Sunday, November 14, 2010

குழந்தைக் கவிதைகள்

அ)
அப்பாவும் அம்மாவும்
தராத அரவணைப்பை
பொம்மைக்கு தந்தபடி
உறங்கிக்கொண்டிருந்தது குழந்தை.
கனவில் தோன்றிய கடவுள்கள்
அச்சிறு குழந்தையின் அரவணைப்பை
வரமாய் கேட்டனர்.
வரிசையில் நின்றிருந்த
கடவுள்களுக்கு உறக்கப்புன்னகையை
தந்துவிட்டு பொம்மையை
இறுக்கி அணைத்துக்கொண்டதது.
பொம்மையாதலின் வழிமுறைகள்
அறியாமல் விழித்தபடிநின்றனர்
கடவுள்கள்.

ஆ)
கதை சொல்ல நச்சரித்தது
குழந்தை.
பேய்க்கதை சொல்லத்துவங்கினேன்.
அனைவரும் உறங்கிவிட்ட
ஓர் இரவில் பேய்கள் என்னைமட்டும்
துரத்தி ஓடிவந்தன என்று
தொடங்கினேன்.
பேய்க்குத்தான் கால்கள் இல்லையே
பின்னெப்படி ஓடிவரும் என்றது
குழந்தை.
உறங்கிவிட்ட பாவனையில்
கண்மூடிக்கிடந்தேன் நான்.

இ)

கூரையிலிருந்து வழிந்து
கொண்டிருக்கும் மழைத்துளிகளை
சேகரித்து தங்கமீன்கள் இரண்டு
நீந்திக்கொண்டிருந்த கண்ணாடி
தொட்டிக்குள் விட்டுக்கொண்டிருந்தாள்
அச்சிறுமி.
மழை நிற்கும் வரை
இதைச்செய்தவள் மழை நின்றபின்
கைகள் இரண்டையும் தேய்த்து
கன்னத்தில் வைத்துக்கொண்டு கேட்டாள்
"ஸ்ஸ்ஸ் ரொம்ப குளிருதில்ல?"
வாலாட்டியபடி ஆமோதித்தன
மீன்கள்.

ஈ)
அப்பாவிடமும் அம்மாவிடமும்
பள்ளியில் பெற்ற "வெரிகுட்"ஐ
பலமுறை சொல்லி
ஏதோவொன்று குறைந்தவளாய்
தன் பொம்மைகளிடம்
சொல்ல ஆரம்பித்தாள் அச்சிறுமி.
தலையாட்டிக்கொண்டிருந்தன பொம்மைகள்
அப்பாவாய்,அம்மாவாய்.

உ)
மழையில் நனைந்து
விளையாடிக்கொண்டிருந்தார்கள் அந்த
சிறுவனும் அவனது நாயும்.
அப்பாவிடம் அடியும்
அம்மாவிடம் திட்டும் வாங்கிக்கொண்டு
தலைதுவட்டினான் சிறுவன்
அம்மா கொடுத்த துவாலையால்.
"கவலப்படாத அப்பா உன்னை
அடிக்க மாட்டார்" என்றான்
தன் நாயிடம்.
உடம்பை சிலிர்த்துக்கொண்டு
அவனையே பார்த்தது அச்சிறுநாய்.

ஊ)
இந்தப்பசுவிற்கு நான் தான்
அம்மா என்றது.
இந்தப்பசு எப்போதும்
பால்தருமென்றது.
பசுவின் கன்றுக்கு
தன் மொழி புரியுமென்றது.
பசுவைக் கட்டிக்கொண்டே
உறங்குவேன் என்றது
கோணலாய் இருப்பினும்
குழந்தையின் உலகிலிருக்கும்
ஓவியப்பசு அழகாய்த்தானிருக்கிறது.

எ)
இரண்டு முறை பிரகாரம்
சுத்திவந்துவிட்டு கால்வலிக்கிறதென்று
அரச மரத்தில் சாய்ந்து
கால்நீட்டி அமர்ந்துகொண்டது
குழந்தை
கோவிலைச் சுற்ற அழைத்த அம்மாவின்
அழைப்பை நிராகரித்தபடி.
என்னசெய்வதென்று புரியாமல்
கெஞ்சிக்கொண்டிருந்தாள்
அம்மா.
குழந்தையிடம் கெஞ்சுகின்ற
சுகத்தை கடவுளிடம் கெஞ்சுவதில்
பெறமுடியாதுதான்.

ஏ)

வீடு கட்ட குவித்திருக்கும்
ஆற்றுமணலில் விளையாடிக்கொண்டிருந்தார்கள்
சிறுமியும் அவளது பொம்மையும்.
பொம்மையுடன் பேசுவதற்கென்றே
தனிமொழியை உருவாக்கியிருந்தாள்
சிறுமி.
வெகுநேர விளையாட்டிற்குபின்
குடிசைக்குள் சென்ற சிறுமியின்
வலக்கையில் தலையும்
இடக்கையில் உடம்புமாய்
துண்டுகளாகியிருந்தது பொம்மை.
அப்போதும் அதனுடன் பேசிக்கொண்டிருக்கிறாள்
அவள்.

ஐ)

எப்போதும் கண்டிராத
ஓவியங்கள் சிலவற்றை
விற்றுக்கொண்டிருந்தாள்
அந்தச் சிறுமி.
சருகு நிறத்தாலான
அவளது பாவாடையை
நிறைத்திருந்தன முயல்குட்டிகள் சில.
ஒவ்வொரு ஓவியம்
விற்றவுடன்
தன் பாவாடை முயல்களிடம்
ஏதோ பேசுகிறாளவள்.
இக்காட்சியை நிலவில் தீட்டுகிறது
சூரியக்கரங்கள்.
நிலவில் உருப்பெறுகிறது
ஓர் முயலோவியம்.

ஒ)
யாருமற்ற அறைக்குள்
தன் பொம்மைகளுடன்
நுழைகிறாள் நட்சத்திரா.
அவளது மழலையை
உற்று கவனிக்கின்றன பொம்மைகள்.
அவள் கேட்கும்
கேள்விகளுக்கும் பதிலளிக்கின்றன.
கதவு திறக்கும் சத்தம்
கேட்டவுடன் ஊமையாகி
அசையாமல் நிற்கின்றன.
வேலை முடித்து
வீட்டிற்குள் வருகின்ற
அம்மா பொம்மையிடம்
பேச துவங்குகிறாள் நட்சத்திரா.

***********************************************************************

குழந்தைகளுக்கும்,குழந்தை மனதோடு இப்பதிவை ரசித்த இணைய எழுத்தாள/வாசக நண்பர்களுக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள் :)
(மீள்பதிவு)

-நிலாரசிகன்.

16 comments:

said...

ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு கதைகள் சொல்கின்றன... அழகாக சொல்லியிருக்கிறீர்கள்...

said...

:)

iniya kuzhanthaikal thina nal vaazhthukal nila..

arumaiyaana pathivu!

said...

அனைத்தும் அருமையா இருக்குங்க. குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.

said...

அதானே பார்த்தேன்.... ஏற்கெனவே படித்தது போலிருக்கிறதே என நினைத்தேன்!

said...

எதைச் சொல்ல எதை விட. அத்தனையும் அருமையானவை. முன்னரே வாசித்து ரசித்தவையே ஆயினும் மறுபடி வாசிக்கையிலும் சுகானுபாவம். நன்றி நிலா ரசிகன்:)!

said...

குழந்தையின் உலகம் தான் எவ்வளவு அழகானது . அதன் அழகு குறையாமல் வரிகளில் வடித்திருக்கிறீர்கள் . மிக நன்று . தொடரட்டும் உமது சேவை .

said...

நண்பர்களுக்கு நன்றி... :)

said...

திரும்ப திரும்ப படித்தாலும் திகட்டாத வரிகள் !!!
குழந்தைகள் தின வாழ்த்துக்கள் :)

said...

கலக்கிட்டீங்க கவிஞரே! வாழ்த்துக்கள்!

said...

நன்றி.. :)

Anonymous said...

pazhaya puthiya pathippugalai thoguththu azhagana varisaiyil vazhangiyathu aTputham.

said...

Ella Kavithaigalum migavum arumai...


Regards,
Chandra

said...

Vasikka vasikka siru kulanthaiyaga marikondu, siru kulanthaiyagave marum aavalai undu paniviteergal,

said...

Vasikka vasikka siru kulanthaiyaga marikondu, siru kulanthaiyagave marum aavalai undu paniviteergal,

said...

fentastic

Anonymous said...

அருமையான பதிவுகள் !
குழந்தையை குழந்தையாக இருக்க விடுவோம் !