Sunday, October 24, 2010

நதியடியில் விரைந்தோடும் கூழாங்கற்கள்




நதியடியில் விரைந்தோடும் கூலாங்கற்கள்

1.

தனித்திருக்கும் வெளியில்
உருக்குலைந்து கிடக்கிறது
ஓர் ஓவியம்.
மின்னல்களால் சூழ்ந்த
மாயப்பெண்ணொருத்தி அகோரமாய்
சிரிக்கிறாள்.
உடைந்த ஓவியத்துகள்கள்
வெளி நிரப்புகின்றன.
மெழுகுவர்த்தி ஏந்திக்கொண்டு
மெல்ல துகள் வழி
வெளி வருகின்றன
பறவைகள் சில.
இறகுகளால் நிறைந்திருக்கும்
இருளறையில்
சன்னமாய் கேட்கிறது
ஊமையொருத்தியின்
விசும்பல்சப்தம்.

2,

ஈரம் படர்ந்த அதிகாலையொன்றில்
நிகழ்ந்தது அந்நிகழ்வு.
அற்புதமானதொரு பாடலை இசைத்தபடி
சென்றார்கள் சிலர்.
நதியடியில் விரைந்தோடும்
கூழாங்கற்களின் கதறல்
எவரும் அறியவில்லை.
நீண்டநாட்கள் தேக்கி வைத்த
முத்தமொன்று உலர்ந்து வீழ்கிறது.
வீழ்ந்த முத்தம் கண்ணீருடன்
பூமிக்குள்
புதையுண்ட தருணம்
வேறோர் உலகில்
முலைகள் விம்ம சிரித்துக்கொண்டிருந்தாள்
அவள்.
ஓர்  உறவின் பிரிதல்
இப்படித்தான் நிகழ்ந்தது.

3.

இருள் நிறைந்த ஆழ் குழிக்குள்
வீழ்ந்து மரித்தன வார்த்தைகள்.
சிறிது நேரத்தில் வார்த்தைகளற்ற
அறையில் தனித்திருந்தேன்.
உயிர்கூசும்
மெளனத்தின் நர்த்தனம்
நடுநிசி வரை தொடர்ந்தன.
ஒரு பொழுதில்
களைத்து வீழ்ந்தது மெளனம்.
ஆழ்குழிக்குள்ளிருந்து ஒவ்வோர்
வார்த்தையாய் வெளிக்குதித்து
எனை தின்னத்துவங்கின.
கொடுங்கனவிலிருந்து மீண்டு
மெளனத்திற்குள் புதைகிறதென்
உடல்.
அங்கே,
கூர்வாளுடன் காத்திருக்கின்றன
ஓராயிரம் வார்த்தைகள்.

-நிலாரசிகன்.


<உயிரோசையில் வெளியான கவிதைகள்>

7 comments:

said...

Nice..

said...

மிக அழகான கவிதைகள்..!!

said...

//நதியடியில் விரைந்தோடும்
கூலாங்கற்களின் கதறல்
எவரும் அறியவில்லை.//
மூன்றுமே முத்துக்கள். அதில் இந்த வரிகள் கவிதையின் மணிமகுடத்தில் வைக்கப்பட்ட வைரம்.

said...

//நதியடியில் விரைந்தோடும்
கூலாங்கற்களின் கதறல்
எவரும் அறியவில்லை.//
மூன்றுமே முத்துக்கள். அதில் இந்த வரிகள் கவிதையின் மணிமகுடத்தில் வைக்கப்பட்ட வைரம்.

said...

அனைத்து மிக அருமையான கவிதைகள்!

said...

அருமையான கவிதைகள்

said...

thalaippe azhaku...!!