Saturday, July 25, 2015

கவிதைகள் மூன்று:

1.குறுநகை

மென்னிறகொன்று மெல்ல படிக்கட்டில்
இறங்குகிறது. அக்கணம் நிகழ்ந்தவை:
ஆழ்ந்த மெளனத்தினுள் இசைக்க துவங்குகிறது
விரலுரசிச் செல்லும் மென்னிறகு.
உடல் மீட்டிய இறகு அசைந்தாடி
இதயத்தின் மேற்பரப்பில் வந்தமர்கிறது.
நீண்ட பாலைவெளியில் தனித்திருக்கும் இறகு
செல்லுமிடமறியாமல் தவித்து இதயத்தின்
கதவருகே பறந்து செல்கிறது.
இதயத்தின் நான்கு அறைக்கதவுகளும்
திறந்துகொண்டு இறகை உள்ளிழுத்துக்கொள்கிறது.
இதயத்தின் மடியில் தலைசாய்த்து வழியும்
விழிநீர் மறந்து பேரானந்தமாய் உறங்குகிறது மென்னிறகு.
மென்னிறகின் விரல்கோர்த்தபடி குறுநகையொன்றை
தவழ்த்தி
யாருக்கோ சொந்தமான அவ்விறகின்
கண்களுக்குள் விழுந்து தொலைகிறது
சிறு இதயம்.
அணைக்க இயலாத வெம்மையில்
தனித்து ஒளிர்கிறது குறுநகையொன்றில்
தன்னை இழந்த ஓர் இதயவத்தி.

2,எதுவுமற்ற கணம்
ஒவ்வொரு பூவாய் நழுவவிட்டபடி
நடந்துகொண்டிருந்தாள் அச்சிறுமி.
பிஞ்சுவிரல்களிலிருந்து நழுவுகின்ற பூக்கள்
காற்றில் தவழ்ந்து தரையில் வீழ்ந்தபடி இருந்தன.
ஊர்ந்து சென்ற ஜோடி எறும்புகள்
அதீத வாசத்தில் திளைத்து பூக்களை
இழுத்துக்கொண்டு சிறுமியின் பின்னால் ஓடின.
கோவிலின் சுற்றுச்சுவரின் அருகே மலர்ந்திருந்த‌
கள்ளிப்பூக்களை எட்டிக்குதித்து பறித்துச் சிலிர்த்தாளவள்.
எறும்புகளும் பூக்கள் தொட‌
யத்தனித்து துள்ளிக்குதித்தன.
மெதுவாய் பொழிந்த மழையில் வானம் பார்த்து
ஆடத்துவங்கினாள் சிறுமி.
மழைத்துளிகளினூடாக பயணித்து வெளியேறி
விளையாடின எறும்புகள்.
வதனத்தில் வழிகின்ற நீரை துடைத்தபடி
வீடு சென்றவளுக்கு பிரியாவிடைகொடுத்து
திரும்பின அந்தச் சிற்றெறும்புகள்.
இக்கவிதையிலிருந்து ஒவ்வொரு சொல்லாய் இக்கணம்
உதிர்ந்துகொண்டிருக்கின்றன.
முழுமைபெறாத சிதைந்ததொரு ஓவியத்தைப்போல்
எறும்புகளாய்
பூக்களாய்
எதுவுமில்லாமல் எதுவுமில்லாமல்.

3.பிரிவென்பதும் ஓர் இலைதான்.
உடலோடு ஒட்டியிருக்கும் அட்டையொன்றை
பிய்த்தெடுக்கும் வலியுடன் செளந்தர்ய நினைவுகளை
பெயர்த்தெடுக்கிறேன்.
கடலைக்கூட கைகட்டி நிற்கவைத்த
தைரியத்திமிர் இக்கணம் நதியொன்றின்
சிற்றலைக்கும் சிலிர்த்தடங்குகிறது.
ஒற்றைச்சிறகுடன் ஓர் பறவை
வானம் நீங்கிச்செல்வதை காண்கிறேன்.
காலத்தின் காலடியில் நாய்க்குட்டியென‌
ஒடுங்குகிறது அற்புத ஆழ்நினைவு.
முத்தமிட்டு சலித்த அறைகளின்
யன்னல்களெங்கும் முளைத்துநிற்கின்றன‌
ஊசிச்செடிகள்.
யாரோ ஒருவனின் கனவுகளில்
எப்போதும் திரிகின்றன ஓடுகளற்ற ஆமைகள்.
செல்லுமிடம் அறியாமல்
மிதந்து மிதந்து கீழ் இறங்குகிறது
பிரிவென்னும் வெதும்ப நிற
உடலற்ற ஓர் இலை.

-நிலாரசிகன்

Friday, March 13, 2015

ஜூலி யட்சி - கனவுகள் நிராகரிக்கப்பட்ட தேகத்தின் அரசி

ஜூலி யட்சி - கனவுகள் நிராகரிக்கப்பட்ட தேகத்தின் அரசி -
உமா சக்தி [இம்மாத தீராநதியில் வெளியான விமர்சனம்]

கவிஞன் ஒருவன் சிறுகதை எழுத்தாளன் ஆவதோ அல்லது நாவலாசிரியன் ஒருவன் கட்டுரையாளன் ஆவதோ அல்லது கட்டுரையாளன் ஒருவன் மேற் கூறிய இரண்டுமாவதோ அவனுடைய விருப்பமும் ,தேர்வும் சார்ந்த விஷயங்கள். அவன் படைப்பின் உட்பொருள் அதன் வடிவத்தைத் தீர்மானிக்கின்றது. அதற்கான பிரத்தியேக மொழியையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுகின்றது. ஒரு படைப்பாளிக்குக் கிடைக்கும் அனுபவங்களும் , தரிசனங்களும் , நோக்குநிலையும் படைப்புக்கான வடிவத்தைத் தீர்மானிப்பதில் பெரும் பங்காற்றுகின்றது.. கையளவு நீருக்கு பெரியதோர் அண்டா எவ்வளவு அனாவசியமோ , அதே போன்று பரந்ததோர் உலகத்தை அடைத்து விட சின்னஞ் சிறு சிமிழும் போதுமானதல்ல என்பதை திறமை வாய்ந்த ஒரு படைப்பாளி அறிந்து வைத்திருப்பான்..எழுத்தின் கரம் பற்றிய மறுகணமே ஒரு படைப்பாளியை எழுத்து என்பது வழி நடத்திச் செல்கின்றது. எழுத்து நம்மை தேர்ந்தெடுத்ததா நாம் எழுத்தை தேர்ந்தெடுத்தோமா என்பதற்கு எந்தவொரு படைப்பாளியிடமும் அறுதியான பதில் இருக்காது. ஓர் மன உந்துதலில் அவன் கவிதை ,கட்டுரை ,சிறுகதை அல்லது,நாவலினதோ மடியில் அவன் அல்லது அவள் போய் வீழ்கிறாள்.அவனைப் படைப்பும்,படைப்பை அவனும் வளர்த்தல் நிகழ்கிறது. கவிஞனாகப் பரவலாகக் கவனம் பெற்ற நிலாரசிகனின் சமீபத்திய சிறுகதைத் தொகுப்பான ஜூலி யட்சி வாசிக்க நேர்கையில் இது கவிதைத் தொகுப்பா கவிதை வடிவில் சிறுகதைத் தொகுப்பா என்று குழம்ப வைத்த தொகுப்பு இது.
கவித்துவமான முன்னுரையுடன் கவிதை நடையில் பத்து முத்தான கதைகள். ஒவ்வொரு கதைக் களனும் வித்யாசமானவை. பெண்ணுலகில் இத்தனை அணுக்கமாக, இத்தனை நுட்பமாக ஒரு ஆண் எழுத்தாளர் பதிவு செய்துள்ளது ஆச்சரியம். இந்த அளவு உள்வாங்கி பெண்ணாகவே உருமாறி எழுதிவிட்டாரோ என்று வியக்கும்படியான நேர்த்தியான பெண் உலகச் சித்திரப்புகள். இந்தக் கதைகளில் பெரும்பாலானவை மாய யதார்த்தவாத அவ்வப்போதும் யதார்த்தத்திற்கும் ஊடாடி பயணிக்கின்றன. அது எதுவாக இருப்பினும் வாசிக்கும் மனங்களை ஈர்க்கும்படியான கதையாடலும், சொற் பிரயோகங்களும், பாத்திரப் படைப்புகளும் இக்கதைகளை முற்றிலும் வேறொரு கோணத்தில் படிக்க வைக்கின்றன. உதாரணத்திற்கு கதைகளின் கற்பனை தீவிரத்தை நினைத்தபடி படித்துக் கொண்டிருந்த எனக்கு சட்டென்று மிதந்து கொண்டிருக்கிறேனோ எனத் தோன்ற இரு கைகள் தான் உள்ளது சிறகுகள் இல்லை என்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு மேலே படிக்கத் தொடங்கினேன்.
ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதம். ஒவ்வொரு உலகம். தர்ஷணிப்பூ என்ற பெயர் எவ்வளவு அழகு இந்தச் சிறுகதையின் மையப்புள்ளி அதுவே. ஆண்களின் ஆதிக்கம் மனிதர்களின் அத்துமீறல்கள் வனங்களையும் இயற்கையையும் எப்படி எல்லாம் சிதைக்கின்றன என்ற குறியீட்டை உள்ளடிக்கிய கதை இது. அகால வேளையில் தந்தை தினமும் செல்லும் அருவிக்கரையோரம் அவரைத் தொடர்ந்து மகன் செல்ல, அங்கே அவன் காணும்காட்சி அவனை பேரதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. சிறகு முளைத்த பெண்ணொருத்திக்கு தன் தந்தை வைத்தியம் பார்க்க, சோர்வுற்று வீழ்ந்திருந்த அவள் ஓரளவுக்கு குணமான பின் அவர் விடைப்பெற்றுச் செல்ல, அவள் மரத்தைப் பிளக்கச் செய்து அதனுள் மாயமாகிறாள். அடுத்த நாள் தனியே வரும் மகன் அவளிடம் பேச்சுக் கொடுத்து அவள் வனப்பூக்களின் அரசி என்றும் அவள் பெயர் தர்ஷிணிப்பூ என்றும் அறிகிறான். அதன் பின் நடக்கும் சம்பவங்கள் அதிர்ச்சியும் துயரும் நிரம்பியவை.
இத்தொகுப்பின் முக்கியமான, நிகழ் உலகில் நடக்கக் கூடியதுமான கதை மழைத் தேன். கிராமத்துப் பள்ளி சிறுமி கண்மணியின் வாழ்க்கையில் நடந்த ஒரு சிறிய சம்பவம் தான் கதை. ஆனால் இக்கதையை எழுத்தாளர் கையாண்டிருக்கும் விதம் தான் இதை ஆழமாக்குகிறது. சின்னஞ்சிறிய மனங்களில் எதிர்ப்பார்ப்பு, சந்தோஷங்கள், ஏமாற்றங்கள், அவமானங்களை இக்கதை பதிவு செய்கிறது. சடங்கானதும் ஆண்களிடம் பழகவோ பேசவோ தடை விதிக்கப்பட்ட கண்மணிக்கு செல்வம் மீது இயல்பாகவே ஒரு ஈர்ப்பு ஏற்பட அவனும் இவளைக் கடக்கும் போதெல்லாம் பார்வை வீசிச் செல்ல, அவர்களின் அறிவிக்கப்படாத முதல் காதல் தொடராமல் போனதன் காரணத்தை, கண்மணி அவள் சித்தி வீட்டிற்கு தங்கை இந்துவுடன் தங்கும் போது விவரிக்கிறார் கதாசிரியர். செல்வம் ஒரு நாள் நோட்டு வாங்க கண்மணியின் வீட்டுக்குச் செல்ல அங்கே கயிற்றுக் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த கண்மணி தன்னையறியாமல் சிறுநீர் கழித்திருந்தாள். செல்வம் அதை கிண்டலாக கண்மணியின் வகுப்பில் படிக்கும் தன் உறவுக்காரப் பெண்ணிடம் அவள் ஒண்ணுக்குப் போனது நார்க்கட்டில்ல இருந்த அதோ அங்க பெய்யற மழை மாதிரியில்ல இருந்துச்சாம் என்று சொல்லியிருக்கிறான். அன்றிலிருந்து அவள் மனதில் செல்வம் மீதான அசூசையும் மழை மீதான வெறுப்பும் வளரத் தொடங்கியது. சித்தி மகள் இந்துவுக்கும் இதே பிரச்னை என்று தெரிந்து செய்வதறியாது திகைக்கிறாள் கண்மணி. பூப்படைந்திருந்தாலும் இன்னும் சிறுமியாகத் தான் இருக்கும் இவள் போன்ற குட்டிப் பெண்களின் மனம். அது எதிர்ப்பாராமல் கிடைக்கும் அவமதிப்புகளைத் தாங்க இயலாமல் மனதை இம்சிக்க வைக்கும். கண்மணிக்குத் தோன்றிய எதிர்பாலின ஈர்ப்பு சில நாட்களிலேயே முறிந்து போனக் காரணம், செல்வத்தின் கேலியும் அவன் அதற்குப் பின் அவளை அதே நோக்கில் பார்ப்பதும்தான். இந்தக் கதை சாதாரணமாகத் தெரிந்தாலும் பதின்வயதுப் பெண்களின் இதுவரை பேசப்படாத பிரச்னையை மெல்லியதாக‌ உளவியலுடன் மிக நேர்த்தியாக பதிவு செய்கிறது.
விசித்திரன், சித்திர வதனி பெருநகர சர்ப்பம் இவை ஓரளவுக்கு சுமாரன கதைகள் தான். கதைகளுடன் இயைந்து வரும் கவிதை வரிகளை ரசிக்கலாம். வேலை இழந்தவளின் நாட்குறிப்பில் தகிக்கும் கோடை கதை நான் லீனியர் வகையில் பரீட்சார்த்த முயற்சியில் எழுதப்பட்டுள்ளது. அவளது இதழோரம் ஜனித்த புன்னகை சிறுவர் கதைகளில் சூனியம் சுமந்தலையும் கிழவியின் புன்னகையை ஒத்திருந்தது எனும் வரிகள் மூலம் கதையை க்ராஃபிக் கதை போல காட்சிரூபப் படுத்தியுள்ளார் ஆசிரியர்.இன்னும் சற்று தெளிவாக எழுதப்பட்டிருந்தால் இத்தொகுப்பில் மிக முக்கியமான கதையாக இருந்திருக்கும். சித்தர வதனி எனும் கதை நவீன பழிவாங்கும் பெண்ணின் கதையாக உள்ளது. தன்னை கலவிக்கு அழைத்த இருவரை வெவ்வேறு பெயர்களில் வேறு வேறு விதமாக காதலிப்பது போல நடித்து பழிவாங்குகிறாள் நித்தியா எனும் பெண். அவள் கையில் எடுத்த ஆயுதம் பெண்மை என்றாலும் அவள் அதைத் தற்காப்புக்காகவும் தன் போன்ற பிற பெண்களின் பாதுகாப்புக்காகவுமே இவர்கள் போன்ற அசுரர்களை வதம் செய்யப் புறப்பட்டவள்.
பெண்களின் காதலையும், கோபத்தையும், மென்மையையும் எழுதிச் சென்ற ஆசிரியர் திடிரென்று பாதை அகன்று பெண்களின் சிலர் செய்யும் ஏமாற்று வேலைகளையும் படம் பிடித்துக் காட்டுகிறார் பெருநகர் சர்ப்பம் என்ற கதையில். கிராமத்திலிருந்து சென்னைக்கு வரும் பெண் ஒருத்தி அந்த ஊரைப் பார்த்து வியந்து, தன்னை மெதுவாக அந்நகருக்கு ஏற்றபடி மாற்றி அமைத்துக் கொள்கிறாள். கிராமத்துக் காதலனை மறந்து புதுப் புது காதலர்களின் பின் செல்லும் நவ யுகப் பெண்ணாகிப் போகிறாள். அவளுக்கு மாரல்களைப் பற்றிய கவலைகள் இல்லை. அந்த நொடி இன்பமும் அடுத்த கட்டமும் மட்டுமே முக்கியம். இன்பம் தேடுதல் ஆண் சார்ந்த விஷயமாகவே பார்க்கப்படுகையில் ஒரு பெண்ணின் வேட்கையையும் அதற்காக அவள் போடும் வேஷங்களையும் துல்லியமாகச் சித்திரத்துள்ளார் ஆசிரியர்கள். சமீபத்தில் சென்னையில் பரவி வரும் கலாச்சார மாற்றங்களை இக்கதை பதிவு செய்வதோடு இன்றி இளம் பெண்கள் பரவாயில்லை என்று ஏற்றுக் கொண்டுவிட்ட விஷயமான ஒன் நைட் ஸ்டான்ட் போன்ற கலாச்சார சீரழிவுகளை போகிற போக்கில் இக்கதை விவரித்துச் செல்கிறது. படிப்பவர்களின் அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக அல்லாமல் நடக்கும் சம்பவங்களை புனைவு அதிகமின்றி எழுதிய கதை இதுவாக இருக்கும்.
இத்தொகுப்பின் எனக்கு மிகவும் பிடித்த மற்றொரு கதை குறளியின் டிராகன். உருவம் கண்டு எள்ளாமை வேண்டும் என்று சிறுவயதில் திருக்குறள் படித்திருப்போம். ஆனால் பலர் படித்ததை எல்லாம் கடைப்பிடிப்பதில்லை. அடுத்தவரின் ஏதோவொரு கீழான நிலையைத் தன்னோடு ஒப்புமைப்படுத்தி தன்னை உயர்த்திக் காட்டும் குணம் பலருக்கு உண்டு. அது சாதியாக இருக்கலாம், அழகு, படிப்பு, பொருளாதார நிலை என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். எளியோரைக் கண்டால் நகைக்கும் கொடூர மனம் படைத்தவர்கள் பெருகிவிட்டக்காலக்கட்டம் இது. சாதாரணக் குடும்பத்தில் நான்காவது பெண்ணாகப் பிறந்த நாகாவைக் கண்டால் அவள் அப்பாவுக்குக் கூட பிடிக்காது. காரணம் கருவில் அழிக்க முடியாத அவள்அவள் குள்ளமாக குறுகிய உடலுடன் பிறந்தவள். அழகற்ற அவள் பெரும்பாலும் சக மாணவிகளால் ஒதுக்கப்படுகிறாள். தனிமை அவளுக்கு நிரந்திர துணையாகிறது.அவளுக்கு மிகப் பிடித்தமான விஷயங்கள் இயற்கையுடன் இயைந்து இருத்தல். மலைகளை, கடலைப் பார்த்துக் கொண்டே இருப்பது அவளுக்கு உவப்பான விஷயம். அவ்வப்போது மலைகளுக்கு சென்று வருவாள். மனித சஞ்சாரம் இல்லாத இடங்கள் எல்லாம் அவள் மனதுக்கு நெருக்கமான்வையே. தற்போது அவள் வசிக்கும் வீடும் ஒரு கடற்கரை ஒட்டிய விலாசமான வீடு.அவளுடன் செல்லப்பிராணி ட்ராகன் அங்குள்ளது. நாகாவின் வாழ்க்கையில் நடந்த நம்ப முடியாத அதிசயம் தான் அவள் வாழ்க்கையையே மாற்றி அமைத்தது. அதன் பின் அவளை யாரும் வெறுத்து ஒதுக்குவதில்லை மாறாக பல காதல் கடிதங்கள் அவளுக்குத் தினமும் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவளுக்கு எதுவும் பொருட்டல்ல, அவளுக்கு தன்னுடைய தனிமையும் டிராகனும் கடலும் மட்டும் போதுமாயிருந்தது. இருப்பதும் இல்லாமல் போவதும் அவரவர் வாங்கி வந்த வரம். நமக்குக் கிடைத்தவற்றில் திருப்தியுடன் வாழ நினைத்தாலும் சமூகம் தன் கூரிய கரங்களால் சீண்டிக் கொண்டே தான் இருக்கும். வலிமையான மாயக் கரம் கொண்டு தான் அதை அடக்க முடியும். உண்மையில் இது சாத்தியமில்லை என்றாலும் புனைவுகளீல் நிகழும் இந்த மாயங்களைப் படிக்கும் போது இப்படி எல்லாம் நிகழாதா எனத் தோன்றுகிறது. அழகிய தேவதைக்கதையொன்றைப் படித்த மகிழ்வு இக்கதை தருகிறது. கேவல் என்ற சிறுகதை மேஜிக்கல் ரியாலிசம் வகையில் எழுதப்பட்டுள்ளது. ஒரு திரைப்படத்தை நினைவுப்படுத்தும் கதையாக இருப்பினும் சொல்லப்பட்ட விதம் அருமை. ப்ரியம்வதாவின் பகல் எனும் கதையில் நாயகி தன் பெயரை மறந்து போகிறாள். என்னவெல்லாமோ செய்து பார்த்தும் தன் பெயரே மறக்கும் அளவிற்கு அவள் மனது மறதியில் தோய்ந்து போய்க் கிடக்கிறது. வேறு எந்த உதவியும் இன்றித் தன் பெயரை எப்படியாவது கண்டுபிடிக்க ஆசைபப்டுகிறாள்.அவளுடைய காதலன் அவளுக்கு காதல் குறுஞ்செய்திகள் அனுப்புவது அவளை அழைத்துப் பேசுவது காதலின் அத்தனை ரம்மியங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் அவளுடைய தற்போதைய ஒரே பிரச்னை இப்படி பெயரற்றவளாக மாறிப் போனதுதான். சுதந்திரம் ஒரு பெண்ணுக்கு எந்த அளவுக்குத் தேவை, கட்டற்ற சுதந்திரம் அவளை என்னவெல்லாம் செய்துவிடும் என்பதை மறைபொருளாக வைத்து இக்கதையை கத்தியின் மேல் நடப்பது போன்று எழுதியுள்ளார் ஆசிரியர். அவள் எடுக்கும் சில முடிவுகளால் கதையின் முடிவில் தன் பெயரைக் கண்டு அடைகிறாள். அவளுக்கு அவள் பெயர் தெரிந்துவிட்டாலும் வாசிக்கும் வாசகருக்கு அது தெரிவதில்லை. பெயரிலியாகவே அவள் முடிந்து போகிறாள். இக்கதையைப் படிக்கும் போது கவிஞர் பழநிபாரதியின் ஒரு கவிதை தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வந்தது.
"மரம்
வானம்
கூடு
இரை
எதுவும் ஒரு பொருட்டில்லை
அதைவிடவும் முக்கியம்
தனிமையின் சுதந்திரமென‌
பறந்துகொண்டிருக்கிறது
ஒரு பறவை"
தலைப்பு கதையான ஜூலி யட்சி மீண்டும் ஒரு பழிவாங்கும் கதை. ஆனால் எதிர்ப்பாராத சம்பவங்கள், மாய எதார்த்தவாதக்கதைக் களனில் சொற்சிக்கனத்துடன் பூரணமான ஒரு கதை.
இத்தொகுப்பு முழுவதும் கனவுகளுடனான பயணமாகவேச் சொல்வேன். வனம், மலை, கடல், மழை, ரயில் எனக் கதைகள் மாறி மாறி வெவ்வேறு வெளிகளில் சொல்லப்பட்டிருப்பது மிகச் சிறப்பு. அதனினும் சிறப்பு ஐம்பூதங்களைப் பற்றிய குறிப்புடனான சிறுகதை வடிவத்திலான முன்னுரை. சில கதைகள் மின்னி மறைகின்றன. சில கதைகள் தீவிரமான யோசனைக்கு வாசகனை இட்டுச் செல்கின்றன. சில கதைகள் லேசான முறுவலை வரவழைக்கின்றன. மொத்தத்தில் படிக்கவும் பத்திரப்படுத்தவும் மீள வாசிக்கவுமான கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு தான் ஜூலி யட்சி. இவள் அனைவருக்கும் பிரியமானவளாகவே இருப்பாள்.

Thursday, January 22, 2015

ஜூலி யட்சி - விமர்சனம் 3

நெஞ்சில் நிறைந்த நிலாரசிகன் !

நிலாரசிகனின் ‘ஜூலி யட்சி’ சிறுகதைத் தொகுப்பினை ஒரே மூச்சில் படித்து விட்டேன். சில கதைகளை இரண்டு மூன்று முறை நிதானமாக படித்து உள்வாங்கினேன். 

நிலாரசிகனின் எழுத்துலகம் கனவுகளோடு வாழும் மனிதர்கள் நிஜங்களோடு சமரசமின்றி எப்படியெல்லாம் முரண்பட்டு வதையுறுகிறார்கள், போராடுகிறார்கள், பழிதீர்க்கிறார்கள் என்பதை புனைந்துரைக்கிறது. கதைகளில் வரும் ஆணும் பெண்ணும் கனவுலக கதாப்பாத்திரங்களோடு வாழ்கிறார்கள். நிகழ்காலம் அவர்களுக்கு மன உகந்த மார்க்கமின்றி நகர்வதால் அவர்கள் தங்களின் உலகத்தை மோகினிகளோடும், தேவதைகளோடும், டிராகனோடும் வடிவமைத்துக் கொண்டு உழல்கிறார்கள்.

ஆண்களின் நயவஞ்சகத்தினால் ஏமாறும் பெண்கள் குரூரமாக ஆண்களை பழிவாங்குகிறார்கள். ஒரே பெண் இரண்டு பெயர்களில் இரண்டு ஆண்களை பழிவாங்குகிறாள். பெண் சர்வ சுதந்திரம் விருப்பம் உள்ளவளாக, அம்மா,அப்பாவின் பார்வையில் படாத தூரத்திற்கு சென்று தன்னை தன் சுதந்திரத்தை பேணுபவளாக சித்திரிக்கப்படுகிறாள். அழகற்ற பெண் தான் அழகியாக உலாவரும் கனவுலகில் வாழ்கிறாள். அவள் டிராகனோடு படுத்துறங்குகிறாள். இங்கே டிராகன் தனிமையின் குறியீடு.

சமகால உலகப் பொருளாதார வளர்ச்சியின் நீட்சியில் மனிதப் பண்புகள் சிதைவுண்டு போவதை மென்மையாக கவிதையில் சொல்வதுபோல சிறுகதைகளாக சொல்லியிருக்கிறார். சிறுகதைகளின் ஊடே செல்லும் இவரது சொல்லாடல்களில் சிலவை மனதில் அதிர்ச்சியூட்டுகின்றன. எளிமையான சொல்லாடல்களின் வன்முறை திகைப்பூட்டுகின்றன.
பெண் என்பவளை போகப் பொருளாக பாவித்து ஒரு இரவிற்கு மட்டும் அழைக்கும் ஆண் மகனை அழைத்துச் சென்று அவனுக்கு தண்டனையாக அவனது உச்சந்தலையில் கத்தியை அழுத்தி அது தாடையைக் கிழித்துக் கொண்டு வருவதை பார்த்து சிரித்துக் கொண்டே அவனது கழுத்தில் கால்வைத்து அழுத்துகிறாள். என்ன கொடூரம். உன்னால் முடியாது என்றால் புறந்தள்ளிப் போகாமல் அவனுக்கு தண்டனைக் கொடுக்கும் அதிகாரம் யார் கொடுத்தது.

அவனது அழைப்பினைக் கூட ஒரு இடத்தில் நாகரிகமாக ‘‘தினம் தினம் கண்களால் தன் உடலை புசிக்கும் ஆண்களைப் போல இவன் தன் உடலை புசிக்க நேரிடையாக இவளிடம் கேட்கிறான். நல்லவர் வேடமிட்டு கண்களால் உண்ணும் அவர்களை விட இவன் எவ்வளவோ மேல் என்று சில நாட்கள் தோன்றும்,’’ என்று அவளது வார்த்தைகளிலேயே சொல்லி ‘’இருந்தாலும் அவனைப் பழிவாங்கும் நேரத்திற்காக காத்திருந்தாள்’’. என்றும் சொல்லாடுகிறார் நிலாரசிகன்.

‘மழைத் தேள்’ சிறுகதையில் பருவமடைந்த பத்தாம் வகுப்புப் படிக்கும் பெண் மழையை வெறுக்கிறாள். யாரால் மழையை வெறுக்க முடியும். ஆனால் இவளால் மழை பொழியும் பொழுதை இரசிக்கமுடியாமல் போகிறது. சக மாணவன் ஒருவனால் அவமானத்திற்கும் ஏமாற்றத்திற்கும் உள்ளாகிறாள். அவன் அவளை ஏறெடுத்துப் பாராமல் செல்லும் நாளில் மழை பொழிகிறது. அன்றிலிருந்து அவளால் மழையை இரசிக்க முடியவில்லை. மழையின் மீது வெறுப்பும் கோபமும் அதிகரிக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த இந்த விசயம் அவளது மனதை மழை பெய்யும் போதெல்லாம் வதைக்கிறது. இந்த வாதை தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தில் கொண்டு போய்விடுவதை நாசுக்காக சொல்லியிருக்கிறார். இந்த சிறுபெண்ணிடம் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது. ஒரு பாலியல் சார்ந்த மனத்தகிப்பு அல்லது அறியாப் பருவ நிகழ்வு துக்கமாக சோகமாக மனதில் தகித்துக் கொண்டே இருக்கிறது. ‘’எழுந்துவிடலாமா அல்லது அப்படியே படுத்திருக்கலாமா என்று குழம்பியபடி கிடந்தாள் ஒய்ந்த மழையின் ஈரத்தை வெறுத்தபடி.’’ என்று கதை முடிகிறது.

இதுதான் உண்மை. ‘மழைத் தேள்’ கதையில் எந்த கனவும் இல்லை. முற்றிலும் நிஜம்தான். மனதைக் கிழிக்கும் நிஜம். இந்த நிஜத்திற்கு எதிராக எதுவும் செய்ய முடியாது தவிக்கும் எழுத்தாளனின் மனம் கடைசி வரிகளில் இயல்பாக வெளியாகிறது.

வேலைக்காக நகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் செல்லும் பெண்கள் அவ்விடங்களில் தனியாக வாழும் நிலைக்குத் தள்ளப்பட்ட இன்றைய சமூக சூழலைப் பெண்கள் தமது விடுதலையாக சுதந்திரமாக தப்பித்தலாக உணர்கிறார்கள் என்ற கருத்தினை இவரது சில சிறுகதைகள் முன் வைக்கின்றன.

உலகமயமாக்கல் சார்ந்து இயங்கும் நம் சமூகத்தின் வளர்ச்சியில் வீழ்ந்து கிடக்கும் கலாச்சாரம் பற்றிய ஒரு தேடல் இவரது கதைகளின் மையத்தில் பூடகமாக ஊடாடுகிறது.

தர்ஷிணிப்பூ, மழைத் தேள், விசித்திரன், வேலை இழந்தவளின் நாட்குறிப்பில் தகிக்கும் கோடை, மற்றும் கேவல் குறிப்பிடும்படியான நட்சத்திரக் குறியீட்டுக் கதைகள். கதை-உரை தொடக்கமே பரவசப்படுத்துகிறது.

எல்லா கதைகளுமே வாசகனை படிக்கத் தூண்டும் கவிதை கசிந்துருகும் நடையில் நகர்கிறது. இவரது எழுத்துக்கள் தமிழ் படித்த எல்லார் மனதையும் வெல்லும் எழுத்துக்கள். இன்றைய தமிழ் இலக்கிய சூழலில் நம்பிக்கைக்குரிய எழுத்தாளர்களின் பட்டியலில் இவரது பெயர் தவிர்க்க இயலாதது.

-தனுஷ்


This article link:
https://www.facebook.com/photo.php?fbid=786197114802165&set=a.382970715124809.93447.100002356512849&type=1&theater

To buy Julie Yatchi:

http://tinyurl.com/JYatchi

Tuesday, January 20, 2015

ஜூலியட்சி விமர்சனம் 2:



அமைதியையும் இருளின் கருமையையும் போதும்போதுமெனுமளவு உடலெலாம் பூசிக்கொண்ட ஓரிரவில், பல்லாயிரக் கணக்கான கால்கள் முளைத்து ஊர்ந்துகொண்டிருந்த சிந்தனைகளின் மீதேறி பயணித்துக் கொண்டிருந்தது புக்குப்பூச்சி.

அப்போது, நிசப்தத்தையே பேரிரைச்சலாகவும், இருளையே வெளிச்சமாகவும் தெரியவைக்கும் வகையில் ஒரு சிறு கனவுத்துண்டைக் கண்டது. அந்தக்கனவைப் பிரித்தால், அதற்குள் பல்வேறு உலகங்கள் உலாத்திக்கொண்டிருந்தன.

ஓருலகத்திலிருந்து மறு உலகத்திற்கும், மறு உலகத்திலிருந்து மற்றோர் உலகத்திற்கும் அலைந்து கொண்டிருந்தன சில பைசாசங்கள்.

அது ஒரு விசித்திரமான உலகம். ரத்தம் வெள்ளையாயிருக்கும், நெருப்புமிழும் டிராகன் பூனைபோல் மடியிலுறங்கும், நகரமே சர்ப்பமாகும். அந்த உலகத்தைக் கேட்க, இரைச்சல்களைக் கழித்து, நிசப்தத்தைக் கேட்கும் காதுகள் வேண்டும். நிறங்களைக் கழித்து நிறமின்மையைப் பார்க்கும் காதுகள் வேண்டும். சலனங்களை ஒதுக்கி, சலனமின்மையை உணரும் புலன் வேண்டும்.

இவை எதுவுமே இல்லையென்றால், அதைப்படித்து, அந்த அனுபவங்களைப்பெற Nilaraseegan - நிலாரசிகன் எழுதிய ஜூலி யட்சி வேண்டும்.

வித்யாஸமான சிறுகதைத் தொகுப்பு.

ஒவ்வொரு கதையும் ஓர் அனுபவம். வெவ்வேறு களத்தில், உலகத்தில், வயதில், நோக்கத்தில் அவை இயங்கினாலும் இறுதிக்கதையில் அவை ஒரு புள்ளியில் இணைந்து, இணை அண்டங்கள் ஓரண்டமாய் ஒழுங்குபடுகின்றன.

இந்தக்கதையில் இன்னது புரிந்தது என்பதைவிட, இன்ன மாதிரியான உணர்வைத்தந்தது எனும் வகையான புக்.

மிகவும் மெல்லிய, ஆனால் கனமான புக். நேரம்காலம் பார்க்காமல் மழைபார்த்தலோ மலைபார்த்தலோ பிடிக்கும் என்போர் படிக்க வேண்டிய புக். அவற்றைப் பார்த்ததில்லை என்போர் இப்புக்கைப் படித்தால் இனி பார்க்கப்பிடிக்கும்.

பு/கடிச்சுதா? புடிச்சது....இல்ல, அதுக்கும் மேல...

புக்குப்பெயர் : ஜூலி யட்சி
வகை: சிறுகதைத் தொகுப்பு

பதிவிட்ட சுட்டி:  https://www.facebook.com/bookpoochi/posts/1552115728375894?fref=nf

To buy Julie Yatchi click here : http://tinyurl.com/JYatchi

Tuesday, January 13, 2015

"ஜூலி யட்சி" சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து - விஜய் மகேந்திரன்

அதிநவீனப் பெண்களை மையமிடும் கதைகள் - நிலாரசிகனின் "ஜூலி யட்சி" சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து - விஜய் மகேந்திரன்


நிலாரசிகன் சரளமான தனது கவிதைகளின் மூலம் தமிழிலக்கிய சூழலில் கவனம் பெற்றவர். ஒரு கவிஞன் கதைகள் எழுத ஆரம்பிக்கும் போது அவனையறியாமலே கவித்துவச்செறிவு கதைகளுக்கும் வந்துவிடும். இவரது முதல் சிறுகதை தொகுப்பான "யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்" வாசித்து இருக்கிறேன். அதிலும் பெண்களை மையமாகக் கொண்ட பல கதைகள் உண்டு. தற்போது "ஜூலி யட்சி" என்ற புதிய தொகுப்புடன் வந்திருக்கிறார். 

வனதேவதைக்கதைகள், மேஜிக்கல் ரியலிசக் கதைகள்,எது கனவு? எது நிஜம்? என்றே பிரித்தறிய முடியாதபடி வித்தியாசமான கதைகளால் நிரம்பியிருக்கிறது இத்தொகுப்பு.பெரும்பாலும் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் இன்றைய மாடர்ன் பெண்கள் இவரது கதைகளில் நிரம்பத் தென்படுகிறார்கள். ராகினி, ப்ரியம்வதா,ஜூலி,வதனா,மிதா என்ற அழகிய நவீன பெயர்களில் கதைகளுக்குள் நடமாடுகிறார்கள். யதார்த்த கதை போல ஆரம்பிக்கும் கதைகள் மிகுபுனைவிற்குள் நுழைந்து மீண்டு திரும்புகின்றன. இவரது அபார கற்பனையுலகம் பல கதைகளில் வாசகனை பிரமிக்க வைக்கிறது.


எனக்கு இந்தத் தொகுப்பில் மிகவும் பிடித்த கதை "ப்ரியம்வதாவின் பகல்". இந்தக் கதையின் தலைப்பு தவிர வேறெங்கும் அவளது பெயர் வருவதில்லை. காரணம் அவள் பெயரை மறந்துவிடுகிறாள். அல்லது யாரும் அவளைப் பெயர் சொல்லி அழைப்பதில்லை. அவளது காதலன் இந்திரன். இருந்தாலும் நகரத்தனிமை அவளை வாட்டுகிறது. தேவலோக இந்திரனே அவளிடம் "டியர் ஜில்ஸ்" என்று குறுஞ்செய்தி அனுப்புவதாக இந்தக் கதையை அமைத்து இருக்கிறார் நிலாரசிகன். இறுதியில் அவள் ஒரு முடிவை எடுக்கும் போது அவளது பெயர் நினைவுக்கு வருகிறது. நகரத்தில் தன்னை தொலைத்து தேடுபவர்கள் அதிகம் என்பதை இக்கதை குறியீடாக சொல்கிறது. 'அதிகாலையில்  படுக்கையறை யன்னலை கொத்துகிற காகம்தான் அவளுக்கு அலாரம்'  என்று கவித்துவத்துடன் ஆரம்பித்து  மலை அவள் பெயரைச் சொல்லி அழைத்தபடி ஓடிவந்தது என முடிகிறது. இம்மாதிரி கதைகள் எழுதுவதற்கு கொஞ்சம் திறமையும் கற்பனையும் இருந்தாக வேண்டும். "ப்ரியம்வதாவின் பகல்" நிலாரசிகன் எழுதிய கதைகளில் மிக முக்கியமானது என படிப்பவர்களும் உணர்ந்து கொள்வார்கள். விவரணைகளில் பல இடங்களில் கவிதைக்கும் சிறுகதைக்குமான இடைவெளியை நிரப்புகிறார்.


"கேவல்" என்ற கதை காணாமல் போகும் அப்பாவை தேடும் மகளுடையது போல எழுதப்பட்டிருந்தாலும் முடிவில் கதையின் திசை தலைகீழாக மாறிவிடுகிறது. இந்தக்கதையில் கதை எது? உண்மைச் சம்பவமா? கற்பனையா என்று எளிதாக கண்டு கொள்ள முடியாதபடி அருமையாக எழுதியிருக்கிறார்.


பாலியல் அத்துமீறல்கள் நடத்தும் ஆண்களை பழிவாங்க, ஜூலி என்ற நவீனப் பெண் ஜூலி யட்சியாக உருமாறுகிறாள்.தேவதைக்கதை வகையைச் சேர்ந்தது "ஜூலி யட்சி" சிறுகதை. ஆண்களால் ஏமாற்றப்படும் பெண்கள் இவரது கதைகளில் வீட்டுக்குள் முடங்கிவிடுவதில்லை. எதிர்த்து நிற்கிறார்கள்.சண்டை இடுகிறார்கள். பழிக்கு பழியும் வாங்குகிறார்கள். இவரது பல கதைகள் அதிநவீனப் பெண்களின் உலகை தெளிவாக காட்டுகிறது.


தொகுப்பில் முதல் கதையான "தர்ஷிணிப்பூ" மரத்தினுள் இருந்து வெளிவரும் தேவதையைப் பற்றியது. கானகம் அழிக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகளை சொல்கிறதா, அல்லது பெண்களுக்கு எதிரான வன்முறையை சொல்கிறதா என்றால் இரண்டையும் வலியுறுத்துகிறது. சூழலியல் மீது நிலாரசிகனுக்கு எப்போதும் அக்கறை உண்டு. அவரது கவிதைகளில் வரும் எண்ணற்ற பறவைகளும் மீன்களும் இதற்கு சாட்சி. "தர்ஷிணிப்பூ" கதையிலும் அதை செய்திருக்கிறார்.


"குறளியின் டிராகன்" கதையில் குள்ளமாக இருப்பதற்காக சமூகத்தால் ஒதுக்கப்படும் பெண், குன்றாத  இளமையையும், அழகையும் வரமாக பெற்ற பின் அவளுக்கு பின் அலையும் இளைஞர்களையும் பெண்களே அவளைப் பார்த்து பொறாமைப்படுவதாலும் தனிமை நிறைந்ததாய் மாறிப் போகிறது அவளது வாழ்க்கை.

"ஜூலியட்சி" தொகுப்பு முழுவதும் உள்ள கதைகள் சரளமான எளியமொழிநடையிலும் அதே நேரத்தில் அதீத கற்பனைத்திறனுடனும் எழுதப்பட்டிருக்கிறது. படிப்பவர்களுக்கு ஒரு புதிய உலகத்தை தரிசிக்க செய்யும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. நிலாரசிகனுக்கு முழுநீளநாவல் எழுதும் அளவுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு அனுபவங்கள் உண்டு.

அதை இந்த ஆண்டு அவர் செய்ய வேண்டும். புத்தகத்தை வெளியிட்டுள்ள "பொள்ளாச்சி இலக்கிய வட்டம்" அமைப்பினருக்கு நிறைய நல்ல புத்தகங்களை கொண்டு வர என்னுடைய வாழ்த்துகள்.

நூல்: ஜூலி யட்சி
ஆசிரியர் : நிலாரசிகன்
விலை: ரூ.80
வெளியீடு: பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
இணையத்தில் வாங்க:
http://www.wecanshopping.com/products/%E0%AE%9C%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF.html

Monday, January 12, 2015

To buy my books at Chennai Book fair


சென்னை புத்தக கண்காட்சியில் எனது நூல்கள் கிடைக்குமிடங்கள்:

வெயில் தின்ற மழை - கவிதைத் தொகுப்பு - உயிர்மை

கடலில் வசிக்கும் பறவை - கவிதைத் தொகுப்பு - அகநாழிகை

ஜூலி யட்சி - சிறுகதைத் தொகுப்பு - பரிசல், அகநாழிகை,டிஸ்கவரி,அகநி,புதுப்புனல் ஸ்டால்களில் கிடைக்கும்
(பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் அனைத்து வெளியீடுகளும் இங்கே கிடைக்கும்)

இணையத்தில் வாங்க:

http://www.wecanshopping.com/products/ஜுலி-யட்சி.html

Wednesday, January 07, 2015

அனைவரும் வருக!