Tuesday, December 06, 2011

இசைதல்

1.
சிறு சிறு முத்தங்கள் வளர்ந்து
நீண்டதொரு முத்தமாக உருப்பெற்றபோது
நாம் முத்தமாகியிருந்தோம்.
அறைக்குள் சிதறிய மிச்ச முத்தங்கள்
களியாட்டத்தில் ஒன்றுடன் ஒன்று பிணைந்திருந்தன.
ஊர்ந்த எறும்புகள் களியாட்டம் கண்டு
பித்தமேறி ஆடி மகிழ்ந்தன.
முத்தவாசனையில் வெட்கி தலைகுனிந்திருந்தது
தொட்டிச்செடி.
ஓர் அழகிய நிகழ்வின் துவக்க கணத்தில்
இதழ் பிரித்து ஓடி மறைந்தாய்.
இசையறுந்த
பியானோ ஒன்றும் வயலின் ஒன்றும்
அவரவர் அறையில் தனியே
இசைத்தடங்குகிறது.

2.
ஊமை படிகளின் முதுகில்
மெல்ல இறங்குகிறது மழை.
முழுவதும் நனைந்துவிட்ட படிகள்
சில்லிட்டு சிலிர்க்கையில்
வலுக்கிறது.
மழையும் வெயிலும் இணையும்
புள்ளியிலிருந்து கசிகிறது மேனியிசை.
விருட்சமொன்றின் வேர் பற்றி
மேலெழுகின்ற மல்லிகைக்கொடி
இதழ் பிரிந்த கணத்தில்
வெயில்மழையை சூழ்ந்து மறைக்கிறது.
யாருமற்ற கடற்கரையில் நிலாபார்த்து
மலர்கிறாள் முதிர்ந்த கடற்கன்னியொருத்தி.

-நிலாரசிகன்.

6 comments:

said...

என்ன இத்தனை காதல் ரசம் சொட்டச் சொட்ட...
அருமை கவிஞரே! இரசனைக்கு இதமான மெல்லிசை.

said...

நல்ல கவிதை.
வாழ்த்துகள்.

said...

அன்பின் நிலாராசிகன் - முத்த்த்தினை இரசித்து அனுபவித்து எழுதப்பட்ட கவிதை நன்று. படமும் தேர்ந்தெடுத்த ஒன்று. இசைதல் - இசையறுந்த கருவிகள் தனித்தனியாய் ..... சிந்தனை நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா.

said...

நல்ல கற்பனை

said...

m...

vaazhthukal nila
:)

said...

ஆகா. ஆமாம் பிணைந்து களியாட்டம் போட்ட மிச்ச
முத்தங்கள் கதை என்ன ஆச்சு ?.

உங்கள் கவிதையை படித்த பின்தான் படிகள் கவிழ்ந்து
முதுகு காட்டியிருப்பது தெரிய வருகிறது
வெம்மைகள் மேலிடும்போது இவ்வாறான
மழைகள் ஆசுவாசப்படுத்துகிறது. வாழ்த்துக்கள்
-இயற்கைசிவம்