Saturday, October 30, 2010

தனலட்சுமி டாக்கீஸ்



உலகின் எந்த புலத்தில் என் பாதங்கள் படும்பொழுதும் ஏற்படாத அற்புத உணர்வை நான் பெறுவது ஒரே ஓர் இடத்தில் மட்டும்தான்.
அது என் சொந்த ஊர். நான் பிறந்து வளர்ந்த என் கிராமம்.  வெள்ளந்தி மனிதர்களாலும் எண்ணிலடங்கா விளையாட்டினாலும் நிறைந்தது என் பால்யம்.

பள்ளி மைதானத்தில் "ரவுண்ட் ரேஸ்" அல்லது "சில்லாங்குச்சி" விளையாடி கொண்டிருக்கும்போது நேரம் என்ன என்பதை எங்களுக்கு உணர்த்துவது எங்களூர் தனலட்சுமி டாக்கீஸ். தினம் இரண்டு காட்சிகள் மட்டுமே கொண்ட சிறிய தியேட்டர். மாலை ஐந்து மணிக்கும் இரவு எட்டு மணிக்கும் காட்சிகள் ஆரம்பமாகும். நான்கு நாற்பத்தைந்துக்கு சத்தமாக ஒலிக்க ஆரம்பிக்கும் பழைய பாடல்களை கேட்டவுடன் மணி ஐந்தாக போகிறது என்பதை அறிந்துகொள்வோம்.

"நான் காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்","குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரலாமா" என தினம் ஒலிக்கும் பாடல்கள் எங்கள் வாழ்வோடு கலந்துவிட்டவை. தரை டிக்கெட்,பெஞ்சு டிக்கெட்,சேர் டிக்கெட்,சோபா டிக்கெட் என்று வரிசைப்படுத்தியிருப்பார்கள். பெண்கள் பக்கத்திற்கும் ஆண்கள் பக்கத்திற்குமிடையே குட்டிச்சுவரொன்று நிற்கும். அலைபேசிகளும் இணையமும் வருவதற்கு முந்தைய காலகட்டமது. காதலர்கள் தாங்கள் நேசிப்பவரை சந்திக்கும் இடமாக விளங்கியது எங்கள் தனலட்சுமி டாக்கீஸ். உழைத்து ஓய்ந்த ஜீவன்களின் மாலைப்பொழுதை ரம்மியமாக்குவதும்,வெளியூர் கண்டிராத கண்களுக்கு புற உலகையும் திரைப்படங்களின் வழியே காண்பிப்பதும் எங்கள் தனலட்சுமி டாக்கீஸ். இடைவேளையின் போது கிடைக்கும் முறுக்கும்,வடையும் வேறெங்கும் கிடைக்காத சுவை கொண்டவை.

கேபிள் டீவியின் வருகையினாலும்,சிடி,டிவிடி என்று பெருகிவிட்ட தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் வருமானமின்றி கடுமையான பாதிப்புக்குள்ளானது எங்களூர் தியேட்டர். இரண்டு வருடங்களுக்கு முன்பு நிரந்தரமாக மூடப்பட்டது எங்கள் தனலட்சுமி டாக்கீஸ்.

கால்சட்டை நிறைய கோலிக்காய்களுடன் நண்பர்களுடன் அரட்டையடித்துக்கொண்டு தனலட்சுமி டாக்கீஸில் படம் பார்க்கும்போது கிடைத்த பரவசம் சென்னையின் மல்டிப்ளெக்ஸில் பார்க்கும்போது கிடைப்பதில்லை என்பதே நிதர்சனம்.

[இவ்வார கல்கியில் "ஊர்பாசம்" எனும் தலைப்பில் வெளியான கட்டுரை
இந்த தியேட்டரை மையமாகக்கொண்டு நானெழுதிய சிறுகதை இங்கே வாசிக்கலாம்.
-நிலாரசிகன். 

Wednesday, October 27, 2010

காவியத்தின் முதல் வார்த்தை



1.
சிந்தனையின் பிறப்புத்துவாரம்
வழியே வெளியேற
முயன்று கொண்டிருக்கிறது
வார்த்தையொன்று.
சிறு முட்களால் சூழ்ந்திருக்கும்
அவ்விடம்
உதிரம் குடிக்கும் புலமென்பதை
அறிந்துகொள்ளாமல்.
காயங்களுடன் வெளியேறிய
அந்தியில்
அவ்வார்த்தையை புணர
காத்திருந்தன வாக்கிய சைத்தான்கள்.
ஒரு காவியத்தின்
முதல் வார்த்தை
மரணம் நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.

2.

நான்கு சுவர்களுக்குள்
சுற்றி சுற்றி வரும்
ஏதோ ஒரு பறவை
விட்டுச்சென்ற இறகு
நான்.

3.

வெகு தூர பயணத்தின்
முடிவில் எதுவுமில்லை
அவனிடம்.
கொஞ்சம் ஞாபகங்களும்
ஒரு காய்ந்த மலரையும்
தவிர.
காலமொரு உடல் தின்னும்
இருண்ட கரையான்.

-நிலாரசிகன்.

Tuesday, October 26, 2010

சித்திரப்பெண்




மயிலிறகுகொண்டு
அழகி ஒருத்தியின்
உருவம் தீட்டினாய்.
பாதங்களில் தொடங்கி
நெற்றிமுடித்து
விசித்திரம் காட்டினாய்.
பின்பு
அவள் உதடுகளில்
புன்னகை சேர்த்து
புள்ளி வைத்தாய்.
அது ஒரு
முடிவின் தொடக்கம்
என்றும் விளக்கமளித்தாய்.
உன் மௌன விசும்பல்
யாருடைய செவிகளையும்
தீண்டிடாத தருணத்தில்
அவள் இடதுதொடையில்
உனது கையொப்பமிட்டு
பரிசளித்தாய்.
அவள் இப்பொழுது
பேரழகியாக
மாறத்தொடங்கியிருக்கிறாள்.
-நிலாரசிகன்.

Sunday, October 24, 2010

நதியடியில் விரைந்தோடும் கூழாங்கற்கள்




நதியடியில் விரைந்தோடும் கூலாங்கற்கள்

1.

தனித்திருக்கும் வெளியில்
உருக்குலைந்து கிடக்கிறது
ஓர் ஓவியம்.
மின்னல்களால் சூழ்ந்த
மாயப்பெண்ணொருத்தி அகோரமாய்
சிரிக்கிறாள்.
உடைந்த ஓவியத்துகள்கள்
வெளி நிரப்புகின்றன.
மெழுகுவர்த்தி ஏந்திக்கொண்டு
மெல்ல துகள் வழி
வெளி வருகின்றன
பறவைகள் சில.
இறகுகளால் நிறைந்திருக்கும்
இருளறையில்
சன்னமாய் கேட்கிறது
ஊமையொருத்தியின்
விசும்பல்சப்தம்.

2,

ஈரம் படர்ந்த அதிகாலையொன்றில்
நிகழ்ந்தது அந்நிகழ்வு.
அற்புதமானதொரு பாடலை இசைத்தபடி
சென்றார்கள் சிலர்.
நதியடியில் விரைந்தோடும்
கூழாங்கற்களின் கதறல்
எவரும் அறியவில்லை.
நீண்டநாட்கள் தேக்கி வைத்த
முத்தமொன்று உலர்ந்து வீழ்கிறது.
வீழ்ந்த முத்தம் கண்ணீருடன்
பூமிக்குள்
புதையுண்ட தருணம்
வேறோர் உலகில்
முலைகள் விம்ம சிரித்துக்கொண்டிருந்தாள்
அவள்.
ஓர்  உறவின் பிரிதல்
இப்படித்தான் நிகழ்ந்தது.

3.

இருள் நிறைந்த ஆழ் குழிக்குள்
வீழ்ந்து மரித்தன வார்த்தைகள்.
சிறிது நேரத்தில் வார்த்தைகளற்ற
அறையில் தனித்திருந்தேன்.
உயிர்கூசும்
மெளனத்தின் நர்த்தனம்
நடுநிசி வரை தொடர்ந்தன.
ஒரு பொழுதில்
களைத்து வீழ்ந்தது மெளனம்.
ஆழ்குழிக்குள்ளிருந்து ஒவ்வோர்
வார்த்தையாய் வெளிக்குதித்து
எனை தின்னத்துவங்கின.
கொடுங்கனவிலிருந்து மீண்டு
மெளனத்திற்குள் புதைகிறதென்
உடல்.
அங்கே,
கூர்வாளுடன் காத்திருக்கின்றன
ஓராயிரம் வார்த்தைகள்.

-நிலாரசிகன்.


<உயிரோசையில் வெளியான கவிதைகள்>

Tuesday, October 19, 2010

கடல் குடிக்கும் பறவைகள்





1.
கடல் குடிக்கும் பறவைகள்
புதர் மண்டிய ஆரஞ்சு தோட்டத்தை
கடக்கின்றன.
பறந்துகொண்டே புணர்கின்றன
உதிர நிறத்தாலான வண்ணத்துப்பூச்சிகள்.
கற்பாறைகளில் நடுவே
நெளிந்துகொண்டிருக்கும் சாலையில்
நிழல் உதிர்த்து பறக்கிறாள்
ஒரு தேவதை.
முள் தைத்த வலியுடன்
நொண்டிச்செல்கிறான் சிறுவனொருவன்,
கனத்த மெளனத்தில் கரைந்தழுதபடி
இரவுக்குள்
நுழைகிறது இவ்வோவியம்

2.
தோட்டத்தில் சிறு நாற்காலியில்
அமர்ந்திருக்கும் அவளழகை
வியப்புடன் ரசித்தபடி நடனமாடுகிறது
மழை.
அற்புதங்களால் உருப்பெற்ற
அவளது விரல்களில் ஒவ்வோர்
துளிகளாய் விழுந்து கவிதையாகின்றன.
சிறகுகள் முளைக்கப்பெற்ற
மழை
இப்பொழுது பட்டாம்பூச்சியாகியிருந்தது.
சின்னஞ்சிறு உலகில் ஓயாத
மழையுடன் நீண்டதொரு உரையாடலை
துவங்குகிறாள்
நட்சத்திரா.


3.

மூன்று முறை என்னை நான்
வரைந்து பார்த்தேன்.
முதல் முறை இருள் கவிந்திருக்கும்
அறையொன்றினுள்ளிருந்தும்
இரண்டாம் முறை நிலவொளியிலும்
மூன்றாம் முறை
முலைகளின் வெம்மையில்
சுகித்திருந்தபோதும்
வரைந்து பார்த்தேன்.
ஒவ்வொரு முறையும்
வெவ்வேறு உருவம் எனதாகியிருந்தது.
மகிழ்வுக்கும் துயருக்கும்
இடையே மிதந்துகொண்டிருக்கும்
என் பிம்பத்தினை காலம்
தன் இடக்கையால்
வரைந்துகொண்டிருக்கிறது.

4.

இளம்பனிக்காலமொன்றில்  சந்தித்துக்கொண்டன
நிறமற்ற இரு பட்சிகள்.
இருத்தல் மீதான மோதல்
உக்கிரமான தருணத்தில் அவை
சூரியனை தழுவின.
வெளிச்சம் புணர்ந்த களைப்பில்
வீழ்ந்து மரித்தன.
கொடுங்கனவின் உள்ளிருந்து
துளிர்விடுகிறது
ஓர் இளமஞ்சள் இறகு.

5.
உயரம் சென்று திரும்பும் தருணத்தில்
அறுபடும் ஊஞ்சல் எனலாம்.
வெகு நாட்கள் கழித்து தட்டப்படும்
கதவின் ஓசை எனலாம்.
மரிக்கும் முன்னர் சிரித்த
சிசுவெனலாம்.
இரக்கமின்றி எனை
புசிக்கும் இந்த
பெளர்ணமி இரவை
துயரத்தின் உச்சம்
என்றும் உரைக்கலாம்.

-நிலாரசிகன்.




Thursday, October 07, 2010

உன் மார்பில் பூக்கள் மலர்ந்திருந்தன




1.
ஓர் உன்னதமான நிகழ்வின்
முடிவில் அறையெங்கும் மணம்
நிரப்பியபடி படுத்திருந்தாய்.
கனவில் தோன்றும் கவிதைவரியின்
பூரிப்புடன் கண்கள் மூடி
அமர்ந்திருந்தேன்.
காலமடியில் இசை
வழிந்துகொண்டிருந்தது.
செவி வழி உயிருக்குள்
ஊடுருவியது உனதன்பின்
அணுக்கள்.
மார்பு தாங்கும் வனப்பூக்களுடன்
அறையெங்கும் பறந்து சிலிர்த்தாய்.
இசைக்குள்ளிருந்து இதயத்திற்குள்
நுழைய துவங்கினேன்
நான்.

2,

கடற்கரையொன்றில்தான் நமக்கான
வாழ்வை தீர்மானித்து பிரிந்தோம்.
மழைநாளில்தான் யாரோ ஒருவருடன்
நம்
திருமணம் நிகழ்ந்தேறியது.
வண்ணத்துப்பூச்சிகள் நிறைந்த வனத்தின்
நடுவே நம் இல்லம் அமையப்பெற்றது.
இப்போது,
எதற்கென்றே அறியாமல்
அழுகின்ற குழந்தையாய்
அழுதுகொண்டிருக்கிறோம்
அவரவர் வீட்டின் இருட்டறையில்
மனதெங்கும் வியாபித்திருக்கும்
நிறைவேறாக் காதலுடன்.

3.
தவிர்த்தலையும் ரசனையுடன்
என்னில் தெளிக்கிறாய்.
உன் விலகல் ஒரு நட்சத்திரம்
போல் மிளிர்கிறது.
வெறுமை நிறைந்த சொற்களை
உதிர்த்தபடி செல்கிறதுன்
இதழ்கள்.
எவ்வித உணர்வுகளுமின்றி
புன்னகைக்க கற்றுக்கொண்டாய்.
மழை சத்தமின்றி பெய்து
ஓய்கிறது.
கண்ணீர் உடைந்த
நிலாத்துளிகளாய் உருள்கிறது.
என்றேனும்
ஏகாந்தத்தின் செளந்தர்யத்தில்
நீ
லயித்திருக்கும் தருணத்தில்
காற்றில் மிதந்து வரக்கூடும்
சிறகறுந்த கனவொன்றின்
குருதி தோய்ந்த இறகுகள் சில.

-நிலாரசிகன்.

Tuesday, October 05, 2010

லஷ்மண் - ஆஸ்திரேலியர்களின் கொடுங்கனவு




ப்பொழுதெல்லாம் இந்திய கிரிக்கெட் அணியை ஆஸ்திரேலியா எதிர்கொள்கிறதோ அப்பொழுதெல்லாம் அவர்களது முதல் கவலை லஷ்மணை எப்படி அவுட் ஆக்குவது என்பதுதான். உலக அணியினருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஆஸியின் மிக முக்கிய பந்துவீச்சாளர்கள் கூட பேட்டிங் செய்வது லஷ்மண் எனில் சற்றே தயங்குவார்கள். காரணம்,2001ல் ஆஸியின் தலையெழுத்தையே  மாற்றி அமைத்த லஷ்மணின் 281 ரன்கள். நிச்சயக்கப்பட்ட தோல்வியிலிருந்த அப்போட்டியில் லஷ்மண் விஸ்வரூபமெடுத்து அற்புதமாக ஆடியதில் வெற்றியை தட்டிப்பறித்தது இந்தியா.
 
உலகின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவரான ஸ்டீவ் வா(க்)கிற்கு கூட லஷ்மண் ஆட வந்துவிட்டால் தலைசுற்றும். மற்ற அணியியுடனான போட்டிகளில் சாதுவாக விளையாடும் லஷ்மண் ஆஸியுடனான போட்டிகளில் தன்னுடைய 200% ஆட்டத்தை வெளிப்படுத்துவார். மறுபக்கம் வீரர்கள் தங்கள் விக்கெட்டை இழந்து வெளியேறினாலும் நங்கூரமாக நிற்பார்.

இன்று மொகாலியில் இந்தியா பெற்றிருக்கும் வெற்றிக்கு சச்சின் அடித்த 98 ரன்களும்,இசாந்த்சர்மாவின் மிக முக்கிய 31 ரன்களும் 3 விக்கெட்டுகளும்,ஜாகீர் கானின் 8 விக்கெட்டுகளும் முக்கிய காரணியாக இருப்பினும் தாளாத முதுகு வலியுடன் வலிநிவாரண மருந்தை உட்கொண்டு நெஞ்சு நிமிர்த்தி லஷ்மண் அடித்த 73 ரன்கள் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. 1999ல் பாகிஸ்தானுக்கு எதிராக சச்சின் சென்னையில் அடித்த 136 அதிஅற்புத ரன்களுடன் இந்த 73 ரன்களை ஒப்பிட்டு சொல்லமுடியும்.

இந்திய அணியின் ஜென்டில்மேன்களாக கும்ளே,டிராவிட்,சச்சின் போன்றவர்களை குறிப்பிடலாம். டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே தலைகாட்டும் லஷ்மணும் ஒரு ஜென் டில்மேன் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. மைதானத்திற்குள் வரும் முன் இசை கேட்டபடி அமர்ந்திருப்பார் லஷ்மண். மிக அமைதியான லஷ்மணை அணியில் எல்லோருக்கும் பிடிக்கும். இன்றைய போட்டியில் ஒரு ரன் எடுக்க வேண்டிய தருணமொன்றில் ஓஜா ரன் ஏதும் எடுக்க வில்லை என்பதற்காக அவரை சத்தமிட்டு திட்டினார் லஷ்மண். காரணம் இந்த போட்டியை சொற்ப ரன்களில் இழக்க அவர் தயாரில்லை. திட்டியபோதும் சில நிமிடத்தில் அவரிடம் சென்று மன்னிப்பு கேட்டு தோள்களில் தட்டிக்கொடுத்தார். அதுதான் லஷ்மண்.

Wrist shot,pull shot போன்றவற்றை எப்படி விளையாட வேண்டும் என்பதை லஷ்மணின் ஆட்டத்தை பார்த்து இளம் வீரர்கள் தெரிந்துகொள்ளலாம். சேவாக் சச்சின் போன்று லஷ்மண் அதிரடியான ஆட்டக்காரர் இல்லை.ஆனால் அவர்கள் இருவரிடமும் இல்லாத "ஸ்டைல்" லஷ்மணின் ஆட்டத்தில் காண முடியும். தலைசிறந்த இசைக்கலைஞனொருவன் இரவின் ஏகாந்தத்தில் வயலின் வாசிப்பதற்கு ஒப்பானது லஷ்மணின் ஆட்டத்தின் அழகு.

லஷ்மணின் 16 சதங்களில் ஆறு சதம் ஆஸிக்கு எதிரானது. அவர் பார்மில் இல்லாத போதுகூட ஆஸியுடன் டெஸ்ட் தொடர் இருக்குமெனில் உடனே தேர்வாளர்கள் லஷ்மணை தேடி ஓடுவார்கள். அவர்களுக்கு தெரியும் லஷ்மண் அணியில் இருந்தாலே போதும் ஆஸ்திரேலிய அணியினரின் மன உறுதியை கலைத்துவிடலாமென்று. உலகமெங்கும் வெற்றிகளை குவித்த ஆஸி கேப்டன் ரிக்கிபாண்டிங் இதுவரை இந்திய மண்ணில் ஒரு வெற்றியை கூட ருசித்ததில்லை. இன்று நடைபெற்ற போட்டியிலாவது வென்றுவிடலாமென்று கனவில் மூழ்கியிருந்திருப்பார். அவரது கனவின் குறுக்கே வழமைபோலவே பேருருவம் கொண்டு நின்றவர் லஷ்மண். சில வீரர்கள் ஓய்வு பெறும்பொழுது சில அணிகள் பெருமூச்செறியும். சனத் ஜெயசூர்யா ஓய்வை அறிவித்தபோது இந்திய அணியினர் நிம்மதி பெருமூச்சுடன் உறங்கியிருப்பார்கள். வார்னே ஓய்வு பெற்றபோது இங்கிலாந்து அணியினர் நிம்மதி அடைந்திருப்பார்கள். அதுபோல், லஷ்மண் என்கிற ரன் எந்திரன் ஓய்வு பெறும்போதுதான் ஆஸ்திரேலிய அணியினரும்,ரசிகர்களும் நிம்மதி அடைவார்கள். கிரிக்கெட் சரித்திரத்தில் லஷ்மண் என்கிற நட்சத்திரத்தின் கொல்கத்தா ஆட்டமும் மொகாலி ஆட்டமும் எப்போதும் மினுமினுத்துக்கொண்டே இருக்கும்.

லஷ்மண் பற்றி ப்ரெட் லீயிடம் ஸ்டீவ் வா சொன்னதாக உலவும் ஒரு வாசகத்துடன் இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்:

"If you get Dravid,Great.If you get Sachin,Brilliant.But if you get Laxman,its a miracle"

-நிலாரசிகன்.

Saturday, October 02, 2010

வலிகளால் நிரம்பிய இரவொன்றில்...



இந்த நிமிடம் நான் என்னை இழந்துவிட்டேன். என் கைகள் நடுங்குகின்றன. ஒரு ஆத்மார்த்தமான நேசிப்பை எதிர்பார்த்து உடைந்தது என் இதயம்.
அறையெங்கும் சிதறிக்கிடக்கின்றன என் இதயச்சில்லுகள். குருதியென கொப்புளிக்கிறது கண்ணீர். துர்தேவதைகளின் சாபத்தின் நிகழ்வுகளா இவை?
கற்களால் நீங்கள் என்னை அடிக்கலாம். கனவுகளின் மீதேறி மிதிக்கலாம். கடமையொன்று முடிந்ததென நீங்கள் ஆனந்த கண்ணீர் வடித்த தருணத்தில் துவங்கிற்று என் கனவுகளின் மரணம். முறிந்து விழுகின்றன என் கிளைகள். நிமிடத்தில் செந்நிற பாலையானது என்னுலகம்.

உணர்ச்சிகள் மடிந்துவிட்ட இவ்விரவில் உணர்வுகளின் தாண்டவத்தில் சிக்கியிருக்கிறேன். கனத்த மனதை வட்டமிடுகிறது மடிக்கணினி வழியே உதிரும் இசை. சோகங்களால் நிரம்பி வழிகிறது என் ப்ரியங்கள். தனிமைச்சுவரின் நடுவில் சாத்தான்களுடன் உரையாடுகிறேன். ரசனைகள் ஒவ்வொன்றாய் விலகிச்செல்வதை வலியுடன் பார்த்து துடிக்கிறது விழிகள். முகம் புதைத்து அழ மடியின்றி வீதியில் வீழ்ந்து மரிக்கின்றன என் கவிதைகள்.

ஏதேதோ எண்ணங்களால் வளர்ந்தேன். அவை இப்போது கானலாகி கரைந்தன. இரவு ஏன் இத்தனை கொடூரமானதாய் இருக்கிறது? இரவின் பற்கள் எப்போதும் என் கழுத்தில் பதிகின்றன. எழுதிய கவிதைகள் கேட்பாரற்று மூலையில் ஒடுங்கியிருக்கின்றன. மென்கவிதைகளின் கதறல் சத்தம் என் செவிகளுக்கு மட்டும் ஒலித்துக்கொண்டே  இருக்கிறது. முள்ளில் விழுந்த பறவையாய் கிழிகிறது இதயம்.

எதிர்பார்த்தல் தவறென்று புத்திக்கு தெரிந்தும் உள்ளங்கை அளவுக்குள் அடங்கும் பெரு இதயம் எதிர்பார்த்தலால்தான் துடிக்கிறது. பின் துவழ்கிறது. இனி நிறைவேறப்போவதில்லை எனத்தெரிந்தும் துடிதுடிக்கிறது. நான் இப்போது நானிலிருந்து வெளியேறுகிறேன்.

பூக்களால் நிறைந்திருக்கும் தனியுலகில் எனக்கான பாடலை சத்தமிட்டு பாடுகிறேன். என் கவிதைகள் ஒவ்வொன்றும் உருப்பெற்று ஆறடி பூக்களாய் தலையாட்டுகின்றன.கண்சிமிட்டுகின்றன. தழுவிக்கொள் என்கின்றன. பட்டாம்பூச்சிகளின் மடியில் சிறுவனாகிப்போகிறேன். முத்தங்களால் எனை தின்னத்துவங்குகிறாள் தேவதையொருத்தி. முகமேந்தி விழிக்குள் வீழ்கிறாள். மீண்டும் நானுக்குள் நுழைகிறேன்.

வலியை வார்த்தைப்படுத்தி தப்பிக்க நினைத்து தோற்கிறேன். உணர்தலின் வலியை மொழிக்குள் மறைக்க முடியாமல் துடிக்கிறேன். வெடித்து ஓய்ந்த பின்னும் அனலால் சூழ்ந்திருக்கிறது கருநிற துளியொன்று. நான் என்பது புள்ளிகளின் மொத்தமா?  குளத்தில் சொல்லெறியும் ஒருத்தியை நானறிவேன். சொற்களால் வதைக்கும் வித்தை கற்றவளின் நிழல் குளத்தில் விழுகிறது. குளத்தில் வசிக்கும் ஒற்றை மீனின் மரணம் இப்படித்தான் நிகழ்ந்தது நண்பர்களே. நீங்கள் கவிதையின் மரணத்தை கண்டிருக்கிறீர்களா?

கல்லறையொன்றை உருவாக்குங்கள். இந்த எழுத்து முதல் செங்கலாகட்டும்.

-நிலாரசிகன்.