Monday, January 03, 2011

முதல் விமர்சனம்



[கவிஞர்.உமாசக்தி எழுதிய விமர்சனம்: http://umashakthi.blogspot.com/2011/01/blog-post.html ]

”வெயில் தின்ற மழை” நிலாரசிகனின் கவிதை நூலில் தலைப்பே வாசகனை கவிதைக்குள் இழுத்துச் செல்லும் மந்திரச் சொல்லாக இருக்கிறது.

தனிமையும் அது தரும் தீரா துயரும் மனிதகுலத்திடமிருந்தே சிலசமய்ம நம்மை விலகிப் போகச் செய்வதாக இருக்கிறது. ஆனாலும் தனிமையின் ருசியை உணர்ந்துவிட்டால் விட்டு விலகுவதும் சாத்தியமன்று. இக்கவிதைகளில் பெரும்பான்மையானவை தனித்த மனதொன்று சில வார்த்தைகள் மூலம் தன் இறுக்கத்தை களைய முயல்கின்றது. அலைக்கழிக்கப்படும் ஆத்மாவின் துயரை கவிதை வரிகளாக்குகிறான் இக்கவிஞன்.

’வெயில் தின்ற மழை’யில் சிறுவர்கள் உலகமும் அழகாக விரிந்திருக்கின்றது. கனவுகள், தேவதைகள், நட்சத்திரா, கடல் என்று இயற்கை தனக்குள் நிகழ்த்திக் காட்டும் பரவசத்தை, ஆச்சரியங்களை, அழகாகப் படம் பிடித்துள்ளார்.

சில வரிகளை வாசிக்கையில் அவற்றை கடந்து போக முடியாமல் கவனம் முழுவதும் அங்கேயே மூழ்கிவிடுகிறது. உதா

“நீ நகர்ந்த பின்னும்
பிம்பங்களை காண்பிக்கிறது
கண்ணாடி”


இவ்வரிகளின் ஆழம் ஸ்தம்பிக்க வைக்கிறது. எதிலிருந்து விலகி விட்டாலும் விலகாத மனதங்கே புலப்படுகிறது.

”குளிரில் நடுங்கும் நாய்க்குட்டிகளின்
கதறல்களை நீ
கேட்கவில்லை”


மேலோட்டமாக வாசிக்கையில் இது ஜீவகாருண்ய விஷயம் போல இருந்தாலும் இவ்வரிகள் நிராகரிக்கப்பட்ட் ஒரு மனிதனின் அதிகப்பட்ச அலறலாக செவிக்குள் ஒலிக்கிறது. “ஒரு பறவை உதிர்த்துச் சென்ற இறகை நனைத்துக் கொண்டே இருக்கிறாள் மழைப்பெண் என முடிகிறது அக்கவிதை. மனதை வலிக்கச் செய்யும் பல கவிதைகளை நிலாரசிகனால் அனாயசமாக எழுதிச் செல்ல முடிகிறது.

மாய எதார்த்தவாத கதைகளை வாசித்திருக்கிறோம். கவிதைகளில் அதை சாத்தியப்படுத்தியிருக்கிறார் நிலா. இவரின் சில கவிதைகள் வேறு ஒரு உலகிற்குள் நம்மை பிரவேசிக்கச் செய்கின்றன. முற்றிலும் மாயத்தன்மை வாயந்த அவ்வெளிகளில் நமக்கு சில சிற்குகள் பரிசாகக் கிடைக்கின்றன.

"பழுத்த மஞ்சள் இலைகளை
ஒடித்துப்போடுகிறாள் வனத்தை
சுத்தம் செய்வதாக திரியும்
பாவனைப்பெண்.
பச்சை இலைகள் துயர்மிகுந்த
தலையசைப்புடன்
விடைகொடுக்கின்றன.
இளைப்பாற இலைதேடும்
வண்ணத்துப்பூச்சிகள்
வீழ்ந்து மரித்த மஞ்சள்
இலைகள் மீது வந்தமர்கின்றன.
பாவனைப்பெண்ணின் உடல்
கணப்பொழுதில்
நிறமிழந்து மண்ணில்
சரிகிறது.
அவள் உடலுக்குள்ளிருந்து
வெளியேறுகின்றன
அடர் மஞ்சள் நிற வண்ணத்துப்பூச்சிகள்."


இக்கவிதையில் அடர்ந்த மஞ்சள் நிற வண்ணத்துப்பூச்சிகள் படிமம் எத்தனை விதமான மன உணர்வுகளை நமக்குத் தருகின்றது என வரையறுத்துச் சொல்ல முடியவில்லை.
மிகவும் பிடித்த கவிதைகள் எவை என்றால் “என்னைச் சுற்றிய”. மெல்ல மெல்ல ஆட்கொள்கிறது, முதலில் அது நத்தை என்றே, உனக்கான கடைசி, கனவுகள் தகர்த்தெறிந்து (கடைசி நான்கு வரிகள் மிகவும் அற்புதம்) உதிர்ந்த முத்தங்களைப் பொறுக்கும் அந்த நட்சத்திராவை நாம் நேசிக்காமல் இருக்க முடியாது. ‘காயத்தின் ஆழத்தில்’ மழை ருசித்துக் கொண்டிருக்கும், தவிர்த்தலையும் ரசனையுடன், தெரிந்தே நிகழவிருக்கும் பிரிவை, கடல் குடிக்கும் பறவைகள், மூன்று முறை என்னை நான், என அத்தனை கவிதைகளும் அற்புதம்.


எல்லாக் கவிதைகளுமே தன்னளவில் நிறைவானதாய் உளளது. கவிஞனின் உள்மனது தவிப்பும் தகிக்கும் ஒவ்வொரு வரிகளிலும் தெறிக்கிறது. பல கவிதைகள் அனலாய் தகிக்கிறது. கட்டற்ற பிரியமும், களங்கமில்லா பேரன்பும், பெருங்காதலும், அதன் மறுப்பும், கனவுலகில் வசிப்புமாக நிலாரசிகனின் இக்கவிதைத் தொகுப்பு சொல்லில் அடங்காத வாசிப்பானுபவத்தை தருகிறது. அழகியலுடன் கூடிய செறிவான வார்த்தைகள், அலங்காரங்கள் அற்ற நேரடியான கவிதைகள் இத்தொகுப்பின் சிறப்பு.
இத்தொகுப்பினை ஒரே மூச்சில் வாசிக்க நேர்கையில் இது ஒரு நீண்ட கவிதைப் போலத்தான் தெரிகிறது. மேலும் கவிதைகள் எழுதப்பட்ட காலக்கட்டம் ரிசிஷன் பீரியட். அதில் ஏற்பட்ட மன உளைச்சல்களை வேறு விதமாக பதிவு செய்கிறார்.

பிரமிள், ஆத்மாநாம், தேவதேவன், பிரம்மராஜன், விக்ரமாதித்யன், கல்யாண்ஜி, கலாப்ரியா வரிசையில் அமைத்த சாலையில் நிலாரசிகன் தனக்கென ஒரு தனித்துவமான கோலத்தை வரைந்து கொண்டுள்ள தொகுப்பாக வெயில் தின்ற மழை அமைந்திருக்கிறது. வாழ்த்துகிறேன்.

(வெயில் தின்ற மழை - கவிஞர் நிலாரசிகன், உயிர்மை வெளியீடு, விலை Rs.50, இணையத்தில் வாங்க: http://tinyurl.com/2uqqkta  )

4 comments:

said...

அவ்வ்! முதல் விமர்சனம் எழுதணும்னு நினைச்சேன் முடியாமப் போச்சு! இரண்டாவது விமர்சனம் எழுதிடுவோம் உடுங்க! :)))

said...

எழுதியாச்ச்ச்ச்ச்ச்சேய்!

http://silarojakkal.wordpress.com/2011/01/03/veyil-thinra-mazai-nilarasigan/

said...

அட முத விமர்சனமே உமா சக்தியிடமிருந்தா வாழ்த்துக்கள். மறக்காம நம்ம விழாவுக்கு வந்திருங்க.. தலைவரே..

said...

intha vimarsanam,unga book mela mariyaathaiyai undu pannuthu.....

vaazhthukal nila....