Showing posts with label குறும்படம். Show all posts
Showing posts with label குறும்படம். Show all posts

Tuesday, September 07, 2010

குறும்பட போட்டி அறிவிப்பு

இனிய இணைய உறவுகளுக்கு...

குறும்பட போட்டி ஒன்றை அறிவித்திருக்கிறார்கள். விருப்பமுள்ளவர்கள்
இங்கு சென்று பதிவு செய்துகொள்ளலாம்.

வெற்றி பெற வாழ்த்துகள்.

Thursday, March 11, 2010

குறும்படம்: பார்த்ததில் பிடித்தது


மூன்று மணிநேரம் ஓடக்கூடிய திரைப்படங்கள் தருகின்ற அனுபவத்தைவிட மிகச்சிறந்த அனுபவங்களை/உணர்வுகளை மூன்று நிமிட குறும்படங்கள் தந்துவிடும்.குறும்படங்களில் மிக முக்கிய அம்சமாக திகழ்வது இசை(சில படங்கள் விதிவிலக்கு)
சொல்லாத சொல்லையும் உணர்த்திவிடும் இசை.காற்றில் சலசலக்கும் தென்னங்கீற்று மாதிரி.

இன்று பார்த்த குறும்படம் SIGNS.

12 நிமிடம் ஓடக்கூடிய இந்த குறும்படம் தருகின்ற அனுபவம் அலாதியானது.தனித்து வாழும் ஒரு இளைஞன்.
காலை எழுந்து அலுவலகம் செல்கிறான்.உணவு இடைவேளையில் அலுவலகம் அருகே ஒரு யுவதியை காண்கிறான்.தன்னை நோக்கி வருபவள் தன்னிடம் பேசப்போகிறாள் என்கிற மகிழ்ச்சியில் பேச எத்தனிக்கும்போது தன்னை கடந்து சென்று அருகிலிருக்கும் குப்பைதொட்டியில் எதையோ வீசிவிட்டு போய்விடுகிறாள். மனம் குன்றிப்போகிறான்.அவள் நினைவில் வீடு வருகிறவனுக்கு தனிமை சுடுகிறது.
மறுநாள் அலுவலகம் செல்லும்போது ரயிலில் இருவர் முத்தமிடுவதை காண்கிறான்.பரிமாற அன்பில்லாத உலகை எண்ணியபடி அலுவலகம் சென்று தன் இருக்கையில் அமர்கிறான்.

அவனது சன்னல் வழியே அருகிலிருக்கும் அலுவலகம் தெரிகிறது. அங்கே நேற்று அவன் பார்த்த அதே பெண் இருக்கிறாள். வேலையில் மும்முரமாக இருப்பவளை ரசித்துக்கொண்டே இருக்கிறான்.இவன் ரசிப்பதை அவள் கண்டுகொள்கிறாள். ஒரு அட்டையில் "புகைப்படம் எடுத்துக்கொள்" என்று எழுதி காண்பிக்கிறாள்.அவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.உடனே அவள் "சும்மா விளையாடினேன்" என்கிறாள். இவன் முகம் மலர்கிறது. தன் பெயரை எழுதி காண்பிக்கிறாள். இவனும் தன்னுடைய பெயரை எழுதி காண்பிக்கிறான். மெல்ல மெல்ல வளர்கிறது நட்பு. இருவரும் எழுத்தால் பேசிக்கொள்கிறார்கள். இந்த அற்புதமான,விசித்திரமான நேசத்தால் சுழல்கிறது அவனது உலகம். ஒருநாள் "சந்திக்க விரும்புகிறாயா" என்று எழுதி சன்னல் வழியே காண்பிக்கிறான். அவள் இருக்கை காலியாக இருக்கிறது. எங்கு சென்றாள் என்கிற கவலையால் துடிதுடிக்கிறான்.மறுநாள் சோர்வுடன் அலுவலகம் வந்தமர்கிறான். அவனது முகத்தில் திடீரென்று வெயிலடிக்கிறது.என்னவென்று சன்னல்வழியே எட்டிப்பார்க்கிறான். அங்கே அவள் நிற்கிறாள்.
"தான் பதவி உயர்வு பெற்ற செய்தியை எழுதிக்காண்பிக்கிறாள். இதை நாம் கொண்டாட வேண்டுமென்கிறான் இவன். அவளும் சரி என்க,தயக்கத்தோடு "சந்திக்க விரும்புகிறாயா" என்கிறான்.சந்தோஷத்தோடு அவளும் சரி என்கிறாள். இருவரும் சந்திக்கும் ஆவலில் ஓடோடி வருகிறார்கள்.

எதிரெதிரே இருவரும் நிற்கிறார்கள்.அவன் பேச முற்படும்போது,பேசாதே என்று சைகை செய்கிறாள் அவள்.
கண்களில் குழப்பத்தோடு அவன் பரிதவித்து நிற்கும்போது தான் கொண்டு வந்திருக்கும் அட்டையை காண்பிக்கிறாள்,அதில் என்ன எழுதியிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள படத்தை பாருங்கள் :) மனதை வருடும் இசையோடு முடிகிறது படம்.

இந்த குறும்படத்தின் மிக முக்கிய ஜீவனாக திகழ்வது இசை.அவளைக்காணாமல் அவன் தவிக்கின்ற நேரத்தில் சோகமாகும் இசை,அவளுக்காக அவன் ஓடுகின்ற போது வேகமெடுக்கிறது.குறிப்பாக 8ம் நிமிடத்திற்கு பிறகு இசையோடு நாமும் பயணிக்க ஆரம்பித்துவிடுகிறோம்.அடுத்து, கதாநாயகனின் முகபாவங்கள்.ஒவ்வொரு காட்சியிலும் மனதை அள்ளிப்போகிற‌து.க‌ண்க‌ளாலே இருவ‌ரும் பேசிக்கொள்வ‌து க‌விதை.
மொழியில்லா தருணங்களை மிக அற்புதமாக படமாக்கி இருக்கிறார்கள்.

மூன்று ம‌ணிநேர‌ம் செல‌விட்டு நான்கு குத்துபாட‌ல்க‌ள்,நாற்ப‌து ச‌ண்டைக‌ள்,நாலாயிர‌ம் "ப‌ஞ்ச்" ட‌ய‌லாக்குக‌ள் பார்ப்ப‌த‌ற்கு ப‌தில் இதைப்போல் நான்கு ப‌ட‌ங்க‌ள் பார்க்க‌லாம் :)

குறும்படத்திற்கான சுட்டி:

http://www.youtube.com/watch?v=uy0HNWto0UY

முன்பு நானெழுதிய‌ க‌விதையொன்றுட‌ன் இப்ப‌திவை நிறைவு செய்கிறேன்

தளர்ந்த விரல்பிடியை நடுநிசியில்
இறுக்கிக்கொள்ளும் குழந்தையில்..

வெகுநாட்கள் கழித்து வீடுதிரும்புகையில்
கால்சுற்றும் நாய்க்குட்டியின் பார்வையில்..

தேங்கிய மழைநீரில் மிதக்கின்ற
வாடிய மல்லிகைப்பூக்களில்...

தொலைதூர பயணத்தின் வழியனுப்புதலில்
வழிகின்ற கண்ணீர்த்துளியில்...

புணர்ந்த களைப்பில் நெஞ்சிலுறங்கும்
துணையின் மூச்சுக்காற்றில்...

மொழியில்லாத் தருணங்களிலும்
பிறக்கத்தான் செய்கின்றன
கவிதைகள்..



-நிலார‌சிக‌ன். 
குறிப்பு: கடந்த வருடம் இடுகையிட்டதை சமீபத்தில் வைரஸ் தின்றுவிட்டதால் இப்பதிவு.

Monday, February 08, 2010

குறும்படம்: பார்த்ததில் பிடித்தது

http://www.youtube.com/watch?v=-jckhTr8wgk





நிதர்சனகுறிப்பு:

இதை பார்க்கும் போது எழுந்து நிற்காதவர்களில் நானுமொருவன்.

Friday, January 22, 2010

500 குறும்படம்

பணத்தின் மீதான வெவ்வேறு மனிதர்களின் பார்வை எவ்வளவு மாறுதல்களுடன் இருக்கிறது என்பதை அழகாய் கோர்த்திருக்கிறார்கள். இந்தியா ஏழையின் தேசமல்ல என்பதும் நெஞ்சை நெருடுகிறது.

Wednesday, September 09, 2009

சமீபத்தில் ரசித்தவைகளின் தொகுப்பு:



குறும்படம்:

நானும் என் விக்கியும்:-

சுட்டி
: http://www.cultureunplugged.com/play/1127/Naanum-En-Vickyum---/TUE9PStP

நம் அனைவருக்கும் பால்யகால நண்பர்கள் பட்டியலில் முதலிடம் பிடிப்பது சைக்கிளாகத்தான் இருக்கும். புது சைக்கிள் வாங்கிய புதிதில் நாற்பது முறை விழுந்திருக்கிறேன்.கையிலும் முட்டியிலும் அடிபடாத நாட்களே கிடையாது. ஆனாலும் சைக்கிள் மீதான என் காதல் என்றும் குறைந்ததே இல்லை.பள்ளிப்பருவம் முடிந்து கல்லூரிக்குள் காலடி எடுத்துவைத்தபோது மோட்டார் சைக்கிளுக்கு மனம் தாவியபோதும் என் பழைய சைக்கிளை பத்திரமாகவே வெகுகாலம் வைத்திருந்தேன்.

நானும் என் விக்கியும் ஒரு சைக்கிளின் பார்வையில் எடுக்கப்பட்ட குறும்படம்.இதற்கு விமர்சனம் எழுதும் மனநிலை இப்போதில்லை.காரணம் என் சைக்கிளின் ஞாபகங்களோடு மனம் பயணித்துக்கொண்டே இருக்கிறது. நீங்களும் பார்த்து ரசிக்கலாம்.இப்படத்தின் இயக்குனருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

*********************************************************************************


புத்தகம்:

காவலன் காவான் எனின்:நாஞ்சில் நாடன்
(கட்டுரை தொகுப்பு/தமிழினி வெளியீடு/விலை ரூ.90)


கட்டுரை எழுதும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா? கண்ணை மூடிக்கொண்டு நாஞ்சில் நாடனின் கட்டுரைகளை வாசிக்க ஆரம்பியுங்கள்(கண்ணை மூடிகிட்டா எப்படி வாசிக்கறதுன்னு கேள்வி கேட்க தோணுதா? அடடே நீங்களும் கட்டுரையாளர்தான்!!:)

நாஞ்சில் நாடன் சமீபத்தில் எழுதிய 22 கட்டுரைகள் இடம்பெற்றுள்ள நூல் இது.
இருபத்தி இரண்டு முத்துகள் எனலாம்.அதில் இரண்டை வைரம் என்றும் விளிக்கலாம்.
(குடியும் குடி சார்ந்த எண்ணங்களும்/கற்பனெப் படுவது)
நாஞ்சில் நாடனுக்கே உரித்தான எள்ளலும், ஆழ்ந்த இலக்கியச்செறிவும்,கற்றுத்தேர்ந்த மரபும் ஒவ்வொரு வரியிலும் உணரமுடிகிறது.

என் புத்தக சேமிப்பில் யாருக்கும் தர விரும்பாத/பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டிய மிக முக்கிய நூல்களில் இதுவுமொன்று :)

*********************************************************************************

புத்தகம்:
மரம் பூக்கும் ஒளி
(நவீன கவிதைகள்/கோகுலக்கண்ணன்/காலச்சுவடு பதிப்பகம்/விலை:ரூ.75)


புத்தக கடையினுள் ஒவ்வொரு புத்தகமாக கடந்து வந்துகொண்டே இருந்தபோது எதுவுமே "என்னை வாங்கிக்கொள்,உன்னோடு வாழவிரும்புகிறேன்" என்றுரைக்கவில்லை. எந்த புத்தகத்திற்கும் என்னை பிடிக்கவில்லையா அல்லது எனக்கு எந்த புத்தகத்தையும் பிடிக்கவில்லையா என்கிற குழப்பத்தோடு புத்தகமுகங்களை பார்த்துக்கொண்டிருந்தேன்.
அப்போது கண்ணில் பட்டது "மரம் பூக்கும் ஒளி" தலைப்பின் வசீகரத்தில் கையிலெடுத்து
ஏதோவொரு பக்கத்தை பிரித்தேன்.கீழுள்ள கவிதை இருந்தது

"ஒரு அணில்
உடைந்த முட்டை ஓட்டுக்குள்
முகத்தைப் புதைத்து அழுகிறது"


சட்டென்று ஓர் உலகம் என் முன் தோன்றி அதில் அழகிய தோட்டமொன்று உருவாகி அங்கே தேன் சிந்தும் பூக்களும்,இசைபாடும் குயில்களும் நிறைந்திருக்க,சாய்வான நாற்காலியில் வானம் பார்த்து நான் கிடக்க,அங்கே வந்த ஒரு அணில் தன்னை யாரும் கவனிக்க வில்லையே என்கிற ஏக்கத்தில் அருகிலிருந்த உடைந்த முட்டை ஓட்டுக்குள் முகத்தை புதைத்துக்கொண்டு தேம்பி தேம்பி அழுவதாக கற்பனை விரிந்தது.

உடனே புத்தகத்தை வாங்கிவிட்டேன். மற்ற கவிதைகளும் மிக அற்புதமாகவே இருக்கிறது.
நல்லதொரு வாசிப்பனுவம் கிடைக்கும்.

*********************************************************************************

விளையாட்டு:

இலங்கை Vs நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டியில் வெகுகாலம் கழித்து
ஷேன் பாண்ட் விளையாடினார்.முன்புபோல் வேகமாக பந்துவீசவில்லை. ஆனாலும் துல்லியமான பந்துவீச்சால் சில விக்கெட்டுகள் வீழ்த்தினார்.நியுசிலாந்து வெற்றி பெறும் என்கிற எண்ணத்தை மலிங்காவும்,துஷாராவும் மாற்றினர்.இந்தியா இந்த கோப்பையை வென்றால் தரவரிசையில் முதலிடம் பிடிக்கலாம். மலிங்காவிடம் வீழ்வார்கள் என்றே எண்ணுகிறேன்.(அதெப்படி மலிங்கா மட்டும் "மாங்கா" எறிவதுபோல் பவுலிங் செய்கிறார்??)

"தல" சச்சின் விளையாட்டை காணும் ஆவலில் காத்திருக்கும் ரசிககோடிகளில்
நானுமொருவன் :)

-நிலாரசிகன்

Monday, May 04, 2009

Life of Birds - ஆவணப்படம்



பறவைகள் நம் வாழ்வோடு பயணிப்பவை.சிட்டுக்குருவிகளும்,காக்கைகளும் நம் பால்யத்தின் தோழர்கள்.
கோழிக்குஞ்சுகளின் மென்மையும்,மைனாக்களின் கீச்சுக்குரலும் கடந்து வந்தவர்கள்தான் நாம். ஆனாலும் இன்று பறவைகளூடான தொடர்பு எந்நிலையில் இருக்கிறது? மைனாக்கள் ரசிக்க நேரமில்லை என்பதைவிட மைனாக்களில் ரசிக்க என்ன இருக்கிறது என்கிற எந்திர மனோநிலையில் இருக்கிறோம்.

பறவைகளின் வாழ்வியல் முறை குறித்த ஆவணப்படங்களில் மிகச் சிறந்ததாகவும் மிக முக்கியமானதாகவும் கருதப்படுவது Life of Birds
இதை தயாரித்து இயக்கியவர் டேவிட் ஆட்டன்பரோ.
பத்து பகுதிகளாக BBC தொலைக்காட்சியில் 90களில் இறுதியில் ஒளிபரப்பானது.
பறவை ஆர்வலர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஆவணப்படம்.

மூன்று வ‌ருட‌ங்க‌ள் க‌டின‌ உழைப்பால் உல‌க‌மெங்கும் சுற்றித்திரிந்து இத‌னை ப‌ட‌மாக்கி இருக்கிறார்க‌ள்.

விதவிதமான பறவைகள் மனதை அள்ளிப்போகிறது.குறிப்பாக பலகுரலில் ஒலிஎழுப்பும் பறவை(கேமரா லென்ஸ் போன்று சத்தம் எழுப்புவதும்,கார் சைரன் ஒலியும் வியக்க வைக்கிறது )

இர‌வில் ம‌ட்டுமே உண‌வு தேடும் நியுசிலாந்தின் கிவி ப‌ற‌வை என‌ ப‌ல‌ ஆச்ச‌ர்ய‌ங்க‌ள்.


இங்கே பார்க்கலாம்:

http://www.youtube.com/show?p=S3vPSi1o5nM

-நிலாரசிகன்

Thursday, April 16, 2009

Chicken a la Carte - குறும்படம்

ஆறு நிமிடம் மட்டுமே ஓடக்கூடிய இந்த குறும்படம் தருகின்ற வலி மிக அதிகம்.

உணவுவிடுதிக்கு இருபெண்கள் வருகிறார்கள்.கோழிக்கறியும் சாதமும் ஆர்டர் செய்கிறார்கள். கொஞ்சமாய் கொறித்துவிட்டு மீதம் வைத்துவிட்டு செல்கிறார்கள்.

அங்கே வருகின்ற ஒருவர் அந்த மீதமான கறியை ஒரு வாளியில் எடுத்து செல்கிறார்.
தன் வீட்டிற்கு செல்கின்ற அவரை, அங்குள்ள குழந்தைகள் சந்தோஷமாய் ஓடிவந்து மொய்த்துக்கொள்கிறார்கள்.

[இந்தக்காட்சியிலிருந்து எழும்புகின்ற இசையும் அதன் வரிகளும் கல்நெஞ்சையும் உருக வைத்துவிடும்.]

அந்த கோழிக்கறிக்காக வரிசையாக உட்கார்ந்திருக்கிறார்கள் குழந்தைகள். இவர் ஒவ்வொருவருக்கும் தட்டில் உணவை எடுத்து வைக்கிறார்.மலர்ந்த முகத்தோடு குழந்தைகள் அதனை தொட எத்தனிக்கும்போது தடுத்துவிட்டு,கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு சாப்பிட சொல்கிறார்.

பசியால் தினம் தினம் ஆயிரக்கணக்கில் உலகெங்கும் மடிகிறார்கள். இது ஒரு நிஜ கதை என்கிற டைட்டிலோடு முடிகிறது படம்.

சமீபத்தில் பார்த்த குறும்படங்களில் என்னை மிகவும் பாதித்த படம் இது.பார்த்துமுடித்து சில மணி நேரங்கள் எதுவும் செய்ய இயலாமல் மனம் கனத்து போனது.
பாரதியின் வரிகள் நினைவுக்கு வந்தன.நமக்கு எச்சிலாக தோன்றுவது வேறொரு வயிற்றுக்கு உணவாக தோன்றுகிறது. வாழ்க்கை விசித்திரமானதுதான்!

குறும்படத்திற்கான சுட்டி:

http://www.cultureunplugged.com/play/1081/Chicken-a-la-Carte