதுதான்
உணர்ந்தேன்
"மகளிர் மட்டும்" அமர
இடமுண்டு
"தேவதை மட்டும்" என்றில்லையே!