Monday, January 10, 2011

அடலேறு


நன்றி: அடலேறு: http://adaleru.wordpress.com/2011/01/07/veyil-thindra-malai/ 


புதுக்கவிதையில் இருந்து நவீன கவிதை வாசிப்பிற்கு வந்த பிறகு கவிதையின் சாராம்சமே முற்றிலும் மாறிப்போய் ஒரு புது உலகம் இயங்கிகொண்டிருப்பது எப்படி மகிழ்ச்சியை தந்ததோ அதே மகிழ்ச்சியை நிலா ரசிகனின் “வெயில் தின்ற மழை ” நவீன‌ கவிதை தொகுப்பும் தந்தது. 

நிலாவின் மயிலிறகாய் ஒரு காதல், பட்டாம் பூச்சியின் கனவுகள் புத்தகத்தை படித்துவிட்டு வெயில் தின்ற மழை படிப்பவருக்கு இதன் ஆசிரியர் தான் இந்த புத்தகத்‌தை எழுதிய‌வ‌ர் என்ப‌து ஆச்ச‌ர்ய‌மாக‌த்தான் இருக்கும். இந்த மனிதர் கவிதைகளுக்கு வார்த்தைகளை எங்கிருந்து பிடிக்கிறார் என்பது இன்னும் எனக்கு புதிராகவே உள்ளது.

நல்ல குளிர் அன்று இரவு ப‌தினொன்று ம‌ணியிருக்கும் அப்போது தான் நிலாவிட‌ம் க‌விதை தொகுப்பை வாங்கி வ‌ந்தேன். குளிருடன் சேர்ந்த‌ இர‌வு அறையில் அனைவ‌ரையும் உற‌ங்க‌ வைத்திருந்தது. கால்கள் தரையில் பட்டவுடன் சில்லிட்டது. வழக்கமாக புத்தகம் படிக்கும் ஜன்னலருகே  இருக்கையை இழுத்துப்போட்டு உட்கார்ந்து கொண்டேன். வெளியே இருள் என்னை பார்த்துக்கொண்டிருப்பதாய் இருந்தது.

வெயில் தின்ற மழை தொகுப்பை வாசிக்க தொடங்கினேன். முதல் பக்க அட்டை , பின் பக்க மனுஷ்யபுத்திரன் வார்த்தைகள் என அனைத்தும் கடந்து உள்சென்றதும் , நிலாவின் அறிமுகம். கவிதைக்கு வந்தேன் முதல் கவிதையே புதுக்கவிதை போல எளிதில் கடந்து போக முடியாது என முரண்டு பண்ணியது. இரண்டு முறை வாசித்தேன் ஒரு அர்த்தத்தை தந்தது. அடுத்த முறையும் வாசித்தேன் இன்னொரு அர்த்தத்தை தந்தது.புதுக்கவிதையில் நமக்கான அர்த்தங்களை கவிதையோடு நாம் தான் இணைத்துக்கொள்ளவேண்டும் என்பது அலாதியாக இருந்தது. இப்போது குளிர் ஜன்னல் வழி உள்ளேறி கைகளையும் சில்லிட வைத்திருந்தது. எனக்கு ஒரு கவிதையின் வரி பிடித்துவிட்டால் அதன் தாக்கமே இரண்டு நாள் இருக்கும். எப்போதும் அதன் வரிகளையே முணுமுணுத்துக்கொண்டிருப்பேன். 

அடிக்கொருமுறை அந்த பக்கத்தை திருப்பி திருப்பி பார்த்தும் சிரித்துகொண்டுமிருப்பதை வித்தியாசமாக இருக்கிறது என்று நண்பர்கள் சொல்லுவதுண்டு.கவிதையை இதைவிட வேறு எதாவது முறையில் கொண்டாட முடியாதா என யோசித்திருக்கிறேன். கைகள் சில்லிட மனதுக்கு நெருக்கமான கவிதைகளை படித்துக்கொண்டிருக்கிறேன் என்ற நினைப்பே சந்தோஷத்தை கொடுத்தது. நிலாவின் பல கவிதைகளை திரும்ப திரும்ப வாசிக்கும் போது அது தரும் பரிமாண மாற்றங்கள் புதுமையான‌ வேறொரு மனநிலையில் வைத்திருந்ததாக உணர்ந்தேன்.

வார்த்தைகளற்ற மென் இசையை எனக்கு மட்டும் கேட்கும் அளவு வைத்துக்கொள்ள வேண்டும் போல தோன்றியது. மென் இசையுடன் வாசிக்கப்படும் கவிதை அதன் நிர்வாணம் கடந்து ரசிக்கப்படுகிறது என எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். இசையை மெல்ல சுழலவிடேன்.இன்னும் அதிக தீரத்துடன் ஜன்னல் வழியே குளிர் அறைக்குள் இறங்கிக்கொண்டிருந்தது.சில கவிதை பக்கங்கள் பல நிமிடங்களுக்கு என்னை கட்டிப்போட்டது. மெல்ல ஒவ்வொரு கவிதைகளுக்குள் இருந்து வெளிவந்து அடுத்த கவிதைக்குள் மாட்டிகொண்டேன். வெளியெங்கும் இருட்டு, சில்லிட வைக்கும் குளிர், அறையெங்கும் மென் இசை, கையில் கவிதை என இரவு அத்தனை அழகாகியிருந்தது

என்னை க‌வ‌ர்ந்த‌ சில‌ க‌விதைக‌ள்

குழ‌ந்தையாத‌லின் சாத்திய‌ங்க‌ள் ஏதும‌ற்ற‌
இர‌வொன்றில் உன‌க்கொரு
உடைந்த‌ பொம்மையை ப‌ரிச‌ளித்து
சிரிக்கிற‌து கால‌ம்.
மென்காற்றில் சித‌றும் சார‌லில்
ந‌னைந்த‌ப‌டி த‌னித்த‌ழுகிறாய்
நீ.
(வெறுமையின் அழ‌கான‌ வ‌ர்ண‌னை இது )
****
வீழ்ந்து கிட‌த்த‌லை விட‌
ப‌றந்து சாத‌லே பெரிதென‌
உண‌ர்த்தின‌
ச‌வ‌ப்பெட்டிக்கு காத்திருக்கும்
துருப்பிடித்த‌ ஆணிக‌ள்
*******
உதிர்ந்த‌ முத்தங்க‌ளை பொறுக்கும்
ந‌ட்ச‌த்திரா த‌ன் க‌ன்ன‌த்தின் சுருக்க‌ங்க‌ளை
வ‌ருடிக்கொடுக்கிறாள்.
சித‌றிக்கிட‌க்கும் முத்த‌ங்க‌ளின் ந‌டுவே
கால‌ம் க‌ண்சிமிட்டிக்கொண்டிருப்ப‌தை
வ‌லியுட‌ன் நோக்குகிற‌து அவ‌ள‌து க‌ண்க‌ள்.
தீராப்ப‌சியுட‌ன் வான‌ம் பார்த்துக்
க‌த‌றுகின்ற‌ன‌ வீழ்ந்த‌ இலைக‌ள்.
மெல்ல வழுக்கிறது
நிறமற்ற மழை
******
இந்த கடைசி கவிதையை என்னால் அத்தனை சீக்கிரம் கடந்து போக முடியவில்லை. வலிகளை வார்த்தைபடுத்துவது கடினம் என்று சொல்லிவிட்டு அனாசயமாக நட்சத்திராவின் வலிகளை வார்த்தைபடுத்தியுள்ளார். கவிதையில் வரும் நட்சத்திரா பற்றியே நீண்ட நேரம் யோசித்துக்கொண்டிருந்தேன்.

வார்த்தைக‌ளையெல்லாம் பின்னிப்போட்டு கிற‌ங்க‌டிக்கும் க‌விதை த‌ருவ‌தில் நிலா எப்போதும் தனக்கான இடத்தை தெரிந்தே வைத்திருக்கிறார் என்று தோன்றியது.  இரவுகளுக்கு கைநீளுவதும், உலகின் மிகப்பெரிய தவறை துளியாக்குவதும் என மாயவித்தைகளை கண் முன்னே கடைபரப்பிக்கொண்டிருந்தது வெயில் தின்ற மழை. சில‌ க‌விதைகளில் ஆரம்பங்களிலேயே உச்ச‌த்தை தொடுகிறார்.

க‌டைசிவ‌ரிக‌ளில் வ‌சிய‌ம் த‌ட‌வியே க‌விதைவ‌டிக்கிறார் நிலா. கடைசி கவிதையை உணர்ந்து முடித்ததும் தான் தான் தெரிந்தது வெயில் தின்ற மழை என்னுடைய பாதி இரவை முழுதாக தின்று முடித்திருந்தது என்று. நாற்காலியை விட்டு எழுந்தேன். மணி நான்கு என கடிகாரம் காட்டிய‌து.

புத்த‌க‌த்தை மூடிவைத்துவிட்டு அத‌ன் நினைவிலேயே இருந்தேன். தேனீர் குடிக்க வேண்டும் போல இருந்தது. எங்காவ‌து வெளியில் செல்ல‌ வேண்டும் என்று தோன்றிய‌து. டிச‌ம்ப‌ரில் மாதங்களின் அதிகாலை அழ‌கான‌து அவ‌ற்றை ர‌சிக்க‌ வேண்டும் போல‌ இருந்த‌து. கவிதை புத்தகத்தை எடுத்துக்கொண்டு வெளியே சென்றேன். உட‌லை ந‌டுங்க‌வைக்கும் டிசம்பர் மாத குளிர் என்னை உள்ளிழுத்துக்கொண்ட‌து

சோடியம் ஒளி மெல்ல கசிந்து கொண்டிருந்தது. பின்னிரவில் சோடியம் விளக்கை சுற்றிய விட்டில்  பூச்சிகள் விள‌க்கின் அடியில் விழுந்திருந்தன‌.சாலையில் நான், குளிர்,க‌விதை என‌ மூன்று பேர் ம‌ட்டும் இருப்ப‌தாய் தோன்றிய‌து.

சோடிய‌ம் விள‌க்கில் இன்னும் சில‌ க‌விதைக‌ளை ப‌டித்தேன். முன்பு ப‌டித்த‌தை விட‌ இன்னும் அழ‌காக‌ தோன்றிய‌து.  சூழ்நிலைகளும் கவிதையின் அழகியலை தீர்மானிக்கின்றன என்று உணர்ந்தேன். நிலாவின் க‌விதைக‌ளில் வ‌ரும் ந‌ட்ச‌த்திராவும் என்னுடைய‌ க‌விதைக‌ளில் வ‌ரும் தூரிகாவும் ஒருவ‌ரே என்று நிலா சொன்னது நியாபகம் வந்தது. ந‌ட்ச‌த்திராவை பார்க்க‌ வேண்டும் போல‌ இருந்தது.

குளிரில் நடுங்கியபடியே சைக்கிள் தள்ளிக்கொண்டு வந்த ஒருவர் என்னை பார்த்து புன்னகைத்துவிட்டுப்போனார்.அறைக்கு வந்து மீண்டும் பிடித்த கவிதைளை படித்தேன் புத்த‌க‌த்தை நெஞ்சில் சாய்த்த‌ப‌டி எப்போது உற‌ங்கிப்போனேன் என நினைவில்லை. காலை எழுந்ததும் ஒரு வரி பிசகாமல் நிறைய‌ க‌விதைக‌ள் நியாப‌க‌த்திற்கு வ‌ந்தது.இதே போல் என்னுடைய‌ ஒன்றாம் வ‌குப்பு த‌மிழின் முத‌ல் பாட‌லும் , பக்கத்தின் வண்ணம் என மாறாமல் சில‌ ச‌ம‌ய‌ம் நியாப‌க‌த்திற்கு வ‌ரும், சில நேரங்களில் அந்த புத்தகத்தின் வாசம் கூட உணர்ந்திருக்கிறேன். சிரித்துக்கொண்டேன். ப‌டுக்கையில் இருந்து கொண்டே சில‌ கவிதைக‌ள் வாசித்தேன். அன்று மாலை வ‌ரை வெயில் தின்ற மழையுடன் பேசிக்கொண்டிருந்தததாக நியாபகம்.

ம‌ழையுட‌ன் க‌ழியும் இர‌வும்,ம‌ன‌திற்கு பிடித்த‌ க‌விதைகளுடன் தொடங்கும் காலையும் எப்போதுமே வ‌சீக‌ர‌மான‌வைகள்.

புத்த‌க‌த்தின் பெய‌ர்: வெயில் தின்ற‌ ம‌ழை ஆசிரிய‌ர் : நிலார‌சிக‌ன் ‌ ( உயிர்மை பதிப்பகம் ) விலை : 50 ரூபாய் ‌ இணையத்தில் பெற‌: http://tinyurl.com/2uqqkta

கல்பொம்மைகள்




1.பொம்மைகள் குவித்திருக்கும் அறை

பொம்மைகள் குவித்திருக்கும்
அறைக்குள் அனுமதியின்றி நுழைகிறது
மெளனம்.
ஒவ்வொரு பொம்மையிடமும் ஏதோவொன்றை
தேடுகிறது.
அறையின் மூலையில் அமர்ந்து
சிறிதுநேரம் விசும்புகிறது.
பின்,
பெண்ணாகி வெளியேறுகிறது.
மரித்த குழந்தையின் பொம்மைகளை
வேறெப்படி அணுகுவாள் அவள்?


2.கல்பொம்மைகள்
என் தனிமைக்குள் வந்துவிழுந்த
கற்களை பத்திரப்படுத்தியிருக்கிறேன்.
அவை வெவ்வேறு நிறத்திலும் அளவிலும்
இருக்கின்றன.
ஒவ்வொரு கற்களிலும் எறிந்தவரின்
பெயரை வெகு சிரத்தையுடன் எழுதுகிறேன்.
நீ எறிந்த கற்களில் மட்டும்
சிறு சிறு பொம்மைகள் வடித்திருக்கிறேன்.
ப்ரியங்களால் நிறைந்திருக்கும்
பொம்மைகளில்
உன் பிரிவு நாளை குறித்துவிட்டு
தனிமைக்குள் நுழைந்து
கதவடைத்துக்கொள்கிறேன்.
என் தனிமையுடன் உரையாடிக்கொண்டே
இருக்கின்றன கல்பொம்மைகள்.

- நிலாரசிகன்.

Thursday, January 06, 2011

நிழல்களுடன் பேசுபவன்



1.
விடைபெறல் அவ்வளவு
எளிதாய் நிகழ்வதில்லை.
ஒரு கையசைப்பு போதும்
கடைசி வரை உள்ளிருக்க.

2.
வெளியே கேட்கிறது அவர்களது
காலடி சப்தம்.
ஓடிச்சென்று ஒளிந்துகொள்ளவோ
அல்லது
எதிர்த்து நின்று உற்றுப்பார்க்கவோ
இயலாமல் கால்கள் கட்டிக்கொண்டு
தலை கவிழ்ந்து அமர்ந்திருக்கிறேன்.
அவர்கள் வருகிறார்கள்.





3.
நிழல்களுடன் பேசுபவன் கைகளில்
வண்ணத்துப்பூச்சியொன்றை வரைகிறான்.
ஒவ்வொரு நிழலுடன்
பேசும்பொழுது அது சிறகடித்துக்கொள்கிறது.
உக்கிர வெப்பம் பாதங்களின் வழியே
அவனுள்ளேறும்போது
வலியுடன் கண்ணீர்சிந்துகிறது.
கல்லறை நிழலில்
அவன் உறங்கும் தருணங்களில்
தன் வர்ணங்களை கறுப்பு வெள்ளையாக
மாற்றிக்கொள்கிறது.
யாருமற்ற வெளியொன்றில்
ஒரு தவறை
தன் நிழலுடன் அவன் துவங்குகையில்
நீங்கிச் செல்கிறது நிரந்தரமாய்.


4.
யாரும் அறியா ரகசிய பொழுதுகளில்
அதன் தனித்த உலகில்
கட்டியமைக்கப்பட்ட சொற்களை
சிதறடித்து விளையாடி மகிழ்கிறது.
சொற்கள் சிதறி வீழ்வதை
பேராவலுடன் ரசித்து நடனமிடுகிறது.
சில நாட்களாய் அதன் வருகையை
எதிர் நோக்கி காத்திருக்கிறேன்
சிதறாத சொற்களின் நடுவே அது
மரித்துப்போனதாக எனக்குச் சொல்லப்படுகிறது.
நிச்சலன என்னுலகை தேடி துவங்குகிறது
என் பயணம்.

 

-நிலாரசிகன்.

---------------------------------------------------------------------------
சென்னை புத்தக காட்சியில் என் நூல்கள் கிடைக்குமிடம்.
வெயில் தின்ற மழை - கவிதைகள் - உயிர்மை பதிப்பகம் - அரங்கு எண்: F3
யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள் - சிறுகதைகள் - திரிசக்தி பதிப்பகம் - அரங்கு எண்: 188
---------------------------------------------------------------------------

Tuesday, January 04, 2011

இளம் தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களின் உரையாடல்

Monday, January 03, 2011

முதல் விமர்சனம்



[கவிஞர்.உமாசக்தி எழுதிய விமர்சனம்: http://umashakthi.blogspot.com/2011/01/blog-post.html ]

”வெயில் தின்ற மழை” நிலாரசிகனின் கவிதை நூலில் தலைப்பே வாசகனை கவிதைக்குள் இழுத்துச் செல்லும் மந்திரச் சொல்லாக இருக்கிறது.

தனிமையும் அது தரும் தீரா துயரும் மனிதகுலத்திடமிருந்தே சிலசமய்ம நம்மை விலகிப் போகச் செய்வதாக இருக்கிறது. ஆனாலும் தனிமையின் ருசியை உணர்ந்துவிட்டால் விட்டு விலகுவதும் சாத்தியமன்று. இக்கவிதைகளில் பெரும்பான்மையானவை தனித்த மனதொன்று சில வார்த்தைகள் மூலம் தன் இறுக்கத்தை களைய முயல்கின்றது. அலைக்கழிக்கப்படும் ஆத்மாவின் துயரை கவிதை வரிகளாக்குகிறான் இக்கவிஞன்.

’வெயில் தின்ற மழை’யில் சிறுவர்கள் உலகமும் அழகாக விரிந்திருக்கின்றது. கனவுகள், தேவதைகள், நட்சத்திரா, கடல் என்று இயற்கை தனக்குள் நிகழ்த்திக் காட்டும் பரவசத்தை, ஆச்சரியங்களை, அழகாகப் படம் பிடித்துள்ளார்.

சில வரிகளை வாசிக்கையில் அவற்றை கடந்து போக முடியாமல் கவனம் முழுவதும் அங்கேயே மூழ்கிவிடுகிறது. உதா

“நீ நகர்ந்த பின்னும்
பிம்பங்களை காண்பிக்கிறது
கண்ணாடி”


இவ்வரிகளின் ஆழம் ஸ்தம்பிக்க வைக்கிறது. எதிலிருந்து விலகி விட்டாலும் விலகாத மனதங்கே புலப்படுகிறது.

”குளிரில் நடுங்கும் நாய்க்குட்டிகளின்
கதறல்களை நீ
கேட்கவில்லை”


மேலோட்டமாக வாசிக்கையில் இது ஜீவகாருண்ய விஷயம் போல இருந்தாலும் இவ்வரிகள் நிராகரிக்கப்பட்ட் ஒரு மனிதனின் அதிகப்பட்ச அலறலாக செவிக்குள் ஒலிக்கிறது. “ஒரு பறவை உதிர்த்துச் சென்ற இறகை நனைத்துக் கொண்டே இருக்கிறாள் மழைப்பெண் என முடிகிறது அக்கவிதை. மனதை வலிக்கச் செய்யும் பல கவிதைகளை நிலாரசிகனால் அனாயசமாக எழுதிச் செல்ல முடிகிறது.

மாய எதார்த்தவாத கதைகளை வாசித்திருக்கிறோம். கவிதைகளில் அதை சாத்தியப்படுத்தியிருக்கிறார் நிலா. இவரின் சில கவிதைகள் வேறு ஒரு உலகிற்குள் நம்மை பிரவேசிக்கச் செய்கின்றன. முற்றிலும் மாயத்தன்மை வாயந்த அவ்வெளிகளில் நமக்கு சில சிற்குகள் பரிசாகக் கிடைக்கின்றன.

"பழுத்த மஞ்சள் இலைகளை
ஒடித்துப்போடுகிறாள் வனத்தை
சுத்தம் செய்வதாக திரியும்
பாவனைப்பெண்.
பச்சை இலைகள் துயர்மிகுந்த
தலையசைப்புடன்
விடைகொடுக்கின்றன.
இளைப்பாற இலைதேடும்
வண்ணத்துப்பூச்சிகள்
வீழ்ந்து மரித்த மஞ்சள்
இலைகள் மீது வந்தமர்கின்றன.
பாவனைப்பெண்ணின் உடல்
கணப்பொழுதில்
நிறமிழந்து மண்ணில்
சரிகிறது.
அவள் உடலுக்குள்ளிருந்து
வெளியேறுகின்றன
அடர் மஞ்சள் நிற வண்ணத்துப்பூச்சிகள்."


இக்கவிதையில் அடர்ந்த மஞ்சள் நிற வண்ணத்துப்பூச்சிகள் படிமம் எத்தனை விதமான மன உணர்வுகளை நமக்குத் தருகின்றது என வரையறுத்துச் சொல்ல முடியவில்லை.
மிகவும் பிடித்த கவிதைகள் எவை என்றால் “என்னைச் சுற்றிய”. மெல்ல மெல்ல ஆட்கொள்கிறது, முதலில் அது நத்தை என்றே, உனக்கான கடைசி, கனவுகள் தகர்த்தெறிந்து (கடைசி நான்கு வரிகள் மிகவும் அற்புதம்) உதிர்ந்த முத்தங்களைப் பொறுக்கும் அந்த நட்சத்திராவை நாம் நேசிக்காமல் இருக்க முடியாது. ‘காயத்தின் ஆழத்தில்’ மழை ருசித்துக் கொண்டிருக்கும், தவிர்த்தலையும் ரசனையுடன், தெரிந்தே நிகழவிருக்கும் பிரிவை, கடல் குடிக்கும் பறவைகள், மூன்று முறை என்னை நான், என அத்தனை கவிதைகளும் அற்புதம்.


எல்லாக் கவிதைகளுமே தன்னளவில் நிறைவானதாய் உளளது. கவிஞனின் உள்மனது தவிப்பும் தகிக்கும் ஒவ்வொரு வரிகளிலும் தெறிக்கிறது. பல கவிதைகள் அனலாய் தகிக்கிறது. கட்டற்ற பிரியமும், களங்கமில்லா பேரன்பும், பெருங்காதலும், அதன் மறுப்பும், கனவுலகில் வசிப்புமாக நிலாரசிகனின் இக்கவிதைத் தொகுப்பு சொல்லில் அடங்காத வாசிப்பானுபவத்தை தருகிறது. அழகியலுடன் கூடிய செறிவான வார்த்தைகள், அலங்காரங்கள் அற்ற நேரடியான கவிதைகள் இத்தொகுப்பின் சிறப்பு.
இத்தொகுப்பினை ஒரே மூச்சில் வாசிக்க நேர்கையில் இது ஒரு நீண்ட கவிதைப் போலத்தான் தெரிகிறது. மேலும் கவிதைகள் எழுதப்பட்ட காலக்கட்டம் ரிசிஷன் பீரியட். அதில் ஏற்பட்ட மன உளைச்சல்களை வேறு விதமாக பதிவு செய்கிறார்.

பிரமிள், ஆத்மாநாம், தேவதேவன், பிரம்மராஜன், விக்ரமாதித்யன், கல்யாண்ஜி, கலாப்ரியா வரிசையில் அமைத்த சாலையில் நிலாரசிகன் தனக்கென ஒரு தனித்துவமான கோலத்தை வரைந்து கொண்டுள்ள தொகுப்பாக வெயில் தின்ற மழை அமைந்திருக்கிறது. வாழ்த்துகிறேன்.

(வெயில் தின்ற மழை - கவிஞர் நிலாரசிகன், உயிர்மை வெளியீடு, விலை Rs.50, இணையத்தில் வாங்க: http://tinyurl.com/2uqqkta  )

Saturday, January 01, 2011

வாசிக்க வேண்டிய சிறுகதை நூல்கள்



------------------------------------------------------------------------------------------------------------------------------
என் கவிதை நூல் "வெயில் தின்ற மழை" வெளியீட்டிற்கு வருகைதந்து ஊக்குவித்த நண்பர்கள்,சக பதிவர்கள்,அன்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. விழா முடிந்தவுடன் பதிவிட நினைத்து உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நன்றி தெரிவிக்க முடியாமல் போனது. மன்னிக்க.முகநூலிலும்,வலைப்பூவிலும் மட்டுமே சந்தித்த சில நண்பர்களை நேரில் கண்டது நெகிழ்ச்சி.

இணையம் மூலமாகவும் நூலைப் பெறலாம்: http://tinyurl.com/2uqqkta
சென்னை புத்தக கண்காட்சியில் உயிர்மை அரங்கில் கிடைக்கும். அரங்கு எண்: F3
-------------------------------------------------------------------------------------------------------------------------------



அன்பெனப்படுவது ஒரு வதை
வதையெனப்படுவது ஒரு மாயை
மாயையெனப்படுவது ஒரு துயர்
துயரெனப்படுவது அன்பின்
மற்றொரு பெயர்!
  - இவ்வார விகடனில் வெளியான கவிதை ------------------------------------------------------------------------------------------------------------------------------- 
புத்தாண்டில் புத்தக கண்காட்சி துவங்க இன்னும் சில நாட்களே இருக்கிறது. நண்பர்களுக்கு நான் வாசித்து மகிழ்ந்த நூல்களில் பட்டியலை தரலாமென்று நினைக்கிறேன்.இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள நூல் பட்டியல் தர வரிசையினால் அமைந்தது அல்ல.
சட்டென்று என் ஞாபகத்தில் மலர்ந்த வரிசை.பின்னூட்டங்களில் நண்பர்கள் நீங்கள் விரும்பிய நூலை பரிந்துரைக்கலாம்.

இனிய புத்(தக) ஆண்டு வாழ்த்துகள் :)

சிறுகதை தொகுப்புகள்:


1. வெய்யில் உலர்த்திய வீடு - எஸ்.செந்தில்குமார்
2.பூனைகள் இல்லாத வீடு - சந்திரா
3.காட்டின் பெருங்கனவு - சந்திரா
4.புனைவின் நிழல் - மனோஜ்
5. மதினிமார்கள் கதை - கோணங்கி
6.ஊமைச்செந்நாய் - ஜெயமோகன்
7.ஏற்கனவே - யுவன் சந்திரசேகர்
8. பெய்தலும் ஓய்தலும்/தோட்டத்திற்கு வெளியிலும் பூக்கள் - வண்ணதாசன்
9.நகரம் - சுஜாதா
10.காட்டிலே ஒரு மான் - அம்பை
11. மரப்பாச்சி/தொலைகடல் - உமா மகேஸ்வரி
12.அழுவாச்சி வருதுங்சாமி/மண்பூதம் - வாமு.கோமு
13.பிராந்து/சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன்
14.பதினெட்டாம் நூற்றாண்டு மழை - எஸ்.ராமகிருஷ்ணன்
15.அழகர்சாமியின் குதிரை - பாஸ்கர் சக்தி
16.புலிப்பானி ஜோதிடர் - காலபைரவன்
17.வண்ணதாசனின் அனைத்து சிறுகதைகளும்
18.உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்
19.ச.தமிழ்செல்வன் கதைகள் - தமிழினி வெளியீடு
20. மதுமிதா சொன்ன பாம்புக்கதைகள் - சாரு நிவேதிதா
21.மயில்ராவணன் -  மு.ஹரிகிருஷ்ணன்
22.அமெரிக்காகாரி - அ.முத்துலிங்கம்
23.புதுமைப்பித்தன் கதைகள்
24.மெளனி கதைகள்
25.தக்கையின் மீது நான்கு கண்கள் - சா.கந்தசாமி
26.ராஜன் மகள் - பா.வெங்கடேசன்

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூறு சிறுகதைகளின் பட்டியல்
இங்கே இருக்கிறது. வாசித்து மகிழுங்கள்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------


வருடத்தின் முதல் கவிதை:


நட்சத்திராவின் வானம்


கைகள் நிறைய பூக்களுடன் நின்றிருந்தாள்
நட்சத்திரா.
கதவு திறந்து உள் அழைத்தேன்.
சிறு சிறு பூக்களால் அறை நிரப்பினாள்.
பின்,
விரல்கோர்த்துக்கொண்டு
மடியிலமர்ந்து கதைகள் ரசித்தாள்.
அனைத்து கதைகளிலும் பறவைகளே
அவளை அதிகம் கவர்ந்தன.
விடைபெறும் தருணம்
அவளிடம் வானமும்
என்னிடம் சிறகுகளும் இடம் மாறியிருந்தன.

-நிலாரசிகன்.