Saturday, May 14, 2011

சொர்ணபூமி

தாய்லாந்து பயணக் கட்டுரை:

சென்னை விமான நிலையத்தில் சோதனைக்காக பக்கவாட்டில் கைகள் இரண்டையும் நீட்டிக்கொண்டு நின்றபோது காவலர் ஹிந்தியில் வருத்தமுடன் சொன்னார். "கம்பீர் அவுட். ஜெயிச்சிடுவாங்கல்ல?". இந்திய இலங்கை உலகக்கோப்பை இறுதி போட்டி அதகளத்துடன் அரங்கேறிய நாளில்தான் தாய்லாந்திற்கு சுற்றுலா செல்ல விமான நிலையம் சென்றோம். எங்கள் விமானம் புறப்பட இரண்டு மணிநேரம் இருந்ததால் இறுதிப்போட்டியை எவ்வித பதற்றமும் இன்றி சந்தோஷ கூச்சலுடன் விமான நிலையத்திலிருந்த தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தோம்.
அப்போது சிங்கப்பூர் கிளம்பவேண்டிய விமானம் ஒரு பயணிக்காக காத்திருந்தது. அந்த ஒரு பயணியை தேடிய பணிப்பெண் தொலைக்காட்சி முன்பு கிரிக்கெட்டில் மூழ்கியிருந்தவரிடம் சென்று விமானம் காத்திருப்பதாக சொன்னார். "இந்தியா ஜெயிப்பதை பார்த்துவிட்டுத்தான் கிளம்புவேன். இன்னும் ஐந்து நிமிடம் பொறுக்க முடியாதா" என்று ஆதங்கப்படும் தருணம் தோனி அடித்த சூப்பர் சிக்ஸரில் இந்தியா வென்றது. 28 வருட கனவு நிறைவேறிய மகிழ்வில் விமானம் ஏறினோம்.

பாங்காக் நகரம் சென்று இறங்கியவுடன் எங்கள் குழுவுக்கான பேருந்தில் பட்டாயா என்னும் சிறுநகரம் நோக்கி பயணப்பட்டோம்.தாய்லாந்தின் சாலைகள் அமெரிக்க நாட்டின் சாலைகளை நினைவூட்டின.வழியெங்கும் வாழைத்தோட்டங்களும் வயல்வெளிகளும் தென்பட்டன.உலகிலேயே அதிக அளவு அரிசியை ஏற்றுமதி செய்யும் நாடாக தாய்லாந்து விளங்குகிறது. பட்டாயா நகருக்குள் நுழையும்போதே பல வெளிநாட்டவர் தென்பட்டனர். பல நூற்றாண்டுகளாக ஒரு சிறு மீன்பிடி கிராமமாக விளங்கிய பட்டாயா 1961ம் வருடத்திற்கு பிறகு ஒரு நகரத்தின் அந்தஸ்த்தை பெற்றதன் காரணம் சுவாரஸ்யமானது. அவ்வருடம் வியட்நாம் போரில் ஈடுபட்டிருந்த சுமார் 100 அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்கள் போர் விடுமுறை நாட்களில் ஓய்வெடுக்க ஓர் இடம் தேடினர்.அப்போது அவர்கள் வந்து ஓய்வெடுத்த இடம்தான் இந்த பட்டாயா. அதன் பின்னர் பல தங்கும் விடுதிகள்,கடைகள் முளைத்து இன்று தாய்லாந்தின் தவிர்க்க முடியாத சுற்றுலா நகரமாக வளர்ந்து வருடத்திற்கு 40 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும்
இடமாக மாறியிருக்கிறது. நாங்கள் தங்கிய விடுதி கடற்கரையின் ஓரத்தில் இருந்தது. வெண்ணிற கடற்கரை மணலில் கால்கள் பதிய சிறிது தூரம் நடந்து அங்கே காத்துக்கொண்டிருந்த படகில் ஏறினோம். கோரல் என்னும் சிறு தீவு நோக்கி விரைந்தது விசைப்படகு. தீவுக்கு சற்றே முன்பாக நடுக்கடலில் மிகப்பெரிய படகொன்று நின்றிருந்தது. அதில் பேராசைலிங்(Parasailing) எனப்படும் பாராசூட்டில் பறக்கும் வீரவிளையாட்டில் பங்கெடுத்தோம்.அதன் பின்னர் கோரல் தீவை நோக்கி பயணப்பட்டோம். சுற்றுலா பயணிகள் அதிக அளவில் தென்பட்டனர். தவளை,ஆமை,கடல்சிப்பி இவையனைத்தும் அத்தீவில் உலவுகின்றன என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இவைகளை நன்றாக வறுத்து உணவாக்கி வைத்திருந்தார்கள் அங்குள்ள சிறிய கடைகளில்! தாய்லாந்து மக்களின் உணவில் தவளை,வண்டு,வெட்டுக்கிளி எல்லாம் சகஜம் என்றார் எங்களை அழைத்துச் சென்ற வழிகாட்டி.

மாலை வரை அற்புதமாய் கழிந்தது பொழுது. தீவை விட்டு மீண்டும் தங்கிருந்த விடுதிக்கு திரும்பினோம். தாய்லாந்தில் வாழ்க்கை இரவுதான் ஆரம்பிக்கிறது. அல்காசர் எனப்படும் புகழ்பெற்ற ஷோவிற்கு சென்றோம். தாய்லாந்தின் கலாச்சார நடனத்தில் ஆரம்பித்து பிற நாடுகளின் கலாச்சார நடனங்களையும்,நாடகங்களை நிகழ்த்தினார்கள் பால்நிற கன்னிகள். பின்புதான் தெரிந்தது அவர்கள் திருநங்கைகள் என்று. அவர்களை Ladyboys என்று தாய்லாந்து மக்கள் அழைக்கிறார்கள்.பட்டாயா நகரில் திரும்பிய பக்கமெல்லாம் மதுவிடுதிகளும்,நடன விடுதிகளும்,மசாஜ் பார்லர்களும் இருக்கின்றன.பின்னிரவில் பெண்களால் நிரம்பி வழிகின்றன பல தெருக்கள். வெகு இயல்பாக நடக்கிறது உலகின் புராதான தொழில். இங்கு வருகின்ற சுற்றுலாப்பயணிகளின் 10 சதவிகித பணம் விலைமாதுக்களிடம் செலவிடப்படுகிறதாக தகவல்.

இரண்டு நாட்கள் பட்டாயாவில் தங்கியிருந்தோம். மூன்றாம் நாள் பாங்காக் கிளம்பினோம். பாங்காக்கில் முதலில் சென்ற இடம் உலகின் மிகப்பெரிய தங்கசிலை கொண்ட புத்தர் கோவில். ஐந்தரை டன் 18 காரட் தங்கத்தில் செய்யப்பட்ட புத்தர் சிலை ஜொலித்துக்கொண்டிருந்தது.அதன் வாசலில் தாய்லாந்தின் 84 வயது மன்னரின் மிகப்பெரிய புகைப்படம் கண்டோம். தாய்லாந்து மக்களின் நேசத்துக்குரிய தேசப்பிதா மன்னர் ஒன்பதாவது ராமா என்று அழைக்கப்படுகிறார்.அவர் தங்கியிருக்கும் பிரம்மாண்டமான அரண்மனை ஒரு நதிக்கரையில் ரம்மியமாக காட்சியளிக்கிறது.

பாங்காக்கில் சிறுவர்கள் காணவேண்டிய இடங்கள் பல உண்டு. மிருகக்காட்சிசாலைகள்,பூங்காக்
கள் என்று நிறைய. அனைத்து இடங்களிலும் யானைகளை அதிகம் பார்க்க முடிகிறது. Elephant show மிகப்பிரபலமானது. சிறுவர்களை கவரும் வண்ணம் யானைகள் அடிக்கும் லூட்டி ரசிக்க வைக்கிறது. அதேபோல் Sealion show,birdshow,dolphin show என்று நிறைய ஷோக்களில் கல்லா கட்டுகிறார்கள்.

பாங்காக்கின் இரவு வாழ்க்கையும் பட்டாயா போன்றே காட்சியளிக்கிறது.நடைபாதைக்கடைகள் இரவு பதினோரு மணிவரை திறந்திருக்கின்றன.முக்கியமாக துணிக்கடைகளும்,எலக்ட்ரானிக் கடைகளும் அதிகம்.பேரம் பேசி வாங்க முடிகிறது. ஐந்து நாட்கள் பயணம் முடிந்து சொர்ணபூமி சென்றோம். அதுதான் தாய்லாந்தின் விமானநிலையத்தின் பெயர். எப்படி இந்தப்பெயர் வந்தது என்ற காரணத்தை வினவியபோது கிடைத்தபதில் சோழர்கள் தாய்லாந்தில் ஆட்சி செய்திருக்கிறார்கள். அதன் காரணமாகவே பல சிவன் கோவில்கள் தாய்லாந்தில் எழுப்பப்பட்டிருக்கின்றன. இன்றும் திருப்பாவையும்,தேவாரமும் தாய்லாந்திலுள்ள சிவன் கோவில்களில் பாடப்படுகின்றன. சோழர்கள் ஆண்ட நாட்டை தரிசித்துவிட்டு திரும்பிய மகிழ்ச்சியில் சென்னை வந்தடைந்தோம்.

-நிலாரசிகன்.
 
[இன்றைய கல்கி இதழில் வெளியான கட்டுரை]

2 comments:

said...

சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறீர்கள். ஆரம்பப் பத்தியை கூடுதலாக ரசித்தேன்:)!

said...

மிக அருமை. நிலா ரசிகன்.. சுவாரசியமான பதிவு..