Monday, January 28, 2008

நீ,நான்,காதல்(குறுந்தொடர்) - 2. காதல்காலம்


2.காதல்காலம்:

அவன்:

அதிகாலை பனித்துளியில்
குளித்த ரோஜாவொன்றை
உனக்குத் தந்து "விரும்புகிறேன்"
என்று சொல்லிவிட்டு
வேகமாய் வந்துவிட்டேன்.
கண்மணி!
அந்த சிறுரோஜாவுக்குள் புதைந்து
இருப்பது சொல்ல முடியாமல்
தவித்த என் காதலும்,
சிதையிலிட்டாலும் மாறிவிடாத
என் நேசமும்.

அவள்:

இதயத்தின் நான்கு
அறைகளிலும் ஒலிக்கிறது
நீ சொன்ன காதல்வார்த்தை.
ஒரு தேவதையை போன்ற
மிடுக்குடன் என் வீடு செல்கிறேன்
நீ தந்த ரோஜாவுடனும்
உனக்கென நான் வாங்கி வந்த
ரோஜாவுடனும்!

அவன்:

என்னை மறந்து
வானம்பார்த்து புன்னகைத்துக்
கொண்டிருந்தேன்..
தன்னைப் பார்த்து
புன்னகை செய்வதாக
எண்ணிச் சிரிக்கிறது
அந்த வான் நிலா..
பகல்நிலவு உனக்கு மட்டும்தானடி
என் புன்னகை சொந்தம்
என்று எப்படி புரியவைப்பேன்?

அவள்:

எதிர்வீட்டு குழந்தைக்கு
அதிகமாய் இன்று
நான் முத்தமிட்டதை
சந்தேகத்துடன் பார்த்துச் செல்கிறாள்
அம்மா.
குழந்தையென உன்னை
எண்ணி நான் தருகின்ற
முத்தங்கள் உன்னைச் சேர்கின்ற
நாளுக்காக காதலுடன் காத்திருக்கிறேன்.

அவன்:

கடற்கரையில்
கடல்ரசித்து அமர்ந்திருந்தோம்.
உன் பொன்விரல்களால்
மணலில் கோலமிட்டுக்கொண்டு
தலைகவிழ்ந்திருந்தாய்..
உன் விரல்பற்றிக்கொள்ள
நினைத்து இயலாமல்
அலைரசிக்கிறேன் நான்.

அவள்:

ஏதேதோ பேசிவிட எண்ணி
எதுவும் பேசாமல்
அமர்ந்திருக்கிறேன்.
ஊமையாக வாழவும் சம்மதம்
நாளெல்லாம் காதல்மொழி
நீ பேசினால்.

அவன்:

தினமும் சந்திக்கிறோம்.
ஒன்றாக உணவருந்துகிறோம்.
ஒரே பேருந்தில் பயணிக்கிறோம்.
இந்த பிறப்பு முழுவதும் பேசினாலும்
தீராத காதலை நெஞ்சுக்குள்
சுமந்துகொண்டு
திருக்குறளென இருவரிகள்
மட்டும் பேசுகிறோம்.

அவள்:

உன்னிடம் பேச
நினைத்ததையெல்லாம்
என் வீட்டு செவ்வந்திச் செடியிடமும்
என் ப்ரிய நாய்குட்டியிடமும்
பேசித் திரிகிறேன்.
எனக்கென்று ஒரு தனியுலமே
உருவாக்கித் தந்தவன் நீ.
மழையைத் தாங்கும் மண்ணைப் போல்
காத்திருப்பேன் வாழ்வெல்லாம்
உனக்காக.

அவன்:

உன் விரலோடு விரல்
கோர்த்து வெகுதூரம்
நடக்க வேண்டும்.
நீ களைத்தால்
கையில் உன்னை ஏந்தி
நம் பயணம் தொடர வேண்டும்.
நான் வேண்டும் வரமெல்லாம்
வண்ணமயில் நீ மட்டும்தான்.

அவள்:


நிலவாக,மலராக,தேன்சிட்டாக,
பட்டாம்பூச்சியாக
மனம் நிறைந்த கன்னியாக
ஒரே ஒரு வாழ்க்கையில்
பல முறை விதவிதமாக
வாழ்கிறேன் நீ தந்த
காதல் வரத்தால்.

3.ஊடல்காலம்:
(தொடரும்)

2 comments:

said...

Vaal naal muluvathum kathalai Rasiththukkondae irukalam ennum unmei Enikkirathu... though there is a fact, Truth always bitters

- Praharika..

said...

மிக நல்ல கவிதை..