Wednesday, February 08, 2012

தேரி கவிதையுரையாடல் 2012


Sunday, February 05, 2012

கவிதைகள் இரண்டு

தட்டானும் தவறியவளும்

வெகுநாட்கள் கழித்து தோழியொருத்தியை
அழைக்காமல்
கலந்துகொண்ட விழாவொன்றில் சந்தித்தேன்.
கூடவே ஒரு தட்டானையும்.
கரும்பச்சை நிறத்தில் இறக்கை மினுமினுத்தது.
தட்டானிடம் பேசுவதற்கு எதுவுமில்லை
எனினும் பேசினேன்.
தன் பெயர் தட்டான் என்றது.
வானமென்பது வெறும் புள்ளி என்றும்
உயரப்பறத்தலின் அற்புதங்கள் பற்றியும்
பேசிக்கொண்டிருந்தது.
விழாவின் இறுதியில் என்னிடம் வந்து
நலமா என்றாள் தோழி.
தலையில் வந்தமர்ந்த தட்டான்
மலம் கழித்துச் சென்றது.
நலமே என்றேன்.


முகமற்றவளின் சித்திரம்

தொடர்ந்து தன் புகைப்படங்களை
மாற்றியபடியே இருக்கிறாள்.
வெவ்வேறு
அழகிகளின் படங்களால் அவளது
முகநூல் தன்னை புதுப்பித்துக்கொள்கிறது.
ஒவ்வொரு சித்திரங்களின் வழியே
தன் அழகின்மையை கடந்து செல்கிறாள்.
அழகிகளின் சித்திரம் கிடைக்காத
நாளொன்றில்
கண்கள் திறக்காத பூனைக்குட்டியின்
படமொன்றை வைத்துப்பார்க்கிறாள்.
அது                                              
அழகின்மைக்கும் அழகிற்கும்
நடுவே அவளாகியிருந்தது.

-நிலாரசிகன்.
[பண்புடன் மின்னிதழில் வெளியான கவிதைகள்]