Saturday, December 26, 2009

துயரங்களின் நர்த்தனம் - சிறுகதை





ருத்தல் தொலைந்த வெம்மையில் தவித்தபோது ஒற்றை மழைத்துளியென என்னில் விழுந்து கடலென விரிந்தவள் நீ. ரயில் நிலையத்தில் பயம் கவ்விய வெட்கத்துடனும் பதபதைப்புடனும் அலைபேசியில் பேசியபடியே என்னை நோக்கி நீ வந்த கணத்தை உறையச்செய்து என் இதயத்தின் நான்கு அறைகளிலும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். ரயில் நிலைய உணவகத்தில் தேநீர் அருந்தும் இடைவெளியில் உனக்குத் தெரியாமல் உன் விரலை வருடிய போது பிறவிப்பயனை அடைந்த களிப்பில் என்னைக் கண்டு புன்னகைத்தன என் விரல்கள்.

கனவுகளில் என் தலைகோதும் தங்கநிற வனதேவதையின் சாயலை கொண்டிருந்தாய். உள்நெஞ்சில் உனதுருவத்தை உயிர்த்துளிகளால் வரைய ஆரம்பித்தேன். அதிகாலையொன்றில் பிறந்த குழந்தையின் பாதச்சிவப்பாய் சிவந்திருந்த கன்னங்களெங்கும் வெட்கத்தின் ரேகைகள் படர என்னுடன் பயணித்தாய்.உன்னுடலிருந்து எழும்பிய வாசம் கனவுகளில் என்னோடு சுற்றித்திரிந்த அவ்வனதேவதையின் வாசத்தை ஒத்திருந்தது. மெல்ல உன் கரம்பற்றி விரல் வருடியபோது ஜன்னல் வழியே உள்நுழைந்த பனிக்காற்று புதுவித சில்லிப்பை தந்தது.

விரைகின்ற ரயிலின் அதிர்வில் ஊமைக்காட்சிகளாய் மரங்களும் புதர்களும் கடந்துகொண்டிருந்தன. மெளனம் மட்டுமே நம்மிடையே ஒலித்தபடி இருந்தது. ஜன்னல் கதவின் இடுக்கில் நுழைந்த ஒளிக்கீற்று உன்னில் படர்ந்து  ஆடையாக மாறியது. பிரகாசத்துடன் ஒளிர்கின்ற உன்னை பார்த்துக்கொண்டே பயணித்தேன்.
பார்வைகளின் சந்திப்பில் வெடித்துச் சிதறியது நம்மிடையே நிமிர்ந்து நின்ற மெளனச்சுவர்.மெல்ல என் கரங்களுக்குள் உன் விரல்கள் புதைந்தபோது பேரானந்த களிப்பில்  நீ சிந்திய ஒரு துளி கண்ணீரில் என் பால்யத்தின் கறைகள் அனைத்தும் கரைந்து உருகிப்போனது. பாறையின் இடுக்கில் நுழைந்த வேரென எனக்குள் நீ நுழைய ஆரம்பித்த நாள் அதுதான்.

------o0o-------


இப்போது என் நெஞ்சின் மேல் சத்தமின்றி படுத்திருக்கிறது உன் கடிதம். அனல் நிறைந்த அந்தக் கடித ஓடையில் நீராடி சாம்பலென உதிர்ந்துகிடக்கிறேன். துயர் நிறைந்த உன் முகம் நினைவோடையின் மேல்பரப்பில் மிதந்து வர மெல்ல கண்ணயர்கிறேன். முன்பொருநாள் யாருமற்ற முன்னிரவில் என் அறைக் கதவை தட்டுகிறாய் நீ. எதிர்பாராத உன் வருகையில் திகைத்து நிற்கிறேன். எவ்வித சலனமுமின்றி அறைக்குள் நுழைந்தவள்

“ரொம்ப டயர்டா இருக்கு கொஞ்சநேரம் இங்க தூங்குறேன் பிரபு..” என்றவாறு  பதிலை எதிர்பார்க்காமல் படுக்கையில் விழுந்தாய். உன்னருகில் அமர்ந்து கரம் பற்றிக்கொண்டு உற்று நோக்குகிறேன்.
உறங்கும் போது அழகிலிருந்து பேரழகிற்கு உருமாறிவிடுகிறது உன் முகம். அந்த கண்கள் அந்த நாசி,அந்த செவ்விதழ்கள்,அந்த கொன்றை நிலவுகள்.
உன் பொன்முகத்தைஅள்ளியெடுத்து என் மடியில் கிடத்துகிறேன்.சிறியதொரு அசைவிற்கு பிறகு என் கரங்களை இறுக பற்றிக்கொண்டு உறங்குகிறாய்.
உன்னையே பார்த்தபடி அமர்ந்திருக்கிறேன். உன் வருகை அறிந்து உள்நுழைந்த காற்று உன் கூந்தல் கலைக்கிறது. எவ்வித கவலைகளுமின்றி என் கரங்களின் கதகதப்பில் கங்காருவின் மடியில் உறங்கும் குட்டியாய் உறங்கிக்கொண்டிருக்கிறாய்.ஜென்மங்கள் பல கடந்த காற்றின் பக்கங்களில் நம் பெயரை ஒன்றாக எழுதுகிறேன். பிரிந்திருக்கும் நாளைய பொழுதுகளில் எப்போதேனும் என் ஞாபகச்சில்லுகள் உன் இதயம் துளைத்தால்
காற்றில் காதுகளில் ஒரு கோரிக்கையிடு. அது நம் செளந்தர்ய நிமிடங்களின் பாடலை உனக்காக பாடிக் காண்பிக்கும்.


------o0o-------
கறுப்பு நிற புடவையில் நீ வருகின்ற போதெல்லாம் இயல்புதொலைந்து சிறுபிள்ளையாக  ஓடிவந்து உன் நெஞ்சில் முகம் புதைக்கிறேன். இதென்ன பால்யத்தின் நீட்சியா? முலைச்சதையின் ஞாபகம் தீர்ந்துபோவதில்லையா? உன் கண்களுக்குள் இறங்கி உயிருக்குள் நுழைந்து ஓர் உயிரான பொழுதுகள் எப்போது திரும்ப வரும்? எனக்கென படைக்கப்பட்டவள் எப்போதும் என்னுடன் இருப்பதில்லை என்கிற துயர்மிகுந்த நிதர்சனத்தின் அனலில் கருகிச்சரிகிறேன்.
முத்தங்களால் நிரம்பிய என் தோட்டத்தில் பூக்கள் கொய்து சென்றவர்கள் மத்தியில் நீ மட்டுமே பூவாய் உள்வந்து என்னை முழுவதுமாய்ஆட்கொண்டவள். உனக்கென நான் வாங்கிய மல்லிகையின் வாசத்தைவிட அந்த கணத்தில் சட்டென்று என் கன்னம் பதித்து திரும்பிய உன் செவ்விதழ்களின் ஈரம் இன்றும் காயாமல் எனக்குள் இருக்கிறது - மிக பத்திரமாய்.

காமத்தீயில் எறியப்படும் முத்தங்களைவிட நேசத்தில் முகிழும் முத்தத்தின் வலிமையை அன்றுதான் உணர்ந்தேன்.யாருமற்ற என்னுலகில் முதல்முறையாக நுழைந்தவள் நீ. சின்னச் சின்ன சந்தோஷங்கள்,பரிசுகளால் உன்னை எப்போதும் புன்னகைக்க வைத்திருப்பதே என் விருப்பம்.


படபடவென்று நான் உதிர்க்கும் பத்து வார்த்தைகளை பவ்யமாக கேட்டுக்கொண்டிருந்துவிட்டு "ம்" என்கிற ஒற்றை சொல்லால் மறுமொழிவாய்.
நான் உதிர்த்த வார்த்தைகள் அனைத்தும் அந்த "ம்"மின்  அழகில் வெட்கி காற்றில் கரைந்தோடும். என்னெதிரில் அமர்ந்துகொண்டு கண்களுக்குள் உற்று பார்த்தபடி ஏதோ கேட்க எத்தனிப்பாய் பின் "ஒண்ணுமில்ல" என்பாய். இப்போது அந்த "ம்"மை விட இவ்வார்த்தை அழகானதாகிவிடும். அழகுச்சிற்பமென்று உன்னை வர்ணித்தல் தவறு.நீ அழகுக் கடல். ஓராயிரம் உயிர்கள் வசிப்பதால் பெருமையுடன் விரிந்திருந்த கடல் இரு உயிர் வசிக்கும் உன்னைக் கண்டு தலைகவிழ்ந்து சுருங்கிக் கிடக்கிறது.

------o0o-------
நேசம் நிறைந்த உனது நினைவுகளிலிருந்து விழித்தெழுந்து கடிதத்தின் ஒவ்வொரு வார்த்தைகளையும் மீண்டுமொருமுறை வாசித்தேன். பேனா மையுடன் காதலும் கண்ணீரும் கலந்து  அவ்வார்த்தைகளை நீ எழுதிய கணத்தின் வலி என்னை தவிப்பின் ஆழத்தில் தள்ளிவிட்டது கண்மணி.
நீ அழுதிருக்கிறாய். துடித்திருக்கிறாய். யாருமற்ற இக்கொடிய இரவின் பற்களில் சிக்கியிருக்கிறாய். எதற்கென்றே புரியாமல் நகரும் இந்த வாழ்க்கையில் உன்னை சந்திக்க முடியாத வெறுமைச் சூழலில் உதிர்ந்த இலையாய் அறைக்குள் முடங்கிக் கிடக்கிறேன். அறைக்குள் பூனைபோல் நுழையும் வெளிச்சத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கரைகிறது என்னுடல். நிரந்தரமானதொரு அமைதி எங்கும் பரவ உன் மரணத்திற்கு முன் நீ எழுதிய கடைசி கடிதத்தின் மேல் விழுகிறது என் இறுதி நிழல்.

9 comments:

said...

காதலின் வலி, காதலின் உணர்வுகள் கதையெங்கும் நிரம்பி வழிகின்றன....

கவிஞனின் கதையிது என உறுதியாக கூறவைக்கிறது வரிகள்.

கதையில் கரைவது நாமும் தான்..

said...

கவிதைச் செறிவில் ஒரு சிறுகதை

said...

நிதானமாக சொல்லிய கதையில் நிஜங்கள் நிறைந்து கிடக்கின்றன..

said...

kadhai varigal ovvondrum miga arputham....
kadhalin ovvoru thuliyaiyum arputhama eluthitinga....
ethai suti kati nalairukunu solrathunu theriyala....
enna ovvoru kavithai varigalum romba iyalba azhaga irukku...
really Nice....
verana solrathunu theriyala...
thanglishku sorry...

said...

நன்றி விபாகைஜி,முத்துசாமி,வினோதினி,டி.கே ஐயா.

said...

கண்ணீரும் காதலும் உடன் பிறவா உறவினர்கள் போலும்,
அரவமற்ற இரவின் பற்களில் காதல் சிக்கவைக்கப்படுகிறது.

said...

நன்றி குமரன்.

said...

நன்றாக இருக்கிறது...

மனது வலிக்கிறது நண்பரே...

நானும் உணர்கிறேன் காதலின் வலியை,
உங்கள் வரிகளை வாசிக்கும் போது...

said...

MAYILIRAHIN VARUDALIL.... VETHANAI!

SABAASH NILA!