Thursday, January 22, 2015

ஜூலி யட்சி - விமர்சனம் 3

நெஞ்சில் நிறைந்த நிலாரசிகன் !

நிலாரசிகனின் ‘ஜூலி யட்சி’ சிறுகதைத் தொகுப்பினை ஒரே மூச்சில் படித்து விட்டேன். சில கதைகளை இரண்டு மூன்று முறை நிதானமாக படித்து உள்வாங்கினேன். 

நிலாரசிகனின் எழுத்துலகம் கனவுகளோடு வாழும் மனிதர்கள் நிஜங்களோடு சமரசமின்றி எப்படியெல்லாம் முரண்பட்டு வதையுறுகிறார்கள், போராடுகிறார்கள், பழிதீர்க்கிறார்கள் என்பதை புனைந்துரைக்கிறது. கதைகளில் வரும் ஆணும் பெண்ணும் கனவுலக கதாப்பாத்திரங்களோடு வாழ்கிறார்கள். நிகழ்காலம் அவர்களுக்கு மன உகந்த மார்க்கமின்றி நகர்வதால் அவர்கள் தங்களின் உலகத்தை மோகினிகளோடும், தேவதைகளோடும், டிராகனோடும் வடிவமைத்துக் கொண்டு உழல்கிறார்கள்.

ஆண்களின் நயவஞ்சகத்தினால் ஏமாறும் பெண்கள் குரூரமாக ஆண்களை பழிவாங்குகிறார்கள். ஒரே பெண் இரண்டு பெயர்களில் இரண்டு ஆண்களை பழிவாங்குகிறாள். பெண் சர்வ சுதந்திரம் விருப்பம் உள்ளவளாக, அம்மா,அப்பாவின் பார்வையில் படாத தூரத்திற்கு சென்று தன்னை தன் சுதந்திரத்தை பேணுபவளாக சித்திரிக்கப்படுகிறாள். அழகற்ற பெண் தான் அழகியாக உலாவரும் கனவுலகில் வாழ்கிறாள். அவள் டிராகனோடு படுத்துறங்குகிறாள். இங்கே டிராகன் தனிமையின் குறியீடு.

சமகால உலகப் பொருளாதார வளர்ச்சியின் நீட்சியில் மனிதப் பண்புகள் சிதைவுண்டு போவதை மென்மையாக கவிதையில் சொல்வதுபோல சிறுகதைகளாக சொல்லியிருக்கிறார். சிறுகதைகளின் ஊடே செல்லும் இவரது சொல்லாடல்களில் சிலவை மனதில் அதிர்ச்சியூட்டுகின்றன. எளிமையான சொல்லாடல்களின் வன்முறை திகைப்பூட்டுகின்றன.
பெண் என்பவளை போகப் பொருளாக பாவித்து ஒரு இரவிற்கு மட்டும் அழைக்கும் ஆண் மகனை அழைத்துச் சென்று அவனுக்கு தண்டனையாக அவனது உச்சந்தலையில் கத்தியை அழுத்தி அது தாடையைக் கிழித்துக் கொண்டு வருவதை பார்த்து சிரித்துக் கொண்டே அவனது கழுத்தில் கால்வைத்து அழுத்துகிறாள். என்ன கொடூரம். உன்னால் முடியாது என்றால் புறந்தள்ளிப் போகாமல் அவனுக்கு தண்டனைக் கொடுக்கும் அதிகாரம் யார் கொடுத்தது.

அவனது அழைப்பினைக் கூட ஒரு இடத்தில் நாகரிகமாக ‘‘தினம் தினம் கண்களால் தன் உடலை புசிக்கும் ஆண்களைப் போல இவன் தன் உடலை புசிக்க நேரிடையாக இவளிடம் கேட்கிறான். நல்லவர் வேடமிட்டு கண்களால் உண்ணும் அவர்களை விட இவன் எவ்வளவோ மேல் என்று சில நாட்கள் தோன்றும்,’’ என்று அவளது வார்த்தைகளிலேயே சொல்லி ‘’இருந்தாலும் அவனைப் பழிவாங்கும் நேரத்திற்காக காத்திருந்தாள்’’. என்றும் சொல்லாடுகிறார் நிலாரசிகன்.

‘மழைத் தேள்’ சிறுகதையில் பருவமடைந்த பத்தாம் வகுப்புப் படிக்கும் பெண் மழையை வெறுக்கிறாள். யாரால் மழையை வெறுக்க முடியும். ஆனால் இவளால் மழை பொழியும் பொழுதை இரசிக்கமுடியாமல் போகிறது. சக மாணவன் ஒருவனால் அவமானத்திற்கும் ஏமாற்றத்திற்கும் உள்ளாகிறாள். அவன் அவளை ஏறெடுத்துப் பாராமல் செல்லும் நாளில் மழை பொழிகிறது. அன்றிலிருந்து அவளால் மழையை இரசிக்க முடியவில்லை. மழையின் மீது வெறுப்பும் கோபமும் அதிகரிக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த இந்த விசயம் அவளது மனதை மழை பெய்யும் போதெல்லாம் வதைக்கிறது. இந்த வாதை தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தில் கொண்டு போய்விடுவதை நாசுக்காக சொல்லியிருக்கிறார். இந்த சிறுபெண்ணிடம் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது. ஒரு பாலியல் சார்ந்த மனத்தகிப்பு அல்லது அறியாப் பருவ நிகழ்வு துக்கமாக சோகமாக மனதில் தகித்துக் கொண்டே இருக்கிறது. ‘’எழுந்துவிடலாமா அல்லது அப்படியே படுத்திருக்கலாமா என்று குழம்பியபடி கிடந்தாள் ஒய்ந்த மழையின் ஈரத்தை வெறுத்தபடி.’’ என்று கதை முடிகிறது.

இதுதான் உண்மை. ‘மழைத் தேள்’ கதையில் எந்த கனவும் இல்லை. முற்றிலும் நிஜம்தான். மனதைக் கிழிக்கும் நிஜம். இந்த நிஜத்திற்கு எதிராக எதுவும் செய்ய முடியாது தவிக்கும் எழுத்தாளனின் மனம் கடைசி வரிகளில் இயல்பாக வெளியாகிறது.

வேலைக்காக நகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் செல்லும் பெண்கள் அவ்விடங்களில் தனியாக வாழும் நிலைக்குத் தள்ளப்பட்ட இன்றைய சமூக சூழலைப் பெண்கள் தமது விடுதலையாக சுதந்திரமாக தப்பித்தலாக உணர்கிறார்கள் என்ற கருத்தினை இவரது சில சிறுகதைகள் முன் வைக்கின்றன.

உலகமயமாக்கல் சார்ந்து இயங்கும் நம் சமூகத்தின் வளர்ச்சியில் வீழ்ந்து கிடக்கும் கலாச்சாரம் பற்றிய ஒரு தேடல் இவரது கதைகளின் மையத்தில் பூடகமாக ஊடாடுகிறது.

தர்ஷிணிப்பூ, மழைத் தேள், விசித்திரன், வேலை இழந்தவளின் நாட்குறிப்பில் தகிக்கும் கோடை, மற்றும் கேவல் குறிப்பிடும்படியான நட்சத்திரக் குறியீட்டுக் கதைகள். கதை-உரை தொடக்கமே பரவசப்படுத்துகிறது.

எல்லா கதைகளுமே வாசகனை படிக்கத் தூண்டும் கவிதை கசிந்துருகும் நடையில் நகர்கிறது. இவரது எழுத்துக்கள் தமிழ் படித்த எல்லார் மனதையும் வெல்லும் எழுத்துக்கள். இன்றைய தமிழ் இலக்கிய சூழலில் நம்பிக்கைக்குரிய எழுத்தாளர்களின் பட்டியலில் இவரது பெயர் தவிர்க்க இயலாதது.

-தனுஷ்


This article link:
https://www.facebook.com/photo.php?fbid=786197114802165&set=a.382970715124809.93447.100002356512849&type=1&theater

To buy Julie Yatchi:

http://tinyurl.com/JYatchi

0 comments: